ஆரம்பத்தில் வடக்கே சூரிய வம்சத்தினரும் தென்னாட்டில் சந்திர
வம்சத்தினருமே ஆண்டு வந்ததாய்ச் சொல்கின்றனர். சேரர் முதலிலும் பின்னர்
சோழர்களும் பாண்டியர்களில் இருந்தே பிரிந்ததாய்ச் சொல்லப் பட்டாலும்
சோழர்கள் தங்களை சூரிய குலத்தினர் எனச் சொல்லிக்கொள்கின்றனர். இது பற்றிய
உறுதியான சான்றுகள் தெரியவில்லை. பாண்டியர்கள் இந்த வைவஸ்வத மனுவின் வழி
வந்தவர்கள் எனச் சொல்லப் பட்டார்கள். அரசனுக்காக மஹாவிஷ்ணுவே மீனாக
அவதாரம் எடுத்து வந்து குலத்தையும் காப்பாற்றியதாலேயே பாண்டிய நாட்டுச்
சின்னமும் மீனாகச் சொல்லப் படுகின்றது எனவும் தெரிய வருகின்றது. இந்தப்
பாண்டியர்கள் ராமாயண காலத்திலேயும் இருந்ததாய் வால்மீகி தன் ராமாயணத்தில்
சொல்லி இருக்கின்றார். மஹாபாரத காலத்திலேயும் இருந்திருக்கின்றனர்.
அனைவரும் பேதங்கள் இன்றி சிவனையும், விஷ்ணுவையும் சமமாகவே வணங்கி
வந்திருக்கின்றனர். இவர்களுக்கு இந்திரனால் ஆசீர்வதிக்கப் பட்ட
மணிமுடியும், ரத்தினஹாரமும் பரம்பரைச் சொத்தாக இருந்து வந்திருக்கின்றது.
பாண்டிய அரசர்கள் அனைவரும் இந்திரனால் அளிக்கப் பட்ட ரத்தின ஹாரமும்,
மணிமுடியுமே கொண்டு தம் முடிசுட்டுவிழாவை நடத்திக் கொள்வார்கள். 



பாண்டிய அரசனுக்காக ஈசன் மச்சாவதாரத்தை எடுத்தார்






ippodhu..andha grudhumaal nadhi.......verum saakadaiyaaga (chennai koovam).....odik kodndirukkiradhu

விண்ணில் இருந்து இறங்கிய அந்த மாணிக்க விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும் அறுபத்து நான்கு சிவகணங்களும் தாங்கியதாய்ச் சொல்லுவார்கள். தொண்டர்களிலும் தொண்டனாக, அடியார்க்கு அடியானாக இன்றும் சித்ரா பெளர்ணமி தினத்தில் இந்திரன் வந்து வழிபட்டுச் செல்வதாய் ஐதீகம்.
நான் திக்விஜயம் சென்று எட்டுத்திக்குகளிலும் வெற்றியை நிலைநாட்டிவிட்டுத் திரும்புவேன். நீங்கள் இங்கே இருப்பீர்களாக!” எனச் சொல்லிவிட்டுத் தன் படைகளைத் திரட்டிக் கொண்டு, நால்வகைப் படைகளோடும் திக்விஜயம் சென்றாள் மீனாட்சி.
சென்ற அனைத்து இடங்களிலும் வெற்றி அடைந்த மீனாட்சி தன் சேனைகளோடு திருக்கயிலை வரையிலும் சென்றாள்.
அங்கே நந்தியோடு போர் செய்து சிவகணங்களையும் வென்றாள். அனைவரையும் வென்ற இந்தக் கன்னி யாரோ என அவளோடு பொருத அந்த ஈசனே நேரில் வந்தார்.
சிவகணங்களையே வென்ற கன்னிகையைக் கண்டு பொருத வேண்டி வந்த ஈசனைக் . கண்ட மாத்திரத்திலேயே தடாதகையின் தனங்கள் இரண்டாக ஆயிற்று.
மூன்றாவதாய் இருந்த தனம் மறையவே பிராட்டிக்கும் இவரே தன் கணவர் என்பதாய் உணர்ந்தாள். பின்பு பிராட்டியார் இவரை வெல்ல முடியாது என நாணி நிற்க, ஈசனோ,”நாம் வந்து உம்மை மணமுடிக்கின்றோம்.” எனச் சொல்கின்றார்.
அவ்வளவில் பிராட்டி மதுரை திரும்புகின்றாள்.
ஈசன் தான் இப்போது இருக்கும் கோலத்திலே போனால் சரியாக இராது என எண்ணி சுந்தரராக, அழகு வாய்ந்தவராயும், ஆடை, ஆபரணங்கள் பூட்டிக் கொண்டும், சோமசுந்தரராய் மாறி மதுரை சென்றடைய, நகரம் விழாக் கோலம் பூண்டது. தேவாதி, தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள மிகச் சிறந்த முறையிலே திருமண ஏற்பாடுகள் செய்யப் பட்டன. திருமணத்திற்குத் திருமால், பிரமன் முதலிய தேவாதி தேவர்கள் அனைவரும், பல்வேறு முனிவர்களும், ரிஷிகளும் வந்திருந்து சிறப்பித்தனர். ஊரே திருவிழாக் கோலம் பூண்டது. மதுரை மாநகரம் செய்த தவம் தான் யாதோ என மகிழ்ந்தனர் மக்கள் அனைவரும். முரசங்கள் ஒலிக்க, பேரிகைகள் ஆர்ப்பரிக்க, சங்குகள் முழங்க, இனிய கீதங்கள் இசைக்க, சுந்தரனாக வந்த ஈசனுக்கும், அன்னைக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பரஞ்சோதி முனிவர் அந்தக் காட்சியை,
“பண்ணுமின்னிசையும், நீரும்
தண்மையும் பாலும் பாலில்
நண்ணு மின் சுவையும் பூவும்
நாற்றமும் மணியும் அங்கேழ்
வண்ணமும் வேறு வேறு
வடிவு கொண்டிருந்தால் ஒத்த(து)
அண்ணலும் உலகம் ஈன்ற
அம்மையும் இருந்த(து) அம்மா” என்று பாடுகின்றார்.
திருமணச் சடங்குகள் நிறைவேறின. ப்ரமனே அவற்றைச் செய்து முடித்தார். மங்கலநாண் சூட்டப்பட்டது அன்னைக்கு.
அடுத்து அனைவருக்கும் விருந்து முறைப்படி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் பதஞ்சலியும், வியாக்ரபாதருமோ தினந்தோறும் அம்பலத்தில் கூத்தாடும் ஈசனின் திருநடனத்தைக் கண்டபின்னரே உணவு உட்கொள்ளும் வழக்கம். ஆகையால் தங்கள் திருநடனத்தைக் கண்டபின்னரே விருந்துக்குச் செல்வோம்.” என விண்ணப்பிக்க, ஈசனும் தன் கருணையால் அவர்களை மன மகிழச் செய்வதோடு, மதுரைக்குத் தனிச் சிறப்பும் கொடுக்க எண்ணினார்.
ஈசனின் கண்ணசைவின் பேரில் அங்கே வெள்ளியால் ஆன அம்பலம் ஒன்று தோன்ற, தடாதகையாகிய மீனாட்சி அன்பு பொங்கும் தன் திருக்கண்களால், ஆச்சரியத்துடன் நோக்கி இருக்க, ஈசன் திருநடனம் செய்து அருளினார். அன்னையின் முகத்தில் ஆச்சரியத்தோடு தோன்றிய குறுநகையும் விவரிக்க முடியாத செளந்தரியத்தோடு விளங்கியது.
Posted by கீதா சாம்பசிவம் at 4/04/2009 01:48:00 PM
என் மீனாட்சியை நீங்கள் பார்க்க வேண்டாம்? இந்த மடலுடன் இணைப்பினை
இணைக்க முடியவில்லை என்பதால் தனியே ஒரு மடல் அனுப்பியுள்ளேன். தயவு
செய்து அதைப் பார்க்கவும்.
நடராஜன் கல்பட்டு
> <http://2.bp.blogspot.com/_g9Ssbl03NHs/SdR6UCo_LjI/AAAAAAAACNc/oTPPKWM...>ஆரம்பத்தில்
திருநடனம் முடிந்ததும் விருந்துக்கு அனைவரும் சென்றனர். அனைவரும் உண்டபின்னரும், உணவுப் பொருட்களும், சமைத்த உணவும் மீந்து போகவே பிராட்டி ஈசனிடம் சென்று முறையிட்டார். ஈசனும் அன்னைக்குத் தன் திருவிளையாடல்களில் ஒன்றைக் காட்டி அருளவேண்டி, அருகே இருந்த குண்டோதரன் என்னும் சிவகணம் ஒருவனைப் பார்த்து, அவனுக்கு உணவளிக்குமாறு பிராட்டியிடம் சொல்ல, பிராட்டி இவன் ஒருவனால் அவ்வளவு உணவையும் உண்ண முடியுமா எனத் திகைக்க ஈசன் குறுநகை புரிந்தார். பிராட்டி கொஞ்சம் யோசனையுடனேயே குண்டோதரனை அழைத்துச் செல்ல அன்ன வகைகள், காய், கனிவகைகள், பால், தயிர் வகைகள் போன்ற அனைத்தையும் உண்டும் பசி தீரவில்லை எனச் சொல்ல, பிராட்டியார் பின்னர் தானியங்கள், காய்கள் போன்ற உணவு வகைகளைக் கொடுத்தும் பசி அடங்காமல் குண்டோதரன் தவிக்க, இறைவனிடம் சென்று முறையிட்டார்.
குண்டோதரன் வயிற்றில் இவ்வண்ணம் வடவைத் தீயை மூட்டிய இறைவனிடமே குண்டோதரன் நேரில் சென்று சொல்ல, தடாதகையைப் பார்த்து நகைத்த ஈசன், சற்றே யோக தியானத்தில் ஆழ்ந்து, அங்கே ஒரு மூலையில் நான்கு பெரிய அன்னக் குழிகளை உண்டாக்க, அவற்றில் தயிரன்னம் நிறைந்திருக்கக் கண்டனர் அனைவரும். குண்டோதரன் அவற்றை உண்ணப் பசியாறினான். பின்னர் தாகத்தினால் வருந்தி, நகரில் உள்ள குளங்கள், நீர்நிலைகள், ஓடைகள், கிணறுகள் ஆகிய எல்லாவற்றின் நீரையும் அருந்தியும் தாகம் அடங்காமல் தவிக்கவே, ஈசன் தன் சடாமுடியின் கங்கையை மதுரையின் ஒரு பக்கம் நதியாக ஓடி வரும்படி ஆணையிட, கங்கையும் வையையாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றாள் மதுரையில்.
குண்டோதரனும் அந்த நீரைக் குடித்துத் தாகம் தணிந்தான். வையையின் வெள்ளப் பெருக்கைப் பரிபாடல் இவ்வாறு சுட்டுகின்றது. 
நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் 5
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
தாயிற்றே தண் அம் புனல். 10
பின்னர் பிராட்டியைப் பார்த்து ஈசன் நகைக்க, தன் தவற்றை உணர்ந்த அம்மையும் நாணித் தலை குனிந்தாள். தன் பிறந்த வீட்டின் பெருமையைப் போற்றும் விதமாய்த் தான் நடந்து கொண்டதையே ஈசன் மறைமுகமாய்ச் சுட்டினார் எனப் புரிந்து கொண்ட அன்னை, பின்னர் ஈசனோடு இனிதே வாழ்ந்தார். இதையே திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் கூறுகையில்,
"சடை மறைத்துக் கதிர் மகுடம் தரிந்து
நறுங்கொன்றையந்தார் தணந்து வேப்பந்
தொடை முடித்து விட நாகக் கலனகற்றி மாணிக்கச்
சுடர்ப்பூண் ஏந்தி விடை நிறுத்திக் கயல் எடுத்து
வழுதி மருமகனாகி மீன நோக்கின் மடவரலை
மணந்துலகம் முழுதாண்ட சுந்தரனை வணக்கம் செய்வாம்!"
இவ்விதம் சோமசுந்தரர் ஆகி ஈசன் நன்னாளில் முடிசூட்டிக் கொண்டு அரசாளுகின்றார். பாண்டிய நாட்டு அரசர்கள் அனைவருமே சுந்தரரிடம் மாறாத பக்தி பூண்டே இருந்து வந்திருக்கின்றனர். அரசர்கள் பலரும் ஈசனின் மாறாத திருவிளையாடல்களில் திளைத்திருக்கின்றனர். விக்கிரமபாண்டியன் என்பவனின் மகன் ராஜசிம்ம பாண்டியன், சோழ மன்னன் கரிகாலன் பரதம் தெரிந்தவன், என்பதால் தன்னைக் கேலி செய்வதை உணர்ந்து தானும் பரதம் பயின்றான். தீவிரப் பயிற்சியில் அவனுக்கு உடல்வலி ஏற்பட, ஈசன் சந்நிதியில் நடராஜரைக் கண்டு மனம் உருகினான். தான் பயிற்சி செய்யும்போது இவ்வளவு கஷ்டமாய் இருக்க, நடராஜர் தினம் தினம் ஆடுகின்றாரே? ஆடிக் கொண்டே இருக்கின்றாரே? அவருக்கு எவ்வளவு வலி எடுக்கும்? அதுவும் தூக்கிய திருவடியைக் கீழேயே இறக்கவில்லையே என எண்ணி ஏங்கினான்.
நடராஜர் சந்நிதிக்கு வந்து ஈசனை நோக்கித் துதித்து, "ஐயனே, தாங்கள் நின்ற திருவடியை எடுத்து வீசி, தூக்கிய திருவடியைக் கீழே ஊன்றி, அடியேன் காணும்படிக்குக் கால் மாறி ஆடவேண்டும். இல்லையே அடியேன் என்னை மாய்த்துக் கொள்வேன்," எனச் சூளுரைக்க, அவன் அன்புக்குக் கட்டுப்பட்டு, ஈசனும் வலப் பாதத்தை எடுத்து வீசி, இடப் பாதத்தை ஊன்றிக் கால்மாறி ஆடிக் காட்டினார்.
மன்னனும் மகிழ்ந்தான். அந்தக் காட்சியைப் பரஞ்சோதி முனிவர்,
"பெரியாய் சரணம்! சிறியாய் சரணம்!
கரியாகிய அங்கணனே சரணம்!
அரியாய் எளியாய் அடிமாறி நடம்
புரிவாய் சரணம்! புனிதா சரணம்!
நதியாடிய செஞ்சடையாய்! நகைவெண்
மதியாய்! மதியா தவர்தம் மதியிற்
பதியாய்! பதினெண் கணமும் பரவுந்
துதியாய்! சரணம்! சுடரே! சரணம்!
பழையாய்! பதியாய் சரணம்! பணிலக்
குழையாய் சரணம்! கொடுவெண் மழுவாள்
உழையாய் சரணம்! உருகா தவர்பால்
விழையாய் சரணம்! விகிர்தா சரணம்!'
என்றெல்லாம் பாண்டியன் போற்றித் துதித்ததாய்ப் பாடுகின்றார். அரசனின் விருப்பத்திற்கேற்ப இன்றளவும் நடராஜர் கால் மாறி ஆடிய திருக்கோலத்திலேயே வெள்ளியம்பலம் ஆகிய மதுரை மாநகரில் காட்சி அளிக்கின்றார்.
Posted by கீதா சாம்பசிவம் at 4/05/2009 01:26:00 PM
பாண்டிய மன்னர்கள் அனைவராலும் பராமரிக்கப் பட்ட மதுரையும், மாநகரின் இதயம் ஆன கோயிலும், கண்ணகியின் சீற்றத்தால் அழிக்கப் பட்டது. அப்போது கோயிலில் இருந்த சீத்தலைச் சாத்தனார் எந்தவிதப் பாதிப்புமின்றிச் சேரநாடு சென்று இளங்கோவடிகளைப் பார்த்துச் செய்திகளைச் சொன்னதாகக் கேள்விப் படுகின்றோம். பின்னர் பிற்கால அரசர்கள் பலரும் இந்தக் கோயிலைப்பாதுகாத்தே வந்திருக்கின்றனர். ஆனால் அந்நியப் படையெடுப்பின் போது மாலிக்காபூர் தமிழ்நாட்டின் மேல் கி.பி. 1310-ல் படை எடுத்து வந்தபோது கோயில் தரைமட்டமாக்கப் பட்டதாய்ச் சிலர் சொல்கின்றனர்.
அப்போது விஜயநகரப் பேரரசு எழும்பி இருந்த கால கட்டம். ஹம்பி என்ற பம்பா நகரில் இருந்து ஆட்சி புரிந்த ஹரிஹர புக்கர்களுக்கு உதவிய வித்யாரண்யர், மதுரை நகரையும், கோயிலையும் மாலிக்காபூரிடம் இருந்து காப்பாற்ற வேண்டி, ஹரிஹரபுக்கர்களின் சேனாபதியான கம்பன்னனை அனுப்பி வைக்கின்றார். அவன் உண்மையான சிவலிங்கத்தை மறைத்துவிட்டுப் பொய்யான லிங்கத்தை வைத்ததாயும், அன்னையின் திருவுருவும் மறைக்கப் பட்டதாயும் சொல்கின்றனர். அவன் மனைவி கங்காதேவி. (பம்பா ரசம் என ராமாயணத்தில் வருவது ஹம்பியைக் குறிக்கும். கன்னடத்தில் “ப” என்ற எழுத்து வரும் இடங்களில் எல்லாம் “ஹ” என்றே சொல்லுவார்கள்.) கம்பன்னன் மனைவியான கங்கா தேவி அவன் பிரயாணம் செய்த இடங்களுக்கெல்லாம் தானும் கூடவே சென்று அனைத்தையும் ஒரு காவிய நயத்தோடு எழுதி இருக்கின்றாள். சம்ஸ்கிருதப் பண்டிதையான அவள் எழுதிய மதுராபுரி விஜயம் நுணுக்கமான விஷயங்களோடு கூடியதாய் இருக்கின்றது. அதை எபிக்ராபிகல் துறையில் பதிப்பித்திருக்கின்றனர். முதன் முதல் பிரயாணக் கட்டுரை ஒரு பெண்ணால் அதுவும் மதுரையைப் பற்றி எழுதப் பட்டது.
(நன்றி= தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி)
தமிழுக்கும் பல்வேறு தொண்டுகள் புரிந்து வந்திருக்கின்றனர் பாண்டிய மன்னர்கள் அனைவரும். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பொற்றாமரைக் குளம் கோயிலினுள் இருந்திருக்கின்றது. அதிலே சங்கப் பலகையை மிதக்கவிட்டு, அதில் புலவர்களின் ஆக்கங்களை வைக்கப் படும். இலக்கணப் பிழை, சொல் பிழை, கருத்துப் பிழை போன்ற குற்றங்களோடு கூடிய ஆக்கங்களை அந்தப் பலகை ஏற்காது. உலகப் பொதுமறை என்று சொல்லப் படும் திருக்குறளைத் திருவள்ளுவர் ஒளவையின் உதவியோடு பொற்றாமரைச் சங்கப் பலகையில் வைத்தார். மற்ற நூல்களைத் தள்ளிவிட்டுத் திருக்குறளை மட்டும் சங்கப் பலகை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லுவார்கள்.
இப்போது பொற்றாமரையில் தண்ணீரும் இல்லை. திருநாள் சமயத்தில் தண்ணீரை நிரப்பிப் பொற்றாமரை ஒன்றை மிதக்க விடுகின்றார்கள். தண்ணீர் ஊறும் கிணறுகள் அனைத்தும் தூர்க்கப் பட்டு பொற்றாமரைக்குளத்தின் அடியில் சிமெண்டால் தளம் போட்டு நீர் ஊறி வருவது தடை செய்யப் பட்டுள்ளது.
பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் நாயக்கர் காலத்துச் சித்திரங்கள் இருந்தன. அவை காலத்தால் பழுதுபட அவற்றை முழுதும் நீக்கிவிட்டு இப்போது வேறொரு ஓவியரின் ஓவியங்களைக் காண முடிகின்றது. மற்றும் உள்ள சுற்றுச் சுவர்களில் திருவள்ளுவரின் 1330 திருக்குறளும் பொறித்து வைக்கப் பட்டுள்ளன. மதுரைச் செய்திகள் தொடரும். . விளம்பர இடைவேளை.
விளம்பரத்திற்கு ஸ்பான்ஸர் நானே தான்.
நாளை பொதிகை தொலைக்காட்சியில் கும்பாபிஷேஹச் சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள். உங்கள் கேபிள் ஆபரேட்டர் பொதிகையை ஒளிபரப்பினால்.
இது பழைய நாயக்கர் காலச் சித்திரங்களில் ஒன்று. கூகிளாரைக் கேட்டதில்
கொஞ்சம் கஷ்டப் பட்டே கிடைத்தது. இப்போ மதுரை மீனாட்சி கோயிலைப் பத்தின சில முக்கிய
தகவல்கள் இங்கே கொடுக்கப் போறேன். யாருப்பா அது? புதிரா, புனிதமாவுக்கு பதில்
எழுதறது? அவங்களுக்கு இங்கே சில டிப்ஸ் கிடைக்குமே. அந்த சாக்கிலேயாவது வாங்க.
:))))))))) அம்மன் கையிலே ஏன் கிளி இருக்குனு கேஆரெஸ் கேட்டிருக்கார் இல்லையா? நாம்
நம்மோட குறைகளை அம்மனிடம் சொல்லும்போது, அந்தக் கிளிதான் கேட்டுட்டு அதை அம்மனிடம்
சொல்வதாகவும், அம்மன் நம் குறைகளைத் தீர்க்க அது உதவுவதாகவும் ஐதீகம். மேலும் ஐயன்
பிரம்மதத்துவத்தைக் கைலை மலைக் குகையில் தனித்திருந்து அம்மைக்கு உபதேசித்தபோது
ஒளிந்திருந்து அதைக் கேட்ட கிளிக்குஞ்சு தான் பின்னால் சுகர் ஆகப் பிறந்தார்
என்பதும் தெரியும் தானே? அந்தக் கிளியாகவும் இருக்கலாம். அன்னைக்குத்
திருமணப்பரிசாய் ஐயன் திருக்கயிலையில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்கலாம்.
(இது என்னோட கற்பனை மட்டுமே) பொதுவாய்ச் சொல்லப் படுவது கிளி மூலம் நம் குறைகள்
தீர்க்கப் படும். கிளி சொன்னதைத்திரும்பச் சொல்லுமல்லவா? ஆகவே அன்னையிடம் நம்
முறையீடுகள் கிளி மூலம் கேட்கப் படுகின்றது.
அடுத்து இப்போ ஸ்வாமி
சந்நதிக்குப் போனவங்க எல்லாரும் சுந்தரேஸ்வரரை மட்டுமே பார்த்திருப்பீங்க இல்லையா?
ஆனால் அங்கே உள்ளேயும் ஒரு அம்மன் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மதுரைக்காரங்க எல்லாம் வாங்கப்பா, வந்து சொல்லுங்க, உங்களுக்குத் தெரியுமானு!
ஹிஹிஹி, நானும் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கேன், ஆனால் கருவறையில் இல்லை. 62-63
கும்பாபிஷேஹம் சமயம். அவ்வளவாய் நினைவிலும் இல்லை. ஆனால் அம்மனைப் பார்த்த
நினைவும், பிரியாவிடை இவள் என்று சொன்ன நினைவும் இருக்கு. உற்சவரோடும் பிரியாவிடை
வருவாள் ஆதலால், அதைப் பற்றிய ஐதீகத்தை அப்போது கேட்டு அறியவில்லை. இப்போது நண்பர்
ஒருவர் மூலம் அது கிடைத்தது. உங்களோடு பகிர்ந்து
கொள்கின்றேன்.
மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் ஆனதுமே அம்பிகை
தன் ஆட்சியைக் கணவனிடம் கொடுத்துவிடுகின்றாள் அல்லவா? அப்போது அவள் ஐயனுடனேயே
ஐக்கியம் ஆகிவிடுகின்றாள் என்றே சொல்கின்றனர். சிவனோடு ஐக்கியமான சக்தி சிவசக்தி
சிவத்தை விட்டுப் பிரிவது எங்கனம்? ஆகவே அங்கே சுந்தரேஸ்வரரோடு அவளும்
இருக்கின்றாள் கருவறையிலேயே.
ஆனால் அர்ச்சகர்கள் மட்டுமே காணமுடியுமாறு பிரதிஷ்டையின் அமைப்பு
உள்ளது. சக்தியானது வெளியே தெரியாது. ஒருத்தரிடம் இருந்த சக்தி வெளிப்படும்போதே
நாம் அறிகின்றோம் அல்லவா? ஆஹா, இவர் கிட்டே இத்தனை சக்தியா என்று? அவ்வாறே சிவனிடம்
உள்ள சக்தி மறைந்தே இருப்பதால் நம்மால் காணமுடியாதபடிக்குப் பிரதிஷ்டை
செய்திருக்கின்றனர். மனோன்மணி என்னும் பெயருடைய இவள் மறைப்பு சக்தியாக இருப்பதால்
நாம் இவளைக் காணமுடியாது. ஆனால் இப்போது கும்பாபிஷேஹத்திற்காக வெளியே
வந்திருப்பாள். வந்திருக்கின்றாள் எனவும் நண்பர் தகவல் அனுப்பி இருக்கின்றார்.
யாகசாலையில் பூஜையில் இவளை வைத்திருக்கின்றனர்.
இவளைக்
கும்பாபிஷேஹத்தின்போது நடக்கும் யாகசாலை பூஜைகளிலேயே காணமுடியும். மற்ற நாட்களில்
மீண்டும் மறைவிடம் சென்றுவிடுவாள். காணமுடியாது. இப்போது வந்து பூஜைகளில் இடம்பெற்ற
இவள் மீண்டும் வெளியே வருவது அடுத்த கும்பாபிஷேஹத்தின்போது மட்டுமே. உற்சவரோடு
வருபவள் உற்சவப் பிரியாவிடை. அவளை நாம் சாதாரணமாய் எல்லா உற்சவங்களிலும்
காணமுடியும். சிவத்தை விட்டு சக்தி பிரியாதவள் என்பதாலேயே எப்போதுமே சிவனுக்கு
அருகிலே சக்தியைப் பிரியாவிடை உருவில் தரிசிக்கின்றோம். மெயிலிலே வந்த இவளை உங்களோட
பகிர்ந்துகொள்ளுவதற்குள் கொஞ்சம் கஷ்டமாய்ப் போச்சு. Your brouser may not support
அப்படினே செய்தி கொடுத்துட்டு இருந்தது. ஒருவழியாப் போட்டிருக்கேன். பப்ளிஷ்
கொடுத்ததும் தான் தெரியும் வண்டவாளம், தண்டவாளத்தில் ஏறாமல் இருக்கானு.
பிரியாவிடை படம் உதவி, மற்றும் யாகசாலைக் குறிப்பு உதவி: நன்றி, திரு அனந்தபத்மநாபன் அவர்களுக்கு.
பஞ்ச சபைகளிலும் உள்ள நடராஜ மூர்த்தங்களில் மதுரை கால்மாறி ஆடிய நடராஜ மூர்த்தமே பெரிய மூர்த்தம் ஆவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி ஆகிய தலங்களில் சிறிய பஞ்சலோக வடிவிலேயே காணலாம். குற்றாலத்தில் ஓவியமாய்க் காட்சி அளிப்பார். அதுவும் இன்று அழியும் நிலையில் காணப் படுகின்றது. இங்கே மட்டுமே சிலா விக்ரஹமாய்ப் பெரிய வடிவில் காண முடியும். பத்துக் கரங்களுடனே ஆயுதங்கள் ஏந்திக் காட்சி தருகின்றார். உற்சவ நடராஜர் தையாக இருப்பார். சபையை சமீபத்திலே தான் வெள்ளியால் அலங்கரித்தனர். தனிவாசல் எப்போதும் உண்டு. சிவகாமி உடன் இருக்கின்றாள். பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் வணங்கியபடி இருக்கின்றார்கள். இந்த நடராஜர் சந்நிதிக்கு எதிரே நின்று கொண்டால் ஒரே நேரத்தில் உள்ளே மூலஸ்தானத்தில் உள்ள சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் தரிசிக்க முடியும்.
இதற்கு முன்னர் நடந்த கும்பாபிஷேஹங்கள், ருத்ரோத்காரி ஆண்டு, ஆனிமாதம் 17-ம் தேதி புதன்கிழமை 1-7-1923-ம் ஆண்டிலும், அதன் பின்னர் பல வருஷங்கள் கழித்து, பெரும் முயற்சியின் பேரில் சோபகிருது ஆண்டு, ஆவணி மாதம் 12-ம் தேதி புதன்கிழமை 28-8-19663-ம் ஆண்டிலும், (இந்தக் கும்பாபிஷேஹம் மட்டும் தான் நான் பார்த்தது) அதன் பின்னர் ஆனந்த வருஷம், ஆனி மாதம் 12-ம் தேதி புதன்கிழமை 26-6-1974-ம் ஆண்டிலும், யுவ ஆண்டு, ஆனி மாதம் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை, 7-7-1995-ம் ஆண்டிலும் கும்பாபிஷேஹங்கள் நடைபெற்றன.
பதினேழாம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப் பட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பம் கட்டும்போது தோண்டக் கிடைத்தவரே இங்கே இப்போது பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் முக்குறுணி விநாயகர். இந்த விநாயகருக்கு ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் மூன்று குறுணி அரிசியால் ஒரே மோதகம் செய்யப் பட்டு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப் படும். கூன்பாண்டியன் என்றழைக்கப் பட்ட சுந்தரபாண்டியன் காலத்தில், திருஞானசம்பந்தர் அருளால் பாண்டியன் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறினான். அப்போது மன்னன் கூனை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக்கிய திருஞான சம்பந்தர் மடப்பள்ளிச் சாம்பலை வைத்தே மன்னனின் பிணி தீர்த்ததால்,கோயில் மடப்பள்ளி சாம்பல் அம்மன் சந்நிதிக்கு முன்னும், சொக்கநாதர் என்றழைக்கப் படும் சுந்தரேசன் சந்நிதி போகும் வழியிலும் வைக்கப் பட்டு அனைத்து பக்தர்களாலும் அணியப் படும். இது தவிரவும் தன் பக்தன் ஆன பாணபத்திரன் என்பவனுக்காக இசை வாதில் இறைவனே நேரில் வந்து உதவிய திருவிளையாடலும், மேலும் பாணபத்திரனுக்குப் பொருளுதவி செய்யவேண்டி, ஈசனே சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பதிகம் எழுதிக் கொடுத்துப் பொன்னும் பொருளும் பெற உதவினார். ஏழை அந்தணன் ஆன தருமிக்காகப் பாட்டு எழுதிக் கொடுத்ததும், ஈசனே ஆனாலும், பாட்டில் பொருட்குற்றம் கண்டு பிடித்து, "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம், குற்றமே!" என நக்கீரர் என்னும் புலவரைச் சொல்ல வைத்துத் தமிழுக்குப் பெருமை சேர்த்ததும் இங்கேயே தான்.
சதா என்றால் எப்போது என்ற பொருள் தோன்றும். சதா சிவம் எப்போதும், எங்கேயும் எங்கே பார்த்தாலும் சிவமே. எதைக் கேட்டாலும் சிவமே. அத்தகைய சதாசிவத்தின் சிலை, சிவசிவ என்னும் மந்திர ஒலியின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட சிலை, இங்கே உள்ள அம்மன் கோபுரத்தில் உள்ள சதாசிவம் சிலை. ஏழு நிலைகள் கொண்ட அம்மன் கோபுரத்தின் அம்மன் சந்நிதிக்குச் செல்லும் வழியில் இந்த கோபுரத்தில் இந்தச் சிலை காணக் கிடைக்கும். அம்மை தன் அருளைக் காட்டிய அற்புதங்கள் பல இங்கே நிகழ்ந்திருக்கின்றன. திருச்செந்தூர் ஷண்முகனின் அருளால் பேசும் திறமை பெற்ற குமரகுருபரர், காசிக்குச் செல்லும் வழியில் மதுரை வந்தார்.
கோயிலுக்கு வந்து மீனாட்சியை வணங்கிய அவர் மீனாட்சியைச் சிறுபெண்ணாய்க் கண்டு, அவள் அழகிலும், கண்ணொளியிலும் மயங்கிப் போய் இத்தனை அழகா இந்தக் குழந்தை என வியந்து, பிள்ளைத் தமிழ் பாடி, அவளைச் சீராட்டிப் பாராட்டினார். அவர் மலயத்துவஜன் பெற்ற பெருவாழ்வாகிய அன்னையைப் பாடி அழைத்ததைக் கேட்ட அன்னை, ஒரு சிறு பெண்ணின் வடிவிலேயே வந்து பாடலைக் கேட்டுவிட்டுத் தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை எடுத்து அவருக்கு அணிவித்தாள். ஒரு சிலர் அப்போது அவையில் இருந்த மன்னனின் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி அணிவித்ததாயும் சொல்லுவார்கள். அம்மையைக் குறிப்பிட்டு குமரகுருபரர் பாடிய நிகழ்ச்சிகள் அம்மன் சன்னதியைச் சுற்றி உள்ள ப்ரஹாரச் சுவர்களில் சிற்பங்களாய் உள்ளன. குமரகுருபரருக்கு அன்னை குழந்தையாய் வந்து மாலை அணிவித்தது அம்மன் சந்நதிக்கு முன்னே உள்ள மண்டபத்தில் சித்திரமாய்த் தீட்டப் பட்டிருக்கும்.
கவிநயாவின் பதிவில் அன்னையில் கால் சிலம்பில் மாணிக்கமா, முத்தா என்ற பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது. அவள் கால் சிலம்பில் முத்தோ, மாணிக்கமோ? அவள் சிரித்தால் முத்துக்கள் தோற்கும். அவள் ஒளியில் மாணிக்கம் முன்னே நிற்க முடியாது. அவள் அருளில் இந்திரலோகத்துக் காமதேனுவையும், அமுதசுரபியையும் விட அதிகமாய்க் கிடைக்கும்.
அவள் கண்ணாட்சியால் கண்களை இமைக்காவண்ணம் இருந்து மீன் எப்படித் தன் குஞ்சுகளைக் காக்கின்றதோ அம்மாதிரி நம்மைக் காத்து வருகின்றாள். அதனாலேயே அவளுக்கு மீனாட்சி என்ற பெயர். ஈசனின் மனோன்மணியாக வாசம் செய்யும் இவள் சியாமளாவாக ஏற்கெனவேயே வாசம் செய்து கொண்டிருந்தாள். ஆகவே இவளுக்கு சியாமளா என்ற பெயரும் உண்டு. மனோன்மணி என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலில் பின்பற்றப் படும் ஆகமங்கள் காரண, காமிக ஆகமங்கள் ஆகும். திருமலை நாயக்கரின் அமைச்சர் ஆன நீலகண்ட தீட்சிதர் வகுத்துக் கொடுத்த முறைப்படி வழிபாடுகள் இன்றளவும் நடந்து வருகின்றன. எட்டுக்கால பூஜைகள் நடக்கின்றன. திரு அனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகால சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என எட்டுக்காலங்களிலும் வழிபாடுகள் நடக்கின்றன. அரசியான இவளுக்கு முதல் மரியாதைகள் செய்து வழிபாடுகள் முடிந்தபின்னரே மாமனார் வீட்டு மாப்பிள்ளையான ஈசனுக்கு காலபூஜைகள் நடைபெறும். அதுபோல் பொது மக்களும் முதலில் மீனாட்சியைத் தரிசித்துவிட்டே சொக்கரைத் தரிசிப்பார்கள்.


படங்களைச் சேர்த்துட்டேன், சரி, ஆனால் இடையில் சொருகுவது எப்படி?? அது வரலை!
2009/4/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>
Faculty of Engineering & Technology,
School of Civil Engineering,
SRM University,
Chennai-603 203.
2009/4/16 venkatesh venkat <venkat...@gmail.com>
2009/4/16 jayashree shankar <jayas...@gmail.com>
2009/4/15 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
Venkatesh, Programmer.
|
Pathivu Toolbar ©2009thamizmanam.com
|
பொற்றாமரையின் தோற்றம். படம் உதவி: ஜெயஸ்ரீ! நன்றி.
1330-ம் ஆண்டு அந்நியர் படை எடுப்பின் போது மீனாட்சி கோயில் கருவறை மூடப் பட்டது. அதன் பின்னர் கிட்டத் தட்ட நாற்பத்தி எட்டு ஆண்டுகள் மூடப் பட்டே இருந்தது கருவறை. மீனாக்ஷி அம்மன் சிலையையும், சொக்கநாதர் சிலையையும் உடைக்க முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது. கோயில் அறங்காவலர்கள், சிவலிங்கத்தை மூடி, அதன் மேல் கிளிக்கூண்டை நிறுவி மணலையும் பரப்பி விட்டனர். கருவறை வாசல் கல் சுவரால் மூடப் பட்டிருந்தது. அர்த்த மண்டபத்தில் வேறொரு சிலையை வைத்திருக்க அதுதான் சுந்தரேஸ்வரர் சிலை என நினைத்து அந்நியர்கள் அந்தச் சிலையை உடைத்து நொறுக்கினார்கள்.
அந்தச் சிலை தற்போது ஸ்வாமி சந்நதி வெளிப்பிரஹாரத்தில் வைக்கப் பட்டுள்ளது, மிகச் சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். கிட்டத் தட்ட 48 ஆண்டுகளுக்கு மேல் மூடப் பட்டுக் கிடந்த கோயில் அதன் பின்னர் கம்பன்னன் காலத்திலே தான் அந்நியர் விரட்டப் பட்டுத் திறக்கப் பட்டது. அப்போது மூலஸ்தானக் கருவறையில் இருந்து சந்தனத்தின் மணத்தோடு, சிவலிங்கத்தின் இருபக்கமும் ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்குகளும் அணையாமல் எரிந்து கொண்டிருந்தன எனப் பதிவு செய்யப் பட்டிருக்கின்றது.
இப்போது கோயிலின் ஒவ்வொரு மண்டபமாய்ப் பார்க்கலாமா? முதலில் அஷ்ட சக்தி மண்டபம். கிழக்கு கோபுரத்தின் வழியாக வரும்போது முதலில் வரும் இந்த மண்டபம். இது முதலில் அன்னதான மண்டபமாய் இருந்து வந்திருக்கின்றது. பின்னர் கோயிலுக்கு வெளியே தெற்காவணி மூலவீதியில் சோற்றுக்கடைகள் ஏற்படுத்தப் பட்டு அன்னதானம் அங்கே நடந்தது. அந்தப் பக்கம் ஒரு தெருவே சோத்துக்கடைத் தெரு என்ற பெயரில் உண்டு. இப்போத் தெரியலை. இந்த அஷ்ட சக்தி மண்டபத்தில் இடப்பக்கம் உள்ள தூண்களில் கெளமாரி, ரெளமாரி, வைணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரின் சிற்பங்களும், வலப்பக்கம் உள்ள தூண்களில் யக்ஞரூபிணி, சியாமளை, மஹேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் சிற்பங்களும் பல்வேறு அழகான வண்ண ஓவியங்களும், (இப்போ இருக்கா) சிலைகளும் இருந்தன. சிலைகள் கட்டாயம் இருக்கும். ஓவியங்கள் பத்தித் தெரியலை.
அடுத்து நாங்கல்லாம் யாளி மண்டபம்னு சொல்லுவோம். அந்த மண்டபத்தின் பெயர் மீனாட்சி நாயக்கர் மண்டபம் என்ற பெயராம். அஷ்ட சக்தி மண்டபத்தை அடுத்து உள்ள இந்த மண்டபத்தில் உள்ள தூண்கள் அனைத்தும் 22 அடி நீளம் கொண்டவை, 110 தூண்கள் போல் இருக்கின்றன. ஒவ்வொரு தூணிலும் யாளியின் உருவமே காணப்படும். மண்டபத்தின் மேல் விட்டத்தில் ராசி சக்கரம் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். பார்க்கவே இல்லையே, போகும்போது பார்க்கணும். திருமலை நாயக்கரின் அமைச்சர் ஆன மீனாக்ஷி நாயக்கர் என்பவரால் கட்டப் பட்டதாம் இந்த மண்டபம். இந்த ராசிச்சக்கரம் இருக்கும் இடத்திலே உள்ள திருவாட்சியில் தான் 1008 எண்ணெய் விளக்குகள் அமைந்திருக்கின்றன. திருவாட்சி வளைவு 25 அல்லது 30 அடி உயரம் இருக்கலாம். திருவாட்சியின் முன் மேல்பாகக் கூரையிலே தான் சதுரக் கட்டம் கட்டி ராசிச் சக்கரம் இருக்காமே. பார்க்கணும்.
முதலிப்பிள்ளை மண்டபம்: ஹிஹிஹி, வேறே ஒண்ணும் இல்லை, மதுரை மக்களே, நம்ம இருட்டு மண்டபத்தைத் தான் இப்படிச் சொல்றாங்க. 1963-ல் (அட, நாம பிறந்துட்டோமே???) கடந்தை முதலியார் என்பவரால் கட்டப் பட்டது இந்த இருட்டு மண்டபம். இங்கே பிக்ஷாடனர் சிலையும், மோகினியின் சிலையும் நல்ல அமைப்புடன் வடிவமைக்கப் பட்டிருப்பதாய்ச் சொல்லுவார்கள். பார்க்கலை, பார்க்கணும். அடுத்து
ஊஞ்சல் மண்டபம்: வெள்ளியினால் ஆன சிறு ஊஞ்சலில் அம்மையும், அப்பனும் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்பார்கள்.
எதிரே பொற்றாமரைக்குளத்தைப் பார்த்த வண்ணம் ஆடுவாங்க. ராணி மங்கம்மாள் இந்த ஊஞ்சல் மண்டபத்தைக் கட்டியதாய்ச் சொல்லுவார்கள். பொற்றாமரைக் கரையின் மேற்கே அமைந்துள்ளது இது.
கிளிக்கூட்டு மண்டபம்: கிளிக்கூண்டு பெரியதாய் இருக்கும் இந்த மண்டபத்தில் முன்பெல்லாம் கிளிகள் அடைத்து வைக்கப் பட்டிருக்கும். கிளிகளிடம் போய், “மீனாக்ஷி எங்கே?” என்றாலோ, “மீனாக்ஷியைக் காணோமே!” என்றாலோ, கீகீகீகீ என்று கத்திக் கொண்டு சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டு பறக்கும். எப்படியும் கூண்டில் அடைபட்டிருக்கும் கிளிகள் பறக்கவே முயலும் என்றாலும் மீனாக்ஷி பெயரைச் சொன்னால் பறக்கும் என்ற அளவுக்குப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கும். எதிரே பொற்றாமரைக் காற்று வாங்கிக் கொண்டு, இந்தக் கிளிகளோடு பொழுது போக்குவது ஓர் அற்புத அனுபவம் ஆகும். இப்போ கிளிகள் இல்லை. கூண்டையும் எடுத்துட்டதாய்க் கேள்வி. சரியாப் பார்க்க முடியலை 2007-ல் டிசம்பரில் போயிட்டு மீனாக்ஷியையும் பார்க்கலை, கூண்டையும் பார்க்க முடியலை. கூட்டத்தை மட்டும் பார்த்துட்டு வந்தோம். கோயிலே அந்நியத் தன்மையோடு தனிமைப் பட்டு இருப்பதாய் என்னுடைய உணர்வு. இந்தக் கிளிக்கூண்டு மண்டபத்தில் கல்லால் ஆகிய பந்து ஒன்றை வாயில் வைத்திருக்கும் சிலை, யாளி அல்லது புருஷா மிருகம் இருக்கிறது. இப்போவும் இருக்கும். சரியாய் நினைப்பில்லை.
அடுத்துச் சிற்பங்கள் நிறைந்த கம்பத்தடி மண்டபம். மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணக் காட்சியைக் கூறும் சிற்பமும், காலாந்தக மூர்த்தியான ஈசன், தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்லும் சிற்பமும், நடராஜரும், இராவணன் கைலை மலையைப் பெயர்த்தெடுக்கும் முயற்சியைக் கூறும் சிற்பமும், சக்கரதரராய்க் காட்சி அளிக்கும் மூர்த்தியும் ரிஷபாரூடரும், அரியும், சிவனும் ஒன்றே என்னும் அற்புதத் தத்துவத்தை எடுத்துக் கூறும் ஹரிஹரர்களின் சிற்பமும், சண்டேஸ்வரரும், பிக்ஷாடனர், ருத்ரர், ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனன், ஸோமாஸ்கந்தர் எனக் கலையம்சங்களுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம்.
அடுத்து சுந்தரேஸ்வரருக்கு எதிரே அவரைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் நந்தியின் உருவச் சிலை உள்ள வீர வசந்தராயர் மண்டபம்.
ஆயிரக்கால் மண்டபம்.
985 தூண்களே இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. 1509-ம் நூற்றாண்டில் தளவாய் அரியநாத முதலியாரால் கட்டப்பட்ட இம்மண்டபம் சிற்பக் கலைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து இன்று தொல்பொருள் இலாகாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. இந்த மண்டபம் ஒரு ரதம் வடிவில் உருவாக்கப் பட்டிருக்கின்றது. இரு யானைகள் இழுக்கும் இந்த ரத மண்டபத்தில் இப்போது ஒரு கண்காட்சியும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது.
இந்த மண்டபத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிற்பங்களாய், அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் லோகிதாசனைச் சுமந்து நிற்கும் சந்திரமதியும், கண்ணப்பநாயனார் கதையும் அருமையாய் உருவாக்கப் பட்டுள்ளது. இதைத் தவிர கோயிலின் மிகப் புராதனமான பகுதியாக ஸ்வாமி சந்நதி சொல்லப் படுகின்றது. இங்கே உள்ள விமானம் இந்திர விமானம் என்றும் இந்தச் சந்நதியும், மதுரை நகரும் 3,000 வருஷங்களுக்கும் முற்பட்டவை என்றும் சொல்லப் படுகின்றது.
ஆயிரங்கால் மண்டபத்திற்குத் தென்பாகம் பல வருஷங்கள் கழித்து 1960-63-ம் வருஷத் திருப்பணியையும், கும்பாபிஷேகத்தையும் குறிக்கும் வண்ணம் ஏற்படுத்தப் பட்டது மங்கையர்க்கரசி மண்டபம். இந்த மண்டபத்தில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார், கூன் பாண்டியன், திருஞானசம்பந்தர் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன.
எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று திருக்கல்யாண மண்டபம். வருஷா வருஷம் மீனாக்ஷி இங்கே தான் கல்யாண உற்சவம் காணுகின்றாள். நவராத்திரியில் முன்பெல்லாம் இங்கே பல்வேறு சங்கீத வித்வான்கள், சங்கீத உபன்யாசகர்கள், மடாதிபதிகள் ஆகியோரின் கச்சேரிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். இந்தக் கல்யாண மண்டபத்தின் கூரைப் பகுதியில் ஓவியங்களும், சிற்பங்களும் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.
கோயிலுக்கு வெளியே
கீழ வாசல் வழியாக வந்தோமெனில் கிழக்கு கோபுரத்துக்கு எதிரே வசந்த மண்டபம் என்று நாயக்கர் காலத்தில் சொல்லப் பட்ட புதுமண்டபம் இருக்கின்றது. இங்கேயும் சிற்பங்களின் அழகும், வேலைப்பாடுகளும் கண்ணையும், கருத்தையும் கவரும். ஆனால் இப்போது மட்டுமல்ல, எப்போதென்று தெரியாத காலத்தில் இருந்தே, புத்தகக்கடைகளும், பாத்திரக் கடைகளும் ஆக்கிரமித்துக் கொண்டு, சிற்பங்களின் அழகைக் காணமுடியாமல் தடுத்து வருகின்றது. ஒரு முறை கடைகளை எல்லாம் எடுக்கவேண்டும் எனக் கடும் முயற்சி எடுத்தும், அது முடியாமல் இப்போது அங்கே கடைகளைத் தவிர, கூட்டத்தைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற அளவுக்கு ஆகி இருக்கிறது.
இந்தப் புதுமண்டபம் திருமலை நாயக்கரால் உருவாக்கப் பட்டது. இங்கே 335 அடி நீளம், 105 அடி கலம் 25 அடி உயரம் உள்ள இந்த மண்டபத்தில் 124 தூண்கள் உள்ளன. நான்கு வரிசையாக உள்ள இந்தத் தூண்களில் அழகிய சிற்பங்கள் இருக்கும். மண்டபத்தின் நடுவில் நாயக்கர் வம்சத்து அரசர்கள் சிலைகள் காணப் படும்.
புது மண்டபத்திற்கு எதிரே முற்றுப் பெறாத ஒரு கோபுரத்தின் அடித்தளம் இருந்தது. இப்போ இருக்கா இல்லையானு மதுரை மக்கள் வந்து சொல்லுங்கப்பா. அதை ராய கோபுரம் எனச் சொல்லுவார்கள். அந்தப் பக்கம் தான் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க் கடையின் கிளையும் இருக்கிறது. அல்வா கிடைக்கும். மேலச் சித்திரை வீதியில் இதன் தலைமை அலுவலகம் மற்றும் தலைமைக் கடை. மதியம் 12 மணியில் இருந்து 2 மணிக்குள்ளாக உருளைக் கிழங்கு கார மசாலா சுடச் சுடக் கிடைக்கும். 2-01-க்குப் போனால் கூடக் கிடைக்காது.
மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் சேரும் முனையில் கோபு ஐயங்கார் கடையில் மதியம் 2 மணியில் இருந்து 4 மணிக்குள்ளாக பஜ்ஜி சூடாய்க் கிடைக்கும். இதுவும் 4 மணிக்குள்ளாகப் போனாலே கிடைக்கும். எனக்குத் தெரிஞ்சு இவை இரண்டுமே அந்த நாள் முதல் இந்த நாள் வரை எதுவும் மாறவில்லை என்ற பாட்டைப் பாடிக் கொண்டு தலைமுறைகளையும் தாண்டிக்கொண்டு நின்றிருக்கின்றன. இதிலே கோபு ஐயங்கார் கடையிலே முன்பிருந்தவர்கள் இருக்கிறாங்களா தெரியாது, ஆனால் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க் கடை தொடர்ந்து ஒரே குடும்பத்தால் நிர்வகிக்கப் பட்டு வருகின்றது. அதனால் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றவை மாறி விட்டன.
மதுரை நகருக்குள்ளேயே பஞ்ச பூதத் தலங்களும் உள்ளன. அவை
மதுரை மீனாக்ஷி கோயில் ஆகாயத் தலம்
முக்தீஸ்வரர் கோயில்- வாயுத் தலம்
செல்லூர் திருவாப்புடையார் கோயில்-நீர்த்தலம்
இம்மையில் நன்மை தருவார் கோயில்-பூமித்தலம்
தென் திருவாலவாய் ஸ்வாமி கோயில்- அக்னித் தலம் ஆகியவை ஆகும்.
மதுரையின் தெருக்கள் பெயர்கள். கோபுர வாயில்களைக் கடந்து சென்றோமானால் உள்ளே வெளியில் இருக்கும் பிரஹாரம் ஆடி வீதி என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது. கீழ ஆடி வீதி, மேல ஆடி வீதி, தெற்காடி வீதி, வடக்காடி வீதி போன்றவை அவை. கோபுரங்களுக்கு வெளியே அவற்றைச் சுற்றி உள்ள வீதிகள் சித்திரை வீதி என்ற பெயரால் அழைக்கப் படுகின்றன. மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி, தெற்குச் சித்திரை வீதி, கீழச் சித்திரை வீதி போன்றவை. கோயிலில் வழிபாடுகள் செய்யும் அர்ச்சகர்களை மதுரையில் பட்டர்கள் என அழைக்கப் படுவார்கள். பெருமாள் கோயில் பட்டாசாரியார்கள் இல்லை இவர்கள். அதே போல் மற்ற சிவன் கோயில்களின் சிவாசாரியார்களும் இல்லை. இவர்களுக்கெனத் தனியாகக் கோயிலை ஒட்டியே வடக்கு கோபுர வாயிலுக்கு எதிரே இரு வீதிகள் உண்டு. மேலப் பட்டமார் தெரு, கீழப் பட்டமார் தெரு என்பவை அவை. சிலர் வடக்காவணி மூல வீதியிலும் வசித்தனர்.
சித்திரை வீதிகளை அடுத்து ஆவணி வீதி. அவையும் நான்கு திசைகளைக் குறிக்கும். அடுத்துத் தேரோட்டமும், முக்கியத் திருவிழாவான சித்திரைத் திருநாளில் ஸ்வாமி வீதி உலா வரும் வீதியுமான மாசி வீதிகள். இதைத் தவிர சில வீதிகளின் பெயர்கள்:
கருகப்பிலைக்காரச் சந்து,
தானப்ப முதலி அக்ரஹாரம்,
கோபால கொத்தன் தெரு,
லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம்
வெங்கடுசாமி முதலியார் அக்ரஹாரம்
பச்சரிசிக்காரத் தெரு,
தென்னவோலக்காரத் தெரு,
சித்திரக்காரத் தெரு,
வளையல்காரத் தெரு
பூக்காரத் தெரு,
சுண்ணாம்புக்காரத் தெரு,
சாந்துக்காரத் தெரு
தலை விரிச்சான் சந்து
மேல கோபுர வாசல்,
கீழ கோபுர வாசல்,
சொக்கப்ப நாயக்கன் தெரு
கான்சாமேட்டுத் தெரு, (மருதநாயகம், கான் சாகிபாக மாறியதைக் குறிக்கும் கான் சாகிப் மேட்டுத் தெரு, தான் இது)
வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு,
தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு
வடம்போக்கித் தெரு
வெள்ளியம்பலம் தெரு
அன்னக்குழி மண்டபத் தெரு
தளவாய் அக்ரஹாரம்
பழைய சொக்கநாதர் கோயில் தெரு,
வக்கீல் புதுத்தெரு
குட்ஷெட் ரோடு
தமிழ்ச்சங்கம் ரோடு
ஆரப்பாளையம் ரோடு,
திருப்பரங்குன்றம் ரோடு
அழகர் கோயில் ரோடு
கோரிப்பாளையம்
நினைவில் வந்த தெருக்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். மற்றத் தெருக்காரங்கல்லாம் கோவிக்காதீங்கப்பா!
அடுத்து தேசபக்தியில் மதுரை மட்டமா என்ன?? இந்தியாவிலேயே முதல்முறையாக ஹரிஜன ஆலயப் பிரவேசம் மதுரையில் தான் நடந்தது. சுதந்திரப் போராட்டங்களும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் மதுரையில் நிறையவே உண்டு. சுதந்திரப் போராட்டத்தின் முக்கியப் பங்காய் இடம் பெற்ற ஆலயப் பிரவேசம் நிகழ்வு மதுரையில் 1939-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் நாள் முதல் முதல் திரு ஏ. வைத்தியநாத ஐயரால் நடைபெற்றது. அப்போதைய நிர்வாக அதிகாரி திரு ஆர்.எஸ். நாயுடு உதவி செய்ய, தன்னுடன் தும்பைப்பட்டி கக்கன்(காமராஜர் அமைச்சரவையில் போலீஸ் மந்திரியாக இருந்தார்), ஆலம்பட்டி முருகானந்தம், மதிச்சியம் சின்னையா, விராட்டிபத்து பூவலிங்கம், முத்து ஆகிய ஐவரும் அரிஜனர். ஆறாவது நபர் விருதுநகர் சண்முக நாடார் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் நடத்தினார். எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கோயிலை மூடினார்கள் என்றும், தமிழ்ச்சங்கம் ரோடில் புதிய கோயில் ஒன்றைக் கட்டி அங்கே சில நாட்கள் வழிபாடுகள் நடத்தினார்கள் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் எட்டாம் தேதி இரவு மூடப் பட்ட கோயிலை பத்தாம் தேதி காலையில் மாஜிஸ்ட்ரேட் ஒருவர் முன்னிலையில் கோயிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.நாயுடு திறந்தார். ஏராளமான ஜனங்கள் ஆலயப் பிரவேசம் நிகழ்த்தினர். மகாத்மா காந்தி திரு வைத்தியநாத ஐயரின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுத் தெரிவித்து 22-7-1939-ம் வருஷத்திய "ஹரிஜன்" இதழில் எழுதினார். என்றாலும் இதை எதிர்த்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க எண்ணியதைத் தெரிந்து கொண்ட அப்போதைய முதலமைச்சர் திரு ராஜாஜி, விரைந்து செயல்பட்டு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். பின்னர் அது முறையாகத் தாக்கல் செய்யப் பட்டுச் சட்டமாக நிறைவேறியது. வைத்தியநாத ஐயரின் துணிச்சலான இந்தக் காரியத்தினால் புதிய சட்டம் ஒன்றே போட முடிந்தது அரசினால். இதைத் தவிரவும், கல்கி திரு சதாசிவமும், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாளும் மதுரையைச் சேர்ந்தவர்களே. இவர்களின் தேசப்பற்றைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லை. காந்தி அவர்கள் மதுரையில் தான் முதன்முதல் உழவர் ஒருவரின் ஆடையைப் பார்த்துவிட்டு மனம் வருந்தி அன்று முதல் தானும் அரையாடை அணிவதை வழக்கமாய்க் கொண்டார். இந்தியாவிலேயே முதன்முதலாய் காந்தியின் நினைவால் அமைக்கப் பட்ட காந்தி ம்யூசியம் மதுரையில் அமைந்துள்ளது. சபர்மதி ஆசிரமத்தை நினைவூட்டும் குடிலும், காந்தி உபயோகித்த பொருட்களைக் கொண்ட கண்காட்சியும் அரிய புகைப்படங்களும் சமாதியும் இருப்பது இதன் தனிச்சிறப்பு. மதுரையின் பெருமையில் காந்தி ம்யூசியம் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.
தெற்கு கோபுரத்திற்கு எதிரே மாநகராட்சிக் கழிப்பிடத்துக்கு அருகே இருக்கும் தெருவில் ரமண மகரிஷி பிறந்த வீடு உள்ளது. அதே போல் மேல அனுமந்தராயன் வீதியில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவின் வீடு உள்ளது. மேலச்சித்திரை வீதியில் மதுரை சோமு அவர்களின் வீடு இருந்தது. மேல ஆவணி மூல வீதியில் இருந்து வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு வழியாகச் சென்றால் வரும் சங்கீத விநாயகர் கோயில் தெருவில் தில்லானா மோகனாம்பாள் புகழ் சேதுராமன் – பொன்னுச்சாமி இருவரின் வீடுகளும் உள்ளன.
அருகே உள்ள மற்றொரு தெருவிற்கு இவர்களின் பாட்டனார் வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை அவர்களின் பெயரால் வித்வான் பொன்னுசாமிப் பிள்ளைத் தெரு என்று வழங்கப் பட்டது. வடக்கு மாசி வீதியில் இருக்கும் வடக்கு கிருஷ்ணன் கோயில் ஒரு மாடக் கோயில். அந்தக் கோயிலின் சிற்பங்கள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதை விடச் சற்றுத் தள்ளி அமைந்திருந்தது ராமாயணச் சாவடி. (இப்போ இருக்கா) இந்த ராமாயணச் சாவடியில் ராமாயணம் படிப்பதோடு மட்டுமில்லாமல் கிருஷ்ணர் கோயிலின் திருவிழாவின் போதும், மற்ற திருவிழாக்காலங்களிலும் இங்கே சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும். கூட்டம் அலை மோதும் அப்போவே. ராமாயணச்சாவடிக்கு எதிரே இருக்கும் தெருவில் புகுந்து போனால் சிம்மக்கல்லில் கொண்டு விடும்.
நேற்று இட்ட இடுகையில் முக்கியமான இரு தெருக்களை மறந்திருக்கின்றேன். சிறிய வயதில் கழுதை அக்ரஹாரத்திலும், பின்னர் அங்கிருந்து வடுகக் காவல் கூடத் தெருவிலும் இருந்தோம். அதன் பின்னரே மேல ஆவணி மூல வீதிக்கு வந்தோம். ம்ம்ம்ம்?? இப்படி எல்லாம் பதிவுகள் எழுதி உலகப் புகழ் பெறப் போறேன்னு அப்போ தெரியாது. மெய்க்கீர்த்தி ஒண்ணு பாடி ஒரு கல்வெட்டாவது வச்சுட்டு வந்திருக்கலாம். இப்போ அடுத்துப் பார்க்கலாமா?
**************************************************************************************
மதுரை என்றாலே தமிழ் மொழியும், மதுரைப் பாண்டியர்கள் அமைத்த சங்கமும், சங்கத் தமிழின் இன்பமும் பற்றிப் பேசாமல் போக முடியாது. தமிழை வளர்க்கப் பாண்டிய மன்னர்கள் மூன்று சங்கங்கள் அமைத்திருக்கின்றனர்.வடக்கே சூரியகுல மன்னர்கள் வடமொழியை வளர்த்தனர் என்றால் தெற்கே பாண்டிய மன்னர்களால் தமிழ் வளர்க்கப் பட்டது. வேறெந்தத் தமிழ் மன்னரும் அப்போது செய்யாத ஒன்றைப் பாண்டிய மன்னர்கள் செய்தார்கள் என்றால் அது தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்ததே. கடல் கோளால் அழிந்துபட்ட பாண்டிய நாட்டின் பழைய மதுரையும் சரி, இப்போது இருக்கும் மதுரையும் சரி, தமிழ்ச்சங்கம் வளர்த்து வந்ததற்கான இலக்கியச் சான்றுகள் இன்றளவும் இருந்து இவற்றை மெய்ப்பித்து வருகின்றன.
பின்னாட்களில் பாண்டித்துரைத் தேவர் என்பவரால் நான்காம் தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. இந்தப் பாண்டித் துரைத் தேவரிடம் வெள்ளையர் ஒருவர் திருக்குறளை திருத்தம் செய்து கொண்டு காட்டியதாகவும், பாண்டித்துரைத் தேவர் அவரை இகழ்ந்து திருவள்ளுவரின் திருக்குறளைத் திருத்த நீர் யார் எனக் கேட்டதாயும் செவிவழிச் செய்திகள் சொல்லுகின்றன. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாட்டில் அப்போதைய முதல் அமைச்சர் மதுரையிலோ, தஞ்சையிலோ நான்காம் தமிழ்ச்சங்கம் அமைக்கப் படும் என அறிவித்ததாயும், காந்தி ம்யூசியத்துக்கு அருகே இதற்கென நிலம் கையகப் படுத்திப் பெயர்ப்பலகை நட்டு அடிக்கல் நாட்டியதாயும், இப்போது அந்த இடம் பொதுக்கழிப்பறையாகப் பயன்பட்டு வருவதாயும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்து மீனாக்ஷியின் அலங்காரங்கள் பற்றிய குறிப்பு.
யாரானும் ஒரு நாளைக்கு இரு முறைக்கு மேலே புடவையை மாற்றினாலோ, அலங்கரித்துக் கொண்டாலோ, “மதுரை மீனாக்ஷி போல அலங்காரம் செய்துக்கிறாளே” என்று சொல்லுவதுண்டு. இப்போ அப்படிச் சொல்றாங்களானு தெரியலை. ஆனால் மீனாக்ஷிக்கு வேளைக்கு ஒரு அலங்காரம், வேளைக்கு ஒரு நகை. சித்திரைத் திருநாளில் அம்மனுக்குப் பட்டாபிஷேஹத்தின் போது அணிவிக்கப் படும் கிரீடத்தின் அழகைக் காண இரு கண்கள் போதாது. விஜய நகர சாம்ராஜ்யத்தின் அரசரால் வழங்கப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கிரீடத்தில் 920 மாணிக்கக் கற்களும், 78 பச்சை வைரங்களும், 11 மரகதக் கற்களும், 8 கோமேதகங்களும் 7 நீலங்களும் கண்ணைப்பறிக்கும் வகையில் பதிக்கப் பட்டுள்ளன. செங்கோல் என்றால் சிவப்புக்கற்களாலேயே ஆன செங்கோலை வைத்திருப்பாள் மீனாக்ஷி. 761 சிவப்புக் கற்கள், 261 மரகதக் கற்கள், 74 வைடூரியக் கற்கள், 44 முத்துக்கள், 21 பச்சை வைரங்கள் பதிக்கப் பட்ட இந்தச் செங்கோலை வழங்கியவர் திருமலை நாயக்கர். சுந்தரேஸ்வரரின் கிரீடம் ஆவணி மாதம் அவரின் பட்டாபிஷேஹத்தின் போதும், சித்திரைத் திருவிழாவின் போதும் அணிவிக்கப் பெறும். இந்தக் கிரீடம் மிக மிகப் புராதனமான ஒன்று என்றும், முற்காலப் பாண்டியர்கள் செய்து அளித்த இந்தக் கிரீடம் வழிவழியாக வருகின்றது எனவும், இதன் பெயர் வாசுவாலைக் கிரீடம் என்றும் சொல்லுவார்கள். இந்தக் கிரீடத்தில் மூன்று வரிசையாக பெரிய பெரிய மாணிக்கக் கற்களும், 439 முத்துக்களும், 300 பவளங்களும், 247 கெம்புக்கற்களும், 39 மரகதங்களும், 27 பச்சை வைரங்களும், 6 நீலங்களும், 2 கோமேதகங்களும் உள்ளன.
இதைத் தவிர தினசரி அலங்காரங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷிக்கு அணிவிக்கப் படும் முத்துச் சொறுக்கின் அழகையும், அதை அணிந்த கோலத்தில் மீனாக்ஷியின் அழகையும் எவ்விதம் வர்ணிப்பது? நம் வீட்டுப் பெண்கள் தலையைத் தூக்கிச் சொறுக்குக் கொண்டை போட்டுக் கொண்டு வேலை செய்வதைப் போல அவளும் நம் வீட்டுப் பெண் போலவே காட்சி அளிப்பாள். அம்மா, மீனாக்ஷி, இங்கே வாம்மா, என்று கூப்பிட்டு அழைத்தால் உடனே ஓடி வந்து, “என்னம்மா?” என்று கேட்டுவிடுவாள் போல் ஒரு கோலம் காட்டி நிற்பாள். எனக்குச் சீர்காழியின்
"சின்னஞ்சிறு பெண் போலே,
சித்தாடை இடை உடுத்தி,
பொற்றாமரைக் கரையினிலே
சீர்தூக்கிச் சிரித்து நிற்கும் "இவளைப் பற்றிய இந்தப் பாடலே நினைவில் வரும். சீர்காழி எப்போ மதுரை வந்தாலும் சிவகங்கைக் கரையினிலே என்ற இந்த வரியை பொற்றாமரைக் கரையினிலே என்று மாற்றியே பாடுவார். இந்த முத்துச் சொறுக்கோடு கூட, முத்து உச்சிக்கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கி, முத்துச் சுட்டி, முத்துக்கிளி, முத்துக் கடிவாளம், முத்து மாலை என்று சகலமும் முத்து முத்தாய்க் காட்சி அளிப்பாள். இந்த முத்து ஆபரணங்களைச் செய்து கொடுத்தவர் விஜய நகர சாம்ராஜ்ய அரசர்களில் ஒருவர் எனக் கூறப் படுகின்றது. இன்னும் வேற்று நாட்டவரும் அன்னைக்கு ஆபரணங்கள் அளித்துள்ளனர். ரோமானியர்கள் அளித்த ஆபரணம் தங்கக் காசுமாலை, ரோமானிய எழுத்துக்கள் பொறித்த 48 காசுகளோடு கூடியவை, அவற்றில் 50 தங்க மணிகளும் இடையில் இருக்கும். கிழக்கிந்தியக் கம்பெனியால் அளிக்கப் பட்ட காசுமாலைகள், 73 காசுகளும் ஆங்கில எழுத்துக்கள் பொறித்தவை, ஆங்கிலேயன் ரோஸ் பீட்டரால் அளிக்கப்பட்ட நவரத்தின மிதியடிகள், இன்னும் தெலுங்கு நாயக்கர்களால் அளிக்கப் பட்டவை, ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் அளித்தவை, நகரத்தார் சமூகத்தினர் அளித்தவை எனப் பலவேறு விதமான ஆபரணங்கள் உள்ளன. இவற்றில் திருமலை நாயக்க மன்னன் அளித்த நீல நாயக்கன் பதக்கம் என்ற பெயரில் அழைக்கப் படும் 30 பவுன் பெரிய பதக்கம், பெரிய நீலக்கல் பத்து, கெம்பு 2, கோமேதகம் ஒன்று வைத்துக் கட்டியது, இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணி பார்க்கவேண்டும் என ஆசைப் பட்டதால் இங்கிலாந்து சென்று பின் திருப்பி அனுப்பப் பட்டது.
1963-ல் கோயில் நிதியில் இருந்து வைரக் கிரீடமும், 1972-ல் கோயில் நிதியில் இருந்து தங்கப் பாவாடையும்,( இதைத் தங்கக் கவசம் என்றும் சொல்கின்றனர். ) செய்யப் பட்டது. வைரக் கிரீடம் சார்த்து நாள் அன்று இந்தத் தங்கப் பாவாடையும், சார்த்துவார்கள். புடவைக் கொசுவம் வைத்துக் கட்டியது போல் காட்சி அளிக்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தினமும் திருவிழாதான் மீனாக்ஷிக்கு. மாத வாரியாக அவள் திருவிழாக் காணும் பட்டியல் இதோ கீழே:
சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா: மீனாக்ஷி பட்டாபிஷேஹமும், மீனாக்ஷி திருக்கல்யாணமும் இப்போது தான். கொடி ஏற்றம் முடிந்து எட்டாம் நாள் திருவிழாவில் மீனாக்ஷி பட்டாபிஷேஹமும், ஒன்பதாம் நாள் காலையும், மாலையும் மீனாக்ஷி திக்விஜயமும், பத்தாம் நாள் காலை மீனாக்ஷி திருக்கல்யாண உற்சவம் கண்டருளுதலும் நடைபெறும். திருக்கல்யாண உற்சவத்தன்று இரவு அம்மனும், ஸ்வாமியும் வீதி உலா வருகையில் ஸ்வாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மனுக்குப் புஷ்பப் பல்லக்கும், மறு நாள் சித்ராபெளர்ணமிக்கு முதல் நாள் காலையில் அம்மனும், ஸ்வாமியும் தேரோட்டமும் நடை பெறும்.
அன்று மாலை வைகைக் கரையில் கள்ளழகர் எதிர்சேவையும், மறுநாள் சித்ரா பெளர்ணமி அன்று அழகர் வைகையிலே இறங்குவதும் நடை பெறும்.
இந்தக் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை ஒவ்வொரு வருஷமும் மதுரை மக்கள் திரும்பத் திரும்பக் கண்டு களிப்பார்கள். அலுக்கவே அலுக்காது. இந்த அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பாடலாய்க் குழந்தைகளுக்குப் பாடப் படுவதுண்டு.
“ஆனை, ஆனை,
அழகர் ஆனை,
குட்டி ஆனை,
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம் பார்க்க ஓடி வாங்கோ!” என்று பாடி ஆனை ஆட்டம் ஆட்டுவார்கள் குழந்தைகளை. மிகச் சிறிய குழந்தைகளுக்குக் கூட அன்று அழகர் மொட்டையும் உண்டு. பங்குனி மாதம் உத்திரத்தில் நடந்த மீனாக்ஷி திருக்கல்யாண உற்சவமும், சித்ரா பெளர்ணமி அன்று தேனூரில் நடந்த மண்டுக மகரிஷிக்கு முக்தி கொடுக்கும் கள்ளழகர் உற்சவமும் இணைந்து ஒரே சித்திரை மாதம் கொண்டாடும்படி ஏற்பாடுகள் செய்தது திருமலை நாயக்க மன்னர் ஆவார்.

வைகாசி மாசம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நக்ஷத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கும்.
ஆனி மாசம் மகம் நக்ஷத்திரத்திலே இருந்து ஊஞ்சல் உற்சவம். தினம் சாயங்காலம் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறுகால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் தன் அருமைக் கணவரான சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க வாசகரின் பொன்னூசல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
ஆடி மாதத்திலே ஆயில்ய நக்ஷத்திரம் பத்து நாளைக்கும் முளைக்கொட்டு உற்சவம். கொடியேற்றம் மீனாக்ஷிக்கு மட்டுமே நடை பெறும்.
ஆவணிமாதம் மூலத் திருநாள், ஆவணி மூல உற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருவார்கள். வளையல் திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது , விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நக்ஷத்திரத்தன்று சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிஷேஹம் நடைபெறும்.
புரட்டாசி மாதத்தில் எல்லா ஊரிலேயும் நடக்கிற மாதிரி நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாக்ஷி ஜொலி ஜொலிப்பாள். கொலு மண்டபத்தின் அழகையும், அலங்காரத்தையும் அந்த நாட்களிலேயே வர்ணிக்க இயலாது.
ஐப்பசி மாசம் பிரதமையிலே இருந்து சஷ்டி வரையிலும் கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன் அன்று கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடி இருந்து கோலாட்டம் ஆட, உற்சவம் காணுவாள். இப்போ நடக்குதா|?? தெரியலையே!
கார்த்திகை மாசம் பத்துநாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபத்தன்னிக்கு அம்மன் சந்நதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்துவார்கள்.
மார்கழி. தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து விடும். இரவு ஒன்பது மணிக்கெல்லாம் அர்த்த ஜாமம் முடிந்து விடுகின்றது. முன்பெல்லாம் பத்து மணி வரை இருந்தது. தினமும் வெள்ளியம்பல நடராஜர் சந்நதியில் மாணிக்க வாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் மட்டுமே புறப்பாடு காணுவார். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருவார்.
தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். வண்டியூரில் திருமலை நாயக்கரால் தோண்டப் பட்ட தெப்பக் குளத்தில் வசந்த மண்டபத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளப் பண்ணித் தெப்போற்சவம் நடைபெறும். விளக்குகளாலும், பல்வேறுவிதமான அலங்காரங்களாலும் அலங்கரிக்கப் பட்டு மொத்த மதுரையுமே வண்டியூரில் இருக்கும்.
அடுத்து மாசி, பங்குனி இரண்டு மாசத்துக்கும் சேர்த்து நடக்கும் மண்டல உற்சவம். இது அநேகமாய்க் கோயிலோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கே தெரிந்த ஒன்று. நாற்பத்தி எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது என்றே சொல்ல வேண்டும்.
அடுத்துப் பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாசக்கார்த்திகை நக்ஷத்திரத்துலே இருந்து உத்திரம் வரைக்கும் அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் செல்வார்கள். மகனின் திருக்கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு இரவுக்கிரவே இருப்பிடம் வந்துவிடுவார்கள் இருவரும்.
எல்லாத்தையும் விட முக்கியமான ஒன்று என்னவென்றால், அம்மையின் அர்ச்சனைகளும், ஐயனின் அர்ச்சனைகளும் தூய தமிழிலேயே சொல்லப் படுகின்றன, இவை எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே நான் காண்கின்றேன். என் அப்பாவும் பெருமையாய்ச் சொல்லுவார். அப்பா, பெரியப்பா எல்லாரும் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாய் இருந்தவர்களே. ஆகையால் மதுரையில் தமிழில் அர்ச்சனையும் உண்டு. அந்த அந்தக் காலத்துக்கு ஏற்ப திருவெம்பாவை, தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் போன்றவையும் பாடப் பட்டு வருகின்றது. ஆடி வீதிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் எடுக்கின்றனர். திருப்புகழ் சங்கமும், திருக்குறள் மண்டபமும் உள்ளன. இவற்றில் திருப்புகழ் பற்றிய வகுப்புகளும், திருக்குறள் பற்றிய வகுப்புகளும் எடுக்கப் பட்டு வந்தன. மாணவ, மாணவிகளுக்கு இவற்றைப் பயிற்றுவித்து சிறப்பாய்ச் சொல்லுவோர்க்குத் திருமுருக கிருபானந்த வாரியார், ஹரிதாஸ் ஸ்வாமிகள் போன்ற பல்வேறு பெரியோர்களின் கையினாலும் ஆன்றோர்களின் கையினாலும் பரிசுகளும் வழங்கப் பட்டு வந்தன.