திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் - 011 - இருகரையென்றேனோ வடுகரைப் போலே

8 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Aug 9, 2023, 1:31:24 AM8/9/23
to thatha patty
வடுக நம்பி என்ற பெயரைக் கேட்டவுடனேயே  ஸ்ரீராமானுஜருடன் சம்பந்தப்பட்டவர் என்று பலருக்கு நினைவு வரலாம். பல புத்தகங்களில் இராமானுஜரின் சீடர்களில் ஒருவர் என்றும் அந்தரங்கக் காரியதரிசி என்றும் குறிப்பிடுகிறார்கள். தவறு.

ஒருவருக்காக வேலை செய்யும் போது அதை பக்தியுடன் செய்தால் அந்தக் காரியத்துக்குப் பெயர் - கைங்கரியம். அது தான் வடுக நம்பியிடம் இருந்தது. அதற்குக் காரணம் உடையவரிடம் இருந்த அளவு கடந்த ஆசாரிய பக்தி.

வடுகநம்பி (VadugaNambi) வைணவ ஆச்சாரியனான இராமாநுஜரின் முதன்மை மாணாக்கரில் ஒருவர். கர்நாடகத்தின் மைசூரில் உள்ள சாளக்கிராமம் என்னும் ஊரில் சித்திரை மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் ஆந்திர பூர்ணர் என்னும் இயற்பெயரோடு பிறந்தவர். திரு நட்சத்திரம் சித்திரையில் அஸ்வினி. தன் குருவாகிய இராமானுஜர் மீது கொண்ட அளவில்லா குரு பக்திக்காக இவர் பெரிதும் புகழப் பெறுகிறார்.   இராம பக்திக்குப் பெயர் பெற்ற குலசேகர ஆழ்வாரின் அதே நட்சத்திரம் அவருக்கு இருந்தது. வடுக நம்பியும் அவ்வாறே ராமானுஜ பக்திக்குப் பெயர் பெற்றவர். 
image.png

குலசேகர ஆழ்வாரும் பகவான் கிருஷ்ணரைப் புகழ்ந்து வசனங்கள் எழுதினார், ஆனால் அவர் முதன்மையாக இராம பக்திக்காக அறியப் பெற்றவர். அவர் இராமனிடம் தன்னை இழந்தார், மேலும் தன்னை இராமனாக அடிக்கடி கற்பனை செய்து கொண்டு அசுரர்களைக் கொல்ல வில் அம்புகளைக் கேட்பார். அவ்வாறே வடுக நம்பியும் இராமானுஜ பக்தியில் திளைத்தார்.

‘யதிராஜ வைபவம்’ என்று இவர் ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி இயற்றிய 114 ஸ்லோகங்களில் உடையவருடைய வாழ்க்கை பிரபாவத்தை மிக அழகாக விளக்கியுள்ளார் -

கடைசி ஸ்லோகத்தில் :

“தனது அந்தரங்க சிஷ்யர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கைங்கர்யத்தில் நியமித்த ஸ்ரீமானான யதிராஜர், மிகவும் தகுதியற்ற என்னையும் தமக்குப் பால் காய்ச்சும் கைங்கரியத்தில் நியமித்தருளினார்; இது என்ன ஆச்சரியம்! அத்துடன் தன்னடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியவனாகவும், மிகுந்த அன்புடையவனாகவும், தனக்கு நல்லது செய்பவனாகவும் கொண்டு என்னையும் ரக்ஷிக்கிறவரான அவர் பல்லாண்டு வாழ்க!”  என்கிறார் வடுக நம்பி. 

இவர் இயற்றிய நூல்கள் 

1. யதிராஜ வைபவம் 2. ராமாநுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம் 3. ராமாநுஜ அஷ்டோத்தர சதநாம நாமாவளி


 மதுரகவி ஆழ்வார் எப்படி நம்மாழ்வாரைத் தவிர வேறு ஒருவரையும் தெய்வமாகக் கொள்ளாமல் “தேவுமற்றறியேன்” என்று இருந்தாரோ,  நம் வடுக நம்பியும் ஸ்ரீராமானுஜரே என்றிருந்தார்.

“வடுக நம்பி, ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீ வசன பூஷணத்தில் கூறுகிறார். இருகரையர் என்றால் Double minded person. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்பது போல,  கூரத்தாழ்வானும், முதலியாண்டானும்  எம்பெருமான், எம்பெருமானார் இருவரையும் பற்றினர்.  அதைப் பார்த்து  வடுக நம்பி ஆழ்வானையும், ஆண்டானையும் பார்த்து நகைப்பதாகக் கொள்ள வேண்டும்.

வடுக நம்பியின் ஆசாரிய நிஷ்டைக்குச் சில சம்பவங்களை உதாரணமாக நாம் பார்க்கலாம்

ஒரு முறை திருவெள்ளரைக்குச்  சென்று கொண்டிருந்த ஸ்ரீ இராமானுஜர் தன் திருவாராதனம் செய்யும் பெருமாளை வடுக நம்பியிடம் கொடுத்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருமாறு நியமித்தார். ஒரு கூடையில் வடுக நம்பி,  திருவாராதனப் பெருமாளுடன், உடையவர் திருவடி நிலைகளையும் ( பாதுகைகள் ) ஒன்றாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்தார். திருவராதனம் செய்ய வடுக நம்பியிடம் பெருமாளை வெளியே எழுந்தருளப் பண்ணும் படி உடையவர் கூற, . வடுக நம்பி கூடையை திறந்து முதலில் ஸ்ரீராமானுஜருடைய பாதுகைகளை வெளியே எடுத்தார். பிறகு பெருமாளை வெளியே எழுந்தருளப் பண்ணினார்.

இதைப் பார்த்த உடையவர் திடுக்கிட்டு “வடுகா! என்னுடைய பாதுகைகளையும், பெருமாளையும் இப்படி ஒன்றாக வைப்பது தகுமோ?” என்று வருத்தப்பட்டார். இதற்கு வடுக நம்பி “அது உங்களுடைய பெருமாள், இது என்னுடைய பெருமாள்!” என்றாராம்.

ஸ்ரீராமானுஜருடன் இருந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் “ஓம் நமோ நாராயணாய” என்ற திரு மந்திரைத்தை உச்சரிக்கப், பக்கத்தில் இருந்த வடுக நம்பி “எம்பெருமானார் இருக்க எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லலாமோ ?” என்று கூறி எழுந்து சென்று விட்டாராம்.

ஸ்ரீரங்கத்தில் உடையவர் பெரிய பெருமாள் வடிவழகைச் சேவித்துக் கொண்டிருக்கும் போது, உடையவருடைய வடிவழகை நம்பி சேவித்துக் கொண்டிருப்பாராம். ஒரு நாள் இதைக் கவனித்த உடையவர் “பெருமாளுடைய கண்ணழகைப் பார்” என்ற போது
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே.”  என்று நம்பி அருளிச் செய்தாராம்.

பிரசாதம் உட்கொண்ட பின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாது என்பது வழக்கம். அதனால் எம்பெருமானார் அமுது செய்த சேஷ பிரசாதத்தை வடுக நம்பி உண்ட பின் தன் தலையிலே கைகளை துடைத்துக் கொள்வாராம். இதை ஒரு நாள் கவனித்த உடையவர் கோபிக்க, அன்று நம்பி தம் கைகளை அலம்பிச் சுத்தம் செய்தார்.

மறுநாள் உடையவர் கோவில் பிரசாதத்தை நம்பியிடம் தர அதைச் சாப்பிட்ட பின் கைகளை அலம்பிய போது “வடுகா! என் செய்தாய் ?” என்று எம்பெருமானார் கேட்க  “நேற்று அருளிச் செய்தபடி செய்தேன்” என்றாராம்.

“உம்மிடம் தோற்றோம்!” என்றாராம் உடையவர்.

ஒருநாள் திருவீதிப் புறப்பாட்டின் போது பெருமாள்  மடத்து  வாசலில் எழுந்தருள “வடுகா! பெருமாளைச் சேவிக்க வா” என்று உடையவர் அழைக்க, அப்போது திருமடைப் பள்ளியில் உடையவருக்குப் பால் காய்ச்சிக் கொண்டிருந்த வடுகநம்பி “உம்முடைய பெருமாளைச் சேவிக்க வந்தால், என்னுடைய பெருமாளுக்குப் பால் பொங்கி விடுமே!” என்று பதில் சொன்னாராம்.

இப்படி ஸ்ரீ இராமானுஜரிடத்து மிகுந்த பக்தி கொண்டிருந்தவரான வடுகநம்பி பரமபதித்த செய்தியை சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடம்  “வடுகநம்பி திருநாட்டுக்கு எழுந்தருளிவிட்டார்” என்று கூறிய உடனே அவர் அதிர்ச்சியாகி மூர்ச்சை அடைந்தார். பிறகு உணர்வு திரும்பியபின் வடுக நம்பி உடையவரிடத்தில் பரம பக்தி கொண்டிருந்தார்.  எனவே அவரைத் திருநாட்டுக்குப் போனாரென்று சொல்லக்கூடாது. அவர் உடையவர் திருவடிகளை அடைந்தார் என்றே கூற வேண்டும் என்றாராம். ( அதனால் தான் “ஆசாரியன் திருவடியடைந்தார்” என்று நாம் இன்றும் சொல்கிறோம்)

உடையவர் தனக்கு ஏதாவது தேவை என்றால் அவர் வாஞ்சையுடன் வடுக நம்பியை “வடுகா வடுகா” என்று அழைப்பாராம்.   தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி  தனிச் சிறப்புள்ளது, அது எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.  

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில் “வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில், மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார், ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த வடுக நம்பிகளைப்  போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார். வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை. ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகிவிடும். ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர். ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை. இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப்  புகல்.

வடுக நம்பியின் தனியன்:-

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

ஆச்சாரியனை விடப் பெருமாள் முக்கியம் என்று அவரால் சொல்ல முடியவில்லை.மாமுனிகள் இயற்றிய ஆர்த்தி பிரபந்தத்தில் பின்வருமாறு வடுக நம்பியைப் புகழ்ந்துரைக்கிறார்.

உன்னையொழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னுபுகழ்சேர் வடுக நம்பி - தன்னிலையை
என்றனக்கு நீ தந்தெதிராச என்னாளும்
உன்றனக்கெ ஆட்கொள் உகந்து.




https://www.youtube.com/watch?v=3I7IDLdyHFI

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

வணக்கம் சுப்பு

 Vanakkam Subbu

 zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif

Reply all
Reply to author
Forward
0 new messages