015 - ஈரவாடையினால் கண்டேனோ ஈரங்கொல்லியைப் போல?
முன்னம் நடந்தேறிய பூர்வர்கள் காலத்து நிகழ்வுகளோடு
தன்னை ஒப்பிட்டுக் கொண்டு,
திருவல்லிக்கேணி அம்மாள் பேசிவருவது மாமுனிகளுக்கு
சற்று வித்யாசமாகத் தெரிந்தாலும்,
மனதளவில் அம்மையார் தான் ஏதும் பகவத், பாகவத,
ஆசார்ய கைங்கர்யங்களில் இதுவரையிலும் ஈடுபடாதது
குறித்து மிகவும் நொந்திருக்கிறாள் என்பதை அவரால்
நன்கு உணர முடிந்தது...
அதனால் தற்பொழுது, அவளிடம் தமது கேள்வியைச்
சற்றே மாற்றிக் கேட்டார் பெரிய ஜீயர்..
"அம்மணி... நேரிடையா எந்த விதமான கைங்கர்யம் நீ
செய்யலைனாலும், எப்பவாவது, எந்த விதத்திலாவது
கைங்கர்யம் செய்யறவாளுக்கு ஏதானும் உபகாரமா
இருந்ததுண்டா?..."
ஜீயரின் கேள்விக்கு விடையாக "இல்லை" என்பதுபோல்
தலையசைத்தாள் திருவல்லிக்கேணி அம்மையார்..
பின், ஒரு பெருமூச்சுடன் அவளே தொடர்ந்தாள்..
"ஸ்வாமி... அடியேன் என்ன,
#ஈரவாடையினால் கண்டேனோ ஈரங் கொல்லியைப்
போலே?.."
.....என்று ஒரு வினாவை மாமுனிகள் முன்னே
வைத்தவள், வழக்கம்போல், அதன் வ்ருத்தாந்தத்தையும்
விவரமாக எடுத்துரைத்தாள்..
"ஸ்வாமி...துலுக்கர் படையெடுப்பால நம்பெருமாளுக்கு
ஆபத்து வந்ததையும், அதனால அவர பத்திரமா
பாதுகாக்கறதுக்காக திருநாராயணபுரம், திருமலை
போன்ற ஸ்தலங்கள்ல எழுந்தருளப் பண்ணியதையும்
தேவரீர் கேள்விப்பட்டிருப்பேள்..
எல்லா அமர்க்களமும் ஓய்ந்த பிறகு, அடியார்கள்லாம்
சேர்ந்துண்டு, நம்பெருமாள மறுபடியும் திருவரங்கத்துக்கு,
"கோபண்ண உடையார்"னு ஒரு ராஜா மூலமா
எழுந்தருளப் பண்ணினா....
இதுநடுவுல, திருவரங்கத்த சேர்ந்தவா எல்லாரும் ஒன்னு
சேர்ந்துண்டு ஒரு நூதன(புதிய) விக்ரஹத்த உற்சவ
மூர்த்தியா ப்ரதிஷ்டை பண்ணி, அவருக்கு எல்லா
விதமான உபசாரங்களையும் பண்ணிண்டு இருந்தா..
இப்போ...நீண்ட காலத்துக்குப் பிறகு அரங்கனோட இந்த
உற்சவ மூர்த்தி வந்து சேர்ந்ததுனால,
"இவர் நம்மோட அழகிய மணவாளன்தானா?" ங்கற
சந்தேகம் எல்லாருக்கும் வந்துடுத்து.
...ஸ்தலத்தாரெல்லாம் இந்த சந்தேகத்த எப்படி
தீர்த்துக்கறதுன்னு ரொம்ப யோசனை பண்ணிண்டு
இருந்தா..
பழைய கைங்கர்யபரர்கள்ல யாரானும் பெருமாள
அடையாளம் கண்டு சொல்லக்கூடியவா இருக்காளான்னு
தேடிப்பார்த்தா..
அப்போ, பெருமாளோட திருமேனி வஸ்திரத்த நித்யமும்
சுத்தம் பண்ணிக் கொடுத்துண்டு இருந்த ஒரு வண்ணான்
(ஈரங்கொல்லி) இன்னமும் உயிரோட இருக்கான்னு
தெரிஞ்சு அவன்கிட்ட விக்ரஹத்த எடுத்துண்டு போனா..
அவனுக்கு அப்போ ரொம்ப வயசாயிருந்ததால,
கண்பார்வை போயிருந்தது... அவனால பெருமாள நேரப்
பார்க்க முடியல..
வந்திருந்தாள் கிட்ட அவன் ஒரு யோசனை சொன்னான்..
"பெருமாளோட வஸ்திரத்த சுத்தப்படுத்தறதுக்கு முன்னாடி,
நான் அத ஜலத்துல ஊற வெக்கறது வழக்கம்.. அப்படி
ஊறின அந்த தீர்த்தத்த, நான் முகர்ந்து பார்த்து, பலகாலம்
பருகி இருக்கேன்..
நீங்க ஒன்னு பண்ணுங்கோ...
