Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

Fwd: கலாசாரம் சொல்லும் நாதஸ்வரம்.

9 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Jun 12, 2017, 9:59:53 AM6/12/17
to palsuvai
 


கலாசாரம் சொல்லும் நாதஸ்வரம்.

"நாதஸ்வரம்' என்ற வட மொழிச் சொல்லினால் நாம் வழங்கும் தமிழருக்கே உரித்தான சிறப்பான இசைக் கருவி"வங்கியம்'என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டது.சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றக் கதையில் இளங்கோவடிகள் குறிப்பிடும் வங்கியம் நாதஸ்வரமே என உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்குகிறார்.தமிழ்நாட்டில் இலங்கையில்,தமிழர் கலாசாரத்தில் மிகவும் புகழ் பெற்ற இசைக் கருவியாக விளங்குவது நாதஸ்வர இசைக்கருவியாகும்.தமிழக மக்கள் பெருமையோடு சொந்தம் பாராட்டுகிற வாத்தியமான நாகஸ்வரம் திருவிழாக்களிலும்,திருமண வைபவங்களிலும், திருக்கோயில் வழிபாடுகளிலும்,
இறைவனின் திருவீதியுலாக்களிலும்,உறுமி மேளம்,நையாண்டி மேளம் போன்ற கிராமிய இசை நிகழ்ச்சிகளிலும் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகிறது. இது 'இராஜவாத்தியம்' என்றும், 'மங்களகரமான வாத்தியம்' என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் யாவற்றிலும் நாகஸ்வர இசையைக் கேட்கலாம்.

நாதசுவரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக் கருவியாகும். இது  நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம், நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.

தெய்வீகமான கர்நாடக இசையை இன்றளவும் பட்டிதொட்டி முதல் இசைவிழா வரையும் போற்றிக் காப்பவர்கள் நாகஸ்வரக் கலைஞர்களே.காற்றிசைக்கருவி வகையைச் சார்ந்த இந்த 'நாகஸ்வரம்' மக்களின் அன்றாட வாழ்க்கையில் தினசரி இடம்பெறும் வகையில் மிகவும் சிறப்பாக இசைக்கப்படுகின்றது.இது திறந்த வெளியில் இசைப்பதற்கு மிகவும் ஏற்ற கருவி. நெடுந்தூரம் வரையில் இதன் ஓசையைக் கேட்கலாம்.நாதஸ்வரம் என்றும்,நாகசுரம் என்றும் அழைக்கப்படும் இக்கருவி பொதுவாக ஆச்சா மரத்தினால் நரசிங்கன் பேட்டை,தெரெழுந்தூர்,வாஞ்சூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் அதற்கெனவுள்ள ஆச்சாரிகளால் மிகவும் சிறப்பாகச் செய்யப்படுகிறது.ஆச்சா மரத்தைவிட ரோஸ்வுட்,பூவரசு,பலாமரம், கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும் செய்யப்படுகின்றன.

யானைத் தந்தத்தாலும்,உலோகமாகிய வெண்கலத்தாலும் கூட நாதஸ்வரம் செய்யலாம் என்பது நாவலரின் கருத்து. வெள்ளி,தங்கத்தினாலும் அபூர்வமாக அக்கருவி செய்யப் பட்டது.ஆண்டாங்கோயில் வீராசாமி பிள்ளை பொன்னால் ஆன நாதஸ்வரம் வைத்திருந்தார். ஆழ்வார்திருநகரி,திருவாரூர்,கும்பகோணம்,கும்பேசுவரர் கோயில்களில் கருங்கல்லில் செய்யப்பட்ட நாகஸ்வரங்கள் இன்றும் வாசிக்கப்படுகின்றன.தற்கால நாதஸ்வரங்கள் செங்கருங்காலி எனப்படும் ஆச்சா மரத்தினால் செய்யப்படுகின்றன.மரத்தின் வயது நாற்பத்திரண்டு எனில் உத்தமம்.இசைக் கருவி செய்யக் குறிப்பிட்ட ஒரு மரம் உகந்ததா என எளிய சோதனை ஒன்றினால் அறியலாம்.மரத்தை லேசாகச் சீவி நெருப்பில் காட்டினால் தீபம் போல எரிய வேண்டும்.கருகினால் அது கருவி செய்ய ஏற்றதல்ல.


ஏழு விரல்களினால் வாசிக்கப் படுவதால் "ஏழில்' என்றழைக்கப் படும் நாதஸ்வரத்தைப் பற்றிய குறிப்புகள் நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் விரவிக் காணப்படுகின்றன.பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த "சிங்கிராஜ புராண'த்தில் நாதஸ்வரம் பற்றிய விபரங்கள் காணக்கிடக்கின்றன.

பதினான்காம் நூற்றாண்டிலும் அதன் பின்னும் அடிக்கப்பெற்ற கல்வெட்டுகளிலும் எழுதப்பட்ட செப்பேடுகளிலும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட பரிசில்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.குழல் கருவிகளில் நாதஸ்வரத் திற்குப் பிரதான இடம் உண்டு.கோவில்களில் இறைவன் புறப்படும் காலை அவனுக்கு நேராக முன் நின்று வாசிக்கப்படுவது நாதஸ்வரம் மட்டுமே.சங்கு,நபூரி,
முகவீணை,எக்காளம்,திருச்சின்னம் என்ற கோவிலில் பயன் படுத்தப்படும் வாத்தியங்களெல்லாம் மேளத்துக்குப் பின்புறமோ இறைவன் திருவுருவத்திற்குப் பின்புறமோ தான் இடம் பெறுகின்றன. 


ஊமத்தம் பூ வடிவில் காட்சியளிக்கும் இந்த நாதஸ்வரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.இதன் மேல்பகுதி 'உளவு' அல்லது 'உடல்' என்றும்,கீழ்ப்பகுதி'அணைசு' அல்லது 'அணசு' என்றும் அழைக்கப்படும். நாகசுரத்தில் வாசிப்பதற்காக ஏழு விரல் துளைகளைஅமைத்திருப்பர். இதற்கு 'சப்தஸ்வரங்கள்' என்று பெயர். இதில் எட்டாவதாக அமைக்கப்பட்டிருக்கிற துளைக்கு 'பிரம்மசுரம்' என்று பெயர். நாகசுரத்தில் செலுத்தப்படும் கூடுதலான காற்று இதன் வழியாகத்தான் வெளியேறும். 


நாகஸ்வரத்தின் நீளம் பலவாறாக இருக்கும்.மிகப் பழங்காலத்தில் 18.25 அங்குல நீளமாக இருந்தது (சுருதி 4.5 கட்டை).பல மாறுதல்களுக்குப்பின் 1941-ம் ஆண்டில் திருவாவடுதுறை டி.என்.இராஜரத்தினம்பிள்ளை அவர்கள் முயற்சிகள் பல மேற்கொண்டு 34.5 அங்குல நீளமும் 2 கட்டை சுருதியும் கொண்ட நாகஸ்வரத்தைக் கொண்டுவந்தார். இதை பாரி நாகஸ்வரம் என்பர். நீளம் குறைந்த நாகஸ்வரம் திமிரி எனப்படும்.நீளம் குறைந்தால் ஒலி உரத்து எழும்.சுருதி அதிகம்.நீளம் அதிகமாக இருந்தால் சுருதி குறைவாக இருக்கும்.


ரெங்கநாத ஆசாரி தயாரித்து அளித்த பாரி நாகசுரத்தில் மட்டும்தான் சுத்தமத்தியமம் சுத்தமாகப் பேசும் எனவும் அவரை அரசாங்கம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் டி.என்.ராஜரத்தினம் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.நாகசுரக் கருவிகளை 
நரசிங்கம்பேட்டையில் உள்ள மறைந்த ரெங்கநாத ஆசாரியின் உறவினர்களான 5 குடும்பத்தினர் மட்டும்தான் செய்து வருகின்றனர்.
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் கைவினைஞர்களுக்கான விருதுகள் இன்றளவும் இவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் ரெங்கநாத ஆசாரியாரின் மகன் செல்வராஜ்.


நாகஸ்வரத்தில் காற்றை உட்செலுத்தி ஊதுவதற்கு உதவுவது 'சீவாளி' (ஜீவஒலி). காவிரிக் கரையில் விளையும் கொருக்கன் புல்லைப் பலவழிகளில் பதனிட்டு சீவாளியைச் செய்வர்.திருவாவடுதுறை, திருவீழிமிழலை,திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் 
சீவாளி செய்யப்படுகின்றன. நாகசுரத்திற்கு சுருதி வாத்தியமாக அண்மைக்காலம்வரை 'ஒத்து நாகசுரத்தையே' பயன்படுத்தி வந்தனர்.இதுவும் நாகசுரம் வடிவிலேயே 2.5 அடி நீளத்தில் மெல்லியதாக இருக்கும்.விரல் துளைகள் இதில் இருக்காது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் வாசிக்கப்படும் நாகஸ்வரம் நீளம் குறைந்தவை (ஐந்து கட்டை). இவைகளின் சீவாளி பனைஓலையால் செய்யப்பட்டவை.அனசு என்ற அடிப்பாகம் பித்தளையாலானது.

கோயில் பூசைகளிலும்,திருவிழாக்களிலும் நாகஸ்வர இசை முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. திருவீதியுலாவில் இறைவனின் புறப்பாட்டிற்கு முன்பாக தவிலில் 'அலாரிப்பு' வாசிக்கப்படும். இது 'கண்ட நடையில்' அமைந்த சொற்கோவையாக இருக்கும்.இதனைத் தொடர்ந்து நாகசுரத்தில் 'கம்பீரநாட்டை'யும் அதன்பின் 'மல்லாரி' ராகமும் வாசிக்கப்படும்.இந்த மல்லாரியை வாசித்தவுடனேயே வெகு தூரத்திலிருப்போரும் கூட திருக்கோயிலில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றதென்பதை அறிந்து கொள்வர்.இத்தகைய மல்லாரி பல வகைப்படும். தேர்த்திருவிழாவின் பொழுது 'தேர் மல்லாரி'யும்,சுவாமி புறப்படும் பொழுது அலங்கார மண்டபத்திலிருந்து யாகசாலைக்கு வரும்வரையிலும் 'பெரிய மல்லாரி'யும் வாசிக்கப்படும்.

இறைவன் யாகசாலைக்கு வந்ததும் தவிலும்,தாளமும் இன்றி நாகசுரத்தில் காப்பி,கானடா,கேதாரகெளளை போன்ற ராகங்கள் வாசிக்கப்படும்.
யாகசாலையிலிருந்து கோபுரவாசல் வழியாக சுவாமி வெளியில் வரும்பொழுது 'திரிபுடை தாளத்து மல்லாரி' வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலில் தீபாராதனை முடிந்ததும்,அந்தந்தத் தெய்வங்களுக்குரிய 'சின்ன மல்லாரி' வாசிக்கப்படும்.அதன்பின்பு காம்போதி,சங்கராபரணம்,
பைரவி,சக்கரவாகம் போன்ற ராகங்களில் ராக ஆலாபனை நடைபெறும். இந்த ராக ஆலாபனை கிழக்கு வீதியிலும்,மேற்கு வீதியில் பாதி வரையும் நடக்கும். அதன் பிறகு ரத்தி மேளமும்,ஆறுகாலத்தில் பல்லவியும் வாசிக்கப்படும்.இவ்வாறு கீழ் வீதியின் நடுப்பகுதி வரையிலும் பல்லவி,
சுரப்பிரஸ்தாரம்,ராகமாலிகை என்று வாசிக்கப்படும்.பின்பு கோபுர வாசலை அடைந்ததும் பதம்,தேவாரம் முதலிய பாடல்கள் வாசிக்கப்படும். தற்காலத்தில் இந்தப் பழைய மரபில் சில மாற்றங்கள் உள்ளன. மல்லாரி முடிந்த பின்பு 'வர்ணம்' என்ற இசை வகையும்,பின்பு சுவாமி கிழக்கு வாசலுக்கு வரும் பொழுது கீர்த்தனை,பதம்,ஜாவளி,தில்லானா,காவடிச் சிந்து போன்ற இசை வகைகளையும் வாசித்து வருகின்றனர். 
வீதியுலா முடிந்து சுவாமி கோயிலுக்குள்ளே நுழையும் பொழுது சுவாமிக்கு 'கண்ணேறு' கழிக்கப்படும். அப்பொழுது தாளத்தோடு தவில் மட்டும் தட்டிக் கொண்டு வருவார்கள்.இதற்குத் 
'தட்டுச்சுற்று' என்று பெயர்.பின்பு பதம் அல்லது திருப்புகழ் வாசிப்பர்.பின்பு சுவாமி மூலஸ்தானத்திற்குச் செல்லும் பொழுது 'எச்சரிக்கை' என்னும் இசை வகை வாசிக்கப்படும்.இதற்குப் 'படியேற்றம்' என்று பெயர்.திருக்கோயிலின் பூசைக்கு நீர் கொண்டு வரும்போது 'மேகராகக் குறிஞ்சி' ராகமும், குடமுழுக்கின் பொழுது 'தீர்த்த மல்லாரி' யும்வாசிக்கப்படும்.                                        மடப்பள்ளியிலிருந்து இறைவனுக்குத் தளிகை எடுத்து வரும்போது 'தளிகை மல்லாரி' வாசிக்கப்படும்.இறைவனின் திருக்கல்யாணம் நடக்கும் பொழுது 'நாட்டைக் குறிஞ்சி'யோ 'கல்யாண வசந்த'மோ வாசிக்கப்படும்.பெரிய கோடி வாயிலிலிருந்து தேரடி வரையில் கலைஞர்கள் வாசிப்பது "மிச்ரமல்லாரி".


நாகஸ்வர இசையோடுதான் இறைவனின் நித்திய காலப் பூசைகள் நடைபெறும். ஒவ்வொரு காலப் பூசைகளிலும் என்ன என்ன ராகங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பது தொன்றுதொட்டு மரபாகவும் பூசை விதிமுறைகளுக்கு அமையவும் அமைக்கப்பட்டுள்ளது.எடுத்துக்     காட்டாகப் பொழுது புலருமுன் நான்கு மணி தொடங்
கி பூபாளம், பௌனி, மலையமாருதம் வாசிக்க வேண்டும்.உச்சி வேளை எனில் முகாரியும் பூரண சந்திரிகாவும் மாலை ஆறு மணிக்கு மேல் சங்கராபரணமும் பைரவியும் இசைக்கப்படும்.அதே போல விழாக் காலத்தில் இறைவன் உலா வரும் இடத்திற்கு ஏற்பவும் ராகங்கள் வாசிக்கப்படுகின்றன.

நாட்டை ராக ஆலாபனையைத் தொடர்ந்தே இறைவனின் புறப்பாடு நடைபெறும்.சில திருக்கோயில்களில் இந்த இந்த இடங்களில் இன்ன இன்ன ராகங்களைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நியதியும் உள்ளது.சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் திருவிழாவில் பத்துத் தினங்களிலும் அந்தந்த நாட்களில் அந்தந்த ராகங்கள வாசிக்கப்பட வேண்டும் என்ற முறை இன்றும் உள்ளது.வழிபாட்டில் மட்டுமல்லாமல் திருமணம் போன்ற மங்கலச் சடங்குகளின் போதும் வாசிக்கப் படும் நாகஸ்வரம் ஒரு மங்கள வாத்தியமாகும். சடங்குகளிலும் மதவிழாக்களிலும் நம்பிக்கை இல்லாத,இனிய இசையை இசைக்காகவே ரசிக்கும் சுவைஞர்களும் ஒரு முழு நீள நாதஸ்வரக் கச்சேரியை அனுபவிக்கலாம்.பாமரர்களிலிருந்து இசைவாணர்கள் வரை அனைவரது உள்ளங் களையும் உருக்குவது நாதஸ்வர இசை என்பதில் ஐயமில்லை. 


கர்நாடக இசையை மிக விஸ்தாரமாக விவரணம் செய்யத்தக்க வாத்தியம் நாகஸ்வரம்தான்.அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்,முசிரி சுப்பிரமணிய ஐயர்,செம்பை வைத்தியநாத பாகவதர், காஞ்சிபுரம் நைனாபிள்ளை, செம்மங்குடி  சிறினிவாச ஐயர்,
ஜி.என். பாலசுப்பிரமணியம், மதுரை சோமு போன்ற பல சங்கீத வித்வான்கள் திருவீதியுலாக்களில் இரவு முழுவதும் நாகஸ்வரக் கச்சேரிகளைக் கேட்டே தங்களின் இராக பாவங்களை வளர்த்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்கள். இது நாகசுரத்தின் மேன்மையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.

(டாக்டர் கே. ஏ. பக்கிரிசாமி பாரதி அவர்கள் எழுதிய 'நாகஸ்வரம்' என்னும் கட்டுரையைத் தழுவி எழுதியது.)

 


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

                    V A N A K K A M     S U B B U   

5HLRltELRTuhFyJ0_ouiDnr_qDYmmw6GZkgZJNMUnLUn39M_vn79dw==.gif

                         

--
You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages