ஒருநாள் எங்கள் வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லோரும் வெளியில் செல்ல
வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டு விட்டது. எனது 9 வயது சிறியமகன் பள்ளியில்
இருந்து வந்தவன் வழக்கமாக சாவியை வைக்கும் இடத்தில் இருந்து சாவியை
எடுத்து வீட்டைதிறந்து, கேஸ் லைட்டர் இருக்கும் இடம் தெரியாததால்
தீப்பெட்டியை எடுத்து கேஸ்ஸ்டவ்வை பற்றவைத்து பாலை சுடவைத்து காப்பி
போட்டு குடித்திருக்கிறான்.
வீட்டுக்கு வந்த நாங்கள் இந்த காரியத்தை அறிந்து மிகவும் கலங்கிவிட்டோம்.
கேஸ் ஸ்டவ் பக்கமே வரக்கூடாது என்று அவனை பலமுறை நாங்கள்
எச்சரித்திருக்கிறோம் ஆகினும் அந்த எச்சரிப்பிலுள்ள விபரீதத்தை
அவனுக்கிருந்த அறிவால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது
அவனுக்கு மரணத்தை பற்றி சரியாக தெரியாது! கேஸினால் நடக்கும் விபத்துக்கள்
தெரியாது. இந்த சம்பவத்தில் ஒருவேளை ஏதாவது ஒரு அசம்பாவிதம்
நடந்திருந்தால், 9 வயது பையன்தான் இந்த தவறை செய்தது என்பது
எல்லோருக்கும் தெரிந்தாலும் அதால் ஏற்ப்பட்ட விளைவுகளின் மொத்த
பொறுப்பையும் முழுக்க முழுக்க அவன் மேல் சுமத்திவிட முடியாது. அந்த
பையனுக்கு இதுபோன்ற சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி கொடுத்த பெரியவர்களையும்
நாலுபேர்கள் நிச்சயம் தூஷிப்பார்கள் அல்லவா? பாதிப்பு நமது
குடும்பத்துக்கு என்றால் இத்தோடு முடிந்துவிடும். ஆனால் இதுபோன்ற
செய்கையால் பாதிப்பு வேறுபல குடும்பத்துக்கும் ஏற்ப்பட்டால் நமது நிலைமை
மிகவும் விபரீதம் ஆகிவிடுமே.
சாதாரண மனிதர்களாகிய நாம் இவ்வித அஜாக்கிரதை மூலம் தவறு செய்ய நேரிடலாம்,
அதனிமித்தம் நாலுபேர் நம்மை தூஷிக்கலாம். ஆனால் தேவன் அப்படி பட்டவர்
அல்லவே.
தான் செய்யும் செய்கை எல்லாவற்றிலும் நீதியுள்ளவரும் எதையும தவறி
செய்பவர் அல்ல! தான் செய்யும் காரியங்கள் எல்லாவற்றின் பின்
விளைவுகளையும அறிந்தவர் அல்லவா?
இந்நிலையில், ஆதாமை நன்மை தீமை அறியாத ஒரு குழந்தை நிலையில் படைத்து, அதே
இடத்தில் நன்மை தீமை அறியத்தக்க கனியையும் படைத்து அங்கேயே அந்த
விலக்கபட்ட கனியை புசிப்பதற்கு என்கரேஜ் செய்யும் ஒரு சேல்ஸ்மேன் போன்ற
சாத்தானையும் அந்த இடத்தில் அனுமதித்து ஒரு நியாயமான செயல்போல்
தங்களுக்கு தெரிகிறதா?
தற்காலத்தில் அதிகம் படித்த அறிவாளி பெண்களே அழகாக பேசும் விற்பனை
பிரதிநிதிகளின் வார்த்தைகளில் மயங்கி பணத்தை பறிகொடுக்கும் போது, நன்மை
தீமை அறியாத அந்த ஏவாள் தந்திரக்காரனாகிய சாத்தானின் பேச்சில்
மயங்கியதிலும், தன்னுடைய எலும்பாலேயே உருவாக்கப்பட்ட ஏவாளின் இச்சையடன்
கூடிய பேச்சில், ஆதாம் மயங்கி அந்த கனியை தானும் உண்டதிலும்
வியப்பொன்றும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
ஆதியாகமம் 2:25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும்
நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
வார்த்தையை வாசிக்கும்போதே அவர்களின் ஒன்றுமறியாதநிலை தெரிகிற தல்லவா
சற்றேறக்குறைய மிருங்கங்களின் நிலைக்கொத்த நிலையே ஆதாம் ஏவாளின் நிலை
என்பதைய அறிய முடிகிறது.
அதிலும் முக்கியமாக உலகில் நடக்கும் எந்தஒரு காரியமும் தேவனுக்கு மறைவாக
நடக்க வாய்ப்பில்லை!
எரேமியா 16:17 என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும்
நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக
மறைந்திருக்கிறதில்லை
என்று ஆண்டவர் சொல்லும் நிலையில், சர்ப்பம் ஏவாளை எமாற்றும்போதும் ஏவாள்
அவன் வார்த்தையில் மயங்கி கனியை புசிக்கும் போதும் அந்த கனியை ஆதாமிடம்
கொண்டுவது புசிக்க கொடுக்கும்போதும் நடந்த அனைத்து சம்பவங்களும்
தேவனுக்கு முன்னால் நிச்சயம் வீடியோ கான்பர்ன்ஸ் போல ஓடியிருக்கும்.
ஆனால் அந்த செயலின் பின்னாலிருக்கும் விபரீதமாகிய மரணம் மற்றும்
துன்பங்கள் வேதனைகள் கவலைகள் கண்ணீர்கள் அத்தோடு குழந்தைகள்
பெரியவர்களுமாக பூர்வ உலகமே கூண்டோடு நீரினால் அழிந்துபோதல், மரணத்துக்க
பின்னர் நரகம், போன்ற அத்தனை விபரீதங்களையும் அறிந்த ஒரே சர்வ
வல்ல்வவராகிய தேவன், அதை தடுக்கவோ அல்லது சம்பவம் நடக்கும் ஸ்பாடுக்கு
சென்று இன்னொரு எச்சரிக்கை கொடுக்கவோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இருவரும் கனியை புசித்த பிறகு ஒன்றுமே தெரியாதவர் போல வந்து "ஆதாமே
நீஎங்கே இருக்கிறாய்" என்று கேட்கிறார்.
"தேவன் மனுஷர்களை சோதித்து அறிகிறார்" என்பது உண்மையாக இருந்தாலும் இங்கு
தேவன் ஆதாமை சோதித்ததாக எந்த ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால கர்த்தரால்
தெரிந்து கொள்ளபட்ட முதல் மனிதனாகிய ஆபிரகாமை கர்த்தர் சோதித்தார் என்று
எழுதப்பட்டுள்ளது. ஆபிரஹாமை சோதித்த கர்த்தர் அவன் செயல்களை அவனை
முற்றிலும் கண்காணித்ததோடு, அவன் பிள்ளையை பலியிடப் போகும் சரியான
நேரத்தில் குறுக்கிட்டு அவனை தடுத்து பாதுகாத்தார். ஆனால் ஆதாம் ஏவாளின்
விஷயத்திலோ அவர் அனைத்து அறிந்திருந்தும் அவன் கனியை புசிக்கபோகும்
நேரத்தில் ஒரு எச்சரிப்பும் கொடுத்து தடுக்கவரவில்லை.
நடந்த இந்த காரியங்களை நாம் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் இந்த காரியங்கள்
அனைத்தும் சாத்தானின் தலையை நசுக்க தேவனால் திட்டமிட்டு செய்யப்பட்ட
ஒருசெயல் என்பதை நாம் சுலபமாக புரியமுடியும்.
இந்த காரியத்தில் ஆதாமின் மீறுதல் சம்பந்தபட்டிருந்தாலும், அதுவும் தேவ
திட்டத்தின் நிறைவேறுதல் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் ஆண்டவராகிய
இயேசுவை பற்றி வேதம் குறிப்பிடும் வேறொரு வசனத்தையும் நாம் ஆராயும் போது
"அவர் உலக தோற்றமுதல் அடிக்கபட்ட ஆட்டுக்குட்டி என்றும், உலக
தோன்றத்துக்கு முன்னரே கிறிஸ்த்துவுக்குள் (அதாவது கிறிஸ்துவின்
பலிக்குள் தான்) தேவன் நம்மை தெரிந்து கொண்டார்" என்றும் வசனம்
சொல்கிறது. எனவே இயேசுவின் பலி என்பது உலக தோன்றமுதலே
தீர்மானிக்கபட்டது.
சுருங்க சொல்லின்:
சாத்தானின் தலையை நசுக்கவும் அத்தோடு கூடிய அசுத்த ஆவிகள் கூட்டம்
என்னும் இடறல் உண்டாக்கும் அனைத்தையும், பாதாளம் என்னும் ஒரு படு
குழியில் தள்ளி நித்தியமாக நியாயதீர்த்து அடைப்பதற்கு தேவன் வைத்த
தூண்டிலில் இரையாக மாட்டபட்ட சிறிய மீனே ஆதாம் என்னும் மனுஷனும் அவனை
தொடர்ந்த சந்ததியும்.
ஆகினும் நியாயமில்லாமல் இந்த மாம்சமான மனுஷர்களை படைத்து அவர்களை
சோதனைக்குள்ளும் வேதனைக்குள்ளும் தேவன் தள்ளவில்லை. ஒவ்வொரு
மனுஷனும் கட்டாயமாக மாம்சமாக வேண்டும் பின்னர் மரிக்க வேண்டும் பின்னர்
நியாயதீர்ப்படைய வேண்டும் என்ற நிர்பந்தத்துக்குள் இருந்ததால் அதையே
தேவன் தனக்கு சாதகமாக தன் திட்டத்தை நிறைவேற்ற பயன்படுத்தி கொண்டார்.
(அந்த நிர்பந்தம் எவ்வாறு உண்டானது என்பது குறித்த விளக்கத்தை
கர்த்தருக்கு சித்தமானால் வேறொரு திரியில் தருகிறேன்)
இதில் தேவன் எங்கும் எதிலும் சிறிதேனும் அநீதியை யாருக்கும் இழைக்க
வில்லை! அவர் தன்செயலில் எல்லாம் உண்மையும் செம்மையுமானவர்! அவர்
செய்யும் ஒவ்வொரு செயலின் அடிப்படைநோக்கமும் எல்லோரும் மீட்கப்படவேண்டும்
என்பதேயன்றி வேறல்ல!