நவ கைலாய தலங்களில் ஐந்தாவதான தலம், இதுவும் தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்த தலம், அகத்திய முனிவரின் சிஷ்யர் உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டுதலின் படி தாமரை மலர்களை ஆற்றில் விட மலர் 5 ஆவதாக ஒதுங்கிய இடமே முறப்ப நாடு கைலாசநாதர் ஆலயம்.
மூலவர் : கைலாச நாதர்
அம்பாள் : சிவகாமியம்மாள்
அமைவிடம் (ஊர்) :
முறப்பநாடு, திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், இந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 20 கிலோ மீட்டருக்குள் இருக்கும்.
தலச்சிறப்பு ;
இத்தலத்திலுள்ள சுவாமிக்கு எதிரில் உள்ள நந்தி, குதிரைத்தலையுடன் காணப்படுகிறார், இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதியில் இரட்டை பைரவர் உள்ளனர்
பிராத்தனை ;
இது குரு தலமாக காணப்பெறுவதால் குரு பரிகாரத் தலமாகவும், மற்றும், திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்ட, கல்வி கேள்விகளில் சிறக்க வேண்டியும் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன் ;
சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி அபிசேகம் செய்தல்.
தலப் பெருமை ;
குதிரை முக நந்தி, அகத்தியரின் சீடரான உரோமச மகிரிஷிக்கு சுவாமி குருவாகக் காட்சி கொடுத்த தலம். இக்கோவிலுள்ள நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிக்கிறது.
மேலும் தாமிரபரணி நதி இங்கே வடக்கே இருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனாலும் இது சிறப்பாகக் கூறப் பெறுகிறது. இந்த இடத்தில் தாமிரபரணி நதியை தக்ஷிண கங்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். நதிகளிலேயே மூத்த நதியான தாமிரபரணி நதியின் இந்தக் கரையில் தீர்த்த யாத்திரை செய்வது மிகவும் புனிதமாய்க் கருதப் பெறுகிறது. இந்த ஊரின் இந்தக் கோயிலைக் கட்டியது வல்லாள மஹாராஜா எனச் சொல்வாரும் உளர். ஆனால் சோழ மன்னன் ஒருவனே கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. எது எப்படி எனச் சரியாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும் பின்வரும் தலவரலாறே கூறப்பெறுகிறது.
சோழ மன்னனின் மகள் குதிரை முகத்துடன் பிறக்க, அதன் பாவ நிவர்த்தி வேண்டி சோழ மன்னன் ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று பரிகாரம் செய்ய வேண்டி இத்தலம் வந்து, இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி, கைலாச நாதரை வேண்ட , அவர் பாவ விமோசனம் அளிக்க நந்தி எம் பிரானிடம் கூற அவர்மூலம் பாவ விமோசனம் பெறும் போது, மன்னன் மகளின் பாவங்கள் கழிய குதிரை முகம் மாறி வரும் போது, அதன் அடையாளமாக நந்தியின்முகம் குதிரை முகமாக மாறியதாம், மன்னன் மகளின் முற்பிறவிப் பாவத்தை நந்தி ஏற்றுக் கொண்டதாம். எனவேதான் நந்தி குதிரை முகத்தோடு காட்சியருள்கிறார்.
பைரவர் சன்னதியில் உள்ள இரட்டை பைரவர்களில் ஒருவருக்கு நாய் வாகனமும், மற்றவருக்கு நாய் வாகனம் இன்றியும் உள்ளது. இதனால் ஒருவர் பைரவர் என்றும் மற்றவர் வீர பைரவர் என்றும் அழைக்கப்பெறுகின்றனர். இம்மாதிரி வேறு எந்தத் தலங்களிலும் இரட்டை பைரவர் இல்லாதது இத்தலத்தின் சிறப்பாகக் கருதப்பெறுகிறது.
நவக்கிரகத் தலங்களில் இது குரு தலமாக உள்ளது.இங்குள்ள கைலாசநாதர் குருவின் ஆதிக்கம் பெற்றவர், எனவே கைலாசநாதருககு குரு பரிகார பிராத்தனையும் உண்டு.
நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், பற்றாக்குறை இருக்கிறதே என்ற கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம், பற்றாக்குறை நீங்க, ஆசைகளை குறைக்க வேண்டும், ஆசைகள் குறைய வேண்டுகிறோம், வணங்குகிறோம். இந்தச் சக்தியை இறைவன்தான் தர முடியும், அதே நேரம் நவீன காலத்திற்கேற்ப, சில சாதனங்களும் நமக்குத் தேவைப்படுகிறது. எப்படியாவது கையில் நாலு காசு இருந்தால்தானே உலகம் நம்மை மதிக்கிறது. ஆசை குறைந்து, கையில் நாலு காசு தங்க, இக்கோவில் உள்ள கைலாச நாதரிடம் வேண்டிக் கொள்தல் வேண்டும்.
தலச் சிறப்பு ;
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தலங்களில் ஐந்தாவது தலமாகும், இது நவ கைலாச தலங்களில் நடுவில் அமைந்துள்ள படியால் இதற்கு நடு கைலாசநாதர் என்ற பெயரும் உ்ண்டு.
இங்கு கைலாச நாதர் குரு அம்சமாக இருப்பதால்,இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டக்கடலை நெய்வேத்தியம் செய்யப்பெறுகிறது.
சிவாமியம்மாள் தனி சன்னதியில் காணப்படுகிறாள். எதிரிலுள்ள விநாயகர் சன்னதியில் இரட்டைப் பிள்ளையார் துவார பாலகர்கள் போலக் காணப்படுவதும் இத்தலத்தின் சிறப்பு. மற்றப் பரிவார தேவதைகளில், இரட்டை விநாயகர்கள், சூரியன், அதிகார நந்தி, சப்தகன்னிமார், பஞ்ச லிங்கம், நாயன்மார்கள் வள்ளி, தெய்வானையோடு சுப்ரமணியர் போன்றவர்களும் உள்ளனர். சனீஸ்வரரும் தனியாக இருக்கிறார்.
ஊர் சிறப்பு ;
சூர பத்மனும், மற்ற அரக்கர்களும்,செய்த கொடுமையைத் தாங்க முடியாத முனிவர்கள், இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் இதற்கு " முறை(யிட்ட)நாடு " என்ற பொருளில் முறைப்பநாடு என்ற பெயர் வந்ததாம்.
பேருந்துகளில் சென்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து தான் செல்லவேண்டும். காலை ஏழு மணிக்கு மேல் தான் கோயில் திறக்கப் பெறுகிறது. பனிரண்டு மணிக்கு நடை சாத்தினால் மாலை ஐந்து மணி அளவில் கோயில் திறந்து ஏழு மணிக்கெல்லாம் நடை சாத்துகிறார்கள். ஆகவே நேரத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு சென்றால் தான் தரிசனம் செய்ய முடியும்.
youtube link: