திருக்கண்ணமங்கையாண்டான்
திருநட்சத்திரம் ஆனி - திருவோணம்
ஸ்ரீ நாதமுனிகளின் பதினோரு சீடர்களில் புகழ் பெற்ற ஐந்து சீடர்கள் புண்டரீகாக்ஷர், அஷ்டாங்க யோகத்தில் ஈடுபட்ட குருகைக் காவலப்பன்,நாதமுனிகளின் மருமக்களான மேலையகத்தாழ்வான், கீழையாகத்தாழ்வான், மற்றும் திருக்கண்ண மங்கையாண்டான் ஆகியோர்.

திருக்கண்ணமங்கையில் ஆனி மாதம் கிருஷ்ண பட்ச ஸ்ராவண (திருவோண) நட்சத்திரத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி திருமணம் ஆகியவராய் ஸ்ரீநாதமுனிகளால் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்விக்கப் பெற்று, துளசி மாலைகளை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கும் திருக்கண்ணமங்கை நாயகிக்கும், அபிஷேகவல்லித் தாயாருக்கும் சமர்ப்பித்து வந்தார். திருக்கண்ணமங்கையாண்டான் ஒரு வியாபாரி.
பெருமாளைச் சேவிக்க இரண்டு வேட்டையாடுபவர்கள் தனது நாய்களுடன் கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு வெளியே தனது நாய்களை விட்டு விட்டு கோவிலுக்கு உள்ளே செல்ல
ஒரு வேடனின் நாயானது மற்றொரு வேடனின் செருப்பைக் கடிக்க, அதைக் கண்ட மற்றொரு நாயானது தனது எஜமானனின் செருப்பை நாய் கடிப்பதைப் பொறுக்காது அந்த நாயுடன் பலமாக சண்டையிட்டது.
சண்டையின் முடிவில் ஒரு நாய் இறந்து போக இதை அப்போது வெளியில் வந்த வேடர்கள் கண்டனர்.
தனது நாயைக் கொன்ற மற்றொரு நாயைத் தன் வாளால் வேடுவன் வெட்டிக் கொல்ல, தனது நாய்களின் பொருட்டு இரு வேடுவர்களுக்கும் இடையே கத்திச் சண்டை தொடங்கியது, உச்சகட்ட சண்டையின் முடிவில் இரு வேடுவர்களும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு இறந்தனர்.
கையில் துளசி மாலையுடன் அங்கு வந்த திருக்கண்ணமங்கையாண்டான் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து பிறருக்கு வேலை செய்து பிழைப்பவர்களும், தாழ்ந்த ஒழுக்கமுள்ளவர்களுமான இவ்விருவரும் தங்களின் மேல் அன்புள்ள நாய்களிடம் கொண்ட கருணையால் சண்டையில் தங்களது உயிரை இழந்தார்கள்.
தர்மங்களை பற்றி ஆராய்ச்சி இல்லாத, இவர்களது மனித இயற்கைக்கு மீறிய இந்தக் கருணை வியக்கத்தக்கது.
இவர்களுக்கே இப்படிப் பெற்ற கருணை இருக்குமானால் இந்த உலகைப் படைத்து இயற்கையிலேயே உறவினராய் எல்லாம் அறிந்தவனாக, உலகனைத்துக்கும் தலைவனாய், உயிர்கள் அனைத்துக்கும் தாயாய் தந்தையாய் உள்ள ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், தாயாருக்கும் பக்தர்களிடம் இருக்கும் கருணை பற்றி கேட்கவும் வேண்டுமோ?
பெருமாள் தன் பக்தனை ரக்ஷிப்பானா? மாட்டானா?என்னும் சந்தேகம் தேவையற்றது என எண்ணி, அதனால் வியாபாரத்தை விட்டுவிட்டு ( அதாவது தம்மைத் தாம் காப்பாற்றிக்கொள்ளும் செயல்களைத் துறந்து ) திருக்கண்ணமங்கைப் பெருமாளிடம் சரணடைந்தார் என்று பிரசித்தம்.
பிராட்டி - ஸ்வஶக்தியை விட்டள்; த்ரெளபதி - லஜ்ஜயை விட்டாள்; திருக்கண்ணமங்கையாண்டான் - ஸ்வவ்யாபாரத்தை விட்டன் - ஶ்ரீவசனபூஷணம் (83)
பக்தியால் உறுதி பூண்டு, தன்னை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், தாயாரிடம் ஒப்படைத்தவராய் எல்லா நித்ய, நைமித்திக கர்மானுஷ்டானத்தினையும் அடியோடு விலக்கி நாயைப் போல இரண்டு கைகளையும் கால்களாக்கி நான்கு கால்களை ஊன்றி நாய் போன்று நடந்து காலையில் ஊருக்கு வெளியே சென்று காலைக் கடன்களை முடித்துக் குளத்தில் குளித்து வஸ்திரமில்லாமல் கைகளினையும் கால்களாக்கி நடந்து வேகமாக வந்து ஸ்ரீ பத்வத்சலப் பெருமாள் சன்னதியில் மகிழ மரத்தின் அடியில் பெருமாளைத் துதித்தபடி மௌனியாய் கிடந்து, கிடைக்கும் பிரசாதத்தினை உண்டு வாழத் துவங்கினார்.
தன் பக்தனின் பக்தியில் மகிழ்வுற்ற ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஓரிரவில் ஊர்மக்கள் அனைவர் கனவிலும் தோன்றி, எனது பக்தனான திருக்கண்ண மங்கை யாண்டானுக்கு அனைவரும் காணும் பொழுதில் மோக்ஷமளிக்கப் போகிறேன் எனக் கூறிப் பக்தர்கள் அனைவரும் தங்கள் கண்களால் கண்டு கொண்டிருக்கும் போது மின்னல் கூட்டம் போன்ற ஒரு பெரிய ஒளி ஆட்கொள்ள திருகண்ணமங்கையாண்டான் பெருமாள் திருவடிகளை அடைந்தார்.
மோக்ஷத்தினை அடைந்த அவருடைய திருவரசு இன்றும் திருகண்ண மங்கை திவ்யதேசத்தில் ப்ராஹாரத்தின் வலது புறம் மகிழ மரத்தின் கீழ் செண்பகப் பிரகாரத்தில் அமைந்துள்ளது.
அப்படி திருமங்கையாண்டான் போல நான் என்ன இடைகழியில் இருந்து திருவடிகளை அடையும் பேறு பெற்றவளா என்ன? என்று மாமுனிகளைப் பார்த்து இந்த வாசகத்தை சொல்கிறாள் திருவல்லிக் கேணி பெண்பிள்ளை.
”இடைகழி” என்ற சொல்லுக்கு “வாயிலைச் சார்ந்த உள் நடை” என்று பொருள். இது தற்காலத்தில் “ரேழி” என்று அழைக்கப் பெறுகிறது. தெரு ஒழுங்குக்கு இடையே கழிதலால் இடைகழி - இடையிற் கழிந்து செல்லும் நடை.
{புழை வாயில் போகு இடைகழி
மழை தோயும் உயர் மாடத்து – பட்டினப்பாலை 144, 145சிறுவாசலையும், பெரியவாசலையும், நீண்ட நடை(இரேழி)களையும் உடைய மேகங்களை எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில்}
திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு. *ஆனி ஸ்ரவணத்துதித்தோன் வாழியே*
திருக்கண்ணமங்கையாண்டான் திருவடிகளே சரணம்