கவர்ந்த கண்கள்
உறையூர் சோழராஜாவிடம் மெய்காப்பாளனாக இருந்தவர்
தனுர் தாசன்.( பிள்ளை உறங்காவில்லி).அவர் மனைவி
ஹேமாம்பா. (பொன்னாச்சியார்). மிகுந்த அழகுள்ளவர்.
அவர் கண்ணழகில் மயங்கிய பிள்ளை உறங்காவில்லி,
வெளியே ஊழியத்துக்குப் போகும் போதும், பிரிய
மனமின்றி உடனழைத்துச் செல்வார்.
தனுர்தாசர் (உறங்காவில்லி தாசர்) தம் துணைவியார்
ஹேமாம்பாவின் (பொன் நாச்சியாரின்) பேரழகைக்,
குறிப்பாக அவரது கண்ணழகைப் பெரிதும் போற்றி
வந்தார்.அவர் பாதம் மண்/புழுதியில் படாதபடி,கீழே ஒரு
துணியை விரித்து (எடுத்து மீண்டும் விரித்து / மாற்று
விரித்தல் என்று குறிப்பிடுவர்) அதன் மேல் நடந்து
வருமாறும்,அவர் கண்கள் வெயில் பட்டுக் காந்தி
விடாமல் இருக்கக் கண்களுக்குக் குடை பிடித்துக்
கொண்டும் வருவார்.ஒரு நாள் ஶ்ரீரங்கத்தில் நடந்த வசந்த
உற்சவத்தில் பெருமாள் புறப்பாட்டின்போது,
அனைவரும் பெருமாளைச் சேவித்து பாடி/ஆடிக் கொண்டு
வருகையில்,தனுர்தாசர் எதைப் பற்றியும்
கவலைப்படாமல் தம் துணைவியின் கண்களுக்குக் குடை
பிடித்துக் கொண்டு வந்தார்.இதைச் சற்று தூரத்தில் இருந்து
கவனித்த உடையவர் அவரை,அழைத்து வரும்படி
ஒருவரை அனுப்பினார். உடையவரிடம்
வந்து வணங்கியவரிடம், அனைவருக்கும் எதிரில்
இவ்வாறு நடந்து கொள்வது தகுமா என்றார். அதற்கு அவர்
தம் துணைவியின் கண்களின் அழகைப் போல வேறு
கண்களைத் தாம் பார்த்ததில்லை
எனவும், அவற்றைப் பேணவே அவ்வாறு
செய்வதாக் கூறினார்.
உடனே உடையவர்அவரிடம், இதுவோ அழிந்துவிடும்
அழகு. நிலையில்லாதது. நிலையான, இதைக்காட்டிலும்
பேரழகை உமக்குக் காட்டுகிறேன்... கண்டால் நீர் இனி
இச்செயலை விட்டுவிடுவீரோ? என்றார்.
சொல்லிவிட்டு, திருவரங்கம் அரங்கனின் சன்னதி
நோக்கி, அழைத்துச் சென்றார்.அரவணைத்துயிலும்
அரங்கனின் பேரழகை , கண்ணழகைக் காட்டி, அந்த
அழகை அனுபவிக்கும் உணர்வையும் ஆனந்தத்தையும்
அவருக்கு ஊட்டினார். உடையவரின் மனம் அறிந்த
பெருமாள் திருப்பாணாழ்வாரைப் பேதமை செய்த
"கரியவாகிப் புடை பரந்து, மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட
அப்பெரியவாய கண்களைத் தாசருக்குக் காட்டினார்.
எந்த அமுதினைக் கண்ட பாணர், மற்றொன்றினைக் காண
வில்லையோ, எந்தத் திருமுகத்தையும்,கண்களையும்
கண்ட அரசர் ஆளவந்தார் மஹா ஆசார்யர் ஆனாரோ,
அந்தக் கண்களைக் கண்ட தாசர் அங்கேயே மயங்கி
விழுந்தார்.எழுந்த தாசர் உடையவர் திருவடிகளில்
தண்டனிட்டுக் கதறினார்.
'கண்டு கொண்டேன்; கண்டு கொண்டேன் (சத்தியமான
அழகை)' என்று.
