108 திவ்ய தேசங்கள் - 42 - அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில் திருக்கோவிலூர்

56 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Nov 26, 2021, 10:16:39 PM11/26/21
to thatha...@googlegroups.com

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்

திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்


சுவாமி : த்ரிவிக்ரமன் (திருவடியை உயரே தூக்கிய நிலை நின்ற திருகோலம்).

அம்பாள் : பூங்கோவல் நாச்சியார்.

தீர்த்தம் : பெண்ணையாறு, கிருஷ்ணா தீர்த்தம், சக்ர தீர்த்தம்.

விமானம் : ஸ்ரீஹர விமானம்.

தலவிருட்சம் : புன்னை மரம்.

தலச்சிறப்பு : வாமன த்ரிவிக்ரம அவதார ஸ்தலம்.  இந்த திவ்ய தேசத்தில் தான் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார்கள் மூவரும் ஓர் இரவில் இடைகழியில் சந்தித்துப் பெருமாளையும் பிராட்டியையும் நேரில் இருட்டில் நெருக்கியபடி சேவித்து மூன்று  திருவந்தாதிகளைப் பாடிய தலம்.  மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்கரமுமாக  வலக்காலால் வையம் அளந்து நிற்கிறார்.  கோயிலுக்குள் இருக்கும் துர்க்கை தேவதாந்திரமாகக்  கருதப்படுவதில்லை.  மகாபலியின் கர்வத்தை அடக்கி ஆட்கொண்ட ஸ்தலம்.

தேசிகன்  தேஹளீசதஸ்துதி இயற்றிய ஸ்தலம். எம்பெருமானார் ஜீயர் பரம்பரை மஹான்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட ஸ்தலம்.  இந்த ஊர் பஞ்ச க்ருஷ்ணாரண்ய கேஷ்த்திரங்களில் ஒன்று.  மற்றவை – திருக்கண்ணங்குடி, திருக்கண்ணன் கவித்தலம், திருகண்ணபுரம், திருகண்ணமங்கை.  மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது.  இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில்  வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு : மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப்  புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்து விடக் கூடாது என்பதற்காக அசுர குலக் குருவான  சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.  அவனது ஆணவத்தை அடக்கும்  பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி  மண் தானமாக கேட்கிறார்.

வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி  மண் தானம் தர விடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறித் தானம் தர மகாபலி ஒப்புக்  கொள்கிறான்.  அப்போது  மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்துத் தன் பாதத்தின் ஒரு அடியைப் பூமியிலும், ஒரு அடியை  ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது  மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகாபலி தன் தலையைத் தாழ்த்தித் தன் தலையைத் தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான்.  

விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலை மீது தன் பாதத்தை  அழுத்தி மூன்றாவது அடியைத் தாரை வார்த்துத் தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்துத்  தானமாகத் தர முயல, சுக்ராச்சாரியார்  வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்துத் தண்ணீர் வர விடாமல் தடுக்க, விஷ்ணு தர்ப்பைப்  புல்லால் குத்தி விடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.  மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியைத் தானம் செய்து  மண்ணில் புதையுண்டு  போனான்.  அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்துக் கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது.

கோவில் அமைப்பு 

இந்தக் கோவில் கீழ்க் கோடியில் உள்ள கோபுரமானது பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. என்றாலும் கோயிலின் பிரதான வாயிலில் ஒரு சிறிய கோபுரமே உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் கட்டிய கோபுர வாயில் வரும். அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம், பின்பு தான் கருவறை உள்ளது. கருவறையில் நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன். நல்ல நெடிய திருவுருவம். மூலவர் திருவுரு, மரத்தால் ஆன வடிவம். இந்த இறைவன் பிற கோவில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்திக் காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.

கோயிலின் முதல் பிராகாரத்தின் முகப்பிலேயே துர்க்காம்பாள் விக்கிரமன் ஆணையின் பேரில், கோவிலுக்கு அவள் காவல் நிற்பதாகக் கூறுவர். துர்க்கை சிலை அநேகமாக விஷ்ணு கோவில்களிலே காண்பது இல்லை. இந்தப் பிரகாரத்தில் லக்ஷ்மி நாராயணன், லக்ஷ்மி வராஹன், லக்ஷ்மி நரசிம்மன் மூவருக்கும் தனித் தனிச் சந்நிதி. இன்னும் ராமர், உடையவர், திருக்கச்சி நம்பி, ஆண்டாள், மணவாள மாமுனிகளின் சந்நிதிகளும் தனித் தனியே இருக்கின்றன.  இரண்டாவது பிராகாரம் கல்யாண மண்டபம் எல்லாம் கடந்து புஷ்பவல்லித் தாயார் சந்நிதி உள்ளது.

பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள் 

கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகியவை பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.

கோவில்அமைவிடம்
லோகநாதப் பெருமாள் கோவில்திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில்கபிஸ்தலம்
நீலமேகப் பெருமாள் கோவில்திருக்கண்ணபுரம்
பக்தவத்ஸலப் பெருமாள் கோவில்திருக்கண்ணமங்கை
உலகளந்த பெருமாள் கோவில்திருக்கோவிலூர்

 கோபுரங்கள்


இந்த கோவில் மற்றும் கோபுரங்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப் பெற்றதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கோவிலுக்கு கிழக்குக் கோபுரம் மற்றும் மேற்கு கோபுரங்கள் மிகப்பெரியதாக இருக்கும். கோவில் வாசலில் உள்ள இராஜகோபுரம், திருமங்கை மன்னன் கோபுரம் என மொத்தம் 4 கோபுரங்கள் உள்ளன. மேலும் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி தனித்தனியாக உள்ளது. இங்குள்ள தாயார் சன்னதி மிக நீண்ட சன்னதி என்ற பெருமை கொண்டது.

பழமையான ஆலயம்

திரிவிக்கிரம அவதாரத் தலம் இது. பகவானின் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும், இங்கு மாறித் தென்படுகின்றன. முதலாழ்வார்கள் மூவரும், இந்தத் திவ்ய தேசத்தின், ஒரு வீட்டின் இடைக்கழியில் சந்தித்து, பகவானைப் பிராட்டியோடு சேவித்து, அந்தாதி பாடின தலம். திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தலம் இது.

மகாபலி, மிருகண்டு முனிவர் பிரம்மன், இந்திரன், குட்சி, சவுகர், காச்யபர், காலவரி, குசத்வஜன் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகியோருக்கு இத்தலப் பெருமாள் பல தடவை நேரிடையாகத் தரிசனம் கொடுத்துள்ளார்.  ஒரு சமயம் மிருகண்டு முனிவர் இந்தத் தலத்திற்கு வந்து திருமாலை நோக்கித் தவம் செய்தார். திருமாலும் மிருகண்டு முனிவருக்குத் தரிசனம் காட்டி என்ன வேண்டும் என்று கேட்க தனக்கு வாமன அவதாரம் காட்சியை மீண்டும் காட்ட வேண்டும் என்றார்.

பெருமாளும் உடனே வலது காலை விண்ணில் வைத்து இடது காலைப் பூமியில் அழுத்தி வாமன அவதாரத்தைக் காட்டினார். இன்னொரு சமயம் இங்கு தங்கித் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களைத் துன்புறுத்திய பாதாள கேது என்ற அரக்கனை திருமால் குசத்வஜன் என்ற மன்னன் மூலம் கொன்று முனிவர்களது பயத்தைப் போக்கியதாக வரலாறு உண்டு. கி.மு.500 -ஆம் ஆண்டில் கட்டப்பெற்ற கோவில் என்பது மிகவும் பிரசித்தம்.

சொர்க்கவாசல் திறப்பு

இந்தக் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கியமானது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி. அடுத்து பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவம். இந்த நிகழ்ச்சி 15 நாட்கள் நடைபெறும், மேலும் ஆவணி மாதத்தில் நடைபெறும் ஸ்ரீருக்மணி சத்தியபாமா, சமேத ஸ்ரீ வேணு கோபாலசாமி ஜெயந்தி உற்சவம் சிறப்பானது. இது 11 நாட்கள் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் இந்தக் கோவிலில் தினசரி சிறப்புப் பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.

இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். மூலவரின் திருமேனி தருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தில் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். 

பதவி உயர்வு


நல்ல பதவிகளை அடைய விரும்புபவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், பதவி இழந்தவர்கள் இந்தக் கோவிலில் வந்து பிரார்த்தனை செய்வார்கள். அவ்வாறு செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச்சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை வேண்டியும் பலர் வந்து வழிபடுகின்றனர். அவர்களது வேண்டுதல்  நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள்) தொல்லை நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கோவில் நடை திறக்கும் நேரம்

இந்த கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பெற்று, முற்பகல் 11.30 மணிக்கு நடை சாற்றப்பெறுகிறது. அதேபோல் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பெற்று இரவு 9.30 மணிக்கு சாற்றப்பெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் கோவில் நடை திறக்கப்பெற்று இருக்கும்.

 

You Tube Link:

https://www.youtube.com/watch?v=GfCCrbUKG5I


https://www.youtube.com/watch?v=aJLdTu93Hws

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

வணக்கம் சுப்பு

 Vanakkam Subbu

image.png

  


Virus-free. www.avast.com
Reply all
Reply to author
Forward
0 new messages