துபாய் ஈமான் அமைப்பின் தொடரும் மனிதாபிமான சேவை
ராசல் கைமாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் வேலை செய்து வந்தார். இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக விமான சேவை முடக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினரும், நிறுவனத்தினரும் இறந்தவரின் உடலையும், அவரது மனைவியையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியாமல் இருந்தனர்.
இது குறித்து ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்தை அணுகினர்.
சென்னைக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்படும் தகவல் கிடைத்ததும் இந்திய துணை தூதரகத்தின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டது. இந்திய கன்சல் ஜெனரல் விபுல் உத்தரவின் பேரில் கணவரது உடலும், அவரது மனைவியும் இன்று வெள்ளிக்கிழமை 08 மே 2020 மதியம் 2.45 மணிக்கு துபாயில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு விமானத்தில் கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச் செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்டோரின் ஆதரவுடன் இந்த பணிகள் செய்யப்பட்டது.
இதற்காக இறந்தவரின் மனைவியும், கம்பெனி நிர்வாகத்தினரும் ஈமான் அமைப்புக்கும், இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
கர்ப்பிணி பெண்
துபாயில் கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் விசிட் விசாவில் தனது கணவரைக் காண மகளுடன் வந்துள்ளார். அவரது கணவரின் வேலையில் பிரச்சனை ஏற்பட்டது.
மேலும் கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவ பிரச்சனைகளும் ஏற்பட்டது. இதனால் இங்குள்ள மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறினர். இந்த சூழ்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல உதவிட கேட்டுக் கொண்டார். இந்த பெண்ணின் தாயார் சென்னையில் இருப்பதால் அங்கு அனுப்பி வைக்குமாறு கூறினார்.
இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை 08 மே 2020 இரவு 7 மணிக்கு துபாயில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதற்காக அவரது குடும்பத்தினர் ஈமான் அமைப்புக்கு நன்றி தெரிவித்தனர்.
பிற உதவிகள்
ராசல் கைமாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வரும் வெளிநாட்டைச் நாட்டைச் சேர்ந்த டிரைவர் விபத்தில் பலியானார். அவரது உடலை அடக்கம் செய்ய என்ன விதிமுறைகள் என ஈமான் அமைப்பை தொடர்பு கொண்டு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் விபரம் கேட்டறிந்தார். அதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.
துபாய் உள்ள ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பங்களாதேஷ் ஊழியர் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். அந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் அவரது உடலை அடக்கம் செய்யவோ அல்லது சொந்த ஊருக்கு கொண்டு செல்லவோ என்ன விபரம் என்பது குறித்து ஈமான் அமைப்பை தொடர்பு கொண்டு கேட்டார். அதற்கான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
துபாய் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சீர்காழியைச் சேர்ந்தவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரை அடக்கம் செய்ய தேவையான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.
துபாய் ஹம்ரியா பகுதியில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். அவரது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு அவரது உடலை ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமா அல்லது துபாயிலேயே இறுதிச் சடங்கு செய்ய வேண்டுமா என்பதை கேட்டறிந்து தெரிவிக்க இந்திய துணை தூதரக அலுவலர் கேட்டுள்ளார். இது குறித்து அந்த குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது.