மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைத்தந்தை
கருமுத்து தியாகராஜர் செட்டியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
நிகழ்ச்சி மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் இரு தினங்கள் நடைபெற்றது.
முதல்நாள்
நிகழ்ச்சியில் நன்னெறியாவது எனும் தலைப்பில் பேரூர் ஆதீனம் இளைய பட்டம்
கையிலை மாமணி மருதாசல அடிகளார் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியது: இறைவனை அடைவதற்கு பல நெறிமுறைகள் இருக்கின்றன. அவை தொண்டு நெறி, வழிபாட்டு நெறி, அக வழிபாட்டு நெறி, நன்னெறி என்பன.
இவற்றுள் நன்னெறியே இறைவனை அடைய மிகச் சிறந்த நெறி என்று சைவ அறிஞர்கள் பலரும் ஏற்றுக்கொண்டு, பின்பற்றி வருகின்றனர்.
மேலும், மனிதனின் அக இருளைப் போக்குவதற்கு நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரமே துணை நிற்கும் என்றார்.
விழாவில்,
அடிகளாருக்கு கல்லூரித் தாளாளர் கருமுத்து தி.கண்ணன் பொன்னாடை
அணிவித்தார். கல்லூரிச் செயலர் உமா கண்ணன், காமராஜர் பல்கலைக்கழகப்
பதிவாளர் (பொறுப்பு) வெ.அழகப்பன், தமிழியல் துறைத் தலைவர் மு.மணிவேல்
உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தியாகராஜர் கல்லூரி
முதல்வர் சு.சுப்பிரமணியன் செய்திருந்தார்.
தமிழ்த்துறை
ஆய்வரங்கம்: தியாகராஜர் கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையத்தின்
ஆய்வரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறைப் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமை
வகித்தார்.
தமிழ்த்
துறை முனைவர் பட்ட ஆய்வாளர் செ.அஜீபா, சங்கத் தமிழரின் நீரியற்
தொழில்நுட்பம் என்ற தலைப்பிலும், இளநிலை ஆய்வாளர் மு.குருபாலன்,
தொல்காப்பியத்தில் அறம் என்ற தலைப்பிலும், முதுகலை இரண்டாமாண்டு மாணவர்
ச.அழகுசுப்பையா, நன்னடை ஒரு விவாத மொழிவு எனும் தலைப்பிலும் ஆய்வுக்
கட்டுரைகளை வாசித்தனர்.
ஆன்மிகப்
பயிற்சி முகாம்: பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம்
சார்பில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு
சிறப்பு ஆன்மிகப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மு.கண்ணன் தலைமை வகித்தார்.
பிரம்ம குமாரிகள் இயக்க ஆன்மிகப் பயிற்சியாளர் பி.கே.கோமதி மனமும் தியானமும் எனும் தலைப்பில் உரையாற்றினார்