You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to jmba...@googlegroups.com
அப்பாபாய் (அல்ஹாஜ்.பதுவுத்தீன் ஸாஹிப், வழுத்தூர் முஸ்லிம் லீக் கிளையின் மூத்த தலைவர்) மறைந்த செய்தி இன்று நண்பகல் இரண்டு மணிவாகில் தான் தெரிய நேர்ந்தது, அவரின் தூயஆன்மா எல்லாவகையிலும் சிறப்படைவதாக..! நிறை சாந்தியில் ஆழ்வதாக..! நித்தியமெய்துமாக! இறைவனும்.. இறைத்தூதர் மிக்க மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் மேன்மக்களும் சோபனம் செய்வார்களாக. ஆமீன். வருத்தம் மேலிட எண்ணங்கள் அவ்வினியவரின் நினைவுகளோடு நனைந்தது. அவரோடு பழகிய கணங்கள் எனக்கு பனிச்சுனை நீர் போன்ற சுகம் தோய்ந்த நாட்களாய் இருந்திருக்கிறது. இப்போதும் கூட அவரது சிரித்த முகம் தான் என் நினைவினில்.
அப்பாபாய் நட்பிற்கு ஓர் இலக்கணம், அவரது சகத்தோழர்கள் மர்ஹூம் நெருப்பு சாஹிப் அப்துல் வஹாப் பாப்பும், மர்ஹூம் சேக்பரீத் அப்துல் ஹமீது அத்தா அவர்களும் இன்னும் பலரும் இவர்களின் நெருக்கங்கள் வார்த்தைகளினால் வடிக்க முடியாது..அவைகளெல்லாம் உண்மையான நட்பு. மற்றவார்த்தைகள் இல்லை.எங்கே முஸ்லிம் லீக்கின் விழாக்கள் நடந்தாலும் வஹாப் பாப்பை பின்னால் வைத்துக்கொண்டு அப்பாபாயின் டி.வி.எஸ் பரக்கும், பின்னால் சிறுபிள்ளையை போல் வஹாபாப் ஒருபக்கமாக அமர்ந்து கையை கேரியரில் மிக கவனமாக பிடித்துக்கொண்டு பயணிப்பார், இதை அடிக்கடி சாலைகளிலும், தெருக்களிலும் பார்க்கலாம். இருவரும் இணைபிரியா நண்பர்கள், முஸ்லிம் லீக்கின் மதிப்பு மிகுந்த அன்பர்கள். வழுத்தூரின் முஸ்லிம் லீக்கின் பிரைமரியில் இவர்களின் பங்கு மகத்தானது.
வழுத்தூரில் அந்நாட்களில் அப்பாபாயின் நட்பு வட்டாரங்கள் எல்லாம் முஸ்லிம் லீக்கர்களாகவே இருந்து அலங்கரித்தனர். இச்சினேகிதர்கள் எல்லாம் அன்றைய காலங்களில் அதிகாலை நேரஙகளிலேயே அப்பாஸ்பாய் சைக்கிள் கடையருகில் ஒன்று கூடி முகமன் கூறி மகிழ்வார்கள், மணிச்சுடர் படித்து சமூக விடயங்கள் குறித்து பகிர்ந்து கொள்வாரக்ள். அவர்களெல்லாம் பச்சை ரத்தம் ஓடும் லீகர்கள். உண்மையான தேசபக்தர்கள், எல்லா சமூகத்தையும் அரவணைத்து போகும் பாங்கு உள்ளவர்கள். அன்பின் உருவங்களாக உலா வந்தவர்கள். அவர்களால் முஸ்லீம் லீக் நிறைவடைந்தது, முஸ்லிம் லீக்கில் இருந்ததனால் இவர்கள் வாழ்வின் பயனை அடைந்ததாக மனதில் பூரணம் எய்தினர். ஏனெனில் முஸ்லிம் லீக்கின் அங்கமாக தங்களை ஆக்கிக்கொள்வதில் இவர்கள் தங்களையே