துபாயில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவரின் உடல் சொந்த ஊருக்கு
ஈமான் அமைப்பின் முயற்சியால் அனுப்பி வைக்கப்பட்டது
துபாய் :
துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் தமிழகத்தைச் சேர்ந்தவரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
துபாய் நகருக்கு தமிழகத்தின் தேனி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி விசிட் விசாவில் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அவர் தனது அறையில் தங்கியிருந்த போது எதிர்பாராத வகையில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு கடந்த 12.12.2019 அன்று மரணமடைந்தார்.
இதனையடுத்து அவரது மனைவி லதா தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஈமான் அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையடுத்து ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமிது யாசின் ஆகியோரது ஆலோசனையின் பேரில் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஜெயக்குமார் உடலை இந்தியா கொண்டு சென்றார்.
இந்திய துணை தூதரகத்தின் உதவியின் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது மனைவி லதாவிடம் ஜெயக்குமார் உடலை ஒப்படைத்தார்.
பின்னர் அங்கிருந்து தேனிக்கு உடலை கொண்டு செல்ல சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சமியுல்லா மூலம் இலவச ஆம்புலன்ஸ் வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.
தனது கணவரின் உடலை கொண்டு வர உதவிய ஈமான் அமைப்பினருக்கு அவரது மனைவி நன்றி தெரிவித்தார்.
இந்த பணியில் ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், பிரியா, வெங்கட், அசிர் உள்ளிட்டோர் உதவியாக இருந்தனர்.