இப்போ வந்த இந்த பெருமாள் அரையில ஒரு வஸ்திரத்த
சாத்தி, காவேரி தீர்த்தத்துல அவருக்கு ஒரு
திருமஞ்சனமும், ஏற்கனவே இருக்கற பெருமாளுக்கு ஒரு
வஸ்திரம் சாத்தி, அவருக்கு ஒரு திருமஞ்சனமும் பண்ணி,
அந்த ஈரவாடை ரெண்டையும் எனக்கு ப்ரஸாதமா
தாங்கோ...
அப்போ, என்னால சந்தேகத்துக்கு இடமில்லாம, நிச்சயமா
நம்ம பெருமாள அடையாளம் காணமுடியும்.."
...அந்த ஈரங்கொல்லியோட யோசனை எல்லாருக்கும்
சரினு படவே, அவன் சொன்ன மாதிரியே செஞ்சு, அந்த
ரெண்டு ஈரவாடையையும் அந்த ஈரங்கொல்லிக்
கிட்ட கொண்டு வந்து கொடுத்தா..
அவனும் அந்த திருமஞ்சன வஸ்திரங்கள முகர்ந்து
பார்த்து, தீர்த்தத்தையும் ஸ்வீகரித்து, பழைய திருமேனிய
அடையாளம் கண்டு,
"இவரே நம்பெருமாள்!..
நம் பெருமாள் திரும்பி வந்து விட்டார்.."னு சொல்லி,
பழைய திருமேனிய அடையாளம் காட்டி, ஆனந்தக்
கூத்தாடினான்...
....அன்னிக்கு அந்த ஈரங்கொல்லியோட வாயில வந்த
அந்த "நம்பெருமாள்"கற வார்த்தையே, அழகிய
மணவாளனுக்கான நிரந்தரமான திருநாமமும் ஆயிடுத்து!..
....இப்படி ஈரவாடை தீர்த்தத்து மூலமா ஒரு விக்ரஹத்த
நிச்சயித்து அறியணும்னா, அந்த ஈரங்கொல்லிக்கு அந்த
பெருமானோட திருமேனியில எவ்ளோ ப்ரேமம்
இருக்கணும்!..
அவன் அன்னிக்கு செஞ்சது எவ்ளோ பெரிய கைங்கர்யம்!..
.....இப்படி எம்பெருமானுக்கு நித்யமும் கைங்கர்யம்
பண்றவாளுக்கு ஒத்தாசையா இருந்து, கண் இழந்த அந்த
தசையிலும், அவன் காரியம் பண்ணானே!..
அவனுக்கெல்லாம் அடியேன் ஈடாவேனோ ஸ்வாமி?...
அடியேனோட ஜன்மாவே வ்யர்த்தம் ஸ்வாமி!..."
....என்று கூறிய திருவல்லிக்கேணி மாதரசியின்
விழியோரம் நீர் வழிந்தது...
(வளரும்..) - நன்றி பத்மா கோபால்
முமுக்ஷுப்படி த்வய பிரகரணப் நாராயண ஸப்தார்த்தம் 141ஆம் நூற்பா”. ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று கூறியது அழகிய மணவாளன் 48 ஆண்டுகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று திரும்பிய பிறகு சூட்டிய பெயராகும். பிள்ளைலோகாச்சாரியர் 141வது நூற்பாவில் நம்பெருமாள் என்று குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டும். நம்பெருமாள் திருவரங்கத்திற்கு மீண்டும் வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை மீண்டு வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை ராஜ மகேந்திரன் திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் காணலாம். இந்தக் கல்வெட்டை தொல்லியல் துறை படியெடுத்தது. ”South Indian Temple Inscription Volume 24″ – À R number 288 (A.R. No. 55 of 1892).
ஸ்வஸ்திஸ்ரீ: பந்துப்ரியே சகாப்தே (1293)
ஆநீயாநீல ச்ருங்கத் யுதி ரசித ஜகத்
ரஞ்ஜநாதஞ்ஜநாத்ரே:
செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்சித் ஸமயமத
நிஹத்யோத்தநுஷ்காந் துலுஷ்காந் >
லக்ஷ்மீக்ஷ்மாப்யாம் உபாப்யாம்
ஸஹநிஜநகரே ஸ்தாபயந் ரங்கநாதம்
ஸம்யக்வர்யாம் ஸபர்யாத் புநரக்ருத
¯÷\õதர்ப்பணோ கோபணார்ய: >>
(புகழ் நிறைந்த கோபணார்யர் கறுத்த கொடுமுடிகளின் ஒளியாலே உலகை ஈர்க்கும் திருமலையிலிருந்து ரங்க நாதனை எழுந்தருளப் பண்ணி வந்து தன் தலைநகரமான செஞ்சியில் சிறிது காலம் ஆராதித்து ஆயுதமேந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீதேவி பூதேவிகளாகிய உபய நாச்சிமார்களோடு கூட திருவரங்கப் பெருநகரில் பிரதிஷ்டை செய்து, சிறந்த திருவாராதனங்களை மறுபடி தொடங்கி வைத்தார்.)
இந்தக் கல்வெட்டை பிள்ளைலோகம் ஜீயர் தம்முடைய “யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?v=OCj2n81TJpQ |
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu