புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!
மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ‘பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்’ என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமாக வலம் வருகிறதாம். ”இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.
”இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்ள்ஸ் அன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். ‘உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!’ என சார்ள்ஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்” என்று கூறும் குறுந்தகடு ‘விநியோகஸ்தர்’கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -
”போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆபிரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்டு படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய… இராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.
இருந்தாலும், இராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்” என்று கூறுகிறார்கள் இவர்கள்.
இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். ”பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்” என முடிகிறதாம் அந்த இரகசிய சர்க்குலேஷன் சி.டி!
--
nandhivarman