Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

முருங்கை முள் முருங்கை.........

126 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
May 6, 2017, 3:12:54 AM5/6/17
to palsuvai
senthilvayal.com

senthilvayal.com

முருங்கை, முள் முருங்கை, தவசி முருங்கை | உங்களுக்காக on WordPress.com

By vayal|Apr. 28th, 2017

வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன தாவரம் இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. முருங்கை, முள் முருங்கை, தவசி முருங்கை ஆகிய மூலிகைகள் குறித்துப் பார்ப்போம்.

நோயாளிகளுக்கு ஏற்ற முருங்கை அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒரு தாவரம் முருங்கை. இதை வீடுகளில் பலர் வளர்த்தாலும், பெரும்பாலோர் இதை உணவுக்குப் பயன்படும் ஒரு தாவரமாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், இது சிறந்த மருத்துவத் தாவரமும்கூட. சித்தர்கள், இதை ‘கிழவி’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். முருங்கை மூலம்தான் ‘உணவே மருந்து’ என்ற சித்த மருத்துவக் கோட்பாட்டைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். இலை, பூ, பிஞ்சு, காய், பிசின், வேர், பட்டை என அனைத்துமே மருந்தாகப் பயன்படுவதால், முருங்கைக்கு ‘பூலோக கற்ப விருட்சம்’ எனும் பெயரும் உண்டு. அனைத்து நோயாளிகளும் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள் முருங்கைதான். அதேபோல, சித்த மருத்துவத்தில் அனைத்து மருந்துகளுக்கும் ஒத்துப்போகக்கூடியதும் இதுதான்.

‘கார்த்திகை மாசத்துக் கீரையைக் கணவனுக்குக் கொடுக்காமல் தின்பாள்’, ‘கார்த்திகை மாசத்துக் கீரையில் நெய் ஒழுகும்’ என முருங்கை குறித்த சொலவடைகள் தென் மாவட்டங்களில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் இலைகள் இருந்தாலும், ஐப்பசி மாதம் பெய்யும் மழையைத் தொடர்ந்து, கார்த்திகை மாதம் மழை பெய்யும்போது, முருங்கையில் புதுத் துளிர்கள் வரும். அத்துளிர்களில், உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துகள், உலோக உப்புகள் ஆகியவை அதிகமாக இருக்கும்.  மரம் பூக்கத் தொடங்கியவுடன், காரத்தன்மையுடன் இருந்த சத்துப்பொருள்கள் அமிலத்தன்மைக்கு மாறத் தொடங்கும். அதனால், கீரையில் சுவை குறையும். இது அனைத்துக் கீரைகளுக்கும் பொருந்தும். எந்தக் கீரையாக இருந்தாலும், அதைப் பூப்பதற்குள் பறித்துச் சமைத்து உண்ண வேண்டும். 

முருங்கைக்குக் காமத்தைப் பெருக்கும் சக்தி இருக்கிறதா என்ற சர்ச்சை உண்டு. இந்தச் சர்ச்சைக்கு, பின்வரும் அகத்தியரின் குணவாகப் பாடலில் பதில் உள்ளது. 
‘தாளி முருங்கைத் தழை தூதனம் பசலை வானிலறு கீரையுநெய் வார்த்துண்ணில் – ஆளியென விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாம் கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்…’

– அகத்தியர் குணவாகம்


தாளிக்கீரை (ஒரு வகைக் கொடி), முருங்கைக்கீரை, தூதுவேளை, பசலை, அறுகீரை ஆகியவற்றில், ஏதாவதொரு கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து, சிறிதளவு பசு நெய் சேர்த்து தினமும் காலையில் மட்டும் நாற்பது நாள்கள் உண்டு வந்தால், ஆண்மை கட்டுக்கடங்காமல் பெருகும். கணவன் மேல் குறை கண்டுபிடித்து வீம்பு பேசிவரும் மனைவி மனம் மாறிக் கொஞ்சவும், கெஞ்சவும் தொடங்குவார்.

‘ஆண்மைப் பெருக்கி வணிகம்’ இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலகமெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாமையே இதற்கு மூல காரணம். உலகில் ஆண்மைப் பெருக்கி மருந்துகள் தயாரிக்க, கோடிக்கணக்கான சிட்டுக்குருவிகள், லட்சக்கணக்கான காண்டாமிருகங்கள், புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம். நாளிதழ்கள், பருவ இதழ்கள், தொலைக்காட்சிகள்… என அனைத்திலும் வெளியாகும் ‘லாட்ஜ் வைத்தியர்கள்’ பற்றிய விளம்பரங்கள் மூலமாகவே இந்த வணிகம் எவ்வளவு செழிப்பாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆண்மைக்குறைவை மையமாக வைத்தே கடைவிரிக்கும் இதுபோன்ற வைத்தியர்களிடம் ஏமாந்தவர்கள் ஏராளம் உண்டு. ஆண்மையைப் பெருக்க, நாமே சமைத்து உண்ணக்கூடிய மருந்து உணவுகள் ஏராளமாக உள்ளன.  தவிர, பாரம்பர்ய சித்த மருத்துவத்தில் அமுக்கரா லேகியம், மகா பூரணாதி லேகியம், அயப்பூநாகச் செந்தூரம் முதலான உயர்ந்த மருந்துகள் பலவும் உள்ளன. இவற்றைத் தேர்ச்சிபெற்ற சித்தமருத்துவர்களின் பரிந்துரைகள் மூலம் நியாயமான விலையில் வாங்கிச் சாப்பிட்டுப் பயன்பெறலாம். ஆயிரக்கணக்கில் கொள்ளை அடிக்கும் மருத்துவர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை. முருங்கை மரத்தின் பிசினை நிழலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத் தேக்கரண்டியளவு பொடியை, அரைத் தேக்கரண்டி கற்கண்டுப் பொடியுடன் சேர்த்து தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால், விந்து கெட்டிப்படுவதோடு  செயல்திறன் அதிகமுள்ள விந்தணுக்கள் உற்பத்தியாகும். அடிக்கடி சிறுநீர் கழியும் நோயும் குணமாகும்.

முருங்கை விதையை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். இந்த முருங்கை விதை, அநேக லேகியங்களில் சேர்க்கப்படுகிறது. முருங்கை விதையைப் பாலில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் செயல்படுதிறன் அதிகரிக்கும். ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூக்களைப் பசும்பாலில் போட்டுக் காய்ச்சி இரவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகுவதோடு, போக நேரமும் அதிகரிக்கும். 

முருங்கைப் பிஞ்சுகளைப் பறித்துச் சமைத்து தோலுடன் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணியும்; ஆண்மை பெருகும். 20 கிராம் முருங்கைப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து… மிளகு, சீரகம், உப்பு சேர்த்து சூப் தயாரித்துக் குடித்து வந்தால், முழங்கால் வலி குறையும். காய்ச்சலுக்குப் பின்வரும் சோர்வுக்கு இது மிகவும் சிறந்த மருந்து. முருங்கையின் வடமொழிப் பெயர் ‘சிக்குரு’. இந்தப் பெயரில், முருங்கை இலைப்பொடி கேப்சூல் வடிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நம் நாட்டிலிருந்து உலர் முருங்கை இலை ஏராளமாக ஏற்றுமதியாகிறது. மேற்கத்திய நாடுகள் பலவற்றில், இரும்புச்சத்துக் குறைபாடு நோய்களுக்கு, ஆங்கில மருந்துகளைப் புறந்தள்ளிவிட்டு முருங்கை இலைப் பொடியைத்தான் பயன்படுத்துகிறார்கள்.


முள் முருங்கை


முள் முருங்கையின் இன்னொரு பெயர், கல்யாண முருங்கை. இது, மூன்று மூன்று கூட்டிலைகளைக் கொண்ட உயரமாக வளரக்கூடிய மரம். வேலிகள், அமைக்கவும் மிளகு, வெற்றிலை போன்ற கொடிகளைப் படரவிடவும் முள் முருங்கை பயன்படுகிறது. இது, சிறந்த கால்நடைத் தீவனம். இதன் தண்டுப்பகுதிகளில் முட்கள் இருக்கும். மாசி, பங்குனி மாதங்களில் அழகிய சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கும். முருங்கையைப் போன்றே இதன் இலை, பூ, விதை, பட்டை ஆகியவை மருந்துக்குப் பயன்படுகின்றன.

முருங்கை    –    MORINGA OLEIFERA  

முள் முருங்கை, கல்யாண முருங்கை    –    ERYTHRINA SUOPEROSA  

முருக்கு, புரசு, பலாசு    –    BUTEA MONOSPERMA  

புனல் முருங்கை, நீர் முருங்கை, புல்லாவாரை    –    INDIGOFERA ARICULATA  

தவசி முருங்கை    –    JUSTICIA TRANQUELARIENIS

இதன் இலைகளைக் குறுக அரிந்து தேங்காய் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. இரண்டு, மூன்று மாதங்கள் வரை கூட மாதவிடாய் ஏற்படாது. அடிவயிறும் உடலும் பருத்துக் காணப்படுவார்கள். அதோடு, மாதவிடாய் சமயங்களில்  அதிகமான வயிற்றுவலி ஏற்படும். இதனால், குழந்தைப் பேறு தள்ளிப்போகும். இத்தகைய பிரச்னையுடைய பெண்கள், 5 மில்லி முள் முருங்கை இலைச்சாற்றை இளம்வெந்நீரில் கலந்து காலை, மாலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் 3 மாதங்கள் தொடர்ந்து குடித்துவந்தால், அனைத்துப் பிரச்னைகளும் சரியாகும். முள் முருங்கை இலைப்பொடி, பூப்பொடி ஆகியவற்றில் ஏதாவதொன்றை 2 கிராம் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் வெந்நீரில் கலந்து உண்டு வந்தாலும், மேற்குறிப்பிட்ட நோய்கள் குணமாகும். முள் முருங்கை விதைகள் அவரை விதை வடிவில் சற்றுப் பெரியதாக இருக்கும். இந்த விதைகளைத் தரையில் தேய்த்தால் சூடாகும். கிராமங்களில், குழந்தைகள் இவ்விதையைத் தேய்த்து, உடலில் சூடு வைத்து விளையாடுவார்கள். முள் முருங்கை விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்து மேல்தோல் நீக்கி, வெயிலில் காய வைத்து மெல்லிசாகப் பொடித்து, மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொடியில் 500 மில்லி கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து இரவு படுக்கப் போகும் முன் சாப்பிட வேண்டும். மறுநாள் காலையில், 5 மில்லி முதல் 10 மில்லி வரை விளக்கெண்ணெய் குடித்தால், பேதியாகி வயிற்றிலுள்ள கிருமிகள் வெளியேறும். முள் முருங்கைப் பட்டைச் சாறு கொண்டு செய்யப்படும் ‘கல்யாணச் சாரம்’ எனும் மருந்து, வயிறு மற்றும் சிறுகுடல் புண்களைக் குணமாக்கும். முள் முருங்கை இலைகள் மற்றும் பூக்களைப் போலவே உள்ள இன்னொரு மரம் பலாசு. இதை முருக்கு, புரசு என்றும் அழைப்பார்கள். தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும், இதன் இலை சற்று வலிமையாகச் சொரசொரப்புடன் இருக்கும். ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் ‘செந்தூரப் பூவே’ என்ற பாடல் காட்சியில் இப்பூக்களைத்தான் படமாக்கியிருப்பார்கள். இது காடுகளில் உயரமாக வளரக்கூடிய மரம். இதன் ஈர்க்கு மற்றும் குச்சிகளை யாகம் மற்றும் வேள்விக் குண்டங்களில் பயன்படுத்துவார்கள். இம்மரத்தின் கம்புகளை உடைத்துதான் கிராமங்களில் வீட்டுக்கு வெள்ளையடிக்க மட்டையாகப் பயன்படுத்துவார்கள். இதன் விதைப் பொடி, குடற்புழு நீக்கத்துக்கு நல்ல மருந்து. சித்தமருத்துவத்தில் ‘முருக்கன் விதை மாத்திரை’ எனும் மருந்து உள்ளது. சித்தமருத்துவரின் ஆலோசனை பெற்று இம்மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ ஒரு வேளை மட்டும் பயன்படுத்தி வயிற்றைக் கழுவி குடற்கிருமிகளை வெளியேற்றலாம்.

தவசி முருங்கை


தவசி முருங்கை, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் செடி. தண்ணீர் வளம் இருந்தால், இரண்டு அடி உயரம் வரை வளரும். தண்ணீர் வளம் இல்லாத பகுதிகளில் தரையில் படர்ந்து காணப்படும். இதன் பூக்கள் ஊதா நிறமாக இருக்கும். குழந்தை பெற்ற பெண்கள், 30 மில்லி தவசி முருங்கை இலைச் சாற்றை பனைவெல்லத்துடன் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் 3 நாள்களுக்குச் சாப்பிட்டால், குழந்தைப் பெற்றதன் அழுக்குகள் வெளியேறி, கருப்பை விரைவில் சுருங்கும். வயிறு தன்னிலைக்குத் திரும்பும். இதைப் பயன்படுத்திதான், நமது பாட்டிமார்கள் வயிறு விழாமல் வாழ்ந்து 16 பிள்ளைகள் வரை பெற்றிருக்கிறார்கள். இதன் இலை, தண்டு ஆகியவற்றை அப்படியே அரைத்து அடிபட்ட வீக்கம், காயம் ஆகியவற்றைன் மீது பூசினால், வலி குறைந்து காயம் விரைவில் ஆறும். 

புனல்  முருங்கை
தரைக்காடுகளிலும் மலையடிவாரக் காடுகளிலும் காணப்படும் ஒரு குறுமரம் புனல் முருங்கை. இதை நீர் முருங்கை, புல்லாவாரை என்றும் அழைப்பார்கள். இதில், ஊதா நிறத்தில் அழகிய மலர்கள் காணப்படும். இந்த இலைச்சாறு காதுவலித் தைலத்தில் சேர்க்கப்படுகிறது.

ADVERTISING

 
Reply all
Reply to author
Forward
0 new messages