276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் - 011 - திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

6 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Jul 27, 2023, 3:15:27 AM7/27/23
to thatha patty

11. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

இறைவர் திருப்பெயர்:   சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்.  


இறைவியார் திருப்பெயர்: பிரம்மவித்யாநாயகி.  


தல மரம்:    வடவால், கொன்றை, வில்வம்

தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்; முதலில்   அக்கினி, பிறகு சூரிய இறுதியாக சந்திர தீர்த்தம் என்ற முறையில் நீராடுவர்.)  

image.png



வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்,பிரம்மன், இந்திரன், வெள்ளை யானை,  சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், கிருஷ்ண த்வைபாயனர்  முதலியோர்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமயக் குரவர்களாகிய சம்
பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.

இது புதனுக்கு உரிய தலமாகக் கருதப் பெறுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 ஆவது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்குத் துன்பம் செய்தான். சிவபெருமான் அருளிய படி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கித் தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிஷப தேவரை சூலத்தால் தாக்கிக் காயப்படுத்தினான். ரிஷப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவம் கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோரமூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிஷப தேவர் சுவேதாரண்யேசுவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரகத் தலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவருக்குத் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடுடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான் என்று பல பெயர்கள் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்திற்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

வால்மீகி ராமாயணத்தில் திருவெண்காடு தலக் குறிப்பு 

திருவெண்காடு வடமொழியில் "சுவேதாரண்ய க்ஷேத்திரம்" என்றழைக்கப் பெறுகின்றது. வால்மீகி ராமாயணத்தில்,

"சபபாத கரோபூமன் தஹ்யமான சராக்னி
நருத்ரேநேவ வினிர்தக்த ஸ்வேதாரண்யே யதாந்தகஹா"
(ஆரண்யகாண்டம் - ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்)

"யமனை ஸ்வேதாரண்ய க்ஷேத்திரத்தில் சுவேதாரண்யேஸ்வரர் வதம் செய்ததைப் போன்று கரன், தூஷணன் அரக்கர்களை இராமபிரான் வதம் செய்தார்." என்று வால்மீகி ராமாயணம் திருவெண்காட்டு இறைவனைக் குறிப்பிடுகின்றது, இத்தலத்தின் தொன்மைக்கு இது சான்றாக உள்ளது.

அகோரமூர்த்தி

சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 ஆவது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 

ஆதி சிதம்பரம் 

சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதி சிதம்பரம் என்றழைக்கப் பெறுகின்றது. சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் புரிந்த திருத்தலம். 108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவ கோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம்.

கோவில் அமைப்பு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. உள்ளே பரந்த இடப் பரப்பைக் கொண்டது. கிழக்கு வாசல் பக்கத்தில் தேவஸ்தானம் நடத்தும் மெய்கண்டார் பாடசாலை உள்ளது. உள்ளே நுழைந்ததும் இடது பக்கத்தில் அக்னி தீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் சன்னதிகள் உள்ளது. பிரகாரத்தில் பக்கத்தில் சூரிய தீர்த்தம் உள்ளது. கரையில் சூரிய தீர்த்த லிங்கம் சன்னதி உள்ளது. இத்தலத்தில் சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்ணிலிருந்து சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. சுப்பிரமணியர் மண்டபம், ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றைத் தொடர்ந்து அம்பாள் சன்னதி தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

தலச் சிறப்புகள்

வடக்கேயுள்ள காசிக்குச் சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு ஆகும். 
"ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீ மாயூரம் மார்ஜுனம்  சாயாவனம்ச ஸ்ரீ வாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமாநிஷட்" என்ற வாக்கியத்தால்  காசிக்குச் சமானமாகக் கூறப்படும் ஸ்தலங்கள் ஆறு என்பதைத்  தெரிந்து கொள்கிறோம். இவை, திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர் , சாயாவனம் என்கிற திருச்சாய்க்காடு ,திருவாஞ்சியம்  என்பன ஆகும்  

இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.  (திருவெண்காடு மூன்று மூர்த்திகள், மூன்று அம்பிகைகள், மூன்று தல மரங்கள், மூன்று தீர்த்தங்கள் (முறையே சுவேதாரண்யர், அகோரர், நடராசர்; பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி; வடஆலமரம், கொன்றை, வில்வம்; சூரிய, சந்திர, அக்கினி). இத்தல இறைவனை வணங்கி புதன் அலி தோஷம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  

இங்கு நடராஜ சபையும், ரகசியமும் உண்டு. சிதம்பரத்தில் உள்ளது போலவே நடராஜருக்கு அருகில் பெருமாளுக்குத் தனிச் சன்னதி உள்ளது. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், புதன் ஆகியோர் இத்தலம் வந்து வழிபட்டுள்ளனர். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்கு தான் என்று கூறப் பெறுகிறது.