அற்பணம் செய்திருந்தனர் அது காலத்தின் கட்டாயம் என்றும் அது நாட்டின் நலனுக்கும், சமூகத்தின் நலனுக்கும் அடிகோலும் என்றும் வலுவாக நம்பி இருந்தனர். அதனால் வழுத்தூரை சிராஜுல் மில்லத்க்கும், சம்ஸீரே மில்லத்திற்கும் சொந்த வீடுபோல ஆக்கிவைத்திருந்தனர். (அப்பாபாயை இராண்டுக்கு முன் நமது முனீருல் மில்லத் அவர்கள் வீடு வந்து பார்த்து நலம் விசாரித்தார்கள் என்பதும் குறிப்பிட தக்கது)
ஊரில் நடக்கும் மீலாது விழாக்கள், மேலத்தெரு பயான் நிகழ்வு என பலவற்றில் அப்பாபாய் தலைமை ஏற்றிருக்கிறார், சொற்பொழிவாற்றி-யிருக்கிறார். இவர் தெள்ளிய ஞானம் மிக்கவர் ஆன்மிக சிந்தனையில் தான் விரும்பி தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தெளிந்த சிந்தனை மிக்கவராக இருந்தவர், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை, சஹாபாபெருமக்களை, வலிமார்கலெனப்படும் மேன்மக்களை நேசிப்பதில் சிறப்பானவராக திகழ்ந்தார். எளியவருக்கு மிக இரங்கும் சுபாவம் கொண்டவர்.
உழைப்பிற்கு அவர் என்றுமே அஞ்சாதவர், வயதில் பெரியவராக இருந்தாலும் ஒரு சிறு பிள்ளை போல களத்தில் இறங்கி செயலாற்றுவார், அவர் இடைபட்ட் காலத்தில் தர்காவின் பின்புரம் பள்ளிக்கூட எதிரில் அவர் வைத்திருந்த மிட்டாய் கடையில் அவரோடு பீராளம் கமால் அண்ணனை உதவிக்கு வைத்துக்கொண்டு இரண்டு பேருமாய் காலை, மாலை என மாணவர்கள் கூடும் கூட்டமான வேளைகளில் வியாபரம் செய்வதே அழகு. அப்பாபாய் ஒரு இளைஞனின் சுறுசுறுப்பை ஒத்து பம்பரமாய் சுழன்று அவர் வியாபரம் செய்தது எல்லாம் மனத்திரயில்.
அவரைப்போல மனநிலை கொள்வது என்பதெல்லாம் எளிதல்ல.. எப்போதும் சிரித்தமுகத்தோடு இருப்பார், முகத்தில் வன்மமே இருக்காது, எத்தனை.. எத்தனையோ சோகங்கள்.. இடர்பாடுகள் என அவர் எதிர்நோக்காதவைகள் இல்லை, அத்தனையையும் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு வெள்ளந்தியான சிரிப்போடு தான் மக்கள் முன்னே நிதம் நடமாடுவார். அப்பாபாய்க்கு, எனக்கு தெரிந்து பொறியாளர் வெள்ளம்ஜி.முஹம்மது இக்பால் அவர்களின் சமூகப்பணி மிகப்பிடிக்கும், எஃப்.கரீமின் அரட்டை பிடிக்கும், நாட்டகார சாப்ஜியின் மார்க்க உணர்வு பிடிக்கும். அப்பாபாய் நகைச்சுவை உணர்வு மிக்கவர், குழந்தைமனதுக்காரர் ஆதலால் எனக்கு மட்டுமல்ல.. என் போன்ற இளையவர்கள் பலருக்கும் பேதமில்லாமல் அப்பாபாயை மிகப்பிடிக்கும் ஏனெனில் அவர் அத்தனை பேருக்கும் அரும் நண்பர்.
என்னோடு அப்பாபாய் மிகப்பாசம் கொண்டிருந்தார் என்றால் மிகையில்லை, அதை நானும் அவரும் அளவலாவிக்கொள்ளும் போது மட்டுமே நான் பலமுறை கண்டு நெகிழ்ந்திருக்கிறேன், என்னை பார்த்தாலே அணையை விட்டு தாவும் நீர்போல் ஆரத்தழுவி என்னை அணைத்து பூரிப்பார். எனக்கும் அப்பாபாய்க்கும் இப்படி ஒரு அன்பு ஏற்பட ஆன்மீக சம்பந்தங்கள் உண்டு, என்னிடம் அவர் இளம்பிராயத்தில் பினாங்கில் வேலை பார்த்த தருணங்களை நினைவு கூர்ந்திருக்கிறார். அன்றைய நாட்களில் நமது வழுத்தூரைச் சார்ந்த ஆன்மீக செம்மல் குலாம் ரசூல் பாவா அவரக்ள் விஜயம் செய்ததை சொல்லி இருக்கிறார். இளம்பிராயத்திலிருந்து மானசீகமாக தான் நேசிக்கும் குலாம் ரசூல் பாவா-வின் புகைப்படத்தை தனது சட்டைப்பைக்குள் என்றும் வைத்திருப்பார். அதை என்னிடம் காட்டி புலங்காகிதம் அடைவார்.
ஆன்மீகத் தேடல் கொண்டு அலைந்திருந்த அன்றைய காலங்களில் எங்களோடு அப்பாபாய் மிக நட்போடு கலந்திருக்கிறார். எங்களோடு ஆன்மீக அமைப்பில் மிக்க ஆவல் பூண்டு திக்ரு மஜ்லிஸை பத்திற்கும் குறையாத ஆண்டுகள் கண்ணியப்படுத்தி இருக்கிறார், மிக முடியாமல் போனால் கூட எப்படியும் கலந்துகொள்ள எத்தனிப்புடன் வந்துவிடுவார். தரிக்காவின் விர்துகள், பிரார்த்தனைகள் அடங்கிய கிதாபை தன் ஹஜ்ஜுடைய காலத்தில் தன்னுடனே வைத்து ஓதிவந்ததை என்னிடம் சொல்லி இருக்கிறார்.
என் கவிதைகளை ரசிப்பார் நான் எழுதிய சில ஆன்மீகப் பாடல்களில் ஏன் இந்த சொல்லை இப்படி போட்டால் என்ன? என்றெல்லாம் பறிமாறிக்கொள்வார். இரண்டு வருடங்களுக்கு முன் அப்பாபாய் அவர்கள் ஆற்றஙகரை செல்லும் வழியில் உள்ள வீட்டில் இருக்கையில் தான் சற்று நேரம் நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்க நேர்ந்தது, கடைசியாக ஒராண்டுக்கு முன் என் மகனை செள.இ. பள்ளியிலிருந்து அழைத்து செல்ல நேர்கையில் சற்றும் எதிர்பாராத வண்ணமாய் மக்கிபாய் வீட்டிலிருந்து கதவை திறந்து வர எதிரெதிரே சந்தித்துக் கொண்டோம். இரண்டு பேரும் ஆவல் மேலிட சந்தித்துக்கொண்டோம். உண்மையில் சில நாட்களாகவே அப்பாபாயை என் நெஞ்சம் தேடியது. என் ஆன்மாவின் சினேகிதரை அது தேடித்தான் என் அலைபாய்ந்திருக்கிறது.. அது எனக்குள் ஒரு மறைவான தாகமாய் இருந்தது.. ஆனால் ஸ்தூலத்துடனான இனியொரு சந்திப்பிற்கு இடங்கொடாமல் அவ்வான்மா உடற்தடைகளை தாண்டி தன் மூலத்தோடு ஐக்கியமாகிவிட்டது. இனி பிரியமுள்ள அப்பாபாய் தூரம்.. காலம்..இன்னபிற தடையின்றி என்னோடு சூக்குமமாக ஆன்மளவில் உறவாடுவார்.