செட்டில்மெண்ட் பத்திரம் Settlement Deed
செட்டில்மெண்ட்
என்னும் குடும்ப உறவுகளுக்குள் கொடுக்கும் தானப் பத்திரத்தை எழுதிக்
கொள்ளும்போது, இதன் சட்ட விபரங்களைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், ஏனோ-தானோ
என்று எழுதி வைத்துக் கொண்டுள்ளதால், மிக அதிகமானவர்கள்
சிரமப்படுகிறார்கள். இந்த செட்டில்மெண்ட் பத்திரத்தில் நிறைய சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மிக அதிகமான செட்டில்மெண்ட் பத்திரங்கள்
கோர்ட்டுக்குச் சென்றுள்ளன. இந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதும்போது
கவனமாகச் சில சட்ட விஷயங்களைத் தெரிந்து எழுதினால் இத்தகைய சட்டச் சிக்கல்கள்
வராது.
தானம்
என்பது ஒரு பொருளை மற்றவருக்கு இனாமாகக் கொடுப்பது. அவ்வாறு கொடுத்தால், அதை
மற்றவர் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் பொருளைக் கொடுப்பவருக்கு அதைக்
“கொடுக்கும் உரிமை” இருக்க வேண்டும், அதற்குறிய வயது இருக்க வேண்டும்.
கொடுக்கும் எண்ணம் இருக்க வேண்டும். நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். யாருடைய கட்டாயத்தின் பேரிலோ அன்றி மிரட்டலின் பேரிலோ, அச்சுறுத்தலின் பேரிலோ எழுதி இருக்கக் கூடாது. தானம்பெறுபவர் தானத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தத் தானம் பூர்த்தி அடையும். “நீ சென்னை மாநகரை எடுத்துக் கொள்” என்று
சொல்லிவிட்டுப் போய்விட்டால் போதாது. அதைப் பெறுபவர் எடுத்துக் கொண்டால்தான்
அது தானம் எனப்படும். கொடுப்பவருக்குச் சென்னையைக் கொடுக்கும் உரிமை இருக்கிறதா
என்பதைப் பொறுத்தே அந்தத் தானம் செல்லுமா செல்லாதா என்பது முடிவாகும்.
எல்லா
மதத்திலும், சொத்தை, செட்டில்மெண்ட் செய்யும் பொதுவான முறை உள்ளது.
முகமதிய மதத்துக்கு மட்டும் சில மாறுபாடான விதிமுறைகள் உள்ளன. இந்தியச் சொத்துரிமைச் சட்டத்தில் “தானம் கொடுக்கும் சொத்துக்களைப்பற்றித்” தனியாக ஒரு அத்தியாயமே சொல்லப் பெற்றிருக்கிறது. அது முகமதியர்களுக்கு மட்டும்
பொருந்தாது என்ற விதிவிலக்கும் சொல்லப் பட்டிருக்கிறது.
பொதுவாக,
செட்டில்மெண்ட் செய்து வைக்க விரும்புபவருக்கு ஒரு சொத்து இருந்து, அதைத் தன் மனைவி, மகன், மகள், பேரக் குழந்தைகள் இவர்களுக்குச் செட்டில்மெண்ட்
செய்து வைக்க விரும்பினால், அதை முழுவதுமாகக் கொடுத்துவிடுவதே மிகச் சிறந்த
செட்டில்மெண்ட் முறை. கொடுப்பவர், அன்றே, அந்தச் சொத்தில் அவரின் உரிமை
அனைத்தையும் எழுதிக் கொடுத்துவிட வேண்டும். இந்த மாதிரி செட்டில்மெண்ட்டில் சட்டப் பிரச்சனைகள் ஏதும் எழாது. கொடுத்தவர் மேஜர் வயது அடைந்தவர் என்றும்,
நல்ல மனநிலையில் எழுதிக் கொடுத்தார் என்றும், யாருடைய கட்டாயமோ, மிரட்டலோ, அச்சுறுத்தலோ இல்லை என்றும் தெரிந்தால் போதும். அந்தச் செட்டில்மெண்ட் பத்திரம் சட்டப்படி
செல்லும்.