பிள்ளையிடுக்கி அம்மன்

இத்தலத்தின் வட எல்லைக்கு திருஞான சம்பந்தர் வந்த போது ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கம் ஆகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் கால் வைக்கப் பயந்து அம்மா என்றழைத்தார். குரலைக் கேட்ட பெரியநாயகி அன்னை இவரைத் தன் இடுப்பில் தூக்கிக் கொண்டு கோவிலுக்குள் வந்தார். திருஞான சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோவிலின் பிரகாரத்தில் உள்ளது விசேஷம்.

கோவில் திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவிலுக்கு எப்படிச் செல்வது?

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவெண்காடு. சீர்காழியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

சிறப்புகள் 

  • புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப் பெறும் தலம்.
  • சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.   இத்திருக்கோயிலில் உள்ள முக்குளத்தில் (வெண்காட்டு முக்குளநீர்) நீராடி இறைவனை வழிபடின் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஞானசம்பந்தர் அமுதவாக்கு. "சங்கு முகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ" என்று ஒரு தாலாட்டுப் பாட்டும் இத்தல முக்குளச் சிறப்பை விளக்குகின்றது.
  • புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது. 
  • இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட லிங்கம் உள்ளது. 
  • அகோரமூர்த்தியின் மூல மற்றும் உற்சவ திருமேனிகள் அற்புத வேலைபாடுகள் அமைந்துள்ளன; 
  • காணத் தெவிட்டாத கலையழகு. நடராசசபை தில்லையைப் போலச் செப்பறையில் அமைந்துள்ளது; உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தில்லையைப் போலவே நாடொறும் அபிஷேகம் நடைபெறுகிறது. 
  • சிதம்பர இரகசியமும் உள்ளது.  
  • நவ தாண்டவங்களை ( ஆனந்த தாண்டவம், காளி ந்ருத்தம், கௌரீ தாண்டவம், முனி ந்ருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம் , புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம்) நடராஜ மூர்த்தி இங்கு ஆடினாராம். 
  • சிதம்பரத்தில் சகுணமாக ஆடி முக்தியைத் தரும் மூர்த்தி, இங்கு நிற்குணமாக ஆடி இம்மைக்கும் மறுமைக்கும்  பலன்களை அளிக்கிறார். இவரது காலில் பதினான்கு சலங்கைகள் உள்ள காப்பு காணப்பெறுகிறது. ஈரேழு பதினான்கு புவனங்களும் அவர் அசைந்தால் மட்டுமே அசையும் என்பதை இது காட்டுகிறது.
  • இடுப்பில் அணிந்துள்ள  81 வளையங்கள்   உள்ள அரை ஞாண், பிரணவம் முதலான  81 பத மந்திரங்களை உணர்த்தும். 
  • 28 எலும்பு மணிகளை அணிந்திருப்பது, 28 சதுர் யுகங்கள்  முடிந்திருப்பதைக்  காட்டுகிறது.
  • கூர்ம- வராக அவதாரங்களை அடக்கி அவற்றின் அடையாளமாக ஆமையின் ஓட்டையும், பன்றிக் கொம்பையும் மார்பில் அணிந்திருக்கிறார். 
  • ஜடாமுடி பதினாறு கலைகளை உணர்த்துவதாக உள்ளது. அதில் 15 சடைகள் பின்னால் தொங்குகின்றன.  ஒன்று மட்டும் கட்டப் பெற்றுள்ளது.   திரு முடியில் மயில் பீலியும், கங்கையும்,இளம் பிறைச்சந்திரனும்,  ஊமத்தம் பூவும், வெள்ளெருக்கும்  இருக்கின்றன.  நெற்றிக்கண் அழகாகத் தெரிகிறது.
  • துர்க்கை இங்கு மேற்கு நோக்கி இருப்பது விசேஷமானது. திருமணமாகாதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொள்வது மரபாக இருந்து வருகின்றது. 
  • மூலவர் உட்புறச் சுவரில் தலப்பதிக கல்வெட்டுகள் உள்ளன. 
  • படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தலப் புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப் பெறுகின்றது.
  • நவகிரகங்களுள் ஒருவரும், வித்யாகாரகன்,மாதுர்காரகன், என்றெல்லாம் வழங்கப் பெறும் புதனுக்குத்  தனிச் சன்னதி, ஆல விருக்ஷத்தின் அடியில் ருத்ர பாதம் இருக்கிறது. இது பித்ருக் கடன் செய்ய உத்தமமான இடம்.
  • வில்வ விருக்ஷத்தின் அடியில் பிரம்ம சமாதி உள்ளது.

இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. தேவேந்திரன், ஐராவதம் என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன்,அக்னி , ஸ்வேத கேது, சுவேதன் ஆகியோர் பூஜித்துள்ளனர். உத்தாலக முனிவரின்  எட்டு வயது குமாரனான சுவேத கேதுவின்  உயிரைப் பறிக்க வேண்டிய யமன் பாசக் கயிற்றை வீசியபோது  சுவாமி வெளிப்பட்டுக்  கால- சம்ஹாரம் செய்ததாகத்  தல புராணம் சொல்கிறது. 

சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம் செய்ய ஒட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர் மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்து விட்டுப் போயிற்று. இஃதறிந்த இறைவன் தாமே அகோர மூர்த்தியாக (இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியாக அகோர மூர்த்தியே உள்ளார்.) வடிவு கொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்த (மாசி மகத்து மறுநாள்) நாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இவ்வரலாற்றை ஒட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

வெளிப்பிராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி உள் பிராகாரத்துடன் பிரம்ம வித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம்  செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிரு கரங்கள் அபய வரதமாக  அருட்காட்சி வழங்குகிறாள் அம்பிகை.பிரம்மா சமாதி இங்குள்ளது. இவ்வூர் சங்கல்பத்தில் "ப்ரஹ்ம ஸ்மாஷனே" என்று சொல்லப் பெறுகிறது,

இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற பாவத்தை இங்கு திருவெண்காடரை வழிபட்டு நீக்கிக் கொண்டான்  இங்கு நடைபெறும் மஹோத்சவம் இந்திர மஹோத்சவம் என்று அழைக்கப் பெறுகிறது. இந்திரனே வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம் .இந்திரன் ஐராவதம் என்னும் தன் வெள்ளை யானையின் மேல் பவனி வந்தபோது துருவாச முனிவர் தந்த மாலையை மதியாது வாங்கி, யானையின் மத்தகத்தின் மேல் வைக்க, யானையோ அம்மாலையைக் காலிலிட்டு மிதித்தது. துருவாசர் சினந்து யானையைக் காட்டானை ஆகுமாறு சபித்தார். பின்னர் யானை தவறுக்கு வருந்தி, முனிவரைப் பணிந்து சாபவிமோசனம் வேண்டியது. முனிவர், திருவெண்காட்டீசரைச் சென்று தொழச் சாபம் நீங்கும் என்றார். அதன்படி ஐராவதம் திருவெண்காட்டில் சில காலம் காட்டானையாகத் திரிந்தது. பின்னர் திருவெண்காட்டில் ஈசான்ய திசையில் தன் பெயரில் ஒரு தடாகம் அமைத்துச் சிவலிங்கம் ஸ்தாபித்து, வழிபாடியற்றி ஈசன் அருள் பெற்று மீண்டும் இந்திரலோகம் சேர்ந்தது. யானை அமைத்த தடாகம் இன்றும் யானை மடு என்று வழங்குகிறது.

யானை வெண்காட்டில் தவமியற்றியதைத் திருஞானசம்பந்தர், "வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டார்" என்றும், யானை வழிபட்டதை "பெரிய உருவத்தானை வணங்கும் வெண்காடே" என்றும், 'இந்திரன் கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்' என்றும், யானை அருள் பெற்றதை, 'அடைந்த ஐராவதம்  பணியமிக்க தனக்கருள் சுரக்கும் வெண்காடு" என்றும் பாடுகிறார். திருநாவுக்கரசர் "வெள்ளானை வேண்டும் வரங்கொடுப்பர்” என்று பாடுகிறார்.

முற்கல முனிவரின் குமாரரான சிவப்பிரியர் திருவெண்காட்டிற்கு வந்து ஈசனை வழிபாடு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தாமரை மலர்களைக் கொய்து வரும்போது ஐராவதம் என்னும் யானையால் தாக்கப்பட்டார். அவர் நெஞ்சினுள் அஞ்செழுத்து அழுந்தியிருந்ததால் யானையின் கொம்புகள் அவரைக் குத்தாது யானையின் முகத்தில் அழுந்தி வயிற்றினுள் சென்றது. யானை நல்லுணர்வு பெற்றுச் சிவப்பிரியரிடம் மன்னிப்பு வேண்ட சிவப்பிரியர் அதனை மன்னித்தருளினார். பின்னர்  வைகாசி மாதத்து அமாவாசையில் சிவப்பிரியர் சிவஜோதியில் கலந்தார்.

கந்தப்புராணத் திருவிளையாட்டுப் படலம்'காழற்று தந்தம் அறஏகி வெண்காட்டில் ஈசன்கேழற்ற தாளர்ச்சனை செய்துகிடைத்து வைகும் வேழம்" என்றும்,திருவிளையாடற் புராணம் அர்ச்சனைப் படலம்" கோடு நான்குடைய வேழம் தானவன் குறைந்த கோட்டைப் பாடற நோற்றுப் பெற்ற பதியிது” என்றும் இந்நிகழ்ச்சியைப் பாடுகிறது.

வேதராசி என்ற அந்தணன் ஊருக்குச் செல்லும் போது தான் எடுத்துச் சென்ற கட்டமுதை ஓர் ஆலமரப் பொந்தில் வைத்தான். அச்சோற்றில் பாம்பொன்று நஞ்சை உகந்தது. அவன் அச்சோற்றினை ஒரு மறையவனுக்கு இட மறையவன் அதனை உண்டு மாண்டான். வேதராசியைப் பிரம்மஹத்தி தோஷம் தொடர்ந்தது. அவன் திருவெண்காட்டை அடைந்ததும் அது அவனை விட்டு நீங்கியது. வேதராசி வெண்காட்டீசனை வழிபட்டு எமதூதரிடமிருந்து தப்பி இறையடி நீழலை எய்தினான். 

உத்தால முனிவரின் புத்திரராகிய சுவேதகேது எட்டு வயதுடன் தம் ஆயுள் முடியும் என்பதை உணர்ந்து திருவெண்காட்டிற்கு வந்து சிவபூசை செய்து கொண்டு இருந்தார், எட்டாம் வயது முடியும் நாளில் எமன் வந்து சுவேத கேதுவின் மேல் பாசத்தை வீச, சிவபூசை தடைப்படுகிறதே என அவர் வருந்த சிவபெருமான் வெளிப்போந்து எமன் வலியை அழித்தருளினார். பின்னர் சுவேத கேது திருவெண்காட்டில் சில காலம் இருந்து இறைவனின் ஆடல் கண்டபின் அவன் திருவடியில் சேர்ந்தார்.  சம்பந்தர் 'வெங்காலன் உயிர் விண்டபினை' என்று இவ்வூர்ப் பதிகத்தில் இதனைக் குறிப்பிடுகிறார்.

சுவேதன் என்னும் மன்னர் வாதாபி எனும் தன் மகனுக்கு அரசாட்சியை அளித்து விட்டு, தன் மனைவி சுலோசனையுடன் வானப்பிரஸ்தாச்சிரமத்தில் இருக்கையில், தன் மனைவியைப் பிரிந்த பின்னர் சாவில்லாத வரந்தரும் திருவெண்காட்டை அடைந்து தவமும் வழிபாடும் செய்து வந்தார். ஒருநாள் எமன் சுவேதனை அணுகிப் பாசத்தைப் பூட்டினான். சுவேதன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான். அப்போது திருவெண்காடர் அங்கே தோன்றக் காலன் அஞ்சி ஓடி வீழ்ந்திறந்தான். சிவபெருமான் சுவேதனுக்குச் சிவசொரூபமளித்தார். பின்னர் தேவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி எமனையும் எழுப்பியருளினார். 

சத்திய நல்விரதன் என்பவர் நாகையை ஆண்ட மன்னர். இவன் ஆட்சிக்காலத்தில் சாக்தமத பிராமணர் ஒருவர் பசியோடு வந்த பிராமணருக்குக் கள்ளைக் கொடுத்து விட்டார். கள்ளுண்ட பிராமணரைத் திருவெண்காட்டிற்கு அழைத்து வந்து அவர் செய்த பாவத்தைக் கழுவத் துணை செய்தான் சத்திய நல்விரதன். பின்னர் தன்னரசை மகனிடம் விடுத்து, திருவெண்காட்டிலேயே தங்கி வழிபாடியற்றி இறையருள் பெற்றான். 

சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், அவரது தோழி சந்தன நங்கையும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். 

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக இருந்த ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு மணிகர்ணிகா கட்டத்தில் இருக்கிறது.   

திருவாவடுதுறை ஆதீன எட்டாவது குரு மகா சந்நிதானமாக விளங்கிய மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் சமாதி , மேல வீதியில் உள்ளது. 

இக்கோவிலில் சோழ,பாண்டிய,விஜயநகர அரசர்களின் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.

சோழ அரசர்களோடு,அரசியர்களும் இக்கோவிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.தெய்வத் திருமேனிகள் செய்து வைக்கப் பெற்றதோடு விளக்கெரிக்கவும், திருவிழாக்கள் நடைபெறவும், நந்தவனம் அமைக்கவும் ,இசைக்கருவிகள் வாசிப்போருக்கும், வேதம் ஒதுவோருக்கும் நிலங்கள் அளிக்கப் பெற்றன.

கோவில் நிலங்களை வைத்திருந்தோர் மூவர் , சிவத் துரோகிகளாக மாறியதால், அந்நிலங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.  

காசியில் இருக்கும் விஷ்ணு பாதத்தை வழிபட்டால் கிடைக்கும் பலனைவிட, திருவெண்காட்டில் இருக்கும் ருத்ர பாதத்தை வழிபட்டால் மூன்று மடங்கு அதிகப்படியான புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் வரும். இதனால்தான் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானுக்கு, 17 அகல் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த முறைப்படி புதன் பகவானுக்கு இத்திருத்தலத்தில் தீபமேற்றி வழிபட்ட பின்பு, அடுத்து வரும் கால கட்டங்களில் உங்களுக்கு நடக்கப்போகும் புதன் திசையானது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.



திருமுறைப் பாடல்கள் :

பதிகங்கள்    :   சம்பந்தர்    -   1. கண்காட்டு நுதலானுங் (2.48),
                                                    2. உண்டாய் நஞ்சை (2.61),
                                                    3. மந்திர மறையவை (3.15);
     
                   அப்பர்       -  1. பண்காட் டிப்படி (5.49),
                                         2. தூண்டு சுடர்மேனித் (6.35);

                   சுந்தரர்      -  1. படங்கொள் நாகஞ் (7.6);

பாடல்கள்    :     அப்பர்      -     
                                      சீரார் புனற்கெடில (6.7.9),
                                      விட்டிலங்கு (6.17),
                                      அம்மை பயக்கும் (6.23.8),
                                      வகையெலா முடையாயும் (6.41.1),
                                      வெறியார் (6.43.4),  
                                      வெண்காட்டார் (6.51.4),
                                      நெருப்பனைய (6.54.7),
                                      புகழொளியைப் (6.68.6),
                                      பூதியனைப் (6.69.3),
                                      வீழி மிழலை (6.70.7),
                                      மலையார் (6.71.6),
                                      ஐந்தலைய (6.86.8),
                                      தண்காட்டாச் (6.93.9),
                                      விரிசடையாய் (6.99.6);

மாணிக்கவாசகர்   -    
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் (8.2.60 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல்,
வேலன் புகுந்து (8.18.21) வரைபொருட்பிரிதல், திருக்கோவையார்;

கபிலதேவ நாயனார்  -    
மிடற்றாழ் (11.22.2 & 24) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை,
இன்றியாம் (11.23.36) சிவபெருமான் திருவந்தாதி;

பரணதேவ நாயனார்  -    புகலூர் உடையாய் (11.24.46) சிவபெருமான் திருவந்தாதி;

பட்டினத்துப் பிள்ளையார் -     
கரத்தினில் மாலவன் (11.29.30) திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,
நினைவார்க் கருளும் (11.30.61) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;

சேக்கிழார்     -     
சீரினில் திகழ்ந்த (12.28.123,124 & 126) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
தேவர் பெருமான் (12.29.148) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,
வேத காரணர் (12.36.12,17,38,53 & 78) சிறுத்தொண்ட நாயனார் புராணம்.        

திருவெண்காடு கல்வெட்டுச் செய்திகள்
இத்திருக்கோயிலில் தமிழிலும் கிரந்தத்திலும் 95 கல்வெட்டுக்கள் உள்ளன .
இராசராசன் 1, இராசேந்திரன் 1, வீரராசேந்திரன் 2, குலோத்துங்கன், விக்கிரம சோழன் 1, குலசேகரபாண்டியன். கௌமாரபாண்டியன், விக்ரமபாண்டியன், ஜடாவர்மன், சுந்தரபாண்டியன், பராக்கிரம பாண்டியன், ஸ்ரீவல்லப் தேவன், விருப்பண்ண உடையார், கிருஷ்ணதேவராயர், துக்கோஜி முதலியவர்கள் காலத்திய கி.பி.10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு முடிய கல்வெட்டுக்கள் இங்குஉள்ளன. 

கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோவிலுக்குப் பல்வேறு நிவந்தங்கள் அளித்தமை பற்றியே உள்ளன. இக்கல்வெட்டுக்களில் மேற்குறித்த பல அரசர்களின் பெயர்களோடு அரசியரின் பெயர்களும், தெரிய வருகின்றன. இராசராச நம்பிராட்டியார், கூத்தன்வீர நாராயணியார், பராந்தகன் மாதேவியார், செம்பியன் மாதேவியார், திரைலோக்கியம் உடையார், வானவன் மாதேவியார், நக்கன் உலகமாதேவியார், பஞ்சவன் மாதேவியார், வில்லன் மாதேவியார் ஆகிய அரசியாரும் நிவந்தங்கள் அளித்து உள்ளனர்.

இக்கல்வெட்டுக்களால் அறியும் செய்திகளாவன:
தேவர்கள் நாயகப் பெருமான் (உற்சவர்) இடபவாகன தேவர் நம்பிராட்டியார், பிச்சதேவர், ஆடவல்லார், அர்த்தநாரிதேவர் ஆகியோரின் திருவுருவங்கள் செய்து வைக்கப் பெற்றன.கோசாலை (பசுமடம்) ஆதுலர்சாலை (ஏழைகள் உணவு விடுதி) மடம், நந்தவனம் ஆகியவை கோவிலைக் சார்ந்து இருந்தன.வளத்து வாழவிட்டான் சந்தி, குலசேகரத் தொண்டமான் சந்தி, கலியுகராமன் சந்தி, அடைய வளைந்தான் சந்தி, நாகரசன் சந்தி, மானங்காத்தான் சந்தி ஆகியன நடைபெறக் கட்டளைகள் ஏற்படுத்தப் பெற்றன. மாத ஆயில்ய விழா, ஐப்பசி சதய விழா, மார்கழி திருவிழா ஆகியன நடைபெற்றன. விழாக்களில் எழுந்தருளும் மூர்த்திகளுக்குத் திருமுழுக்கு, பெருந்திருவமுது முதலியன நடைபெற்றன. விக்ரமசோழன், திருவீதியில் மடம் கட்டினான் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு “விக்ரமசோழன் மண்டபத்தில்" அமர்ந்திருந்தான். சுவேதாரண்யர் சந்நிதியில் உள்ளது விக்ரமசோழன் மண்டபம். இடபவாகனதேவர், நாயன்மார் முதலிய  மூர்த்திகளைச் சங்கமத் துறைக்கு எழுந்தருளச் செய்து திருமஞ்சனம் ஆட்டினர். விழாவிற்கு வரும் அபூர்விகட்கு உணவளிக்க பெற்றது. வேதம் ஓதுபவர்களுக்கு நில தானம் செய்யப் பெற்றது. சிவத் துரோகம் செய்தவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாடொறும் ஆறுகால வழிபாடுகள்;
சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாகமத்தின்படியும்,
அகோரமூர்த்திக்கு காரணாகமத்தின்படியும், 
நடராசப்பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுன்றன. 
பிரதி ஞாயிறுகளிலும்- குறிப்பாக கார்த்திகை ஞாயிறுகளில் அகோர பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது .மாசி மாத பிரமோத்ஸசவத்தில் , பூர நக்ஷத்திரத்தில் அகோர மூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், வீதி உலாவும் நடைபெறுகிறது.  

திருவெண்காடு திருவிழாக்கள்
சித்திரை     திருவோணத்தில் நடராசர் அபிடேகம்
வைகாசி    அமாவாசையில் சிவப்பிரியர் மணி கர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.
ஆனி  உத்திரத்தில் நடராசர் அபிடேகம்.
ஆடி  பட்டினத்தார் சிவதீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல், சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல், சிவபூசை செய்வித்தல் இரவு இடப வாகனராய்க் காட்சி தருதல்,
அம்பாளுக்கு ஆடிப்பூர-பத்து நாள் விழா.
ஆடி அமாவாசைக்கு சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.
ஆவணி     வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிடேகம்.
கோகுலாட்டமி பெருமாள் சேவை.
விநாயகர் சதுர்த்தி.
ஆவணி மூலம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.
புரட்டாசி     வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிடேகம். நிறைபணி, தேவேந்திரபூசை, நவராத்திரி விழா, விசயதசமியன்று சுவாமி மணிகர்ணிகை ஆற்றின் கரையில் அம்பு போடல், அம்பாளுக்கு இலட்சார்ச்சனை.
ஐப்பசி    அசுபதியில் அன்னாபிடேகம். வளர்பிறை பிரதமை தொடங்கி கந்த சஷ்டி விழா.
கார்த்திகை    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஸ்ரீ அகோர மூர்த்திக்கு அபிடேகமும் பூசையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறன்று மகாருத்ராபிடேகமும் விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமாவாரந்தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்கா அபிடேகமும் நடைபெறும். பரணி, கார்த்திகை தீப விழாக்கள்.
மார்கழி    தனுர்மாத பூசை, சதயத்தன்று மாணிக்கவாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் நடராசர் தரிசனம் நடைபெறும்.
தை        சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல். சுவாமி குதிரை வாகனத்தில் பாரி வேட்டைக்குச் செல்லுதல். ஐயனாருக்குப் பத்துநாள் விழா. பிடாரிக்குப் பத்துநாள் விழா.
மாசி        இந்திரப் பெருவிழா,
வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம்.
2 ஆம் திருவிழா,
3 ஆம் திருவிழா, சுவேதகேது வைப் பிடித்த எமனை எரித்தல். பூத வாகனம், மொட்டைக் கோபுரம்.
4 ஆம் திருவிழா. மகம், பௌர்ணமி திதியில் சுவாமி காவிரி சங்கமத் துறைக்கு எழுந்தருளல்,
5.ஆம் திருவிழா, பூர நட்சத்திரம். அகோர மூர்த்தி எழுந்தருளல். இரவு மருத்துவாசுர சங்காரம், இடப வாகனக் காட்சி, தெருவடைச்சான் கோபுரம்.
6 ஆம் திருவிழா. யானை வாகனம்.
7 ஆம் திருவிழா. திருக்கல்யாணம், பூப்பல்லாக்கு.
8 ஆம் திருவிழா. பிட்சாடனர் விழா அறுபத்து மூவர் வீதி உலா.
9 ஆம் திருவிழா-திருத்தேர்.
10 ஆம் திருவிழா. காலை நடராசர் வீதி உலா. முக்குளத்தீர்த்தம் கொடுத்தல் மாலை பஞ்ச மூர்த்திகள் இடப வாகனத்தில் மணிகர்ணிகைக்கு எழுந்தருளித் தீர்த்தம் கொடுத்தல்.
11 ஆம் திருவிழா. தெப்பத் திருவிழா.பங்குனி    சுக்ல பட்சப் பிரதமையில் அகோர மூர்த்திக்கு இலட்சார்ச்சனை ஆரம்பம். 
பங்குனி உத்திரத்தில் (பௌர்ணமியில் பூர்த்தி, 
மறுதினம் விடையாற்றி  

அமைவிடம் :

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்துகள் திருவெண்டுகாடு வழியாகச் செல்கின்றன.
தொடர்புக்கு :- 04364 256 424.

 


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

வணக்கம் சுப்பு

 Vanakkam Subbu

 

Reply all
Reply to author
Forward
0 new messages