திருக்கோலக்கா - சப்தபுரீசுவரர் கோயில்
இறைவன் பெயர் சப்தபுரீசுவரர், தாளபுரீஸ்வரர்
இறைவி
பெயர் ஓசை கொடுத்த நாயகி, த்வனி பிரகதாம்பாள்
தீர்த்தம்: சூரிய தீர்த்தம், ஆனந்தத் தீர்த்தம்
தல
விருட்சம் : கொன்றை
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1
இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில்
இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத்
தலங்களில் அமைந்துள்ள 15 ஆவது தலம் ஆகும்.
சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார்.
சீர்காழியில் ஞானப்பால் உண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாகச் சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டித் தாளம் போட்டுக் கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்துப் பதிகம் பாடினார்.
சம்பந்தருக்கு இறைவன் பொற்றாளம் கொடுத்து அருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார்.
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது சிவபெருமான் சரப மூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரைச் சாந்தப்படுத்தியதாகப் புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை அடையக் கொன்றை வனமாகிய இத்தலத்தில் தவமிருந்தார். சிவபெருமான் மகிழ்ந்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்தருளினார் எனவும் எனவே, இத்தலம் “திருக்கோலக்கா’ என அழைக்கப் பெறுவதாகப் புராண வரலாறு தெரிவிக்கிறது.
அங்கயற்கண்ணியாம் அகிலாண்டேஸ்வரி ஊட்டிய ஞானப் பாலைப் பருகி, ஊறிய தமிழ்ப் பெருக்கால் திருஞானசம்பந்தப் பெருமான் உலகம் வியக்கும் தேவாரப் பாடல்களைப் பாடத் தொடங்கினார் இல்லையா! அன்றிரவு, தோணியப்பரின் நினைவுடன் துயின்ற திருஞானசம்பந்தர், மறு நாள் காலை பொழுது புலரத் தொடங்கியதும் திருக்கோயிலுக்குச் சென்றார். தோணியப்பரை வணங்கினார். இறைவன் அருளால், பக்கத்தில் உள்ள திருக்கோலக்கா என்னும் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
திருஞானசம்பந்தர் கோலக்காவுக்கு வந்தார். வேதத்தின் விழுப்பொருளை, விடையேறு நாயகனைத் தரிசித்தார்; பாடத் தொடங்கினார். வெறுமே பாடுவாரா? கைத்தாளம் போட்டுக் கொண்டே பாடினார். அன்பும் பக்தியும் இழையோட… சந்தமும் தாளமும் சதிராட… சீர்காழிக் கொழுந்து பாடப் பாட, பிஞ்சுக் கரங்கள் தாளம் போடப் போட… தன் அன்புப் பிள்ளையின் அம்புஜக் கரங்கள், தாள வேகத்தில் சிவந்து போவதைப் பொறுப்பாரா பரமேஸ்வரர்?
அஞ்செழுத்து (நமசிவாய பஞ்சாட்சரம்) எழுதப் பெற்ற ஆடகப் பொன்னால் ஆன தாளம், பிள்ளையின் பிஞ்சுக் கரங்களில் வந்து அமர்ந்தது. தலை மீது தாளத்தை வைத்து வணங்கிய திருஞானசம்பந்தர், மீண்டும் கைகளில் எடுத்து, அதைத் தட்டினார். ஆடகப் பொன் ஓசை எழுப்பாது. (செம்பு சேர்வதால் தான் பொன் ஓசை எழுப்புகிறது). பரமனார் கொடுத்த தாளத்தைக் கொண்டு, செல்ல மகன் பாடல் இசைப்பதைப் பார்த்த அம்பிகை, உடனே, அந்தத் தாளத்துக்கு ஒலியும் ஓசையும் கொடுத்தார் இந்த அதிசயத்தைப் பார்த்து, தும்புரு நாரதர் உள்ளிட்ட தேவ இசை வாணர்களும் முனிவர்களும் பிறரும் மலர் மாரி பொழிந்தனர்.
கோவில் சிறப்புகள் :
§ திருக்கோலக்கா. புராணப் பெயர் சப்தபுரி, திருத்தாளமுடையார் கோவில். மூலவர் சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
§ கிழக்கு நோக்கிய திருக்கோவில்; ஒரு திருச்சுற்று! திருச்சுற்றில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், மகாலட்சுமி, சனி பகவான், பைரவர், சண்டிகேசுவரர், சூரியன் சன்னதிகள் அமைந்துள்ளன. கருவறை தேவ கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகளைக் கண்டு வழிபடலாம். திருக்கோவில் கட்டிட கலை அமைப்பில் நகரத்தார் திருப்பணியைக் கண்டு மகிழலாம்.
§ கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இறைவன் சன்னதியை அடுத்துத் தனியே கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் கருணை பொங்கும் முகம் அழகுடன் அபய கரம் தாங்கி காதுகளில் அழகிய ஸ்ரீ சக்ர நாடகங்களுடன் காட்சி தருவதைக் காணலாம்.
§ திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகத்தில் இத்தலத்தை வழிபடுபவர்களுக்கு ஏற்றமிகு வாழ்வு, பாவம் விடுபடுதல், வாழ்வில் துயரம் இல்லா நிலை மற்றும் வினைகளும் நீங்கும் என்று தல வரலாறு கூறுகிறது.
§ மந்தாகினி எனும் பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக் கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டுள்ளார். மேலும் இங்குள்ள கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வணங்கியுள்ளனர். சிறிது காலத்தில் அந்தச் சிறுவன் பேசத் தொடங்கியிருக்கிறான் என்கிறார்கள் இந்தப் பகுதி பக்தர்கள். தன் மகன் பேசியதைக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தாய், நன்றிப் பெருக்குடன் இத்தல இறைவனுக்கு 42 கிராம் தங்கத்தில் தாளம் செய்து கோவிலுக்கு அளித்துள்ளார்.
§ இப்படி வாய் பேச வராதவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அம்பாளையும், இறைவனையும் தரிசித்துச் சென்றுள்ளனர். அதில் இறைவனின் அருளால் வாய் பேச வந்தவர்கள், கோவிலில் உள்ள பதிவேட்டில் தங்கள் பெயரையும், ஊரையும் பதிவு செய்துள்ளனர். இதன் எண்ணிக்கை 600-ஐத் தாண்டிச் செல்கிறது என்பதே, இத்தலத்திற்கு இருக்கும் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது
§ அகத்தியர் கண்வர் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.
§ ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் விநாயகரும், முருகரும் துவாரபாலகர்களாக இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
§ நவக்கிரகங்களின் தலைமைப் பதவியைச் சூரியனுக்கு, இந்தத் தலத்தில் தான் ஈசன் வழங்கினார் என்று கூறப் பெறுகிறது. இந்தப் பேரருளை சூரியன் பெற்ற நாள், கார்த்திகை மாத ஞாயிறு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு சூரிய பூஜை செய்ய, பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளி அப்போது காட்சி தருகிறார்கள் இந்த ஆலயத்தின் முன் புறம் உள்ள திருக்குளமே, சூரியன் உண்டாக்கிய சூரிய தீர்த்தமாகத் திகழ்கிறது.
§ ஆண்டுதோறும் சித்திரை மாதத் திருவாதிரை நாளில் காலையில் சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் சம்பந்தருக்கு அம்பிகை ‘திருமுலைப்பால் வழங்கும் விழா’ நடக்கும். அன்று இரவில் சீர்காழி ஆலயத்தில் உள்ள சம்பந்தர் திருக்கோலக்கா திருத்தலம் வந்து பதிகம் பாடி, ஈசனிடம் ‘பொற்றாளம் பெறும் விழா’ வெகு சிறப்பாக நடைபெறும்.
§ வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஓர் காழிப் பாலற்கா அன்று பசும் பொன் தாளம் கொடுத்த கோலக்கா மேவிய கொடையாளா” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
சித்திரை திருவாதிரையில் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருவிழா கொண்டாடப்பெறும். இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடக்கும். அதன்பின் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவு சிவபெருமான் சம்பந்தருக்குப் பொன் தாளம் தருவார். மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு விழாவாக நடக்கும் சம்பிரதாயத் திருவிழா. கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில்,
திருக்கோலக்கா- 609 110,
சீர்காழி
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
அமைவிடம் :
சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து நிறைய பஸ் வசதி உள்ளது.
இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான
சமந்த னுக்குல கவர்முன்
தாளம்
ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
நன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும்
பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி
லிப்பெரும் கோயிலுள் ளானைக்
கோலக்
காவினிற் கண்டு கொண்டேனே.
கோவில் அமைப்பு:
மக்கள் வழக்கில் தாளமுடையார் கோவில் என்று அறியப்படும் கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்தத் தீர்த்தம் உள்ளது.
சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப் பெற்ற இந்தக் கோவிலை, பின்னர் நகரத்தார்கள் கருங்கல்லில் வடிவமைத்தார்கள். இத்திருக்கோயில் 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்டது.
மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கோவில்கள் உள்ளன. அம்பாள் ஓசை நாயகி சுமார் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருக்காட்சி தருகிறார்.
இறைவி ஓசை கொடுத்த நாயகியின் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக இறைவன் சந்நிதிக்கு இடது புறம் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவியின் சன்னதியை அடையலாம்.
முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிறார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் திறந்தவெளி முற்றம் உள்ளது.
இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சந்நிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார்.
இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர்.
மேலும் சனி பகவானுக்கு தனிக்கோவில் உள்ளது. பஞ்ச லிங்கங்களும் உண்டு. இக்கோவிலின் திருக்குளமானது சூரிய பகவானால் உண்டாக்கப் பெற்றதாக நம்பிக்கை நிலவுகிறது.
கோவிலின் தென் கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சந்நிதியை அடுத்து மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள்.
மகாலட்சுமி இங்கு சிவபெருமானைத் தவம் செய்து அதன் பயனாக மகா விஷ்னுவைத் திருமணம் செய்து கொண்டாள்.
மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது.
வாய்
பேச முடியாதவர்கள் இங்கு வந்து பேசும் சக்தியைக் கொடு,’ என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்துச் சாப்பிட்டு வர
வேண்டும்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
மடையில் வாளை பாய மாதரார்
குடையும்
பொய்கைக் கோலக் காவுளான்
சடையும்
பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங்
கொண்ட வுருவ மென்கொலோ.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவிலின் முகவரி: அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா, சீர்காழி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் 609110. தொலைபேசி: ஞானசம்பந்தசிவாச்சாரியார் – 04364 274175, 98430 11264 |
https://www.youtube.com/watch?v=sEBQTBePBHs
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu