Fwd: நமது கோயில்களும்.. பழங்கால அதிசயங்களும்..!

9 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
May 20, 2017, 12:27:57 PM5/20/17
to palsuvai

---------- Forwarded message ----------
From: Vanakkam Subbu <sub...@gmail.com>
Date: 2017-05-19 6:48 GMT+05:30
Subject: நமது கோயில்களும்.. பழங்கால அதிசயங்களும்..!
To: Thatha_Patty-Google <thatha...@googlegroups.com>


நமது கோயில்களும்.. பழங்கால அதிசயங்களும்..!

 

 

ந்தியாவின் அடையாளமே கோயில்கள்தான். தமிழகத்தின் அடையாளமே கோயில்களின் கோபுரங்கள்தான். ஆதி காலம் முதலே கோயில்களை கட்டும்போது, ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைப்பதை நமது முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்பைப் பெறுகிறது.

அத்தகைய சிறப்புமிக்க கோயில்களை பட்டியலிடுகிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் கவிதா ஜவகர்...

* சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் உள்ள சிவன் சிலையும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவை.

* சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அம்பாள் மேற்கே பார்த்திருப்பாள். அம்பாளை பார்த்துவிட்டுதான், சாமியைப் பார்க்கவேண்டிய அமைப்பு முறை இங்கு இருக்கிறது.

 

* காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள்  நிலத்தைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களில் ஒன்றாகச் சிறந்து விளங்குகிறது.

* காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில், அம்மன் சந்நிதி இல்லை.

* ஶ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவம் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.

* பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்பு ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல், பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

* திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தில் வேதநாராயணப் பெருமாள் தலையில் இருந்து இடுப்பு வரை மனித உருவமும், கீழே மீன் வடிவமும் கொண்டு காட்சியளிக்கிறார்.

* வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் நேரத்தை அறிந்து கொள்ள முடியும். இங்கு மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரமாகக் கருதப்படுகிறது.

* தர்மபுரி மல்லிகார்ஜுன கோயிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி, பூமியில் படியாத வண்ணம், அந்த காலத்திலேயே அவ்வளவு நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

* தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோயிலில் நவக்கிரகங்கள் பெண் வடிவில் உள்ளன.

* கடலூர் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை, ராஜ ராஜ சோழன் பார்த்த பிறகுதான், பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்கள் இக்கோயிலைக் கட்டமைத்துள்ளனர்.

* மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. அதேவேளை மனிதனுக்கு இதயம் இடப்புறம் அமைந்திருப்பது போல், மூலவர் இருக்கும் கருவறை, கோயிலின் இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.

 

அதேபோல் சராசரியாக மனிதன் ஒரு நாளைக்கு 21 ஆயிரத்து 600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதைக் குறிக்கும் விதமாக, கருவறையின் மீதுள்ள கூரை 21 ஆயிரத்து 600 ஓடுகளால் வேயப்பட்ட வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாகச் சிதம்பரம் நடராஜர் கோயிலில், உற்சவர் அல்லாமல் மூலவரே வீதியில் வலம் வருகிறார். அதேபோல் சிதம்பரம் கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம். மேலும், சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டும்தான்.

* விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.

* குளித்தலை-மணப்பறை வழியில் உள்ள ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் தானாய் நடக்கிறது. முக்கியமாக, இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

* ஸ்ரீரங்கத்தில் கோயிலில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகவே படைக்கப்படுகிறது.

* திருச்சி சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் திருமேனி, சில மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளது.

* எல்லாத்திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

* திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்தக் கோயில் ஆரம்பக் கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழனால் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனுகந்தநாதருக்கு, தினமும் தேனடையிலிருந்து தேன் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறெங்கும் இதுபோன்று பூஜை முறைகள் நடைபெறுவதில்லை.

* தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீட்டாராக உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய கல்வெட்டு இந்தக் கோயிலில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில், நவக்கிரகங்கள் லிங்க வடிவில் இருப்பதும் இங்குதான். கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும்.

* கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒவ்வொரு நாளும் ஐந்து முறை வெவ்வேறு நிறங்களில் மாறுவதால், “பஞ்சவர்ணேஸ்வரர்” என்கிற சிறப்புப் பெயரில் அழைக்கப்படுகிறார்.

* கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், இடைக்காலச் சோழர்களின் காலத்திலிருந்தே இருப்பதாக நம்பப்படுகிறது. இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் இக்கோயிலில் கொண்டாடப்படுவது தனிச் சிறப்பு.

* கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே உள்ள சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயிலில், சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம் பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்குச் சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.

* கும்பகோணம் அருகே தாராசுரம் என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பத்தில், வாலியும் - சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும் அளவுக்கு, நுட்பமாக, இக்கோயில் வடிமைக்கப்பட்டுள்ளது.

* கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் 'பஞ்சவர்ணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறது.

* கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் தயாராகும் எந்த நைவேத்தியங்களிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை.

* சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளதுபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் உள்ளது. சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்த தாண்டவம் என்றும், திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக இக்கோயிலில், நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அபூர்வத்தை இங்கு மட்டுமே காணமுடியும்.

* மயிலாடுதுறையின் மிகப்பெரிய கோயிலாக விளங்கும் ஸ்ரீமயூரநாத சுவாமி கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாகக் குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்தக் கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் 'மயூரா நாட்டியாஞ்சலி' நிகழ்ச்சி மிகவும் பிரசித்தம் பெற்று விளங்குகிறது.

* மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், முதலில் 'மீனாட்சியை' வணங்கிவிட்டு அதன் பிறகு 'சுந்தரேசுவரர்' சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்தக் கோவிலிலும் இத்தனை கோபுரங்கள் கிடையாது. இக்கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளர்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோயிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாகவும், இக்கோயில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டு இருப்பதும் இங்குச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

* திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயம், தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் கோபுரங்களும் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். இக்கோயில் கி.பி. 700 ம் ஆண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

* திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் காய்க்கும் காய்கள் லிங்க வடிவில் இருப்பது இங்குள்ள விசேசமாகும்.

* திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ள சிவன் கோயிலின் நடராஜர் சிலை, ஒரே கல்லினால் ஆனது. அதனைத் தட்டினால் வெண்கல ஓசை கேட்பது அங்குள்ள சிறப்பு.

* விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் கோயிலில் உள்ள 'நந்திக்கு' கொம்பு மற்றும் காதுகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

* ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோயிலில் மட்டும், பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. இதுபோன்று, வேறு எந்தச் சிவன் கோயிலிலும் தீர்த்தம் கொடுப்பது இல்லை. 12 ஜோதிர்லிங்க கோயில்களில், தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஜோதிர்லிங்க கோயிலாக ஸ்ரீராமநாதசுவாமி கோயில் திகழ்கிறது.

 


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

                 Right ☯ no buy ever !!!   V A N A K K A M     S U B B U  

5HLRltELRTuhFyJ0_ouiDnr_qDYmmw6GZkgZJNMUnLUn39M_vn79dw==.gif

                         

--
You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages