சிவஸ்தலம் பெயர்
திருக்குருகாவூர் வெள்ளடை (தற்போது திருக்கடாவூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்
வெள்ளடையீசுவரர், வெள்விடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர்
இறைவி பெயர்
நீலோத்பவ விசாலாட்சி, காவியங்கண்ணி அம்மை
தீர்த்தம் : பால் கிணறு. சிவ குளம் .
கோயிலுக்கு வெளியில் தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை மாதத்தில் அமாவாசை நாளில் இறைவன் எழுந்தருளி இங்கு தீர்த்தம் கொடுப்பது சிறப்பானது.
வழிபட்டோர்: சம்பந்தர் , அப்பர், சுந்தரர், சேக்கிழார்.
எப்படிப் போவது
சீர்காழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மீ.ல் உள்ள வடகால் என்னும் கிராம நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 1 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும்.
ஆலய முகவரி
அருள்மிகு
வெள்ளடையீசுவரர் திருக்கோவில்
திருக்கடாவூர்
வடகால் அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609115
தொடர்புக்கு: 92456 12705.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் மெய்காவலர் அருகில் வசிப்பதால் அவரை விசாரித்து தொடர்பு கொண்டால் எந்நேரமும் தரிசிக்கலாம்.
தல வரலாறு
பசியோடு இருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியைப் போக்கி அருளிய தலம்.
சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்குச் செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார். சம்பந்தருக்குக் காட்சி தந்த சிவன், அவரைச் சீர்காழிக்கு செல்ல வேண்டாம் என்றும் இத்தலத்தில் அவருக்குக் கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்குக் காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையைப் பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப் பெற்றார். இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று இறைவன் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில் இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம் பொருந்தியது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாட்களில் இந்தத் தீர்த்தத்தைத் திறப்பது கிடையாது. ஆண்டுதோறும் பக்தர்கள் தை அமாவாசை நாளில் இங்கு நீராடப் பெருமளவில் வருகிறார்கள். மேலும் தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் இத்தலத்தில் விசேஷமாக கொண்டாடப் பெறுகிறது. சுந்தரருக்கு இறைவன் உணவும் நீரும் தந்து பசியைப் போக்கிய கட்டமுது தந்த விழா சித்திரைப் பௌர்ணமியில் நடைபெறுகிறது.
சிறப்புகள்
தை அமாவாசை நாளில் இறைவன் தல தீர்த்தமான பால் கிணற்றில் எழுந்தருளித் தீர்த்தம் கொடுப்பது சிறப்பானது.
(சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும், நீரும் தந்து பசியப்போக்கி அற்புதம் நிகழ்த்திய இடம் "வரிசைப்பற்று" என்றும், "இடமணல்" என்றும் மக்களால் சொல்லப் பெறுகிறது. அவ்விடம் தென்திருமுல்லைவாயில் செல்லும் வழியில், இங்கிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது; அவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலில் முதலாம் குலோத்துங்கன், முதலாம் இராசேந்திரன், விக்கிரமசோழன் ஆகியோர் காலத்தியக் கல்வெட்டுக்கள் உள்ளன.
இத்தலத்து இறைவன் பெயரை வெள்ளடை மகாதேவர் என்றும், குருகாவூர் வெள்ளடையப்பன் என்றும் மேற்படி கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மேலும், இக்கல்வெட்டுக்கள் கோவிலுக்கு நிபந்தங்கள் ஏற்படுத்திய செய்திகளைத் தெரிவிக்கின்றன.
ஒரு பிரகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. இறைவன் வெள்விடை நாதர் சதுர ஆவுடையார் மீது சிறிய பாணம் கொண்ட லிங்க உருவில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.
உள் மண்டபத்தில் வலப்பால் நடராச சபை.
இறைவி காவியங்கண்ணி அம்மை தெற்கு நோக்கித் தரிசனம் தருகிறாள். இறைவன் கருவறை கோஷ்ட தெய்வங்களாகத் தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்ணு கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். கருவறைப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, நடராஜப் பெருமான் சந்நிதி, காசி விஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகளுடன், சனீஸ்வரன், மாவடி விநாயகர், சிவலோகநாதர் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன.
கருவறைச் சுற்றில் பைரவர், சூரியன், மாரியம்மன், ஸ்ரீ அய்யனார் ஆகியோரின் திருவுருவங்களும் அமைந்துள்ளன. கருவறைப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். பொதுவாக முருகன் கிழக்குத் திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன் தெற்குத் திசை நோக்கிக் காட்சி தருகிறார். தென் திசையைப் பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாகக் கருதி வழிபடுகிறார்கள். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
"சுண்ணவெண்ணீறணி மார்பில் தோல் புனைந்து
எண்ணரும் பல்கணம் ஏத்த நின்றாடுவர்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனி எம் பிஞ்ஞகனாரே."
(சம்பந்தர்)
'பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினில் சுவையப்பாய்
கண்ணிடை மணியப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றோ'.
(சுந்தரர்)
-பார்காட்
டுருகாவூ ரெல்லாம் ஒளிநயக்க வோங்குங்
குருகாவூர் வெள்ளடை யெங்கோவே.
(அருட்பா)
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu