சங்கத்தமிழ்
இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள்
ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே
பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக்
கொண்டமை அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது. .பழந்தமிழ் நூல்களில் விருந்து
மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது
விருந்தோம்பலின் அருமையை அறிந்து
வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்
விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய்
விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று
'விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள் .ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது 'விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்'(கற்பியல்,11) இல்லறத்தில் கணவன் மனைவியர் இருவரும் இணைந்து விருந்தோம்ப வேண்டும் என்பதை, இளங்கோவடிகளும், கம்பரும் தம் காப்பியங்களில் புலப்படுத்தியுள்ளனர்.
கண்ணகி கோவலனை விட்டுப் பிரிந்த நிலையில்
அறவோர் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (சிலம்பு)
எனக் கூறி வருந்துகின்றாள்.இளங்கோவடிகள் 'தொல்லோர் சிறப்பின்' என்று விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியதால் தமிழரின் தொன்மையான பழக்க வழக்கம் என்பதும் ,முன்னோர் வகுத்த முறைப்படி விருந்தல் வேண்டும் என்பதும் புலனாம்.
இராமனைப் பிரிந்த சீதை விருந்தினர் வந்தால்,அவர்களை ஓம்ப இயலா நிலையை எண்ணி இராமன் என்ன துன்பம் அடைவானோ எனக் கலக்கமுறுகிறாள்
'விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்'
என்பது கம்பர் கூற்று விருந்திற்கான காரணம்
பழங்காலம்
உணவு விடுதிகள் இல்லாத காலம்.வெளியூர்க்குச் செல்வோர் பலநாளுக்கு வேண்டிய
உணவினைக் கொண்டு செல்ல இயலாது. .செல்வர்களும்,வணிகர்களும் தேர்களிலும்,
மற்ற ஊர்திகளிலும் செல்லும் போது உணவிற்குத் தேவையானப் பொருள்களைக் கொண்டு
செல்ல முடிந்தது. மற்றவர்கள் உணவையோ,உணவுப் பொருள்களையோ கொண்டு செல்ல
முடியாத நிலையிருந்தது. அதனால் உணவின்றி வருந்துவோருக்கு உணவளித்தல்
இன்றியமையாத அறமாகப் போற்றப்பெற்றது இக்காலத்தில் உணவு விடுதிகள்
பெருகியுள்ளன.எப்பொருள் எங்கு வேண்டுமென்றாலும் பெறலாம். பல நாள்களுக்கு
வைத்துக் கொள்ளும்படியான பல உணவு வகைகள் கிடைக்கின்றன. அதனால் இப்பொழுது
விருந்தோம்பல் என்பது செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் பயனை
எதிர்பார்த்துச் செய்வதற்காவும் மேற்கொள்ளப்பெறுகிறது .இக்காலத்தில்
புதியவர் யாரையும் நம்பும் படியான சூழ்நிலையில்லை .'எந்த புற்றில் எந்த
பாம்போ' என்ற நிலைதான் இன்று காணப்பெறுகின்றது. அதனால் விருந்தோம்பவும்
அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
.
விருந்தோம்பும் முறை
விருந்தை விருந்தினர் மனம் மகிழும்படி ஓம்புதலே சிறப்பு.மலர்கள் வெம்மையால் வாடும்,அனிச்சம் மிக மென்மையானது ஆதலால் முகர்ந்தாலே அது வாடிவிடும்.விருந்தினர் மிக மென்மையானவர்கள்,சேய்மைக்கண் முகம் திரிந்து நோக்கினாலே வாடிவிடுவர்,
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து(குறள்,90)
என்று குறள் கூறும்.இக்குறளுக்குப் பரிமேலழகர்,விருந்தினரைச் சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் அது பற்றி நண்ணிய வழி இன்சொல்லும்,அவை பற்றி உடன்பட்ட வழி நன்றாற்றலுமென விருந்தோம்புவாருக்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக் கண்ணே வாடி நீங்குதலின் தீண்டிய வழியல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்று விளக்கம் தருவர்.இதனால் விருந்தோம்புவாருக்கு முதற்கண் இன்முகம் வேண்டுமென அறியலாம்.
விருந்தினர் ஓம்பும் முறையைப் பொருநராற்றுப்படை விரித்துக் கூறும். விருந்தினரிடம் நண்பனைப்போல உறவு கொண்டு,இனிய சொற்களைக் கூறி,கண்ணில் காணும்படி தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்து,கன்று ஈன்ற பசு கன்றிடம் காட்டும் அன்பு போல விருந்தினரிடம் அன்பு காட்டி எலும்பே குளிரும்படியான அன்பால் நெகிழச் செய்ய வேண்டும் எனப் புகலும்.
கேளிர்போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணில் காண நண்ணுவழி இரீஈ
பருகு அன்ன அருகா நோக்கமொடு (பொருநராற்றுப்படை,74-78)
பல வகையான உணவினை விண்மீன்கள் போல கிண்ணத்தில் பரப்பி விருந்தினரை அன்போடு நோக்கி ,அவர்கள் விரும்பியதைக் குறிப்பறிந்து கொடுத்து ஓம்ப வேண்டும் என்பதைப் பெருபாணாற்றுப்படை வழி அறியலாம்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து
ஆனா விருப்பின் தானின்று ஊட்டி (477-479)
தானின் றுட்டி' என்ற அடியை நோக்குழி, விருந்து படைப்பவரே அருகில் இருந்து, விருந்தினர் விரும்பும் உணவினை வழங்க வேண்டும் என்பதைக் காணலாம்
அதியமான் ஒருநாள் சென்றாலும், இருநாள் சென்றாலும்,பலநாள் பலரோடு சென்றாலும், முதல் நாள் போன்றே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினான் என்பதை ஔவையார் பாடல் மூலம் அறியலாம்
இக் காலத்தில் மகளிர் விருந்தினரை வரவேற்று ஓம்புதலைப் பாவேந்தர் பாரதிதாசனும்
பொன்துலங்கு மேனி
புதுமெருகு கொள்ள மேனி
அன்றலர்ந்த செந்தா
மரையாக-நன்றே
வரவேற்பாள்' (குடும்ப விளக்கு)
விருந்தோம்பலின் சிறப்பு
மருந்தே யாயினும் விருந்தோடு உண்' என்ற ஔவையின் வாக்குக்கேற்ப வாழ்ந்த இனம் தமிழினம். விழுப்புண் படாத நாறலெல்லாம் வீழ்நாள்' என்று மறவன் கருதுவது போல விருந்தினர் வாரா நாளெல்லாம் வீண்நாளாகப் பண்டையோர் கருதினர் கிடைத்தற்கரிய அமிழ்தம் கிடைத்தாலும் தான் மட்டும் உண்ணாமல் விருந்தினர்களோடு பகுப்பு உண்டார்கள் என்பதை
'இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
இனிதெனத் தமியர் உண்டலும் இலரே'(182)
எனப் புறநானூறு காட்டும்
அதியமான் கிடைத்தற்கரிய நெல்லிக் கனி கிடைத்தும் தான் உண்டு ந்டிது வாழாமல் ஔவைக்கு ஈந்தது ,விருந்தோம்பலின் சிறப்பினைக் காட்டுவதாகும்.
ஆயர்கள் மாடு மேய்க்கப் புறப்படும்போது உணவினை மூங்கில் குழாயில் இட்டு, மாட்டின் கழுத்தில் கட்டிக்கொண்டு காட்டு வழியே செல்வர் அங்கு யாரும் பசியோடு வந்தால் தாம் மட்டும் உண்பதற்கு வைத்திருக்கும் உணவினை அவர்களுக்குப் பகுத்துக் கொடுப்பர் என்று அறிகிறோம்
'கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
செவியடை தீரத் தேச்சிலைப் பகுக்கும்
புல்லிநன்னாடு '(அகம் 311,9-12)
விருந்தினர் இரவில் காலம் கழித்து வரினும் மனம் மகிழ்ந்து விருந்தோம்பினர்
(நற்றிணை,142)இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் உளரா எனப் பார்த்து இருப்பின் அழைத்து வந்து உணவளிப்பர்
.(குறுந்தொகை,205,12-14)விருந்தினருக்கு விடைகொடுத்து அனுப்பும்போது குதிரை பூட்டிய தேரினைக்கொடுத்து ,ஏழடி பின் தொடர்ந்து சென்று வழியனுப்புதல் பண்டைய வழக்கமாகும்
.(பொருநராற்றுப்படை,165,166)விருந்தோம்பலில் விருப்பம் கொண்டு அதற்காகவே பொருளிட்டச் சென்றுள்ளனர் (அகம்,205,12-14)
பொருளையெல்லாம் இழந்து வறுமையுற்ற காலத்தும், விருந்தினரைச் சிறப்பாக ஓம்புதலைச் சங்க மக்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்
.வறுமையுற்று விருந்தோம்பா நிலையிலும் ஒருவன் முதல் நாள் தன் பழைய வாளை விற்றும் ,அடுத்த நாள் யாழை அடகு வைத்தும் விருந்தோம்பினான்.(புறம்,316,5,7) வரகும் தினையும் இரவலர்க்கு ஈந்து தீர்ந்தன வேறு வகையில் பொருள் பெற வழியில்லை ,அந்நிலையில் விதைக்கு இருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி மகளிர் விருந்தோம்பினர் .(புறம்,333) அதியமான் வறுமையுற்ற காலத்தும் விருந்தோம்பினான் என்பதை புறநானூறு கூறுகிறது(103)(95). இவ்வாறு சங்க இலக்கியங்கள் விருந்தோம்பும் முறையைப் பரக்கப் பேசுகிறது.
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Roots" group, an intiative of Tamil Heritage Foundation.
To post to this group, send email to indic...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
indic-roots+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/indic-roots?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "Roots" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to indic-roots+unsubscribe@googlegroups.com.