19 செண்பகமிட்டேனோ ராஜகுமாரனைப் போலே?
"எப்படி எப்படியெல்லாம் இந்தப் பெண்மணி,
தான் இழந்த பாக்யத்துக்காக வருந்தறாள்!.." என்று ஆச்சர்யித்துப் போனார் மாமுனிகள்..
"அம்மணி... நீ பேசறத எல்லாம் பாக்கச்சே, ஒனக்கு சின்ன வயசுலேந்தே "கைங்கர்ய ருசி" இருக்கா மாதிரித்தான் தெரியறது!...
பாகவதாளுக்கும் ஆசார்யனுக்கும் ரொம்ப அதிகமா கைங்கர்யம் பண்ணாட்டாலும், நிச்சயம் நீ யதா ஸக்தி (இயன்ற வரை) ஏதாது பண்ணியிருப்பயோனு தோணறதே..."
....என்று திருவல்லிக்கேணி பெண்மணியைச் சமாதானப்படுத்தும் விதமாக வார்த்தை சொன்னார் பெரிய ஜீயர்..
அந்த வார்த்தைகள் அவளுக்கு ஒரு ஏளனச் சிரிப்பையே வரவழைத்தன!..
"ஸ்வாமி... இவ்ளோதூரம் அடியேனப் பத்தி சொல்லிக்கச்சேவே ஒமக்கு அடியேனோட தகுதி என்னனு தெரிஞ்சுருக்குமே!...
ஒரு காலத்துல வசதியும் வாய்ப்பும் அடியேனுக்கு நெறய இருந்ததென்னவோ நெஜம்தான்...
ஆனா, அத எல்லாம் அடியேனோட சுயநலத்துக்குத்தான் பயன்படுத்திண்டேன்!...
அடியேன் என்ன,
செண்பகமிட்டேனோ ராஜகுமாரனைப் போலே?.."
....என்று வழக்கம் போலவே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு, அதற்கான விளக்கத்தையும் தொடர்ந்தாள்...
வியாக்கியான சக்ரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை கூறிய ஒரு கதையை விவரித்தாள்.
பூரியில் ஜெகந்நாதப் பெருமாளுக்கு விசேஷமாக செண்பக மல்லிகையை தினம்தோறும் சாத்துவது வழக்கம்.
அந்த ப்ரதேசத்துல வாஸம் பண்றவா எல்லாருமே,"நான், நீ.."னு போட்டி போட்டுண்டு செண்பகத்தப் பெருமாளுக்குச் சாத்தறது வழக்கமாம்!..
ஒரு நாள் திடீர்னு செண்பகத்தோட வரத்து கொறஞ்சு போயிடுத்து..
இருக்கற கொஞ்சம் புஷ்பங்களையும், எல்லாரும் "நான் முந்தி, நீ முந்தி.."னு வாங்கிண்டு போயிட்டா...
அன்னிக்கு அந்த ஊரோட ரஜபுத்ரன் ஜகன்னாதர சேவிக்கணும்னு ஆசைப்பட்டுக் கோயிலுக்கு வந்தான்..
அவனுக்கு, தன் கையால ஒரு செண்பகப்பூவ பெருமாளுக்குக் கொடுக்கணும்னு ஆசை..
தேடிதேடிப் பாத்தான்...
எல்லாப் பூவும் ஏற்கனவே வித்துப் போயிருந்ததால, அவனுக்குப் பூ கெடைக்கறது கஷ்டமா இருந்தது..
அப்போ...
ஒரு வியாபாரியோட கூடையில, ஒரே ஒரு பூமட்டும் மிச்சம் இருக்கறது அவன் கண்ல பட்டது..
இருந்த இந்த ஒரே ஒரு புஷ்பத்துக்கு நெறய பேர் போட்டி போட்டதால, அந்த ஒத்தப் பூவோட விலை மடமடனு ஏறிண்டே போச்சு!..
அந்த சமயத்துல...
....இந்த ரஜபுத்ரன், யாருமே நெனச்சுகூட பாக்கமுடியாத விலையக் கொடுத்து அந்த ஒத்தப் பூவ வாங்கி, ஆசையோட அதக் கொண்டுபோய் பெருமாளுக்கு சமர்ப்பிச்சான்...
அன்னிக்கு ராத்திரி பெருமாள் அவனோட ஸ்வப்னத்துல வந்து,
"அப்பனே!.. நீ சமர்ப்பிச்ச அந்தப் பூவோட கனத்த என்னால சொமக்க முடியல டா!..
வெறும் புஷ்பமா சமர்ப்பிக்காம, அதோட ஒவ்வொரு இதழிலேயும், நீ என் மேல வெச்சுருக்கற ப்ரீதிய இல்ல சேர்த்து இழைச்சுருக்க!.."னு அவன ஆச்சர்யமா கொண்டாடினாராம்!
(" பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்ச தி /
ததஹம் பக்தி உபஹ்ருதயம் அச்னாமி ப்ரயத ஆத்மந : //
"
என்று கீதாச்சார்யனான கண்ணன் உரைத்தது போலே 'சிறிய இலையோ, மலரோ, பழமோ ஒரு துளி நீரோ
எம்பெருமானை அர்ச்சிக்கப் போதுமானவை.
யாவர்க்கும் ஆம் இறைவர்க்கோர் பச்சிலை என்று திருமூலர் கூறுவது இதைத்தான்....
அவன் வேண்டுவதெல்லாம் அவன் மேல் நமக்கு
ஏற்பட்ட பக்தியின் ஆழத்தையும் அந்நியோன்னியத்தையும் தான், என்பதனை எம்பெருமானின் மொழி
கேட்டு செருக்கு ஒழிந்த ராஜகுமாரன் புரிந்து கொண்டானாம்.)
.....வசதி வாய்ப்பெல்லாம் இருந்த போது, அடியேன் ஒருநாளும் இந்த மாதிரி எந்த கைங்கர்யமும் செஞ்சதில்ல ஸ்வாமி!...
எல்லாமே ஸ்வயம் ப்ரயோஜனத்துக்குத்தான் (தன் நலத்துக்கு) பயன்படுத்திண்டேனே தவிர,
ஒரு நாள் கூட, என்னோட த்ரவியங்களக் கொண்டு, அந்த ரஜபுத்ரனப் போல ஆசையோட பகவத் கைங்கர்யமோ, இல்ல...பாகவத கைங்கர்யமோ பண்றதுக்கு உபயோகிச்சதில்ல!..
இவ்ளோ ஏன்?..
.....அந்த மாதிரி ஒரு நெனப்பும்கூட அடியேனுக்கு வந்ததில்ல!.."
.....என்று வருத்தத்தோடு சொல்லிக் கொண்டாள் திருவல்லிக்கேணி அம்மையார்..
நன்றி - பத்மா கோபால்
(வளரும்..)
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu