துபாய் ஈமான் அமைப்பின் மூலம் துபாயில் மரணமடைந்த மண்டபம் மீனவரின் உடல் நேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது
துபாய் ஈமான் அமைப்பின் மூலம் துபாயில் மரணமடைந்த மண்டபம் மீனவரின் உடல் இன்று வெள்ளிக்கிழமை 15.02.2019 அன்று சொந்த ஊருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஷார்ஜாவில் முருகன் கருப்பையா என்பவர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு வயது 50. அவர் நெஞ்சுவலி காரணமாக துபாய் அல் பரஹா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி 12.02.2019 அதிகாலை மரணமடைந்தார்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அவரது சகோதரர் களஞ்சியம் ஈமான் அமைப்புக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை தொடந்து துபாய் இந்திய தூதரகத்தின் உதவியுடன், ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், ஆகியோரது வழிகாட்டுதல் படி ஆலோசாகர்கள் அஷ்ரப், யஹ்யா முஹைதீன், செயற்குழு உறுப்பினர் ஜமால் மற்றும், இந்திய துனை தூதரகம் உள்ளிட்டோர் ஒத்துழைப்புடன் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் செய்திருந்தார்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த குடும்பத்தினர் மிகவும் வசதிக் குறைவாக இருப்பதால் விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊரான மண்டபத்துக்கு அனுப்பி வைக்க உதவிடவும் கோரினர்.
இதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞ்ர் சமியுல்லாவின் ஒத்துழைப்புடன் செஞ்சிலுவைச் சங்கத்தில் பேசப்பட்டது. அந்த சங்கத்தின் ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஈமான் அமைப்பின் இந்த மனிதாபிமான பணிகளுக்கு அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.