|
சிவஸ்தலம் : |
திருபல்லவனீச்சுரம் |
|
இறைவன் பெயர்: |
பல்லவனேஸ்வரர் |
|
இறைவி பெயர் : |
சௌந்தரநாயகி |
|
தல மரம் : |
மல்லிகை, புன்னை (தற்போதில்லை) |
|
தீர்த்தம் : |
காவிரி, ஜான்னவி, சங்கம தீர்த்தம்
|
|
வழிபட்டோர்: |
அகத்தியர், பல்லவ மன்னன் |
|
எப்படிப் போவது : |
சீர்காழிக்கு
அருகில் உள்ள பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டிணம்) இந்த சிவஸ்தலம் உள்ளது. |
|
![]() |
|
|
தல வரலாறு: கோவிலுக்கு எதிரில் அகத்தியர் உண்டாக்கிய ஜான்னவி தீர்த்தம் – திருக்குளம் உள்ளது.
பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் தென்படும் கண்ணகி அலங்கார வளைவைத் தாண்டியதும், சாலை ஓரத்திலேயே கோவில் அமைந்திருக்கிறது.
சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகளும் இருக்கின்றன.
அஞ்சல் முகவரி:
பல்லவனீச்சுரம். காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல். சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம். PIN - 609 105
ஆலயப் பூஜை காலம்: நாள்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். திருவிழாக்கள்: வைகாசி விசாகம், ஆடியில் பட்டினத்தார் விழா.
தொடர்புக்கு: 91- 94437 19193
கோவில் அமைப்பு ஐந்து நிலைகளைத் தாங்கி கம்பீரத்துடனான இராஜகோபுரத்தினை முதலில் தரிசித்து, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து, கோபுரத்தை வணங்கிக் கொள்ளலாம்.
கோபுர வாயிலைக் கடந்து செல்லுகையில் இதன் இடது புறத்தில் அதிகார நந்தி, சந்நிதியில் அருளிக் கொண்டிருக்கிறார்.
இவரிடம் நாம், ஆலயத் தொழுகை முழுவதும் சிறப்புடன் அமைய, அதிகார நந்தியிடம் விண்ணப்பித்து வேண்டி வணங்கி நகர்வது வழக்கம்.
வாயிலைக் கடந்து சென்றால், வெளிச்சுற்றில் சூரியன், மற்றும் நான்கு சிவலிங்கத் திருமேனிகள் இருக்கிறது. ஒவ்வொரு லிங்கத் திருமேனி யையும் பணிந்து வணங்கிக் கொள்ளலாம்.
அடுத்து, கைகூப்பி நின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதியில் இருக்கிறார்.
இதற்கடுத்து விநாயகரைக் கண்டு தோப்புக் கரணம் இட்டு வணங்கி நகரலாம்.
விநாயகரை அடுத்திருந்த சுப்பிரமணியர் சந்நிதிக்கும் சென்று தொழுது வணங்கலாம்.
முருகப் பெருமான் பெரியதாகவுள்ள உருவத்துடன் அருளிக் கொண்டிருக்கிறார்.
அடுத்து, கஜலட்சுமியை இவள் சந்நிதியில் வணங்கிக் கொள்ளலாம். அதை அடுத்து, சனீஸ்வர பகவான் பைரவர், சந்திரன் ஆகிய மூவர் திருமேனிகளும் ஒரே சந்நிதிக்குள் இருக்கிறது.
பல்லவனேஸ்வர ஈசன், பெரிய, பருத்த
சிவலிங்க பாணத்துடன்
அமையப்பெற்று கம்பீரமான காட்சியைக் காட்டி
எழுந்தருளி இருக்கிறார்.
அடுத்து அமைந்துள்ளது அம்பாள் சந்நிதி,
இந்த உள் பிரகார மண்டபத்திலேயே வலப் புறத்தில் நடராஜப் பெருமானைக் காணலாம்.
சிதம்பரத்தில் இருப்பது போன்றே சபாபதி சபை இங்கும் அமைந்து இருக்கிறது.
இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி மேற்கு பார்த்தபடி இருக்கின்றன.
பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருடன் இவர் மயில்வாகனம் உடனில்லை.
கோஷ்டத்தில் வலம் செய்கையில், இரண்டு துர்க்கைகள் இருக்கின்றனர்.
அடுத்து, சண்டிகேஸ்வரர் சன்னதி. இத்தலத்திற்கு அருகில் பாய்ந்தோடும் காவிரி நதி வங்காள விரிகுடாக் கடலுடன் இணைந்து சங்கமிக்கிறதாம்.
இக்காவிரி சங்கமமே இத்தலத்தின் தீர்த்தம் என்பதால் அங்கு சென்று வருவது சிறப்பு .
காலவ மகரிஷி என்பவர் இத்தலத்தில் சிவனை வழிபாடு செய்து பேறு பெற்றுள்ளார்.
பட்டினத்தார் அவதாரத் தலம் காவிரிப்பூம்பட்டினம்.
இவரது சன்னதியின் மேல் அமைந்திருக்கும் விமானத்தில், பட்டினத்தார், அவர் மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் சுதைவடிவுடன் இருப்பதைக் காணலாம்.
இங்கு சிவனுக்கு பிரம்மோற்சவம் கிடையாது.
பட்டினத்தாருக்காகே விழா எடுக்கப் பெறுகிறது.
பட்டினத்தார் திருவிழா பன்னிரண்டு நாட்கள் நடக்கிறது.
விழாவின் பத்தாம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சியைப் பெரிய அளவில் விமரிசையாக நடத்தி வருகிறார்கள்.
பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, தொண்டை நாட்டுத் தலமான திருவொற்றியூரில் முக்தி பெற்றார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் *"பட்டினத்தார்"* என்றழைக்கப் பெற்றார்.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள் செய்துள்ளார்.
ஒன்றாம் திருமுறையில் ஒரு பதிகமும், மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகமும் இடம் பெற்றுள்ளது.
தல அருமை: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞான கமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர்.
இவர்களுக்குச் சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். இவர் திருவெண்காடர் என்று அழைக்கப் பெற்றார்.
இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார்.
பதினாறாம் வயதில் சிவகலை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிப் பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, மிகவும் வேண்டி, திருவெண்காடர் சிவனை வழிபட்டார்.
இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாகப் பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப் பெற்றார்.
ஒரு சமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்குத் தத்துக் கொடுக்கும்படி கூறினார்.
அதன்படி திருவெண்காடர், மருதவாணரைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
மருதவாணரும் தந்தையின் வாணிபத் தொழிலைச் செய்தார். ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.
வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதைக் காணப் பெட்டியைத் திறந்தார்.
திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில், தவிட்டு உமிகளையும் மாட்டுச் சாணத்தையும் கொண்டு செய்யப் பெற்ற எரு வராட்டி மட்டும் இருந்தது.
மகனைச் சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவைக் கொண்டு வந்து தந்திருக்கிறானே! என்று வருந்தி, கோபத்தில் அந்த வராட்டி உள்ள பெட்டியை வெளியில் வீசி எறிந்தார்.
வீசி எறிந்ததில், வராட்டியும் தகரப் பெட்டியும் சிதறி விழுந்தது.
அதில், *"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே''* என்ற வாசகம் எழுதப் பெற்றிருந்த துண்டுக் குறிப்பையும் கண்டார்.
இதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. "மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூடக் கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்ற உண்மையை உணரப் பெற்றார்.
உடனே இல்லற வாழ்க்கையைத் துறந்தார். இங்கு வந்து சிவனை வணங்கி, அவரையே குருவாக ஏற்றார்.
தனது இல்லற வாழ்க்கையை முடித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார்.
அவருக்குக் காட்சி தந்த சிவன்,... தகுந்த காலத்தில் அதற்கான நேரத்தில் முக்தி அருளுவோம் என்றார்.
அதன்பின், பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரைப் பயணம் மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் வைத்து முக்தி பெற்றார்.
சம்பந்தர் தேவாரம்: 1.அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேயவிடம் கடையார் மாடம் நீடியெங்கும் கங்குல் புறந்தடவப் படையார் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சுரமே.
பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப் பூம்பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.
11.பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம் அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல் சித்தஞ்சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோயிலராய் ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.
பக்தர்கள் போற்றும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீவினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வீர்.
திருச்சிற்றம்பலம்.
|
|
திருபல்லவனீச்சுரம் அருகில் உள்ள சிவாலயங்கள்
https://www.youtube.com/watch?v=cjjeiOMOPSA
https://www.youtube.com/watch?v=tu04XlrGj3k
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu
