பந்தலூர் : "மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கொள்ள இளைய சமுதாயத்தினர் முன்வர வேண்டும்,' என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப நலத்துறை, பொது சுகாதாரத்துறை இணைந்து கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக மக்கள் தொகை தின விழா கருத்தரங்கை கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசுகையில்,""மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்கள் மத்தியில் வெளிப்படுத்தும் வகையில் உலக மக்கள் தொகை தின விழா கருத்தரங்கம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் தங்கவேல் பேசுகையில், ""மக்கள் தொகை பெருக்கம் அதிகரிப்பால் நிலங்களின் தன்மை மாறி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பின்னர் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு மத்தியில், மக்கள் பெருக்கத்தால் வனவளம் அழிந்து சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
நகர்புறங்களில் தூய்மையான காற்று, சுகாதாரமான தண்ணீர் போன்றவை கிடைக்காத நிலையில் தற்போது அதே நிலை மெல்ல, மெல்ல கிராமப்புறங்களிலும் ஏற்பட்டு வருகிறது. எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை குறைத்து வளமுடன் வாழ முன்வரவேண்டும்,'' என்றார்.
பள்ளி தலைமையாசிரியர் வினோத் பேசுகையில், ""மக்கள் தொகை பெருக்கத்தால் குடும்ப சூழலில் பல்வேறு பிரச்னைகள் எழுகிறது. அளவான குடும்பத்தில் குழந்தைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, கவனிப்புகள் அதிகரிக்கிறது. கூடுதல் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் தேவைகள் அதிகரித்து, அதுவே குடும்பத்தில் தொடரும் பிரச்னைகளுக்கு காரணமாகி விடுகிறது. நாளைய இளைய சமுதாயமான மாணவர்கள் மத்தியில் மக்கள் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை கொண்டு செல்லும் முயற்சி நல்ல பயனை தரும்,'' என்றார்.
ஆசிரியர் செந்தில்குமார் பேசுகையில், ""உலக வெப்பமயமாதலுக்கு மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணமாகும். மக்களின் எண்ணிக்கை பெருகுவதால் குடியிருப்புகள் அமைக்க நிலம் தேவைப்படுவதால் புல்வெளிகள் மற்றும் வனங்கள் அழிக்கப்படுகிறது. அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாகிறது. இதுபோன்ற நிலைகளால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு, காலநிலையில் மாற்றம், பல்வேறு நோய்களால் பாதிப்பு என பெருகி வரும் மக்கள் தொகையே மக்கள் தொகை குறையவும் வாய்ப்பாக அமைகிறது,'' என்றார்.
டாக்டர் கதிரவன் தலைமை வகித்து பேசுகையில், ""மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க குடும்ப நலத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும், மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு என மக்கள் தொகை பெருக்கத்தால் பல்வேறு பிரச்னைகள் நாளுக்கு நாள் தலைதூக்கி வருகிறது.
இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலத்தின் தூண்கள் என்பதால் மாணவர்கள் மத்தியில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. முதலிடம் வகிக்கும் சீனாவில் பல்வேறு நடைமுறைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. ஆனால் அந்த இடத்தை இந்தியா பிடித்துவிடுமோ என்ற நிலைக்கு மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.
மக்கள் தொகையினை குறைத்தால் நல்ல வளமுள்ள நாடாக இந்தியாவை மாற்ற இயலும். மாறாக மக்கள் தொகை பெருக்கத்தால் வளம் அனைத்தும் வெகுவாக குறைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனை மாணவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கனகசிவம், முகமது பாரூக், செவிலியர்கள் சில்வஸ்டி, சுப்புலட்சுமி, ராமாயி, வசந்தி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். செவிலியர் பார்வதி நன்றி கூறினார்.
நாமக்கல்: ""பள்ளிப் பருவத்தில் பாடக் கல்வியோடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு உதவியாக இருக்கும்,'' என, மாவட்ட கலெக்டர் மதுமதி பேசினார்.
நாமக்கல் மாவட்டம் கோனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மூன்று வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுமதி புதிய வகுப்பறைக் கட்டிடத்தை திறந்த வைத்து பேசியதாவது: பள்ளி மாணவ, மாணவியர் நலனை கருத்தில் கொண்டு 14 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 வகுப்பறைக் கட்டிடம் கட்டிக் கொடுத்த பழனியம்மாள் கந்தசாமி அறக்கட்டளை மற்றும் என்.டி.சி., குழுமத்தை சேர்ந்த டாக்டர் சந்திரமோகனுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. தவிர, பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகம், சீருடை, மூன்று சக்கர வண்டி, என அந்நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். இதுபோன்ற செயல்கள் மாணவ, மாணவியரை கல்வியில் ஊக்கப்படுத்தும்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு பணிபுரிய வேண்டும். மாணவ, மாணவியரை சிறந்த கல்வியாளராக ஆக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. பள்ளிப் பருவத்தில் பாடக் கல்வியோடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். இது அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு உதவியாக இருக்கும். படிப்பு மட்டுமின்றி நல்லொழுக்கத்தையும் மாணவ, மாணவியர் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பஞ்., தலைவர் கணேசன், கந்தசாமி அறக்கட்டளைத் தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, பள்ளி தலைமையாசியர் தணிகாசலம், பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊட்டி : "பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச் சத்து குறைவு காரணமாக பார்வை குறைபாடு ஏற்படுவதால், வைட்டமின் நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்,' என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக பார்வை தினத்தை கண் நல கருத்தரங்கினை நடத்தின.
கண் நலம் குறித்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன் பேசியதாவது: உலக அளவில் 180 மில்லியன் மக்கள் கண் பார்வை குறைபாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45 சதவீதத்தினர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 முதல் 20 சதவீதத்தினருக்கு கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வங்கி உதவியுடன் தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் கிராமங்களில் இலவச கண் சிகிசை முகாம்கள் நடத்தி இலவச அறுவை சிகிச்சை செய்து தரப்படுகிறது.
தற்போது பள்ளி மாணவர்களுக்கு உரிய ஊட்டச்சத்து குறைவு காரணமாக பார்வை குறைபாடு உள்ளது. இதனால், தமிழக அரசு இலவச கண் கண்ணாடிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பயன்பெறலாம். பார்வை குறைபாடு உடையவர்கள் மற்றவர்கள் ஊட்டச்சத்து பெற மக்கள் பழங்கள், கேரட், மீன் போன்ற வைட்டமின் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். கருவிழி பாதிப்புகளில் 7 சதவீதம் விபத்து மூலம் ஏற்படுகிறது. விளையாடும் போது பேனா, ஊசி போன்ற கூர்முனைகள் கொண்ட பொருட்கள் பயன்படுத்துவதால் கண் பாதிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பார்வை குறைபாடு மிகவும் குறைவாக உள்ளது. நமது நாட்டில் அதிகமாக உள்ளது. கண்ணில் ஏற்படும் குறைகளுக்கு தாய்பால், விளக்கெண்ணெய் போடுவது வேறு பாதிப்பை உருவாக்கும் என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அமராவதி ராஜன் கூறினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன் பேசுகையில், ""கருவிழி பாதித்தோருக்கு கண்தானம் மூலம் பார்வை பெற செய்ய முடியும். கண்தானம் செய்ய மாணவர்கள் முன் வருவதோடு மற்றவர்களையும் கண்தானம் செய்ய பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
உதவி தலைமையாசிரியர் சாமுவேல் பிரபாகரன் பேசுகையில், ""நான் கண்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கண்தானம் மூலம் பயன் பெற்று பார்வை பெற்றுள்ளேன். எனக்கு பார்வை கொடுத்தவர் கடவுளாக தெரிகிறார். அதுபோல அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும். தீபாவளி போன்ற விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல், விளையாட்டு நேரங்களில் கண்ணை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். ரசாயன உணவுகளை தவிர்த்து சத்தான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ருக்மணி தலைமை வகித்தார். தொழிற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் மங்கை, ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன், பள்ளி ஆசிரியர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பார்வை இழப்பு தடுப்பு சங்க ஸ்ரீதர், பள்ளி ஆசிரியர் சிவராஜ் சிவபுத்ரா, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
புதுச்சேரி:லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி., ராமராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் வரும் 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை புதுச்சேரி அரசால் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்க கூடத்தில் நடக்கிறது. 25ம் தேதியன்று மாலை 3 மணிக்கும், 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை காலை 10 மணிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்குகிறது.நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு, லஞ்ச ஒழிப்பு தொடர்பாக தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தங்களது சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை பெறலாம்.வரும் 25ம் தேதியன்று குடிமைப் பொருள் வழங்கல், சமூக நலம், 26ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, 27ம் தேதி வணிக வரி, போக்குவரத்து, 28ம் தேதியன்று பொதுப்பணி, மின்சாரம், உள்ளாட்சி, 29ம் தேதி போலீஸ், நகரமைப்பு, 30ம் தேதியன்று விவசாயம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் பொதுமக்கள் கலந்துரையாடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்மார்ட் வங்கி சேவை திட்ட வணிக தொடர்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் புதுச்சேரி மண்டலம் சார்பில் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 49 கிராமங்களில்"ஸ்மார்ட் வங்கி' சேவை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த கிராமங்களில் இச்சேவைக்காக நியமிக்கப்பட்ட 49 வணிக தொடர்பாளர்களுக்கான பயிற்சி முகாம் புதுச்சேரி அஞ்சப்பர் ஓட்டலில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது. இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் புதுச்சேரி முதன்மை மண்டல மேலாளர் நடராஜன் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, இரண்டாயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள வங்கி வசதியில்லாத கிராமங்களில் ஸ்மார்ட் கார்டு வங்கி சேவை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. வங்கியால் நியமிக்கப்பட்ட வணிக தொடர்பாளர்கள் எடுத்துச் செல்லக்கூடிய கருவி மூலம், கிராம மக்கள் வங்கிக்கு செல்லாமல், தங்கள் கிராமத்திலேயே 2, 000 ரூபாய் வரை பணம் எடுக்கவோ, செலுத்தவோ முடியும்.
தங்கள் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை மற்றும் கடைசி ஐந்து வரவு செலவுகளை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இரவு நேரங்களிலும் சேவை பெற முடியும். வரும் நவம்பர் மாத இறுதிக்குள் மேலும் 49 கிராமங்களில் ஸ்மார்ட் கார்டு வங்கி சேவை திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.முகாமை சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மைய அலுவலகத்தின் உதவி பொது மேலாளர் பாலசந்தர், முதன்மை மேலாளர் சித்தார்த்தன் மற்றும் டி.சி.எஸ்., அலுவலர்கள் நடத்தினர்.

சென்னை:
"ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான கல்வி, மாணவர்களின்
வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போன்றது,'' என, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர்
மன்னர்ஜவகர் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக் கழக "ரோட்ராக்ட்' சங்கம்
சார்பில், சென்னை மற்றும் சுற்றுப்புற அரசு பள்ளிகளின் பிளஸ் 1, பிளஸ் 2
மாணவர்களுக்கான, "விழித்திரு' வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள்
அரசு பொதுத் தேர்வை சந்திக்க உதவும் இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர்ஜவகர்
பேசியதாவது: மாணவர்களின் வாழ்க்கையை மூன்று பருவமாக பிரிக்கலாம். முதல்
பருவம், ஏட்டாம் வகுப்பு வரை உள்ள வாழ்க்கை; இரண்டாம் பருவம், ஒன்பதாம்
வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள வாழ்க்கை; மூன்றாம் பருவம், கல்லூரி
வாழ்க்கை. முதல் பருவத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை
கட்டுப்படுத்த முடியும். இரண்டாம் பருவத்தில், "மாணவர்கள் தங்களுக்கு
எல்லாம் தெரியும். ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு என்ன தெரியும்' என
நினைப்பர். இரண்டாம் பருவத்தில் மாணவர்களுக்கு படிப்பு மிகவும் அவசியமானது.
இந்த பருவத்தில் கற்கும் கல்வி, மாணவர்களின் வாழ்க்கைக்கு
அஸ்திவாரம்(பவுண்டேஷன்) போன்றது. "பவுண்டேஷன்' சிறப்பாக இருந்தால், 40 மாடி
கட்டடம் கூட கட்டலாம். இப்பருவத்தில் கற்கும் கல்வி சிறப்பாக இருந்தால்,
வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த பருவத்தில் கஷ்டப்பட்டு படித்து நல்ல
மதிப்பெண் பெற்றால், ஆசிரியர் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக உள்ள நல்ல
கல்லூரிகளில் சேர முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
மாணவர்கள் இதை மனதில் வைத்து, மீதமுள்ள நாட்களில் நன்கு படிக்க வேண்டும்.
இவ்வாறு மன்னர்ஜவகர் பேசினார்.
"ரோட்டரி கிளப்' மாவட்டம் 3,230 கவர்னர் ஒளிவண்ணன் உட்பட பலர்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். மாணவர்கள் தேர்வை பயமின்றி
எதிர்கொள்வது, தன்னம்பிக்கையை வளர்த்து வெற்றி பெறுவது தொடர்பாக ரமேஷ்பிரபா
மற்றும் நடிகர் தாமு ஆகியோர் பேசினர். கல்விக் கடன், பொறியியல்
கவுன்சிலிங் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மாநில
அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தங்களது அனுபவங்களை பகிர்ந்து
கொண்டனர். மாணவர்களுக்கு உதவும் வகையில், பாடங்களில் எளிதாக மதிப்பெண்
வாங்க உதவும் "விழி முன் வழி' என்ற புத்தகம் தரப்பட்டது.
சென்னை
: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில், ஒருங்கிணைந்த
மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான இரண்டாம்
கட்ட மற்றும் நேரடி விண்ணப்பக் கவுன்சிலிங், 29ம் தேதி நடக்கிறது. இந்திய
மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாளையங்கோட்டை மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் இரண்டரை
ஆண்டு ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப்
படிப்பிற்கு நடந்த முதற்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் உள்ள
காலியிடங்களுக்கு, ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டாம் கட்ட
கவுன்சிலிங்கும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு நேரடி விண்ணப்பக்
கவுன்சிலிங்கும் 29ம் தேதி நடக்கிறது.
சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் இக்கவுன்சிலிங் நடைபெறும். நர்சிங் தெரபிஸ்ட் படிப்பிற்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் படிப்பிற்கு விண்ணப்பித்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாõம். மேலும் விவரங்களை, http://www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு
: இணையதளங்களால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழும்
நிலையில், சமூக வலைதளம் வாயிலாக, 13 வயது சிறுவன் ஒரு தொகையை சம்பாதித்து
வருகிறான். இணையதளங்களில், அண்மைக்காலமாக பாலியல் மற்றும் சைபர்
குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெற்றோர் தங்கள்
பிள்ளைகளை இணையதளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க தயங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
எனினும்,
ஆர்குட், பேஸ்புக் மற்றும் பிளாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை
பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பிளாக்கில் எழுதுவதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
டீன்-ஏஜ் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர்.
பெங்களூரில்
உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படித்து வரும் விஷால் என்ற
மாணவன், பிளாக்கில் எழுதுவதன் மூலம் மாதந்தோறும் 3,680 ரூபாய் சம்பாதித்து
வருகிறான்.
அவனது
பிளாக்கில் எழுதுவதால், விளம்பரத்திற்கென்று உள்ள பகுதிகளில், பல்வேறு
நிறுவனங்களை சேர்ந்தவர்கள் விளம்பரம் அளிக்கின்றனர். இதனால், அவனுக்கு
விளம்பர வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, மற்றவர்களில் பிளாக்குகளை
மேம்படுத்தி, விளம்பரம் செய்வதன் வாயிலாகவும், டிசைன் செய்து தருவதாலும்
வருவாய் ஈட்டுகிறான். பிளாக் உட்பட இரண்டு இணையதளங்களையும் வைத்துள்ளான்.
அவற்றின் வாயிலாகவும் வருவாய் வருகிறது. இதுதவிர, இ-புத்தகம் ஒன்றையும்
எழுதி வருகிறான்.
இதுகுறித்து விஷால் கூறியதாவது: முதலில், வலைதளங்களில் எழுதுவதற்கு எனது வயது தடையாக இருந்தது. ஆனால், ஆறு மாதம் வரை மட்டுமே அந்த சிரமம் இருந்தது. தற்போது, வயதே எனக்கு சாதகமாகி விட்டது. தற்போது, 60 பக்கம் கொண்ட இ-புத்தகம் ஒன்றை எழுதி வருகிறேன். அது முடியும் தறுவாயில் உள்ளது. எனது நண்பர்கள் பிளாக்கில் எழுதுவதற்கு உதவுவதோடு, அவர்களின் பிளாக்குகளை பிரபலப்படுத்தவும் உதவி செய்கிறேன். இவ்வாறு விஷால் கூறினான்.