மகாளயபட்சம்

368 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Sep 17, 2018, 9:37:26 PM9/17/18
to Thatha_Patty-Google

மகாளயபட்சம்  

புரட்டாசிப் பவுர்ணமியை அடுத்த பிரதமையில் தொடங்கி 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகாளயபட்சம் எனவும் கூறுவர். மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும்.


மாதா மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் மகாளய அமாவாசை என்பது மிகவும் விசேடமானது. மகாளய அமாவாசைக்கு முன்னர் மகாளயபட்சம் என்ற ஒன்று ஆரம்பமாகும். எப்படி கிருஷ்ண பட்சம், சுக்கில பட்சம் என்ற இரண்டு உள்ளது. சுக்கில பட்சம் என்றால் வளர் பிறை, கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. அதுபோல் மகாளய பட்சம். இது எப்போது ஆரம்பம் ஆகுமென்றால், புரட்டாசி மாத ஆரம்பத்தில் வரும் பெளர்ணமி முடிந்த மறுநாள் அல்லது ஆவணி மாத இறுதியில் வரும் பெளர்ணமி முடிந்த மறுநாள்  மகாளய பட்சம் ஆரம்பமாகும். இதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவா, அதுவரை - அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மகளாய பட்சம் ஆகும். 


புரட்டாசி அமாவாசைதான் மகாளய அமாவாசையாகும். இந்த காலத்தில் சில வருணத்தார் திருமணம் போன்ற எந்த சுப காரியத்தையும் செய்ய மாட்டார். ஏனென்றால் இந்த காலப் பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. சிரார்தம் என்று கூறுவார்கள் அல்லவா, அதுபோல் திதி கொடுப்பது, தான, தர்மங்கள் செய்வது, பங்காளிகளுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பது, அதாவது சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ள வில்லங்கங்களைத் தீர்த்துக் கொள்கிற காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பது. இதன் உச்சதான் மகாளய அமாவாசை ஆகும்.


மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாலோ தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசை தினத்தன்று திதி கொடுத்தால் அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்கில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது. 


இதுமட்டுமல்லாது, தீராத நோய்களுக்கு மருத்துவம் செய்துக் கொள்ள தொடங்குவதற்கும் மகாளய அமாவாசை சரியான நாளாகும்.  


மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை மகாளயபட்சம் என்று கூறுகிறார். இந்நாள்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

 

அதனால் இந்த நாள்களில் நீர்த்தார் நீர்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பதினைந்து நாள்களில் மாளய அமாவாசை முக்கிய நாளாகும். பிறகு மகாபரணி, மகாவியதீபாதம், மத்யாஷ்டமி, சந்யஸ்த மாளயம், கஜச்சாயா புண்யகாலம், சஸ்தர ஹத மாலயம் போன்ற நாள்களிலும் நீத்தாருக்கு நீர்கடன் அளிக்கின்றார்கள்.

 

"மகாளயம்' என்றால் "பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் காலமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள்.

 

பொதுவாக ஒருவர் ஒரு வருடத்தில் தன்முன்னோர் களுக்காக 95 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. மிக மிக சொற்பமானவர்களே இதை செய்கிறார்கள்.

 

அப்படிப்பட்டவர்கள் மகாளய பட்ச நாட்களில் தர்ப்பணம், சிரார்த்தம், தான தர்மம் செய்தால் அந்த ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலனை பெற முடியும்.

அதிலும் குறிப்பாக மகாளயபட்ச நாளில் வரும் மத்யாஷ்டமி தினத்தன்று செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம், தான தர்மங்கள் மற்ற புண்ணிய நாட்களில் கிடைக்கும் பலனை விட கூடுதலாக 20 மடங்கு பலன் தர நல்லது.

அது போல மகாளய பட்சத்தில் வரும் துவாதசி தினத்தன்று அது செய்யும் தர்ப்பணத்துக்கு 100 மடங்கு பலன் கிடைக்கும்.


மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களைத்தர வல்லது.

எனவே மகாளய பட்சத்தின் 14 நாட்களும் நீங்கள் பித்ருக்களை வழிபடுவது உங்கள் குடும்பத்தை மேன்மைப் படுத்துவதாக இருக்கும்.


புராணங்களில் மகாளயபட்சம்

கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பெற்றுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

நாம் கலியுகத்தில் வாழ்வதால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளயக் கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.

இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இந்தப் பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், இராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களுக்கு ஒரு நாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்குப் புல், பழம் கொடுக்கலாம்.

ஸ்ரீமந்நாராயணனே இராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டுக் கூடத் திதி பூஜையைச் செய்யலாம். பின்னர் பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

பித்ருக்களுக்குத் ( மூதாதையர்களுக்கு ) தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம்.


எனவே தர்ப்பணத்தின் போது கீழ்கண்டவாறு மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள் அது போதும்.

” என் தாயார் ; என் தந்தை ; என் சகோதரர் ; என் உறவினர்கள் என்று எந்த வகையான உறவுகளுக்கும் உட்படாத என் கோத்திர பிரிவுக்குள்ளும் வராத எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இப்பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ இயற்கையாலோ வியாதியாலோ விபத்தினாலோ இந்த உலகை விட்டு பிரிந்திருக்கக்கூடிய அனைத்து ஆத்மாக்களும் நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன் மேலுலகில் எந்த துன்பங்களும் அனுபவிக்காமல் மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் அனைத்து நன்மைகளும் பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும் ” என்று சொல்லி நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணத்தை அர்ப்பணிக்கவும்.

பித்ரு ஸ்தலங்கள்  

இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, 

காசி, 

இராமேஸ்வரம், 

கயா, 

திரிவேணி சங்கமம், 

ஸ்ரீவாஞ்சியம், 

திருவெண்காடு, 

ஏழாவதாக திலதர்ப்பணபுரி.

 

தர்ப்பணம் . . . . . .



1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

2. பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்குப் பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டுப் பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரைத் தரவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டுக் கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 
மன்வாதி நாட்கள்               14
யுகாதி நாட்கள்                     4, 
மாதப்பிறப்பு நாட்கள்         12, 
அமாவாசை                         12, 
மகாளய பட்சம்                   16, 
வ்யதீபாதம்                         13, 
வைத்ருதி                            13, 
அஷ்டகா                               4, 
அன்வஷ்டகா                        4, 
பூர்வேத்யு                              4  ஆக 96 நாட்கள். 

இந்த நாட்களில் செய்யப்பெறும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.   அந்தக் காலத்தில் தீ மூட்டி சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது.    

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்குத் தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்குச் சரியாகச் சென்றடையும்.

9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்குத் தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறித் தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பணக் காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழுப் பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்பெறும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், இராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்பெறுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்குத்  தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயைத் தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டுப் போய் விடுவான் என்று கருதப்பெறுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியைப் பெற வழிவகை ஏற்படும்.

22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்குத் துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்குக் கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களைக் கொடுக்கும்.

24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களைத் திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாகப் பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக் கூடாது.


33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்

 

தென்புலத்தாருக்கு 96 கும்பிடு!


rameswaram

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் 

தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

உலகில் மிகவும் ஆச்சர்யமான பிறவிகள் இந்துக்கள். முன்னோர்களை அவர்கள் வழிபடும் முறை தனிச் சிறப்புடைத்து.  இவர்கள் போல இறந்து போனோரைக் கொண்டாடும் இனம் உண்டோ என்றில், இல்லை என்று பகர ஒரு நொடியும் தேவை இல்லை. பெரிய தலைவர்கள் இறந்தால் அடக்கம் நடைபெறும் போது 21 முறை பீரங்கிக் குண்டு வெடித்து மரியாதை செய்வர். இதற்குக் கடற்படை சம்பிரதாயமே காரணம் என்று கலைக் களஞ்சியங்கள் செப்பும். பின்னர் ஆண்டுதோறும் அவர்கள் கல்லறைக்குச் சென்று மலர் தூவுவர். ஆனால் இந்துக்களோ ஆண்டுக்கு குறைந்தது 96 முறை வணங்குவர்.  ஆதிகாலத்தில் மூன்று வர்ணத்தாரும் செய்த இக்கடன் இப்போது குறுகிப்போய் ‘’பிராமணர் மட்டும்’’ என்று ஆகிவிட்டது. அதுவும் அருகிப் போய் 96 முறைக்குப் பதில் 12 அல்லது 24 முறை என்று சுருங்கிவிட்டது.  

தினமும் முன்னோர்களை வழிபடும் வழக்கத்தைப் “பஞ்ச யக்ஞம்” என்ற தினசரிக் கடமைகளில் காண்கிறோம். அது என்ன ஐ வேள்வி?

திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:


தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

தென்புலத்தார்= தெற்கு திசையில் வசிக்கும் முன்னோர்கள்
தெய்வம்= கடவுள் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
விருந்து = வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (சாது, சந்யாசிகள்)
ஒக்கல் = சுற்றத்தார்,
தான் = தான் (அதாவது தனது சொந்தக் குடும்பம், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, மரத்தில் வசிக்கும் காக்கை, குருவி, வீட்டில் ஓடும் எறும்பு முதலியன. இதை பூத யக்ஞம் என்பர்= உயிரின வேள்வி)
என்று = என்ற
ஐம்புலத்து = ஐந்து இடங்களில் செய்ய வேண்டிய (பஞ்ச வேள்வி)
ஆறு= வழியினை
ஓம்பல் = பாதுகாத்தல்
தலை= சிறந்த அறம் ஆகும் (தர்மம்)


மனு ஸ்மிருதியில் 3-72 ஸ்லோகத்தில் கூறியதற்கும் இதற்கும் சிறிதும் வேறு பாடு இல்லை — மேலும் குறள் 41-ல்

இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)

அதாவது கிருஹஸ்தன் என்பவன் வானப் ப்ரஸ்தம், சன்யாசம், பிரம்மசர்யம் என்ற மற்ற மூன்று நிலையில் உள்ளவர்க்கும் உதவுவதால் அதுதான் சிறந்த அறம் — கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மற்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஆதரிப்பவர்கள் போற்றுதலுக் குரியவர்கள்.

thai amavasya

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பிள்ளை பெறுவது எதற்காக என்று புற நானூற்றில் கோப்பெருஞ்சோழன் சொல்கிறான் — சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த பல புலவர்களில் ஒருவர் பொத்தியார். அவருக்கு இடம் தர மறுத்த சோழ மன்னன் புதல்வன் பிறந்த பின் வருக — என்கிறான். புதல்வர் எதற்காக? பிண்டோதக் கிரியை என்னும் இறுதி யாத்திரைக் கிரியை செய்வதற்காகும் என்று உரைகாரர்கள் நவில்வர்.

உரைகாரர் சொன்னால் நாங்கள் நம்பவேண்டுமா? என்போருக்கு அகநானூற்றுப் புலவர் செல்லூர் கோசிகன் கண்ணனார் — (கௌசிக கோத்ரத்துதித்த கிருஷ்ணன் என்னும் புலவர்) — வாய்மொழியாக உண்மை அறிதல் நலம்:

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்” எனப்——— அகம்.66

பிள்ளைகள் இல்லாவிட்டால் நரகமா?

பிள்ளைகள் எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம், திதி முதலியவற்றைச் செய்தால் மறுமை இன்பம் கிடைக்கும் என்றால், பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதோருக்கும், பிள்ளைகளே பிறவாதோருக்கும், இது பற்றி அறியாத ஜாதியினருக்கும் நரகம் வாய்க்குமா?

இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து பிராமணர்கள் எள்ளும் நீரும் தெளித்து விடுகின்றனர். ஐயர்கள் சொல்லும் தர்ப்பண மந்திரங்களை அறிந்தோருக்கு இது தெள்ளிதின் விளங்கும் —( ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் அண்ணா அவர்கள் எழுதிய தமிழ் மொழியாக்காத்தையும் உரையையும் அனைவரும் பயிலுதல் நன்று )

இதனால்தான் பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளையும் தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியதை சங்க இலக்கியத்திலும் 80,000 கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.

TharpaNam Pic

இதோ அவர்கள் சொல்லும் அற்புத மந்திரங்கள்:

எவர்களுக்குத் தாயோ தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ — (தர்ப்பணம் செய்ய) — அவர்கள் எல்லாம் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.

ஆகாய வழியாக வந்து இந்தத் தர்ப்பைப் புல்லில் எழுந்தருளுங்கள் என்று வேண்டும் போது அவர்கள் சொல்லும் மந்திரம் எல்லா இடங்களிலும் மங்களத்தையும் அமைதியையும் உண்டாக்கும்:

காற்று இனிமையாக வீசட்டும்
நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும்
செடி கொடிகள் இனிமை அளிக்கட்டும்
காடுகளில் உள்ள மரங்கள் இன்பம் தரட்டும்
சூரியன் மகிழ்ச்சி அளிப்பானாகுக
பசுக்கள் இனிமையான பாலைப் பொழியட்டும். (மதுவாதே ருதாயதே…..)

இவ்வாறு ஒரு ஆண் — தனது வம்சத்தில் பிறந்து இறந்த தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகிய மூவருக்கும் நீர்க்கடன் செலுத்திய பின்னர், தாயின் வம்சத்திலும் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று எள்ளும் நீரும் இரைப்பர். இந்த ஆறு பேருடைய மனைவிமார்களும் இதே போல மரியாதை பெறுவர். எல்லோரும் இறந்து போயிருந்தால் இப்படி 12 பேருக்கும் வழிபாடு நடக்கும். இந்த அற்புத முறையை உலகில் வேறு எங்கும் காண முடியாது!!




 


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

      V A N A K K A M  S U B B U   

 Charlie

Malathi Chandrasekaran

unread,
Sep 18, 2018, 12:13:08 AM9/18/18
to kandank...@googlegroups.com
Sir, Namaskarangal. Article is very nice Thank you for sharing.
Malathi Chandrasekaran. 

--
You received this message because you are subscribed to the Google Groups "Kandan Kavi Malar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kandankavimal...@googlegroups.com.
To post to this group, send email to kandank...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/kandankavimalar.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages