திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி), கண்ணாயிரநாதர் ஆலயம்
இறைவர் திருப்பெயர்: கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர் திருமுறை : முதல் திருமுறை 101 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் |
||
தல மரம் : சரக்கொன்றை |
|
|
தீர்த்தம்:இந்திரதீர்த்தம் |
|
|
வழிபட்டோர்: |
வள்ளளார், இந்திரன் |
|
![]() |
ஆலயம் பற்றி : தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப் பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம் நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே. தல வரலாறு இத்தலம் மக்கள் வழக்கில் குறுமாணக்குடி என்று வழங்குகிறது. இந்திரனின் சாபம் இங்கு நீங்கியதாக ஐதீகம். கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கட்டைக் கோபுர வாயிலும் இரண்டு பிராகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கோவிலுக்கு வெளியே எதிரில் இந்திர தீர்த்தம் உள்ளது. தீர்த்தக் கரையில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கட்டைக் கோபுர வாயிலின் முகப்பின் மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் சுதை வடிவில் வண்ணத்தில் அமைக்கப் பெற்றுள்ளன. உள் நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் அழகாகவுள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. 2 ஆவது வாயில் வழியே உள்ளே சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி பலிபீடங்கள் உள்ளன. உள் மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்தி விநாயகர் சந்நிதி தனிக்கோவிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து, கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளது. அதனால் எதிரில் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தின் வலதுபுறம் பள்ளியறையும், பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பெற்றுள்ளன. கருவறையில் மூலவர் கண்ணாயிரநாதர் கிழக்கு நோக்கி சுயம்புத் திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார். பாணப்பகுதி சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. மூலவர் மண்டபத்தில் சந்திரசேகர் திருமேனி உள்ளது. அடுத்து நடராஜர் சபை உள்ளது. பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், விநாயகர் முதலிய உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சுவாமிக்குத் தீபாராதனை செய்து அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து அதற்குப்பிறகே திருநீறு, குங்குமம் வழங்கும் மரபு இக்கோவிலில் இருந்து வருகின்றது. தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன், கெளதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டு, முனிவரின் வேடத்தில் அகலிகையுடன் சந்தோஷமாக இருந்தான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய அகலிகையும் சம்மதித்தாள். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் எங்கும் பெண் குறிகள் உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க, "ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்றான். அதற்கு பிரம்மா குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார். வாமன அவதாரம் எடுத்த திருமாலும் இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட, அவருக்கும் அருள் செய்ததால் இத்தலத்திற்கு குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று. "திருக்கண்ணார் கோவிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது, நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும், இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை, இத்தல இறைவனை வழிபடுபவர்கள் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர், இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்." என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் கூறியுள்ளார். சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது. சிதம்பரம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள கதிராமங்கலம் என்னும் இடத்தில் இருந்து 5 கி. மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். நன்றி www.shivatemples இணையதளத்திற்கு பாடல் எண் : 01 தண்ணார் திங்கள் பொங்கரவம் தாழ்புனல் சூடிப் பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத கண்ணார் கோயில் கைதொழுவோர்கட்கு இடர்பாவம் நண்ணாவாகும் நல்வினையாய நணுகுமே.
பாடல் விளக்கம்: குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத்திலிருந்து தாழ்ந்து வந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும்.
திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) அருகில் உள்ள சிவாலயங்கள் திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.88 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது. திருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.04 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது. திருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.81 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது. திருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.86 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது. திருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.06 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது. திருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.48 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. சீர்காழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.59 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது. கீழை திருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.20 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது. திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.08 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது. திருசெம்பொன்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.28 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது. |
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu