................தமிழ்நாட்டில் தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இதனோடு தொடர்புடையதாகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போன்ற மிதவாத இயக்கங்களின் பலவீனமும் இயலாமையும் 1990-களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற வஹ்ஹாபிய இயக்கங்களின் வருகைக்குக் காரணமாக அமைந்தது. இதன் தலைவர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் அதிலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் என்ற மற்றொரு தீவிர இயக்கத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டத்துக்கான இயக்கங்களாகத் தங்களை முன்னிறுத்தினாலும், ஏற்கெனவே தமிழ் அடையாளங்களிலிருந்தும், சமூக நீரோட்டத்திலிருந்தும் விலகியிருந்த சமூகத்தை இவை மேலும் விலகச் செய்தன. இவற்றின் 20 ஆண்டு கால வரலாற்றைக் கூர்ந்து அவதானித்தால், மேற்கண்ட உண்மை புரியும். மைய நீரோட்டம் என்றால் கிலோ என்ன விலை? தமிழர்கள் என்பவர்கள் இந்துக்களே என்ற நிலைப்பாடே இவர்களிடம் இப்போதும் இருக்கிறது. ஆனால், கேரளத்தில் நிலைமை இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் கேரளத்தில் எல்லோரும் மலையாளிகள் என்று சொல்வதில் பெருமை கொள்கின்றனர். அங்கு மைய நீரோட்டம் என்ற கேள்வியே எழவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பல கலை ஊடகங்களை நிராகரிப்பது, பொதுவாசிப்பு, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்க மறுப்பது, குறிப்பாக காலங்காலமாகத் திரைப்படத்தை நிராகரித்து அவற்றைவிட்டு ஒதுங்கியிருந்தது போன்றவை தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்துகொள்ளக் காரணமாயின.
...............பதின்பருவ இளைஞர்கள்கூட முட்டு வரை தாடி வளர்ப்பது இதன் பிறகே ஏற்பட்டது. வஹ்ஹாபிய இயக்கங்களின் எழுச்சியும் அதன் கருத்தாக்கமும் மேற்கண்ட இளைஞர்களிடத்தில் புனிதப் போர் குறித்த அரசியல் பார்வையை மேலும் கூர்மையாக்கின. இதில் பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களே அதிகம். எல்லா இயக்கங்களுமே பதின்பருவ இளைஞர்களைக் குறிவைக்கக் காரணம், அந்த மூளைகள்தான் உணர்ச்சிபூர்வமான அரசியல் கருத்தாக்கங்களை மிக எளிதில் உள்வாங்கும்.
கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட பல இளைஞர்கள் ‘‘தமிழ்நாட்டில் தீவிர இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர்தான் எங்களைத் தூண்டினார்” என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தனர். இந்தியாவின்/தமிழ்நாட்டின் சமூக நீரோட்டத்தைக் குலைக்கும், சமூகங்களிடையே பதற்றங்களை உருவாக்கும் இம்மாதிரியான செயல்பாடுகளுக்குக் கண்டிப்பாக மதம் காரணமாக இருக்க முடியாது. ஹிட்லர் தன் செயல்பாடுகளுக்கு பைபிள் வசனங்களைத்தான் மேற்கோள் காட்டினார். அப்படியிருக்க, அவரின் செயல்பாடுகளுக்கு கிறிஸ்துவம் எப்படிப் பொறுப்பாக முடியாதோ அதுமாதிரிதான் அரசியல் இஸ்லாம் பேசும் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும் இஸ்லாம் பொறுப்பேற்க முடியாது. இந்நிலையில், சிலரின் பயங்கரவாதச் செயல்பாடுகள் காரணமாக இந்திய ஊடகங்கள் அவர்களை இஸ்லாத்தோடு சேர்த்து அடையாளப்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தையே காயப்படுத்துவதாகும். தாடிகுறித்த அறிவீனமான பார்வை சமூகத்துக்குள் நிலவுகிறபோதும் ஊடகங்கள் அதனைப் பயங்கரவாதக் குறியீடாகக் காட்டுவது மிக அபத்தமான ஒன்று.
தமிழ் இஸ்லாமிய சமூகம் தங்களைப் பிரதேச அடையாளங்களோடு வலுவாக இணைப்பதுடன், தங்களின் மறுமலர்ச்சிக்காக மைய நீரோட்டத்தில் இணைவதும் முக்கியம். இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் மட்டுமே அதன் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
மேலும் கட்டூரையை வாசிக்க-----------------