இசை பிடிமானம்
டாக்டர் சுப. திண்ணப்பன்,
இந்தியப் பகுதி, மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர்.
நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்பெறும் நகரத்தார்களின் திருமண வீடுகளில் எழுதப் பெறும் திருமண ஒப்பந்தத்திற்கு இசைபிடிமானம் என்பது பெயர். மணப்பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி பூட்டிய பின்னர், உடனே மணமகளை உள்வீட்டுக்குள் கூட்டிச் சென்று முன்னிறுத்திக் கையெழுத்து இடப்பெறும். இந்த ஒப்பந்தம் பொதுவாகப் பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதப் பெறுவது வழக்கம். ஏட்டில் எழுதுவோர் அருகிவிட்ட காரணத்தால் அண்மையில் வெள்ளைத்தாளில் எழுதத் தொடங்கியுள்ளனர்.அச்சிட்டும் விற்கின்றனர். இவ்வொப்பந்தம் மணமகனின் தந்தை மணமகளின் தந்தை ஆகிய இருவருக்குமிடையே அமைவதால் இருவரும் கையெழுத்திடுகின்றனர். திருமணத்திற்கு முதல்நாள் மணமகளின் பங்காளி ஒருவரால் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பிரதியும், மணமகனின் பங்காளி ஒருவரால் மற்றொரு பிரதியுமாக இரண்டு பிரதிகள் எழுதப்பெற்றுத் திருமண நாளன்று மேற்சொல்லப்பட்டவாறு படிக்கப் பெற்றுக் கையெழுத்து இடப்பெறும். மணமக்களின் தந்தையர் கையொப்பம் இடுமுன் இப்பிரதிகளை எழுதியவர்களும் தத்தம் கோயிற் பிரிவுடன் கையொப்பமிடுவர். இந்த இரண்டு பிரதிகளும் மணமகள் வீட்டிலேயே எப்போதும் வைக்கப்பட்டிருக்கும்.
பெயர்
இந்த ஒப்பந்தத்திற்குப் பெயர் இசைபிடிமானம் என்பதாகும். இது திருமணத்திற்கு மணமக்களின் தந்தையார் இசைந்து உடன்பட்டதற்கு ஆதாரமாக-பிடிமானமாக அமைவதால் இசைபிடிமானம் எனப்பட்டது. இசைவுக்குரிய பிடிமானம் ஆதலின் இசைவுப் பிடிமானம் என்பர். ஆனால் இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் இந்த ஒப்பந்தத்தை எழுதியவர் யார் என்பதைக் குறிக்க வரும் வாக்கியத்தில் இந்த இசை குடிமானம் எழுதினேன் என்று வருகிறது.இங்கு இசை குடிமானம் என்ற பெயர் அமைவதைப் பார்க்கிறோம். இங்கு மானம் என்பதை பிரமாணம் என்பதன் திரிபாகக் கருதி இசைந்த குடிக்குரிய பிரமாணம் என்று கருதுவாரும் உளர்.
அமைப்பு முறை
முதலில் திருமணநாள் தமிழ் ஆண்டு முறைப்படி ஆண்டு மாதம், தேதி குறிக்கப் பெற்றிருக்கிறது. பிறகு ஒப்பந்தம் எழுதிக் கொள்ளும் மணமக்களின் தந்தையர் பெயர் கோயிற் பிரிவுடன் எழுதப் பெறும். பிறகு மணமகன் பெயர், மணமகள் பெயர் குறிக்கப் பெற்று இவர்களிருவரும் திருமணம் செய்து கொண்டதற்காக இருவரின் தந்தையரும் கொடுக்கும் நன்கொடைப் பொருட்கள் விவரம் தரப் பெற்றிருக்கும். இறுதியில் இசைபிடிமானம் எழுதியவரின் கோயிற் பிரிவுடன் பெயர் கொடுக்கப் பெறும். பிறகு கையெழுத்து இடப்பெறும்.இசைபிடிமான வாசக அமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (செட்டிநாடும் தமிழும் பக்கம் 223)
ஸ்ரீ.....மீ..... உ..... கல்வாச நாட்டில் இளையாற்றக்குடியான குலசேகரபுரத்தில் ஒக்கூருடையான் அருணாசலஞ் செட்டி ராமநாதரோ, கேரளசிங்க வளநாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீரபாண்டியபுரத்தில் அரும்பாக் கூருடையான் கண்ணப்பசெட்டி நாராயணரோ இவர் மகன் சுப்பிரமணியனுக்கு இவர் மகள் வள்ளியம்மையை பாணிக்கிரகணம் பண்ணிக் கொண்டமைக்கு இவர் பூஷணம் பூட்டும் பொன் ஒன்பது ஆறுகல்லெடை; பொன் பதிமுக்கழஞ்சு இவர் சீதனம் கொடுக்கும் பொன் இம்மாறு, இவ்வெடை பொன் ஆறுகழஞ்சு, வெள்ளி ஆறு கழஞ்சு, வெண்கலந்தராப்பலம் ஆறுபத்தொன்று, வெள்ளாட்டிக்கிப் பணம் முப்பது, சீராட்டுச் சக்கரம் ஆறுபத்தொன்று இவ்வகைப்படி செய்வோம். இவர் நன்கொடை கொடுக்கும் பொன் ஐம்பது, மோதிரம் விராகனெடை மூன்று, இவர் உகந்துடைமையாய்க் கொடுக்கும் பொன் வளையி ஏழு கழஞ்சு, இவ்வகைப்படி செய்வோம். இந்த இசைபிடிமானம் எழுதினேன் கல்வாசனாட்டில் இளையாற்றக்குடியான
குலசேகர புரத்தில் ஒக்கூருடையான்........
கையெழுத்து..............
மாப்பிள்ளை வீட்டுக்காரர் கையெழுத்து..........
பெண் வீட்டுக்காரர் கையெழுத்து..........
கோயிற் பிரிவு
இந்த நகரத்தார்களை ஏனைய செட்டியார்களில் இருந்து இனம் பிரித்துக் காட்டுவது அவர்கள் சார்ந்துள்ள கோயிற் பிரிவுகளேயாகும். (பின் இணைப்புக் காண்க). இளையாற்றக்குடி, மாற்றூர், ஏழகப் பெருந்திரு என்ற வயிரவன் கோயில், இரணியூர், பிள்ளையார்பட்டி, நேமம், இலுப்பக்குடி, சூரைக்குடி, வேலங்குடி என்ற ஒன்பது கோயில் பிரிவுகள் உண்டு. இளையாற்றக்குடிக் கோயிலில் ஏழு உட்பிரிவுகளும் மாற்றூர்க் கோயிலில் ஏழு உட்பிரிவுகளும், வயிரவன் கோயிலில் மூன்று உட்பிரிவுகளும் உள்ளன. இவையனைத்தும் ஏனைய இனத்தினரின் கோத்திரங்களைப் போன்றவையாகும். ஒரு பிரிவைச் சார்ந்தவரிடையே திருமணம் நடைபெறுவதில்லை. நகரத்தார்களின் சாதிமுறை நியாயப்படி இரணியூர்க் கோயிலாரும், பிள்ளையார்பட்டிக் கோவிலாரும் சகோதர வமிசத்தாராதலால் தம்முள் கலியாணஞ் செய்து கொள்ளக் கூடாது. மற்றைக் கோவில்களில் செய்து கொள்ளலாம். இளையாற்றக்குடிக் கோயில் உட்பிரிவுகட்கிடையேயும் மாற்றூர்க் கோயில் உட்பிரிவுகட்கிடையேயும் திருமணம் செயது கொள்கின்ற வழக்கம், புள்ளிகள் பெருகிவிட்ட பிற்காலத்தில் தொடங்கியதாகக் கருதலாம். எப்பொழுது தொடங்கியது என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை. வயிரவன் கோவில் உட்பிரிவுகட்கிடையே திருமணம் செய்து கொள்கின்ற வழக்கம் கிடையாது.இத்துடன் இரணிக் கோயில், பிள்ளையார்பட்டி கோயிலார் சேர்ந்து இருவருக்குமிடையே விலக்கப்பட்ட திருமணத் தொடர்பையும் நீக்கினால் 249 இணைகள் தான் வரமுடியும்.
கோயிற் பிரிவுகளைக் குறிப்பிடும் போது வளநாடு, நாடு ஊர், புரம், உடையார் என்ற பகுப்பு முறை வரிசையைக் காண்கிறோம்.
வளநாடு
வளநாடு என்னும் பிரிவில் கேரள சிங்க வளநாடு என்ற ஒன்றை மட்டுமே காண்கிறோம். இளையாற்றக்குடி,இரணியூர், பிள்ளையார்பட்டி என்ற மூன்று கோயிற்கும் வளநாடு குறிக்கப் பெறவில்லை. கேரள சிங்கன் என்ற பெயர் முதலாம் இராசராசனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் வளநாடு, நாடு, ஊர் என்ற பாகுபாடும் முதலாம் இராசராசன் காலத்திலேயே தோன்றியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுவர்.வளநாடு, நாடு என்ற இப்பெயர்கள் செட்டிநாடு சுங்கமில்லாச் சோழநாட்டின் ஒரு பகுதியாக இருந்தபோது சோழ அரசர்களால் வழங்கப் பெற்றவை. சோழ மன்னர்கள் ஒவ்வொரு மண்டலத்தையும் பல வளநாடுகளாகப் பிரித்திருந்ததாகவும் ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கு இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும் என்றும் டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் முதற்குலோத்துங்கன் என்னும் நூலில் கூறுவர். இதை நோக்க சிங்கவளநாடு என்பது வெள்ளாற்றுக்கும் வைகையாற்றுக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பைக் குறித்திருக்கக்கூடும் என்பது சோம.லெ. கருத்து (செட்டிநாடும் தமிழும் ப. 57)
நாடு
நாடு என்ற பாகுபாட்டில் கல்வாசநாடு, பிரம்பூர்நாடு, பாலையூர்நாடு என்ற பெயர்களைக் காண்கிறோம்.வயிரவன் கோயில், நேமம், சூரைக்குடி என்ற மூன்று கோயில்கட்கும் நாடு என்ற பாகுபாடு குறிக்கப் பெறவில்லை. கல்வாசநாடு என்ற பிரிவின் கீழ் இளையாற்றக்குடி, இரணிக்கோயில், பிள்ளையார்பட்டி என்ற மூன்றும் வருகின்றன. இப்போதுள்ள பிள்ளையார்பட்டியும், இரணிக்கோயிலும் கல்வாசநாட்டில் கீழ் வாரா என்பது சா. கணேசன் கருத்து. (பிள்ளையார்பட்டித் தலவரலாறு) இசை பிடிமானத் தொடரில் இவ்விரண்டு கோயில்களையும் குறிக்க முறையே வருந் தொடர்களான, கல்வாசநாட்டில் இளையாற்றக் குடியான இரணியூர் மருதங் குடியான நாராயணபுரத்தில் இரணியூர்த் திருவேட்பூருடையார்'', கல்வாசநாட்டில் இளையாற்றக்குடியான இரணியூர் மருதங்குடியான நாராயணபுரத்தில் பிள்ளையார்பட்டியான திருவேட்பூருடையார்'' என்பதில் வரும் கல்வாசநாடு என்பதை இளையாற்றக்குடிக்கு அடைமொழியாகக் கொண்டு, ஏனைய இரண்டு கோயில்களும் இளையாற்றக்குடியிலிருந்து பிரிந்தவை என்பதைக் குலசேகரபுரத்தில் என்ற சொல்வரை அமையும் பொதுத் தொடராலும், இக்கோயில் பிரிவினர் இருவரும் உடன்பிறப்பினர் என்பதைத் திருவேட்பூருடையார் என்ற பொதுத் தொடராலும் அறியலாம்.
பிரம்பூர் என்ற நாட்டின் கீழ் மாற்றூர், இலுப்பைக்குடி என்ற இரண்டு கோயில்களும் வருகின்றன. இங்கு பிரம்பூர் என்பது வள்ளல் பாரியின் பறம்பு என்பதன் திரிபு என்று சிலர் கருதுகின்றார்கள். (செட்டிநாடும் தமிழும், பக். 23)இப்போதுள்ள பிரான்மலைப் பகுதியைப் பறம்பு மலைப் பகுதியாகக் கொண்டால் அதற்கு அண்மையில் இருக்கும் இளையாற்றக்குடியும் பிரம்பூர் நாட்டின் கீழ்தான் வரவேண்டும். அதை விடுத்து மாற்றூர்,இலுப்பைக்குடி மட்டும் பிரம்பூர் நாட்டின் கீழ் வருவானேன் ? பாலையூர் நாட்டின் கீழ் வேலங்குடி என்ற பகுதி வருகிறது. பாலையூர் என்பது கண்டனூரையொட்டியிருந்ததாகப் பழைய ஊழியன் குமரன் வாயிலாக அறிய முடிகிறது. நாட்டுப் பகுதியைடுத்து, 9 கோயிற் பிரிவுகளின் பெயர்கள் வந்து ஆன என்ற சொல் வருகிறது. இந்த ஒன்பது கோயிற் பிரிவுகளில் வயிரவன் கோயிற் பெயரில் மட்டும் வயிரவன் கோயில் என்ற பெயர் குறிக்கப்படாமல் ஏழகப் பெருந்திரு என்ற பெயரே இசைபிடிமானத்தில் குறிக்கப்படுகிறது. ஏழகப் பெருந்திரு என்பது வயிரவன்பட்டியின் பழைய பெயராக இருந்திருக்க வேண்டும். இத்தொடர் ஒருபடையைக் குறிக்கும்.இது கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறது. (முதலாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தி மட்டியூரிலிருந்து வந்த ஏழகப் படையைத் தோற்கடித்து...)
புரம்
அடுத்து புரத்தில் என்ற பெயர் குறிக்கப்படுகிறது. குலசேகரபுரம், வீரபாண்டியபுரம், தேசிக நாராயணபுரம், ராஜ நாராயணபுரம் என்ற நான்கு புரங்கள் வருகின்றன. இலுப்பைக்குடிக்கு மட்டும் புகழிடங் கொடுத்த பட்டணம் என்ற தொடர் வருகிறது. புகழுக்கு இடங்கொடுத்த பட்டணம என்பது இதன் பொருளாகும். சிலர் புகலிடம் கொடுத்த பட்டணம் என்ற சொற்றொடர்தான் புகழிடங் கொடுத்த பட்டணம் என்று தவறாக எழுதப்பட்டதாகக் கருதுகிறார்கள். இலுப்பைக்குடியில் அரசர் இருவர்க்கு அடைக்கலம் கொடுத்த கதையும், அவன் அக்கோயிலுக்குக் கொடுத்த மானியமும் இதற்குச் சான்றாகும். குலசேகரபுரம் என்பது இளையாற்றக்குடிக்கும் நேமத்திற்கும் வருகின்றது. வீரபாண்டியபுரம் என்பது மாற்றூர்க்கும் ஏழகப் பெருந்திருவான வயிரவன் கோயிலுக்கும் வருகின்றது. தேசிகநாராயணபுரம் என்பது சூரைக்குடி, வேலங்குடி ஆகிய இரண்டிற்கும் வருகின்றது. ராஜ நாராயணபுரம் என்பது இரணியூர், பிள்ளையார்பட்டி ஆகியவற்றைக் குறிக்கும் மருதங்குடியைக் குறிப்பிட வருகிறது. இவற்றுள் குலசேகரன், வீரபாண்டியன் என்பன பிற்காலப் பாண்டியர்களின் பெயர்களாக இருக்கின்றன.
உடையார்
அடுத்து உடையார் என்ற சொல்லுடன் பல ஊர்ப் பெயர்கள் சேர்ந்து வருகின்றன. ஒக்கூர், பெருமருதூர்,கிங்கிணிக்கூர், பேரசெந்தூர், சிறுசேத்தூர், உறையூர், அரும்பாக்கூர், மணலூர், மண்ணூர், கண்ணூர், கருப்பூர்,குளத்தூர், சிறுகுளத்தூர், இரணியூர், திருவேட்பூர், கழனி நல்லூர் என்பன ஊர் என்ற சொல்லில் முடிகின்றன.இரணியூர், பிள்ளையார்பட்டி இரண்டிற்கும் பொதுவாகத் திருவேட்பூர் என்று வருகின்றது. கழனிவாசல்,மகேந்திரபுரம், இளநலம், சூடாமணிபுரம், புகழ்வேண்டிய பாக்கம், கழனி வாசக்குடி என்பன ஏனைய பெயர்கள்.இளையாற்றக்குடியில் அரும்பாற் கிளையாரான பட்டணசாமி பிரிவுக்கு மட்டும் உடையார் என்று சேர்க்கப்படவில்லை. மேலும் இந்த ஒரு தொடரைத் தவிர ஏனைய தொடர்களனைத்தும் ஊர்ப் பெயர்களாக வந்துள்ளன. எனவே அரும்பாற் கிளையாரான பட்டணசாமி என்ற பிரிவிற்கும் ஊர்ப்பெயர் தான் இருந்திருக்க வேண்டும் பட்டணசாமிக்கும், பட்டினத்தார்க்கும் தொடர்பு காட்டி, பட்டினத்தார் பெயருக்கு ஏற்பப் பின்னாளில் வந்ததாகவும் இருக்கலாம். இப்பொழுது இந்த ஊர்கள் எப்பகுதியில் உள்ளன என்பது ஆய்விற்குரிய ஒன்றாகும்.ஒன்பது நகரக் கோயில்களைச் சுற்றி இந்த ஊர் இருப்பதாகத் தெரியவில்லை. உடையார் என்பது ஜமீந்தார் என்பது போல அந்த ஊரை உடைமையாகப் பெற்றவர்கள் என்பதைக் குறிக்கும். இவ்வூர்கள் பூம்புகார் நகரத்தையொட்டி நகரத்தார்கள் உடைமையாகப் பெற்றுக் குடியிருந்த ஊர்களாகும். ஓர் ஊரினர் வேற்றூரில் உள்ளவர்களைத் திருமணம் செய்து கொள்வதென்ற நிலையில் அப்போது இருந்திருக்கலாம்.
ஒப்பந்தத்திற்கு உரியோர்
மணமகன், மணமகள் தந்தையர் பெயர்கள் வருகின்றன. அருணசலாஞ் செட்டி ராமநாதர் என்பது, அருணாசலம் செட்டியார் மகன் ராமநாதன் என்பதைக் குறிக்கும். இது தற்காலத்தில் உஷ்ல்ஹய்க்ங்க் ஐய்ண்ற்ண்ஹப் உடன் பெயர் எழுதுவது போன்றதாகும்.
பாணிக்கிரகணம்
இவர் மகன் சுப்பிரமணியனுக்கு, இவர் மகள் வள்ளியம்மையைப் பாணிக் கிரகணம் பண்ணிக் கொண்டமைக்கு என்று வருகிறது. இங்கு பாணிக்கிரகணம் என்பது கைதொட்டுக் கொடுக்கும் திருமணத்தைக் குறிக்கும்.நகரத்தார் திருமணங்களில் மணவறைமுடிவில் மணமக்களின் உள்ளங்கைகளை ஒன்றாகச் சேர்த்து மங்கலப் பொருட்களை வைத்துப் பட்டுத்துணியால் கட்டித் தீவலம் வரச் செய்வதைப் பார்க்கிறோம். கோவலன் கண்ணகி திருமணத்திலும் இவ்வாறு தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை ? (சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப் பாடல் வரி 53) என்று குறிப்பிடப்படுகின்றது. நகரத்தார் திருமணச் சடங்குகளில் கைபிடி சோறு என்பதும் ஒன்று.
மணமக்கட்கு நன்கொடை
அடுத்து இத்திருமணத்திற்கு மணமக்களின் தந்தையர் கொடுக்கும் பட்டியல் வருகின்றது. இவர் என்ற சொல் இந்த ஒப்பந்தம் முழுவதும் கையாளப் பெறுவதால் மணமகனின் தந்தை யார் ? மணமகளின் தந்தை யார் ? என்று அறிவது சிரமமாயிருக்கும். இருந்தாலும் ஓரளவு இக்கால வழக்குகளின் அடிப்படையில் ஊகிக்க வழியுண்டு.இவ்வகைப்படி செய்வோம் என்ற தொடர் மூன்றுமுறை வருகிறது. முதலிரண்டு முறைகளிலும் இரு வீட்டாரும் கொடுக்கும் முறைகள் வருகின்றன.
மாப்பிள்ளையின் தகப்பனார் கொடுப்பவை
1. பூவுணம் பூட்டும் பொன் ஒன்பது மாற்றுக் கல்லெடை பொன் 13 கழஞ்சு
2. நன்கொடை (கொடுக்கும்) பொன் 50
3. மோதிரம் விராகன் எடை 3
பெண்ணின் தகப்பனார் கொடுப்பவை
1. (அ) சீதனம் கொடுக்கும் பொன் இம்மாறு இவ்வெடை பொன் 6 கழஞ்சு
(ஆ) வெள்ளி 6 கழஞ்சு
2. வெள்ளாட்டிக்குப் தராப்பலம் 61
3. சீராட்டுச் சக்கரம் 61
4. உகந்துடைமை பொன் வளையி கழஞ்சு 7 தெரிசனை பொன்கழஞ்சு 13
பூவுணம் :
மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குப் பூஷண(நகை)த்துக்காகவும் நன்கொடையாகவும் மோதிரத்துக்காகவும் பொன் கொடுத்துள்ளார்கள். பூஷணம் என்பது இங்கு நகரத்தாரிடையே இன்றும் விளங்கும் திருமாங்கல்யமாகிய கழுத்தூரு என்ற மங்கல அணிகலனையே குறிக்கும். இன்றும் திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை வீட்டார் கழுத்தூருக்கும் பொன் கொடுக்கும் சிறப்புச் சடங்கு நிகழ்ச்சி நகரத்தாரிடையே நடைபெறுவதைக் காணலாம்.
நன்கொடை :
நன்கொடை கொடுக்கும் பொன் என்பது மாப்பிள்ளை விட்டார் மணமக்களுக்குக் கொடுக்கும் பொன்னாகும்.இது இன்றும் ஈடுபொன் என்று வழங்கப்படுகிறது. இன்று திருமண நிகழ்ச்சி முடிவில் மணமகன், மணமகள் வீட்டார் இருவரும் கணக்குப் பார்த்துக் கொள்ளும் போது மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவு ஈடு பொன்னுக்குத் தருகிறார்கள் என்று கேட்டு மணமக்கள் பணத்தில் சேர்ப்பது வழக்கமாக உள்ளது.
மோதிரம் :
மோதிரம் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குக் கொடுத்ததாக இசைபிடிமானம் கூறுகிறது. ஆனால் இன்று பெண் வீட்டார் தான் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் மோதிரம் போடுகின்றனர். பழங்காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் மோதிரம் போடும் பழக்கம் இருந்திருக்கலாம். அல்லது பெண்ணுக்குக் கொடுக்கும் வெள்ளிக்கால் மோதிரத்தை இது குறிக்க இடமுண்டு. வெள்ளி விராகன் எடையில் நிறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
சீதனம் :
ஸ்ரீதனம் என்பது சீதனமாகிறது. பெண்ணுக்குரிய தனமாகும். பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்குச் சீதனமாகப் பொன்னும் வெள்ளியும் வெண்கலம் தராவும் கொடுத்துள்ளனர். பொன், வெள்ளி, வெண்கலம், தரா என்ற நான்கும் உலோகப் பொருள்களாகும். வெண்கலம், தரா என்ற இரண்டும் கலப்பு உலோகங்களாகும்.வெண்கலம் என்பது செம்பும் வெள்ளீயமும் கலந்து உருக்கி உண்டாக்கப்படும் கலப்பு உலோகம். தரா என்பது எட்டுப் பாகம் செம்பும் ஐந்து பாகம் காரீயமும் கலந்த ஒரு கலப்பு உலோகம். இவற்றால் செய்யப்பட்ட பொருள்களைப் பெண்ணுக்குப் பெண் வீட்டார் வழங்கியுள்ளனர்.
வெள்ளாட்டி :
வெள்ளாட்டிக்குப் பணம் முப்பது பெண் வீட்டார் கொடுத்துள்ளதாகக் குறிப்புள்ளது. இங்கு வெள்ளாட்டி என்ற சொல் பணிப் பெண்ணைக் குறிக்கும். வைணவ உரை நூலாகிய ஈடு என்னும் நூலிலும் இப்பொருளில் வருவதாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது. பேச்சு வழக்கில் வெள்ளாட்டி என்பது வைப்பாட்டியைக் குறிக்கும் என்றும் தமிழ்ப் பேரகராதி பொருள் தருகின்றது. டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் வெள்ளாட்டி என்பது நகரத்தார்கள் மணந்து கொண்ட வேளாளர் மரபுப் பெண்டிரை உணர்த்தும் ஒரு சொல்லாக (வெள்ளாளன்-வெள்ளாட்டி) ஆச்சி என்பதற்கு ஈடாக வெள்ளாட்டி என்று வழங்கியதாகக் கருதுகிறார்கள். நகரத்தார் அறப்பட்டயங்கள் என்று அவர்கள் பதிப்பித்த நூலில் உள்ள பட்டயம் ஒன்றில் இவ்வழக்கு வருகின்றது. அக்காலத்தில் ஆச்சி என்ற சொல் வழக்கில் இல்லை. எனவே வெள்ளாட்டிஎன்பது இங்கு மணமகனின் தாயாரை உணர்த்தும் ஒரு சொல்லாக அவர்கள் கருதுகிறார்கள்.
சீராட்டு :
சீராட்டு என்பது செல்லம் பாராட்டுகையைக் குறிக்கும். இன்றும் சீர் வைத்தல் ஒரு சடங்காக இருக்கின்றது.சீராட்டுக் கொண்டு போதல் என்ற சடங்கும் உண்டு.
உகந் துடைமை :
உகந்துடைமையாய் விரும்பிக் கொடுக்கும் பொருளாகப் பொன் வளையல் குறிக்கப் பெறுகின்றது.
தெரிசனை :
இந்த நாள் இவரிடும் பொன் இவர் சொற்படி தெரிசனை பதிமுக்கழஞ்சு இவ்வகைப்படி செய்வோம்' என்று வருகிறது. தெரிசனை இடும் - தெரிசனை என்பது புனிதமான காட்சியைக் குறிக்கும். முன் சொன்ன அனைத்தும் பொருள்களாக-சாமான்களாக அமைய மணமகள் வீட்டார் மணமகன் வீட்டார் சொற்படி தங்கமாகவே நேரில் கொணர்ந்து கொடுத்ததாகத் தெரிசனை அமைந்திருக்கலாம்.
அளவுகள்
இசை பிடிமானத்தில் பொன், வெள்ளி இரண்டும் கழஞ்சு என்ற அளவாலும் வெண்கலம், தரா என்ற இரண்டும் பலம் என்ற அளவாலும் குறிக்கப் பெறுகின்றன. பணம், சக்கரம், வராகன் எடை என்ற அளவுகளும் குறிக்கப் பெறுகின்றன. பொன் நகையைப் பற்றி வருமிடத்தில் மாற்று கல்லெடையுடன் குறிக்கப் பெறுகின்றது. ஆனால் மோதிரம், விராகன் எடை என்ற அளவுடன் வருகின்றது.
கழஞ்சு
இக்காலத்தில் 1/6 அவுன்ஸ் ட்ராய் மதிப்புள்ள ஒரு எடுத்தல் அளவை என்று தமிழ்ப் பேரகராதி குறிக்கிறது.ஒன்றே கால் வீசம் வராகன் எடை இந்த எடையுள்ள பொற்காசு பல்லவர் காலத்தில் செலாவணியாக இருந்தது என்றும் இராஜ ராஜ சோழன் காலத்தில் வழங்கிய 68 தானியமணி (Grains) மதிப்புள்ள எடை ஒன்றும் எடுத்தலளவையால் மதிப்புப் கெறும், ஒரு வகை நாணயம் என்றும் செட்டி நாடும் தமிழும் (பக் 304) என்ற நூல் வாயிலாக அறிகிறோம்.
மாறுகல்லெடை
ஒன்பது மாற்றுள்ள ஆறு கல்லெடை கொண்ட பொன் நாணயம் என்பது புழக்கத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டர்டு எடையாக இருக்கலாம். மாற்று-மாறு பொன் வெள்ளியின் தரத்தை உரைத்துப் பார்த்துணர்வதாகும். இப்போது ஆசாரிகள் மச்சம் என்று சொல்கிறார்கள்.
பலம்
பலம் என்பதும் ஒரு நிறுத்தலளவை வெண்கலம், தரா என்ற உலோகங்களை நிறுக்க உதவுவது, 8 பலம் ஒரு சேர் என்று நிறுத்தலளவை வாய்பாடு. இதன் இன்றைய சரியான மதிப்பு இன்று தெரியவில்லை.
பணம்
இது ஒரு வகை நாணய அளவு. எட்டுப் பணம் கொண்டது ஒரு ரூபாய் ஆகும். 1/8 ரூபாய் ஒரு பணம். இவ்வாறு செட்டிநாட்டுப் பேச்சில் வழங்கக் கேட்டிருக்கிறேன். இன்றும் மொய்ப்பணம் எழுதும் போது பணம் எவ்வளவு எழுதுவது என்று கேட்கிறார்கள். ஆயாள் வீட்டார், (மாமா) மாமப்பணம் 1/8 முறையில் கணக்கிடுவதை இன்றும் காணலாம்.
பொன்
பொன் என்பது நன்கொடை கொடுக்கும் பொன் ஐம்பது என்று வருகிறது. பொன் என்பது 10 பணம் என்று செட்டி நாடும் தமிழும் குறிக்கிறது. (பக் 304)
சக்கரம்
சீராட்டு சக்கரம் என்ற அளவால் குறிக்கப் பெறுகிறது. சக்கரம் என்பது தென்னிந்தியாவில் பழங்காலத்தில் வழங்கிய பழைய வெள்ளி நாணயம் என்றும் 1/6 தங்கப் பகோடா மதிப்புடையது என்றும் அரையாணா மதிப்புள்ளதாக (3 நயாபைசா) மலையாளத்தில் திருவாங்கூரில் வழங்கிய நாணயம் என்றும் பேரகராதி வாயிலாக அறிகிறோம்.
வராகன் எடை
மோதிரம் வராகன் எடை என்று அளவால் குறிக்கப் பெறுகின்றது. 5/16 ரூபாய் 54 மணி மதிப்புள்ளதென்று நிறுக்கும் நிறை வகை. செட்டி நாட்டு ஆசாரிகள் தங்கத்தை வராகன் எடையில் நிறுத்துச் சொல்வதை இன்றும் காணலாம். 2-3/16 வராகன் எடை என்பது இன்று 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் ஆகும்.
3 3-16 வராகன் எடை என்பது 11 கிராம் கொண்ட வெள்ளி வெள்ளியாகும். சோழர் காலத்தில் செட்டியார்கள் சளுக்கிய ஆட்சிக்குட்பட்ட நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்ததன் பயனாக வராகன் என்னும் நாணயம் தமிழ் நாட்டுக்கு வந்தது என்றும் அதன் மதிப்பு ஒரு வராகன் ரூ. 3-50 என்றும் சோம லெ கூறுவர். (செட்டிநாடும் தமிழும் பக். 58).