இவ்வாறு
இல்லாமல், ஒரு சிலர், சொத்தை தன் வாரிசுகளுக்கே தானமாகக் கொடுக்கத் தயங்கிக்
கொண்டு சில வாசகங்களையும் சேர்த்து எழுதிக் கொடுப்பர். அதாவது, என் ஆயுள்
உள்ளவரை நான் இந்த சொத்தில் குடியிருந்து வருவேன் என்றும், என் ஆயுள்
காலத்துக்குப் பின், நீ முழுவதுமாக எடுத்துக் கொள் என்றும், என் வாழ்நாள்
வரை இந்தச் சொத்தை, வேறு யாருக்கும் கிரயம் செய்ய உரிமை இல்லாமல், ஆனாலும்
அடமானம் வைத்துப் பணம் வாங்கிக் கொள்ளும் உரிமை மட்டும் வைத்துக் கொண்டு
செட்டில்மெண்ட் செய்வர். சிலரோ, இந்தச் சொத்தை உனக்கு செட்டில்மெண்ட் செய்து
கொடுத்துவிட்ட போதிலும், அதன் பொஷஷன் என்னும் அனுபவிக்கும் உரிமை (அனுபவ பாத்தியதை) என்னிடமே
என் உயிர் உள்ளவரை இருக்கும் என்றும் அதற்குப் பின் இந்தச் சொத்து உனக்குச்
சேரும் என்று எழுதுவர். வேறு சிலர், செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த
பத்திரத்தையும், அதன் தாய் பத்திரத்தையும் அவரே வைத்துக் கொள்வார்.
இன்றைய கால கட்டங்களில் பிள்ளைகள் திருமணம் ஆன பின் மனைவி அல்லது மனைவி வீட்டார் சொல்வதையும் தவறாக வழிநடத்தும் நண்பர்கள், அலுவலக சக ஊழியர்களின் தூண்டுதலின் பேரிலும் பெற்றோரிடம் செட்டில்மெண்ட் பத்திரத்தை வாங்கிய பின் அவர்களைச் சரியாகப் பேணாமல் அவர்கள் மனம் கோணுகிற படி நடப்பதும், வயதான காலத்தில் நேரத்திற்கு வயிற்றுக்குச் சோறு போடாமல் பசியால் வாட வைப்பதும், மனம் போன போக்கில் கண்ட வார்த்தைகளைப் பிரயோகித்து தன்னைப் பல சிரமங்களுக்கிடையே வளர்த்ததையும், படிக்க வைத்து ஆளாக்கியதையும் மறந்து அலைக்கழிப்பதையும் சகஜமாகிப் போனதால் தான் வழக்கறிஞர்கள் இப்படி செட்டில்மெண்டில் பல வாசகங்களை அவர்களது பாதுகாப்புக் கருதி எழுதுகின்றனர். இப்படிப் பல குழப்பமான வாசகங்களுடன் ஒரு செட்டில்மெண்ட் எழுதி வைத்துக் கொள்வதாலும் உயில் எழுதுவதுபோல நினைத்துக் கொண்டு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவதாலும் தான் சட்டக் குழப்பமும் , சட்டச் சிக்கலும் அதிகமாகும்..
ஒரு சொத்தைச் செட்டில்மெண்டாக கொடுக்க வேண்டும் என்றால் அதை முழுமையாக கொடுத்துவிட
வேண்டும். அந்தச் செட்டில்மெண்ட் பத்திரத்தில் கையெழுத்துச் செய்யும்போது
அதன் உரிமையை முழுமையாகவே விட்டுவிடவேண்டும். அந்தச் சொத்தைப் பெறுபவர் அன்றே
முழு உரிமையையும் அடையும்படி கொடுத்து விடவேண்டும். இதுதான் முதல்வகை
செட்டில்மெண்ட் ஆகும். இதை “இன்-பிரசண்டி செட்டில்மெண்ட்” (in presenti) என்று சட்டம் சொல்கிறது. அதாவது
உரிமையை தள்ளிப் போடாமல் “அன்றே” கொடுத்துவிடுவது. அதாவது கிரயம் வாங்கும்
சொத்துக்களைப் போலவே, பணம் கொடுத்தவுடன், எப்படிச் சொத்து கைக்கு கிடைக்குமோ
அதுபோல இருக்கும். இவ்வாறு செட்டில்மெண்ட் மூலம் பெற்ற சொத்துக்களை உடனே
அதைப் பெற்றவர் “ஏற்றுக் கொள்ள” வேண்டும். கையால் தூக்கிக் கொடுக்கும்
பொருள்களை பெற்றுக் கொள்ளலாம். அசையாச் சொத்துக்களை எப்படி தூக்கிக் கொடுக்கமுடியும் என்ற கேள்வி எழும். அந்தச் சொத்தின் பட்டா, வரி, இவைகளை
மாற்றிக் கொண்டு அனுபவிக்க ஆரம்பிப்பதே அந்தச் சொத்தைப் பெற்றுக் கொண்டதற்கு
அடையாளம் ஆகும். அசையாச் சொத்தில் வாடகைதாரர் குடியிருந்தாலும், அந்த
வாடகையை வாங்க ஆரம்பித்தால் போதும், இந்தச் சொத்தை இவர் பெற்றுக் கொண்டார்
என்று அர்த்தமாகும்.
.......... தொடரும்