பல்லி பார்ப்பவர்கள் பலருக்கு அருவருப்பையும், சிலருக்கு பயத்தினையும் அளிக்கும் ஒன்று. நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும் அந்தப் பல்லிகள் இல்லை என்றால் நம் வீடுகளில் இரவில் சர்வ சுதந்திரமாகச் சுற்றித் திரியும் கரப்பான், பாச்சை இவற்றின் எண்ணிக்கை எந்த அளவுக்குப் பெருகும் என்று?
வீட்டில் ஒட்டடை. பார்க்க சகிக்காத ஒன்று. அந்த ஒட்டடையும், சிலந்தி வலைகளும் எவ்வளவு பறக்கும் பூச்சிகளை பக்கெனப் பிடிக்கும் தெரியுமா? அதற்காக ஒட்டடையை பாழடைந்த வீடுபோலப் பரவவிட வேண்டுமென்று சொல்ல வரவில்லை நான். அந்த ஒட்டடையிலும் ஒளிந்திருக்கும் நல்லதைத் தான் வெளிச்சத்திற்குக் கொண்டு வர நினைக்கிறேன்.
எலுமிச்சம் பழம். அதன் சாற்றை அப்படியே நாக்கில் விட்டுப் பருங்கள். அதன் புளிப்பு தாங்கவே முடியாது. ஏன் சிலருக்கு நாகிலே புண்ணே வந்து விடும். இது நாணயத்தின் ஒரு பக்கம். அதே எலுமிச்சம் பழ சாற்றினை சிறிது சர்க்கரையும் தண்ணீரும் கலந்து சாப்பிடுங்கள். அருமையானதொரு பானகமாகிறது அது. நாணயத்தின் மறு பக்கமிது.
சின்னஞ்சிறு குழந்தை ஒன்று அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர் மனம் குளிர வாசலில் விளையாடிக் கொண்டிருக்கிறது. நாணயத்தின் ஒரு பக்கம் இது.
எதிர் வீட்டுக் குழந்தை ஆசையாய் ஓடி வருகிறது சேர்ந்து விளையாட கையில் ஒரு பொம்மையுடன். சற்று முன் வரை தேவதை எனத்தோன்றிய முதல் குழந்தை பாய்ந்து பொம்மையைப் பிடடுங்கிக் கொண்டு, இரண்டாவது குழந்தை வீரிட்டு அழ, உள்ளே ஓடுகிறது. இது நாணயத்தின் இரண்டாவது பக்கம்.
நம் எல்லோர் உள்ளும் இப்படித்தான் நல்லதும் கெட்டதும் சேர்ந்தே இருக்கிறது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல.
ஒரு அலுவலகத்தில் பலர் வேலை செய்கின்றனர். ஒருவர் கடினமாக உழைத்து தன் முழுத் திறமையையும் பிறர் காண வெளிக் கொணர்ந்து முன்னேற நினைக்கிறார். இது நம்முள் இருக்கும் நாணயத்தின் ஒரு புறம். அவரது சக ஊழியர் ஒருவரோ உழைப்பாளியின் வேலையில் தடங்கல்களை ஏற்படுத்தித் தான் முன்னேற நினைக்கிறார். இது நாணயத்தின் மறு புறம்.
நம்முள் இருக்கும் நாணயத்தின் கெட்ட முகத்தினை அழித்து நல்ல முகத்தினை எப்போதும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்குக் காட்டுவோமானால் என்றுமே நமக்கு ஒரே முகத்தினை காட்டும் முழு நிலவு போல் நாமும் பிரகாசிப்போம். நமது நல்ல செயல்களால் நம்மைச் சுற்றி உள்ளவர்களின் முகங்களும் பிரகாசிக்கும். என்ன சரிதானே?
நடராஜன் கல்பட்டு