நமது "மணிச்சுடருக்கு" ஒரு முகநூல் பக்கம் அமைக்க வேண்டும், அது தனிப்பட்ட ஒருவர் என இல்லாமல் பதிப்பகத்தின் அங்கமாக இருக்கும் நிர்வாகிகளில் யாரேனும் ஒருவர் இருத்தல் சிறப்பு, அவ்வப்போதான சூழ்நிலைகளை செய்திகளாக, அல்லது இமேஜ்-ஆக பதிவேற்றி மக்கள் மன்றத்தில் கொண்டு சென்று சமூக நிலையையும், நமது நலைப்பாடையும் சொல்லிக்கொண்டே இருப்பது அவசியம். அப்போது தான் பலதரப்பட்ட சமூகத்தில் நல்ல புரிதலை உருவாக்க முடியும், தலைவர்கள் என்ற பெயரில் பலரிருக்கும் சமூகத்தில் தலைவருக்கான தனித்தன்மையுடன் இருக்கும் பேராசிரியர் பற்றிய உண்மை விளங்கும், இளைய சமூகத்திற்கு "லீக்" பற்றிய அணுக்கம் ஏற்படும். இது காலத்தின் கட்ட்டாயம்.
நாம் மணிச்சுடர் படிக்க ஒரு முஸ்லிம் லீக்-ன் அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலம் வழி வகுத்திருக்கிறோம் ஆனால் இன்றைய மக்களின் சோம்பேறித்தனத்தின் படிநிலை வளர்ச்சியில் யாரும் முஸ்லிம் லீக் இணையதளத்திற்கு போய் அதற்கு பிறகு மணிச்சுடர் பகுதிக்கு போய் அதற்கு பிறகு அன்றைய நாளின் பிரதியை படிப்பதெல்லாம் மிக சிரமம். இன்னும் சொல்லப்போனால் வலைதளமே இன்று வழக்கொழிந்த நிலையில் தான் ஆகிவிட்டது, அதை நாம் அதிகாரப்பூர்வ மற்றும் ஆவணப்படுத்தும் தளமாக வைத்துக்கொள்ளலாமே ஒழிய மக்களை சென்றடையும் வழியாக இன்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஆகையால் விஞ்ஞானம் அழைக்கும் தொலைவிற்கு நாமும் செல்வது அதி முக்கியம், ஏனென்றால் கொள்கை இல்லாதவர்களும், சகோதரத்துவ, சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிரானவர்களும் தொழிற்நுட்பத்தை மிக பாதகமாக பயன் படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதே என் வேதனை.
நேற்று கூட அண்ணன் அபூஹாசிமா மணிச்சுடர் பற்றிய ஒரு பதிவை இட ஒரு நண்பர் நான் என்றோ பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரிடத்தில் பத்திரிக்கை பார்த்திருக்கிறேன், இன்றும் வருகிறதா என பின்னூட்டம் இடுகிறார். இத்தகைய நிலைமையை களைய நம் ஒவ்வொருவர் மீதும் கடமை இருக்கிறது. இன்று மணிச்சுடர் பல தியாகிகளின் பின்புலத்தில் உத்வேகம் கொண்டு வருகிறது என்பது திண்ணமான உண்மை ஆயினும் அதனை சமூகத்தின் கடைக்கோடியிலும் கொண்டு சேர்ப்பது அதன் இலக்கை நிறைவு படுத்தும்.
பிறைமேடைக்கும் இவ்வாறு அமைத்தல் இன்னும் நலம் பயக்கும். இதை என் போன்ற தாய்ச்சபை ஆதரவாளர்கள் செய்ய நெஞ்சத்துடிப்பு இருந்திடினும் இதை பதிப்பகத்தார் அல்லது நிர்வாகத்தின் சார்ப்பில் இருப்பவர்கள் செய்வதே இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது நிலைப்பாடு. அல்லது இதெற்கென இருக்கும் குழு இதை செய்யலாம். (என் போன்றவர்கள் அயலகத்தில் இருக்கிறோம் என்பதும் ஒரு நிலைமை இதையும் கருத்தில் கொள்க).
செய்வதை தொய்வின்றியும், களைப்பின்றியும் செய்வதில் தான் முழுமை இருக்கும்.
மணிச்சுடர் என் இளம்பிராயத்திலிருந்தே என்னோடு இணைந்த, இயைந்த நாளேடு.. அது என் பாட்டனார்கள் எனக்கு இட்ட அமுதம் அதை வைத்தே ஊடகங்கள் இலலாத அப்போதே சமூகத்தை காட்டும் கண்ணாடியாக அதை கண்டு கொண்டேன். அது கொணர்ந்திருக்கும் சமூக சிந்தனைகள், கவிதைகளின் தாக்கம், கட்டூரைகளின் விதை எல்லாம் அளப்பறியது. ஆகவே எனது உள்ளம் விரும்பும் ஒரு நாளேடு பற்றிய எனது எண்ணத்தை ஈங்கன் சொல்லி இருக்கிறேன்.