கையொப்பம் :
இசைபிடிமானம் எழுதினவர் கோயிற் பிரிவு எழுதிக் கையொப்பமிட வேண்டும். பிறகு மணமகனின் தந்தையாரும் மணமகளின் தந்தையாரும் கையொப்பமிட வேண்டும். தந்தையார் இல்லாவிடில் அடுத்த தந்தை வழி (நெருங்கிய உரிமையாளர்) உறவினர் கையொப்பமிடலாம். கையொப்பமிடுபவர் யாராவினும் மேற்கண்ட இசைபிடிமான வாசகம் மாற்றப் பெறாது. மணமகள் வீட்டில் தான் இரண்டு பிரதிகளும் வைக்கப் பெறும்.மறுமணம் செய்து கொள்ளும் உரிமை ஆணுக்குண்டு. பெண்ணுக்கு இல்லை. திருமணத்தை உறுதி செய்யும் பிடிமானம் பெண்ணுக்குத் தான் இன்றியமையாத தேவை எனக் கருதிப் பெண் வீட்டாரிடம் வைத்தனர் போலும்.இசைபிடிமானம் எழுதியவர்க்கு மணமக்கள் வீட்டார் பழம், பெட்டி, சட்டி, பாக்கு அன்பளிப்பாக வழங்குவர்.
பின் இணைப்பு
எண் வளநாடு நாடு ஊர் புரம் உடையார்
1. கல்வாசல் இளையாற்றக்குடி குலசேகரபுரம் ஒக்கூர்
2. கல்வாசல் இளையாற்றக்குடி குலசேகரபுரம் அரும்பாற்கிளையாரான
பட்டணசாமி
3. கல்வாசல் இளையாற்றக்குடி குலசேகரபுரம் பெருமருதூர்
4. கல்வாசல் இளையாற்றக்குடி குலசேகரபுரம் கழனிவாசக்குடி
5. கல்வாசல் இளையாற்றக்குடி குலசேகரபுரம் கிங்கிணிக்கூர்
6. கல்வாசல் இளையாற்றக்குடி குலசேகரபுரம் பேரசெந்தூர்
7. கல்வாசல் இளையாற்றக்குடி குலசேகரபுரம் சிறுசேத்தூர்
8. கேரளசிங்க பிரம்பூர் மாற்றூர் வீரபாண்டிய உறையூர்
9. கேரளசிங்க பிரம்பூர் மாற்றூர் வீரபாண்டிய அரும்பாக்கூர்
10. கேரளசிங்க பிரம்பூர் மாற்றூர் வீரபாண்டிய மணலூர்
11. கேரளசிங்க பிரம்பூர் மாற்றூர் வீரபாண்டிய மண்ணூர்
12. கேரளசிங்க பிரம்பூர் மாற்றூர் வீரபாண்டிய கண்ணூர்
13. கேரளசிங்க பிரம்பூர் மாற்றூர் வீரபாண்டிய கருப்பூர்
14. கேரளசிங்க பிரம்பூர் மாற்றூர் வீரபாண்டிய குளத்தூர்
15. கேரளசிங்க - ஏழகப்பெருந்திரு வீரபாண்டிய சிறுகுளத்தூர்
16. கேரளசிங்க - ஏழகப்பெருந்திரு வீரபாண்டிய கழனிவாசல்
17. கேரளசிங்க - ஏழகப்பெருந்திரு வீரபாண்டிய மருதேந்திரபுரம்
18. - கல்வாசல் இளையாற்றக்குடி குலசேகர திருவேட்பூர்
இரணியூர்மருதங்குடி ராஜநாராயண
19. - கல்வாசல் இளையாற்றக்குடி குலசேகர
இரணியூர்மருதங்குடி ராஜநாராயண திருவேட்பூர்
(பிள்ளையார்பட்டி)
20. கேரளசிங்க நேமம் குலசேகரபுரம் இளநலம்
21. கேரளசிங்க பிரம்பூர் இலுப்பைக்குடி புகழிடங்கொடுத்த சூடாமணிபுரம்
பட்டணம்
22. கேரளசிங்க சூரைக்குடி தேசிகநாராயண புகழ்வேண்டிய பாக்கம்
23. கேரளசிங்க பாலையூர் வேலங்குடி தேசிகநாராயண கழனிநல்லூர்.
சித்தாந்த வித்தகர் முரு.பழ. இரத்தினம் செட்டியார் மணிவிழா மலர்
சோமலெ, செட்டிநாடும் தமிழும், சென்னை, வானதி பதிப்பகம்,
பக்547-560
--


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
v a n a k k a m S u b b u