'தன் காதலியின் நயனத்தை மறந்தார்; நாராயணனைக்
கண்டார்'
பேருண்மையை உணர்ந்த தாசரை உடையவரும் சீடராக
ஏற்றுக் கொண்டார்.
என் அமுதினைக் கண்ட கண்கள்,
மற்று ஒன்றினைக் காணாவே!
மற்று ஒன்றினைக் காணாவே!!
மற்று ஒன்றினைக் காணாவே!!!
திரையிடப்பட்டது! முறையிடப்பட்டது!
அரங்கனில் கிறங்கினான்! அங்கேயே உறங்கினான்!
மல்யுத்த வீரன், மல்லாண்ட திண்தோள்
தனுர்தாசன், இராமானுசரின் சீடர்களுள் ஒருவனாகச்
சேர்ந்து கொண்டான்! குருவை...அவன் தேடிப்
போகவில்லை! அவனைத் தேடி...குரு வந்தார்!
சீடனின் உள்மனம் குருவுக்குத் தெரியும்! அங்கு
கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இல்லவே இல்லை! இது
தெரியுமா, அதைப் படிச்சிருக்கியா என்றெல்லாம்
ஒன்னுமே கேட்கவில்லை!முக்கியமாக "உன் குலம்-
கோத்திரம் என்ன? கலை-ஆசார்யன் என்ன?" என்ற
கேள்வி எல்லாம் எழவே இல்லை!சீடர்களுள் சீடராய்ச்
சேர்த்துக் கொண்டார்!
பிள்ளை உறங்காவில்லி, எம்பெருமானார் அடிபணிந்து
தாசரானார். அவருக்கு ஞான பக்தி வைராக்கியங்கள்
வளர்ந்தன.
தனுர்தாசன் பெரிய பண்டிதன் கிடையாது! முரட்டு மல்லன்!
அவனைச் சேர்த்துக் கொண்டு் அரசவை வாதப் போரில்
எல்லாம் வெல்ல முடியாது!ஆனாலும் குழாத்தில்
அவனையும் சேர்த்துக் கொண்டார் இராமானுசர்! பயன்
அன்று ஆகிலும், பாங்கு அல்லன் ஆகிலும், திருத்திப் பணி
கொள்வது தானே குருவின் சிறப்பு!
கவர்ந்த கண்களும் உறங்காத கண்களும்:
தனுர் தாசன் என்று இருந்தவனை, "பிள்ளை உறங்கா
வில்லி" என்னும் தூய தமிழ்ப் பெயராக மாற்றிக்
கொடுத்து, தீட்சையும் அளித்து விட்டார்! ஆனால்
அவனுக்கு குடும்பம்-ன்னு ஒன்னு இருக்கே!என்ன தான்
அவள் நடன மங்கையாக இருந்தாலும்,சாத்திரத்
திருமணம் செய்து கொள்ளவில்லை ஆயினும்...அவள்-
அவன்...இருவரும் ஆருயிர் காதல் துணைகள் ஆயிற்றே!
ஹேமாம்பா என்ற அவளுக்கும் "பொன்னாச்சி" என்று
தீட்சை அளித்து விட்டார்!
இருவரையும் இராமானுசர் பிரிக்கவில்லை! அதே
சமயத்தில் தம்பதிகளை மடத்திற்குள்ளே சேர்க்காமல்,
தனி இல்லத்தில் குடியிருத்தினார் காதலன்-காதலி
இருவருமே தொண்டில் சிறந்து, சிறிது நாளில் பலரின்
நன்மதிப்பையும் பெற்றனர்! என்ன தான் வில்லியைச்
சேர்த்துக் கொண்டாலும், அவன் கட்டை உருவம், நாலாம்
வருணம் என்ற எண்ணம் சில சீடர்கள் மனத்தில்
உறுத்தலாகவே இருந்தது போலும்!
பேரழகையும்,பேருண்மையையும்,அவற்றைக்காட்டிக்
கொடுத்த பேரருளாளர் ராமானுஜர் மகிமையையும்
முற்றும் உணர்ந்த தனுர்தாசர் அவர்களையே நெஞ்சிலும்,
கண்களிலும் நிறுத்தியதால், உறங்காமல் அவர்களுக்குக்
கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கை என்றிருந்தார்.
எம்பெருமானார் அதிகாலையில் விழித்தெழும்
போது, இவர் அங்கே தயாராக நின்று
கொண்டிருப்பார்.அவருக்கு உதவியாக அவருடனேயே
செல்வார். இரவில் அவர் உறங்கியபின் மடத்தில்
கைங்கர்யங்கள் செய்து விட்டுத் தம் திருமாளிகைக்குச்
செல்வார் (இதற்காகவே சொந்த வீடு, ஊரை (உறையூர்)
விட்டு உடையவர் மடத்துக்குப் பக்கத்தில் ஒரு வீட்டை
வாடகைக்கு எடுத்துக் கொண்டு தம்பதிகள் வந்து
விட்டார்கள்).
அழகிய மணவாளர் புறப்பாட்டின் போது பெருமாள் மீது /
அவர் வரும் வழி மீது வைத்த கண் வாங்காமல் மிகக்
கவனமாகப் பார்த்துக் கொண்டே வருவார்.
பெருமாளையும்,கூட்டம் முழுவதையும் பருந்துப் பார்வை
பார்த்துக் கொண்டே இருப்பார்.(ஒரு காலத்தில் இதே
பெருமாள் எதிரே வந்து "கண்ணுற
நின்றபோது, காணகில்லா தாசர், அண்ணல் இராமானுசர்
அருளால் நண்ணருஞானம் தலைக்கொண்டு
"பெருமாளைத் தவிர வேறு எதையும் காண்பதில்லை
இப்போது).அவர் இடுப்பு வேஷ்டியில் எப்போதும் ஒரு
கத்தி/வாளைச் செருகி வைத்திருப்பார்.நம்பெருமாளுக்கு
ஏதாவது ஆபத்து-அவர் வரும் வாகனம்/பல்லக்கு சற்று
மாறாக அசைந்தாலும்-ஏற்பட்டால் உடனே கத்தியை
எடுத்துத் தன்னைக் குத்திக் கொள்ள!! ஆனால் இவரின்
கூரிய கவனத்தாலும், அளப்பரிய பக்தியாலும்,
எம்பெருமான் / எம்பெருமானார் கிருபையாலும் கத்தியை
எடுப்பதற்கான வாய்ப்பு வரவே இல்லை!!
இரவு வீட்டுக்குச் சென்றாலும் அன்று நடந்தவை, மறுநாள்
நடக்கப் போவது ஆகியவற்றை சிந்தித்துக் கொண்டே
இருப்பாராம். எப்போது உறங்குவார் எப்போது விழிப்பார்
என்றுஆச்சர்யப்படும் அளவுக்கு.
இராமரின் வனவாசத்தின் போது இலக்குமணன் உறங்கா
மல் பாதுகாத்தாரோ அவ்வாறே, தாசரும், அவரது மனைவி
பொன்னாசியும் இடைவிடாது இராமானுசரைத் துதித்துக்
கொண்டு சேவை செய்து கொண்டிருந்ததால், பிரபலமான
தனுர் தாசருக்கு, பிள்ளை உறங்கா வில்லி தாசர் என்ற
திருப்பெயர் ஆயிற்று.
கல்லெல்லாம் தங்கமாக்கும், ராமானுஜ பர்ஸவேதி
அவருடைய தூய்மையான, ஆழ்ந்த பக்திக்கு இணையே
இல்லை.
நாலாம் வருணம் என்றெண்ணி சில சீடா்கள் மல்லனிடம்
அதிகம் பேசிக் கொள்ளாமல் ஒட்டி உறவாடாமல்,
"தங்களுக்குள் மட்டும் தனிக் கோஷ்டியாக" இருந்தனர்!
மனதுக்குள் சிரித்துக் கொண்ட இராமானுசர், அவர்களை
அடக்கித் திருத்த வேறு வழிகளைக் கையாண்டார்...
தினமும் ஆற்றில் குளிக்கப் போகும்
முன், முதலியாண்டான் என்ற அந்தணச் சீடர் கரம் பற்றி,
நீராடப் புகுவார் ராமானுஜர். நீராடி முடித்துக் கரையேறும்
போது,அந்தணர் அல்லாத பிள்ளை உறங்காவில்லி
தாசரின் கரம் பற்றி எழுவார். இது வர்ணாசிரம தர்மத்திற்கு
விரோதமானதுஎன்றும், பிராமணன் கீழ்குலத்தோனைத்
தொடுவது தவறல்லவோ என்று கூறி, சீடர்கள்
ராமானுஜரின் செயலுக்கான காரணத்தைக் கேட்டனர்.
அதற்கு அவர் இப்படிப் பதிலளித்தார்...
அச்சோ...குளிச்சி முடிச்ச பிறகும் இப்படித் தீட்டாயிடுத்தே-
ன்னு சொல்ல முடியாத படிக்கு,பேச்சால் பேசிக்
கொண்டிராமல், தன் செய்கையால், சாதியின் வாயை
அடைப்பது, இராமானுசருக்கு, கை வந்த கலை!
எத்தனை தான் ஞானம் பெற்றாலும்" உயர்குலத்தில்
பிறந்தோம்" என்ற எண்ணமேஆணவமாக நின்று,
இறைவனை அடையும் நிலையான அடியார்க்கு அடிமை,
என்ற"நைச்யம்" (தாழ்ந்த நிலை) பெற முடியாமல் போய்
விடுகிறது. எனவே இப்பிறவியால் உண்டான
அகங்காரத்தை, அகங்காரமே சிறிதுமற்ற இந்த
அடியவரைத் தீண்டி, உடல் சுத்தி செய்து கொள்கிறேன்...
என்றார்.
"சுவாமி, நீங்க அந்த வில்லி தாசருக்கு ரொம்பவே இடம்
கொடுக்கறீங்க"
"ஏன்? கொடுத்தா தப்பா சிஷ்யர்களே? வில்லியின்
பண்பட்ட மனம் இங்கே யாருக்காச்சும் இருக்கா?"
"அப்படி என்ன பண்பட்டுட்டான் அவன் மட்டும்?"
"சொல்கிறேன்...இப்போது போய்த் தூங்குங்கள். பின்னிரவு
ஆகி விட்டது!"
சீடர்கள் தூங்கச் சென்றார்கள்! சிறிது நேரம் கழித்து
உடையவர் தானே சென்று, அத்தனை பேரின்
மேலாடையிலும் கத்திரிக்கோலால் சிறு சிறு துண்டுகள்
போட்டார்!
மறுநாள் காலை...மடத்தில் சுப்ரபாதமா
ஒலித்தது? இல்லையில்லை!
கேட்கக் கூசும் வசவு வார்த்தைகள் ஒலித்தன!
சீடர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருந்தனர்.
"சீடர்களே, சாதாரண ஒரு நூல் துண்டுக்கா இத்தனை
பேச்சுப் பேசுகிறீர்கள்? தகுமா இது?பல நூல் கற்ற நீங்கள்,
சில "நூலுக்கு", உயர் நூலை அடகு வைத்தீர்களே!ஆக,
உங்கள் யாவருக்கும் இது நாள் வரை.......இந்த
வாய்மட்டும் தான் மறையோதிற்றா? மனம்
ஓதவில்லையா?"
"குருவே!"
"சரி சரி, உங்களைச் சோதிக்க, நான் தான் ஆடைகளைக்
கத்தரித்தேன்! நீங்கள் பேசிய இழிசொல் அத்தனையும்,
என்னையே சேரட்டும்!
உம்ம்ம்..முரட்டு மல்லன் வில்லி கூட, இப்படி எல்லாம்
பேசியதில்லை!"
"ஆசார்யரே...அய்யோ...மதி இழந்தோம்! கேவலமாய்
நடந்து கொண்டோம்! மன்னியுங்கள்! இப்போதே
வில்லியிடம் சென்று மன்னிப்பு கோருகிறோம்!"
"வேண்டாம்! அவன் லட்சணம் என்ன என்பதையும் ஒரு
கை பார்த்து விடுவோம்! இன்று இரவு வில்லியை நான்
மடத்துக்கு அழைத்துப் பேசப் போகிறேன்! அந்தச் சமயம்
பார்த்து நீங்கள், அவன் வீட்டுக்கு மாறுவேடத்தில் சென்று,
பொன்னாச்சியின் நகைகளை திருடிக் கொண்டு
வாருங்கள்!"
"என்ன! திருட்டா? குருவே..."
"உம்...சொன்னதைச் செய்யுங்கள்! ஆசார்யரின் ஆக்ஞை!"
சிஷ்யர்கள் தாஸரின் இல்லத்திற்குச் சென்ற பொழுது
பொன்னாச்சியார் உறங்கிக் கொண்டிருந்தார். மிகவும்
நிசப்தமாக அவரிடம் சென்று அவர் அணிந்திருந்த
நகைகளைக் கழற்ற முற்பட்டனர். பொன்னாச்சியாரும்
இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் வறுமையின் காரணமாகக்
களவாடுகிறார்கள் என்று எண்ணி அவர்கள் நகைகளை
எளிதில் கழற்றுவதற்கு இடம் கொடுத்தார். அந்த
சிஷ்யர்கள் அவருடைய ஒரு பக்கத்தின் நகைகளைக்
கழற்றியபின், அடுத்த பக்கத்தின் நகைகளை எளிதில்
கழற்றுவதற்காக தான் இயல்பாக தூக்கத்தில் திரும்புவது
போலப் பாசாங்கு செய்தார். ஆனால் அவர் திரும்புவதைக்
கண்டு அச்சமடைந்து அந்த சிஷ்யர்கள் தாஸரின்
இல்லத்திலிருந்து எம்பெருமானாரிடம் ஓடினர்.
நடந்த சம்பவங்களைக் கேட்டபின், எம்பெருமானார்
சிஷ்யர்களை மறுபடியும் அவர்களை தாஸரின்
இல்லத்திற்கு சென்று அங்கு நடப்பவைகளை கவனிக்கச்
சொன்னார். திரும்ப வந்த அவர்கள், தாஸர் தன்
இல்லத்தில் பொன்னாச்சியாரிடம் உரையாடிக்
கொண்டிருப்பதைக் கண்டார்கள். தாஸர்,
பொன்னாச்சியாரின் ஒரு பக்க நகைகளை மட்டும்
காணவில்லையே என்று வினவினார். அதற்குப்
பொன்னாச்சியார் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அவள்
அணிந்திருந்த நகைகளை களவாட வந்த பொழுது, நான்
உறங்குவது போல் பாவனை செய்து அவர்கள் எளிதில்
களவாடும்படி செய்தேன். பிறகு அவர்கள் அடுத்த பக்கம்
களவாடுவதற்கு ஏதுவாக நான் திரும்பிப் படுக்கும் பொழுது
அவர்கள் பயந்து ஓடி விட்டார்கள் என்று சொன்னாள்.
அதைக் கேட்ட தாஸர் மன வருத்தமுற்று நீ கல்லைப்
போல கிடந்து அவர்கள் விருப்பம் போல நகைகளை
எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்க வேண்டும் என்று
கூறினார். தாஸர் தம்பதிகளுடைய உரையாடலைக் கேட்ட
அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானரிடம் திரும்பச்
சென்று நடந்தவைகளை விவரித்து அந்த சிறந்த
தம்பதிகளின் பெருந்தன்மையை ஒப்புக் கொண்டனர்.
அப்போது வில்லி அலறி அடித்துக் கொண்டு
ராமானுஜரிடம் ஓடி வருகிறான்!
கையில் நகை மூட்டை!
"சாமீ, உங்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, என்
வீட்டில் யாரோ சில கொள்ளையர்கள் புகுந்து
களவாடியுள்ளனர்!
உறங்கிக் கொண்டிருந்த பொன்னாச்சி எழுந்து பார்த்து
அலற நினைத்தாள் போலும்! ஆனால் கொள்ளையர்கள்,
நாமம் தரித்து, திருச்சின்னங்கள் தாங்கி இருப்பதைப்
பார்த்து, அமைதியாகி விட்டாள்!
படுத்துக் கொண்டிருந்தவள், சரி தன் மேலுள்ள
நகைகளையும், எடுத்துக் கொள்ளட்டுமே என்று, திரும்பிப்
படுத்தாள் போல!
ஆனால் அவள் அசைவு கண்டு, அவர்களோ பயந்து ஓடி
விட்டார்கள்!
இது என்ன சோதனை சுவாமி? பூலோக வைகுந்தம் என்று
சொல்வீர்களே! அரங்கத்திலா இப்படித் திருட்டு நடக்கிறது?
அதுவும் அடியார்கள் போல் தோற்றம் அளிப்பவர்கள்,
இப்படிச் செய்வது நமக்கு அல்லவா இழுக்கு??
அதான் பொன்னாச்சியின் சம்மதத்தோடு, அத்தனை
நகைகளையும் மூட்டை கட்டி, எடுத்து வந்து விட்டேன்!
இதை ஏற்றுக் கொண்டு அந்த ஏழைப்பட்ட அடியார்களிடம்
கொடுத்து விடுங்கள்!
அன்னதானம் போன்ற திருப்பணிகளும், செய்ய
வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்! அப்படிச் செய்தால்
திருட்டு ஒழிந்து, நம் ஸ்ரீ வைஷ்ணவ தர்மம்
காப்பாற்றப் பெறும்".
இராமானுசர் மற்ற அத்தனை சீடர்களையும் திரும்பி ஒரு
பார்வை பார்க்க...அனைவருக்கும் வெட்கம் பிடுங்கித்
தின்றது!
இத்துப் போன மேல் துண்டுக்குச் சத்தம் போட்ட நாம்
எங்கே?
சத்தம் போட்டுத் தாக்குவதையே (மல்யுத்தம் ),
தொழிலாகக் கொண்டிருந்த வில்லி தாசர் எங்கே?
தன்னுடைய பொன் நகைகளை எல்லாம் ,மூட்டையாய்
கட்டிக் கொடுத்த பொன்னாச்சியார் எங்கே ?
சீடர்கள் அத்தனை பேரும்...குலம் பார்க்காது...வில்லி
தாசனின் காலில்...நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து
வணங்க, நடந்த நாடகத்தைப் பார்த்து, ஏதுமறியா
பொன்னாச்சியாரும், வில்லி தாசரும் விழி விழியென
விழித்தனர்!
தாசரின் ஈடு,இணயற்ற பக்தியையும், தூய்மையான
திருவுள்ளத்தையும் கொண்டாடினர்.அவருடைய உன்னதம்
எப்படிப்பட்டது என்றால், மற்ற உலோகங்களையும்/
கல்லையும் உரசினால் தங்கமாக்கும் தன்மையுடைய
பர்ஸவேதிக் கல் போன்றவர் அவர்.அவர் வைபவத்தைப்
படித்தாலே/கேட்டாலே நமக்கும் அந்த உயர்ந்த குணங்கள்
வர வைத்து விடும் தங்கப் பிள்ளை அவர். எனவே அவர்
"ராமானுஜபர்ஸவேதி" என்று போற்றப்
பெறுகிறார்.அவருடைய தனியனிலும் இது
ஒலிக்கிறது:
" ஜாகரூக தனுஷ்பாணிம் பாணெள கட்கஸமந்விதம்,
ராமனுஜஸ் பர்ஸவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாஸகம்.
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே "||
இராமானுசர் நடந்தது அத்தனையும் அவனுக்கு
விவரித்தார்! இனி அடியவர் கூட்டத்தில் எவரும் குல
விசாரிப்பு செய்யக் கூடாது என்பதை அப்போதே சட்டமாக
இயற்றினார்!
கொஞ்ச நாளில், வில்லிதாசர் சிறந்த மாணாக்கனாகத்
தேறி, வைணவ நூல்களை இயற்றும் அளவுக்குத் திறமை
பெற்றார்! திருவரங்க கோயில் கொத்தின் மேலாளன் ஆக
ராமானுஜரால் நியமிக்கப் பட்டார்.
பொன்னாச்சியோ மகளிர் இயக்கத்தின் முன்னோடியாகத்
திகழ்ந்து, ஊர் ஊராகச் சென்று, ஆழ்வார் பாசுரங்களை
நாட்டியம் செய்து, பாடிப் பரவினாள்!
பிறப்பின் பெருமையால் ஒருவன், அகங்காரம்
கொள்வதோ, அல்லது மனத்தாழ்ச்சிகொள்வதோ தகாது.
இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஆன்மிக
உள்ளமும், மகான் ராமானுஜரின் இந்த உபதேசத்தை
மனத்தில் கொள்ள வேண்டும்.
பிள்ளை உறங்காவில்லி தாசரின் இந்தக் கதையிலிருந்து,
இன்னொரு செய்தியும்நமக்குக் கிடைக்கிறது. பிள்ளை
உறங்காவில்லி, மனையாளின் பின்னே மோகத்தால்சுற்றி
வந்தார். எம்பெருமானார் அவரை அரங்கனிடம்
ஆற்றுப்படுத்திய பிறகு, சோழராஜனிடம் செய்து வந்த
சேவையை விட்டு, அரங்கன் மேல் பக்தியும்
அன்பும் கொண்டு கையில் வாளேந்தி பெருமாளின்
விக்கிரகத்திற்குப் பாதுகாவலாய் செல்லத்தொடங்கினார்.
இவர் பரமபதித்த போது, அவருடைய திருமேனிக்கு,
பொன்னாச்சியார் கண்ணீர்உகக்காமல் சடங்குகளை,
உடனிருந்து ஆற்றினார். அத்திருமேனி
கொண்டுசெல்லப்பட்டு, அவர் பார்வையிலிருந்து
மறையும் வரை இருந்து, மறைந்ததும் தன்உடலை விட்டு,
உயிர் பிரியப் பெற்றார். இந்த ஆச்சர்யத்தை அறிந்து
இருதிருமேனிகளையும் ஒன்றாய்த் தகனம் செய்தார்கள்.
இருவரும் கொண்ட அன்பின் ஆழம் அத்தகையது.
பிள்ளையுறங்காவில்லி ,மனைவிதாசனாய் இருந்தபோது
,மனைவியின் பின் இவர் சென்றார். அவரே அரங்கன்
தாசனாய் ஆனபின்பு, பொன்னாச்சியார் இவர் பின்னே
சென்றார். இறை பக்தியின் பெருமை அத்தகையது.
இதற்குக் காரணமாக இருந்தது,
எம்பெருமானாரின்திருவுள்ளம்.
அப்படி நான் மனையாளை விட்டேனோ சுவாமி
வில்லியாரைப் போல? எ்னறாள் திருவல்லிக்கேணி பெண்
பிள்ளை.
பிள்ளை உறங்காவில்லி தாசர் திருநட்சித்திரம் மாசி
ஆயில்யம்.
சூத்திர வர்ணத்தில் பிறந்து, ரஜோ குணத்துடன் மல்/வில்
யுத்தம் செய்து வாழ்ந்து வந்தவர், ராமானுஜருக்கு மிக
உகந்த சீடராகி, திவ்யபிரபந்த வியாக்யானங்களில்,
பாகவத லட்சணத்துக்கு உதாரணமாக உரைக்கப்படும்
அளவுக்கு உயர்ந்தவர்.
அவருடன் இணைந்து,அவர் துணைவி யார் ஹேமாம்பாள்,
ஆண்டாள் கோஷ்டிக்குத் திலகமாக மாறி 'பொன்
நாச்சியார்'ஆனதும் சிறந்த வைபவம். ஶ்ரீ வைஷ்ணவ
சம்பிரதாயத்தில் தம்பதிகள் இருவரும் சிறந்த திருமால்
அடியார்களாக ஒளிர்ந்தது கூரத்தாழ்வான் ஆண்டாளுக்கு
அடுத்து, இவர்கள் இருவர் என்றால் அது மிகையாகாது.
பாதியாய் அழுகிய கால் கையரேனும், பழிதொழிலும்
இழிகுலமும் உடைத்தாராயினும் ,ஆதியா..!
அரவணையா..! என்பராகில்
அவரன்றொ நான் வணங்கும் அடிகளாவார்..!
சாதியால் உயர்ந்தோன் ஆயினும், சதுர்மறை வேதியால்
தக்கோன் ஆயினும்,சோதி நான்முகன் பணிந்தேத்தும்,
பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே..!
மேலிருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் - கீழிருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
பொன்னாச்சி உடனுறை பிள்ளை உறங்கா வில்லி தாசன்
திருவடிகளே சரணம்!!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu