
மூலவர் – வைஷ்ணவ நம்பி (என்ற) அழகிய நம்பிராயர்
தாயார் – குறுங்குடி வல்லி நாச்சியார்
தீர்த்தம் – திருப்பாற்கடல், பஞ்சதுறை
திருவிழா – சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம் ,புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம். பங்குனி பிரம்மோற்சவம்.
திறக்கும் நேரம் – காலை 6:30 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை
இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல நினைத்தபோது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டெடுத்தார்.
அப்போது பூமித்தாய் இந்தப் பூமியில் உள்ள ஜீவராசிகள் பகவானை அடைய என்ன வழி எனக் கூறுங்கள் என்று வராகமூர்த்தி இடம் கேட்கிறார். இறைவனும் இசையால் இறைவனை அடையலாம் என்கிறார்.
இதன் பயனாக ஒரு முறை பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த நம்பாடுவான்’ என்ற மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சனை முற்றி மனிதனை விழுங்க நினைத்தது பூதம்.
அதை அறிந்து நம்பாடுவானும் பூதத்திடம் இன்று ஏகாதசி, எனவே கைசிகம் என்ற விரதத்தில் பகவானைப் பாடி விட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் நம்பாடுவானுக்கும், பாடலைக் கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.
பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்.
வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத் திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினன் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.
‘நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானைப் பிடித்துக் கொண்டு அவரைப் புசிக்கப் போவதாகக் கூறுகிறான். நம்பாடுவான் நம்பியைத் தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாகச் சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோவிலின் வாயிலில் நின்று, நம்பியைத் தரிசிக்க முயல்கிற போது கோவிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. இவர் கோவிலினுள் செல்ல முடியாமலும், அழகிய நம்பியைப் பார்க்காமல் போனதற்கும் மிகவும் வருத்தப்பட்டார்.
அப்போது பெருமாள் கொடிமரத்தைச் சற்று விலகி இருக்கச் சொல்லி நம்பாடுவானுக்குத் தாமே தரிசனம் தந்தார். வேறு எந்தக் கோவில்களை போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம்.
நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானைத் தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்தப் பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.
இராட்சசனைத் தேடிக் காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு “ தான் நம்பியைத் தரிசித்துத் தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதிப் பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்பெறுகிறது.
குறுங்குடி நம்பியை நம்மாழ்வார் (2189, 2393, 2568-2578) பெரியாழ்வார், (71) திருமங்கையாழ்வார் (1005, 1399, 1470, 1788-1807, 2065, 3815:14) ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
ஸ்ரீ இராமானுஜர் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து வரும்போது, திருக்குறுங்குடி வந்தார். அவரிடம் நம்பி, அவரை ஆசாரியனாகக் கொண்டு, தான் சிஷ்யனாக இருக்க விருப்பம் தெரிவித்து, அவருக்கு திவ்ய ஆசனம் அளித்தார். இராமானுஜரும், நம்பிக்கு த்வய மந்திரோபதேசம் செய்து, “ஸ்ரீ வைஷ்ணவ நம்பி” என்று தாஸ்ய நாமம் கொடுத்தார். திருவட்டாறு, திருவெண்பரிசாரம் போன்ற திவ்ய தேசங்களைக் கடந்து, திருவனந்தபுரம் சென்ற இராமானுஜரை, அங்குள்ள நம்பூதிரிகளின் வேண்டுகோளுக்கு இரங்கிப், பெருமாள் இராமானுஜரைத் திருக்குறுங்குடியில் விட்டுவிடுமாறு தனது கருடனைப் பணித்தார். கருடனும், திருக்குறுங்குடியில் உள்ள திருவட்டப் பாறையில் விட்டுவிட்டார்.
காலையில் கண்விழித்த இராமானுஜர், திருக்குறுங்குடியில் இருந்ததைக் கண்டு வியந்து, அனுஷ்டானம் முடித்த பின், திருமணக் காப்பிடத் தனது சிஷ்யனான வடுக நம்பியை அழைத்தார். நம்பி, வடுக நம்பியாக வேடம் பூண, இராமானுஜரும் அவருக்குத் திருமண் காப்பிட்டார். நம்பியைச் சேவிக்க சன்னதிக்கு சென்ற இராமானுஜர், வடுக நம்பியைத் தன்னருகே காணாமல் தேடிய போது, தம்மால் இடப்பட்ட திருமண் காப்பு, நம்பியின் திருநெற்றியில் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.
பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..
“வெள்ளிறா” என்னும் சாதி மீனை தாய் கொக்கு ஊட்ட, கொக்கின் குஞ்சு உண்ணும் திருக்குறுங்குடி என்னும் இத்தலமானது. எலும்பு மாலையும், புலியின் தோலையும் உடையவரான சிவபெருமானை அருகே இருக்க இடம் கொடுத்து எழுந்தருளியிருக்கின்ற சீலகுணமுடையவரான பெருமாளுடைய திவ்விய தேசமமாம்).
கோவில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது, இங்குள்ள சிவனுக்குப் பூஜை நடந்து விட்டதா என்பதை அறிய, சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பருக்குக் குறை ஏதும் உண்டா என்று பட்டர் கேட்பார் அதற்குக் குறை ஒன்றும் இல்லை என பட்டர்கள் பதில் அளிப்பார்கள்.
இது இன்றும் நடைமுறையில் உள்ளது.
மேலும், இக் கோவிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே காலபைரவருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது.
திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோயில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
வள்ளியூர் இரயில் நிலையத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாகர்கோவிலில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவிலும் திருக்குறுங்குடி திருத்தலம் உள்ளது.
இங்கு “இராமானுஜக் கூடம்” என்கிற தங்கும் விடுதி உள்ளது. திருநெல்வேலி, நாகர் கோவில், வள்ளியூர் ஆகிய நகரங்களில் யாத்திரிகர்களின் வசதிக்கேற்பத் தனியார் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன.
மூலவர் நம்பிராயரின் வலது புறத்தில் அருகில் நின்றான் என்ற பெயரில் சிவபெருமான் சன்னதி அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச் சிறப்பம்சமாகும். நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் இக்கோயிலில் காட்சி தருகிறார்.
வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது அச்சந்தரும் வராக உருவத்தை குறுகச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது.
வாமன க்ஷேத்திரம் என்ற பெருமை வாய்த்ததால், குறியவன் வசிக்கும் குடில் எனும் அர்த்தம் தொனிக்கக் குறுங்குடி என்று பெயர் பெற்றது.
கைசிக புராணத்திலிருந்து, நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் விஷ்ணு பக்தனான ஒருவரின் தரிசனத்தாலும், ஸ்பரிசத்தாலும் எம்பெருமான் அருளுக்குப் பாத்திரமாகி, வீடுபேறு அடையலாம் என்ற உண்மை காட்டப்படுகிறது.
நாமும் திருக்குறுங்குடி நம்பியைச் சேவித்து, நம்பாடுவான் பெற்ற பேற்றைப் பெறுவோமாக!
https://www.youtube.com/watch?v=zB2-5sIOC_8
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu
