இறைவன்: கடைமுடி நாதர் |
|
இறைவி: அபிராமி அம்மை |
|
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் |
|
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், பிரமன், கண்வ மகரிஷி ஆகியோர். |
கோவிலின் சிறப்புகள்:
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 18 ஆவது ஆலயம். சோழ நாட்டுக் காவிரி வடகரைத் தலமாய்க் காவிரியின் கடைமுடியாதலின் இப்பெயர் பெற்றது. பிரம்மன் பூசித்துப் பேறு பெற்ற தலம். பிரம்மன் ஆணவம் கொண்டு சிவனிடம் சாபம் பெற்ற சமயம், அவருக்குத் தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கும் என்று கிளுவை மரத்தின் கீழ் கிளுவை நாதர் என்ற ஆதி சிவன் காட்சி அளித்தார்.
இத்தலத்தில் காவிரி
மேற்கு நோக்கி ஓடுவது சிறப்பு. சுயம்பு மூர்த்தியாகச் சிவபெருமான் பதினாறு
பட்டைகளுடன் சோடஷலிங்கமாக உள்ளார் கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி பெருமான் இடது
காதில் வளையம் அணிந்தும் வலது காதில் அணியாமலும் உள்ளார்.
பொதுத் தகவல்:
பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவை நாதர் இருக்கிறார். இவரே இக் கோவிலின் ஆதிமூர்த்தி ஆவார். இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச் சன்னதியில் இருக்கிறார். இத்தல விநாயகர் கடைமுடி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார்.
பிரார்த்தனை
திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வேண்டிக் கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி பெறலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலப் பெருமை:
வளையம் அணிந்த தட்சிணாமூர்த்தி : மேற்கு பார்த்து அமைந்த சிவாலயம் இது. காவிரி நதி இத்தலத்தில் மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம். உலகம் அழியும் இறுதிக் காலத்திலும் காப்பாற்றுபவராக இங்கு சிவபெருமான் அருளுகிறார். எனவே இவருக்கு “கடைமுடிநாதர்’ என்று பெயர் வந்ததாகச் சொல்கின்றனர். இவர் பதினாறு பட்டைகளுடன் அமைந்து “சோடஷ லிங்க’ அமைப்பில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் பதினாறு பேறுகளையும் பெறலாம் என்பர். பிரகாரத்தில் உள்ள நவக்கிரகம் வலதுபுறம் திரும்பிய ஆவுடையார் மீது அமைந்திருக்கின்றன. எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் கிரகங்கள் ஒவ்வொன்றும் நேர் வரிசையில் இல்லாமல், முன்னும் பின்னுமாகவும் அமைந்திருப்பது சிறப்பான அமைப்பு.
இங்கு கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும், வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இங்கு அம்பாள் வரப்பிரசாதியாக இருக்கிறாள். தெற்கு நோக்கியிருக்கும் இவளது சன்னதி எதிரேயும் ஒரு வாசல் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்குத் தாலி கட்டி வேண்டிக் கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியைத் தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு, மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலிகளாக இருப்பர் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா, பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத் தலத்திலும் சிவனை மனதில் நினைத்து வழிபட்டார். சிவன், அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். பிரம்மா தனக்கு மன்னிப்பு கேட்ட போது, தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப் பெறும் என்று ஆறுதல் கூறினார். பின் பிரம்மாவின் வேண்டுதல்படி அவர் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
பிற்காலத்தில் கண்ணுவ மகரிஷியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்தி பெற்றார்.
பிரம்மா இத்தலத்தின்
சிறப்பை உணர்ந்து இங்கு இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி
வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப்
பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழிபட்டுள்ளார். இந்தப் பிரம்ம தீர்த்தம்
ஆலயத்தின் நேர் எதிரில் அழகுற விசாலமாக அமைந்துள்ளது. மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை
மரத்தடியில் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவை நாதர் இருக்கிறார். இவரே
இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார்.
கண்வ மகரிஷியும் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணியப் பலன்களைப் பெருக்கிக் கொண்டார் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வ மகான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு விளங்குகிறது. இத்தல இறைவன் கடைமுடிநாதர் என்றும், வடமொழியில் அந்தி சம்ரட்சண சுவர் என்றும் அழைக்கப்படுகிறார். கடைமுடிநாதர் என்ற பெயரில் நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும், அந்தி சம்ரட்சணேசுவரர் என்ற பெயரில் நமது அந்திமக் காலத்தில் அதாவது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்று நமக்குத் தெளிவாக புலப்படுத்துகிறார்.
இவ்வாலயம் ஒரு முகப்பு வாயில் உடன் காட்சி தருகிறது.இராஜகோபுரமில்லை. இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. மேற்கு பார்த்த சிவத்தலங்கள் தமிழகத்தில் சில இடங்களிலேயே உள்ளன. அதில் இதுவும் ஒன்று. லிங்க மூர்த்தம் 16 பட்டைகளுடன் ஷோடசலிங்கமாக அமைந்துள்ளது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் உள்ள நவக்கிரக மண்டபம் எண்கோண வடிவ ஆவுடையார் மீது அமைக்கப்பெற்றுள்ளது. சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியும், பைரவரும் இடது காதில் வளையம் அணிந்துள்ளனர். கடைமுடி விநாயகர் மற்றும் சுப்பிரமணியருக்கும் சன்னதிகள் உள்ளன. அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள்.
அபிராமி அன்னையை அருகிலுள்ள கண்வமகான் துறையில் நீராடி வெள்ளிக்ககிழமை தரிசனம் செய்து சௌபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர்.
இத்தலத்தில் காவிரி வடக்கு முகமாக வந்து பின் மேற்காக ஓடுவதும் ஒரு சிறப்பம்சமாகும்.
வள்ளல் பெருமான் தாம்பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மாவின் இடைமுடியின் தீங்கனி என்று எல்லின் முசுத் தாவும் கடைமுடியின் மேவும் கருத்தா" என்று போற்றி உள்ளார்.
தேவாரம்:
பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழ
லடிகளிடம்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர்
கடைமுடியே
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. அருத்தனை அறவனை (1.111);
பாடல்கள் : அப்பர் - இடைமரு தீங்கோ (6.70.3);
சுந்தரர் - நாளும் நன்னிலம் (7.12.8);
சேக்கிழார் - வைகும் அந்நாளில் (12.28.129) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில்
இக் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும்
ஏராளமான பேருந்துகள் உள்ளன.
மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக்
கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது.
கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. நடந்தால் கோவிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
மயிலாடுதுறை - பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான திருசெம்பொனார் கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்குச் செல்லலாம்.
தங்கும் வசதி:
மயிலாடுதுறை, சீர்காழியில் தங்கி அங்கிருந்தும் செல்லலாம்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோவிலின் முகவரி:
அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், திருக்கடைமுடி (கீழையூர்), மயிலாடுதுறை மாவட்டம் 609304.
தொலைபேசி:
அமிர்தகடேச குருக்கள்: 9442779580, 04364 283261
https://www.youtube.com/watch?v=LiJm308HSpk&t=14s
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu