வந்தது வந்தது தைப்பொங்கல்
மாவிலைத் தோரணம் கட்டி
கூரைப்பூ ஆவரம்பூ வேப்பந்தலை
சேர்த்துக்கட்டி
இல்லத்தில் சூட்டி
உள்ளத்தில் மகிழ்வு பொங்கும்
தமிழனின் பொங்கல்...
மனை அலங்காித்து
பூசணிக்கோலம் வாசலில் இட்டு
மணம் கொண்ட மஞ்சள்
சுவை கொண்ட செங்கரும்பு
எடுத்து வந்து கதவில்சாத்தி
பரம்பரை வழிவந்த
பாரம்பாியப் பொங்கல்...
தான்நின்று உலகியக்கும்
சூாியனின் வசந்த
அறிவிப்பு பொங்கல்...
ஏர்முனை தன்னில் தன்
வியர்வைத் தீர்த்தமிட்டு
உலகெல்லாம் உணவு தர
பயிர்செழித்து அறுவடை செயும்
உழவனின் பொங்கல்...
நித்தம் உழைத்து
உழவனின் தோழனாய்
தன்வீட்டு உறவாய் வாழும்
ஜீவனின் பொங்கல்...
புத்தாடை உடுத்தி
புதுப்பானை தன்னில்
வண்ணக்கோலமிட்டு
புத்தாிசி அதிலிட்டு
சர்க்கரை கலந்தது போல்
வாழ்வில் இன்பம் சேர்க்க
பொங்கும் நேரம்பார்த்து
பொங்கலோ பொங்கல் யெனகூவி
இயற்கையெனும் இறைவனுக்கு
படைத்து தானுண்டு மற்றோருக்கும்
உற்றாருக்கும் தரும்
சமத்துவப் பொங்கல்...
வீரம் நிலைநாட்டி
விளையாட்டுகள் ஆடிமகிழ்ந்து
பாிசுகள் பெறும்
வீரப் பொங்கல்...
பொங்குக பொங்கலே
இல்லத்தில் செல்வம்
பெருக ஏற்றமுடன்
கொண்டாடுவோம் இந்த
தமிழர் புத்தாண்டுப் பொங்கல்.........
என்னில் தவறு இருக்கிறது என்பதை அறிந்து ஒத்துக்கொள்வதால் மட்டும் நான் நல்லவன் என்று அர்த்தம் இல்லை, அடுத்துவர் ஒத்துக்கொள்ளாததால் அவரிடம் தவறு இல்லை என்றும் அர்த்தம் இல்லை! (எனக்கு நானே தத்துவங்கள்....)

கால்வயிற்று கஞ்சியுண்டு
கால்மிதித்து சேற்றினிலே
நாள் முழுதும் உழைப்பவர்க்கு
நன்றி சொல்லும் திருநாளாம்!
உதிரத்தை வியர்வையாக்கி
உரமாக்கி பயிர் செழிக்க
புதிரெடுத்து பொங்கலாக்கி
பகிர்ந்துண்ணும் திருநாளாம்!
பெருமைதரும் தமிழர்க்கோர்
பெருநாளாய்இது இருக்க
பலருக்கு மறந்து போச்சு
பண்பாடும் தொலைந்து போச்சு!
ஆங்கிலேயன் புத்தாண்டு
அனைவருக்கும் பொதுவாச்சு
தங்கத் தமிழன் தைத்திருநாள்
தனி மதத்தின் சடங்காச்சு!
சங்கடமே இல்லாமல்
இங்கிலீசில் பொங்கல் வாழ்த்து
எங்களுக்கும் பொங்கலோ என
சந்தேகத்தில் பலருண்டு!
கருத்துணர்ந்து பொங்கல் பொங்கும்
காலமின்று மாறிப்போச்சு !
பெருமையோடு பொங்கல் வைத்த
பெரும் பண்பு மறைந்து போச்சு!
அடுத்தவீட்டு பொங்கல் உண்ண
என்பிள்ளை போகுமென்று
அதற்காக சிறுபானை
அடுப்பினிலே ஏறலாச்சு!
ஆங்கிலேயப் புத்தாண்டில்
சரக்கடித்து செலவு போச்சு
அடுத்துவரும் பொங்கலுக்கு
அரிசி வாங்க பணமில்லை!
வந்தவரின் கால்தொழுதோம்
வந்தவழி மறந்து போனோம்
செந்தமிழன் மதிகலங்க
சொந்தநிலை தளர்ந்து போனோம்?
வேட்டி கட்டி வாடா தம்பி
பொங்கல் வைக்க வேண்டுமென்றால்
வெட்கப்பட்டு வெளியில் வரானாம்
பிள்ளைக்காரன் பேரனோஇவன்?
பொங்கடா தம்பி பொங்கலைப்பொங்கு !
பொய்த்திடாப் பண்பை காத்திடப்பொங்கு! - தை
திங்களில் முதல் நாள் முற்றத்தில் பொங்கு !
தங்கத்தமிழ் தினம் நாவிலே பொங்கு !
தமிழர் பண்பு மறைத்த கங்குல்
தானாய் விலகும் துணிந்து பொங்கு !
மானமும் வீரமும் நெஞ்சில் கொண்டு
அறத்தமிழ் உரைத்த நெருப்பாய் பொங்கு !
அன்னை மண்ணிலும் அன்னியம் போர்த்து
தன்னிலை மறந்தவர் பேடிமை போக்க
உண்மைத்தமிழனின் உயர்வினைக்காட்ட
உயிர்ப்புடன் மாபெரும் அலையெனப்பொங்கு!
நெஞ்சுதனை நிமிர்த்து நின்று
நான் தமிழனென்று பொங்கு !
வஞ்சம் கொண்டு அழித்த பகைவர்
வாய்பிளந்து வியக்கப்பொங்கு!
இமயம் முதல் ஈழம் வரை
இசைத்த தமிழ் வாழப்பொங்கு!
இனியும் எங்கள் பெருமைப்பேண
இன்றே உறுதி கொண்டு பொங்கு!
மாண்டு போகிலும் மானம் பெரிதென
மாண்டவர் மேன்மை உணர்த்தப்பொங்கு!
ஆண்ட பரம்பரை அடிமை ஆனதால்
சீண்டிய சிறுத்தையாய் சினந்து பொங்கு!
தங்களைத்தமிழராய் எண்ண மறந்தவர்
கண்கள் திறக்க தரணியில் பொங்கு!
மங்கலம் இழந்த தமிழனின் வாழ்வில்
மங்கள ஒளியை ஏற்றப்பொங்கு!
கங்குல் = இருள்
சில நூற்றாண்டுகளுக்கு முன்னா்தான்
கோள்களின் குடும்ப தலைவன் சூாியன்
என சொன்னது விஞ்ஞானம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே
சூாியனின்றி உலகில்லை உணவில்லை
அனுபவித்து சொன்னான் தமிழன்.
சூாிய மகிமையை போற்றிட
சூாிய தேவையை உணா்த்திட
நாள் ஒதுக்கி கொண்டாடினான்
தைப் பொங்கல் என...
உலகுக்கு உணவளிக்க
உழவனுக்கு உதவுபவை
மாடுகள்.
அதற்கும் நாள் ஒதுக்கி
குடும்ப உறுப்பினராக இணைத்து
குதுாகலாமிட்டு கொண்டாடினான்
மாட்டுப்பொங்கலாக..
உழவனின் சுமையை
ஏா்கலப்பையோடு
தோளில் சுமந்த
சாதுக்களும் உண்டு.
வீரராய் இளைஞா்களை
சீண்டி பாா்க்கும்
ஜல்லிகட்டு காளைகளும் உண்டு.
காிசல் காட்டு கரும்பு
செங்காட்டு வாழை
கிணற்றுமேட்டு பூசணி
வயல்காட்டு நெல்
தை அன்று படையலாகும்
சூாியனுக்கு.
தலைப்பாகை கட்டி
உடலெல்லாம் வண்ணகோலமிட்டு
மாடுகள் ஜொலிக்கும்
மாட்டுப்பொங்கலன்று.
உழைத்து களைத்தவா்கள்
உறவாடி உற்சாகங்களை
பதிவிறக்கம் செய்ய
காணும் பொங்கல்.
நாகரீக வளா்ச்சிகள்
நம் தமிழா் பெருமைகளை
நகைப்புக்குாியதாக்கி
நம்மை சற்று தள்ளியே
நிற்க வைக்கின்றன.
எப்போதும்
எங்கேயும் தமிழா்கள்
தனித்தன்மையானவா்கள்
என்பதை உலகுக்கு உணா்த்த
உரக்க கூவி குதுாகாலிப்போம்
”பொங்கலோ பொங்கல்” என்று

இன்றைக்குத் தைப்பொங்கல் என்றாச்சு!
என்றைக்கும் இனிக்கும் பொங்கலாச்சு!
(இன்றைக்கு)
மழை தந்தவனுக்குப் பொங்கலாச்சு!
நெல் விளைந்ததுமே பொங்கலாச்சு!
(மழை)
(இன்றைக்கு)
பொங்கல் நாளே எங்கள் நாளாச்சு
பொங்கல் நாளே உழவர் நாளாச்சு
பொங்கல் நாளே புத்தாண்டு ஆச்சு
பொங்கல் நாளே தமிழர் நன்நாளாச்சு
(இன்றைக்கு)
(மழை)
எங்க தையே பிறந்த நாளாச்சு
நம்ம தமிழுக்கு முதல் நாளாச்சு
புத்தரிசி போட்டுப் பொங்கும் நாளாச்சு
ஞாயிற்றுக்கு நன்றி கூறும் நாளாச்சு
(இன்றைக்கு)
(மழை)
முற்றம் மெழுகுவது அப்பா ஆச்சு
கோலம் போடுவது அம்மா ஆச்சு
பொங்கிப் படைப்பதும் இருவரும் ஆச்சு
ஞாயிற்று வரவோடு நிறைவும் ஆச்சு
(இன்றைக்கு)
(மழை)
படைத்த பொங்கலை உண்பதும் நாமாச்சு
நன்நாளில் நல்லது செய்வதும் நாமாச்சு
உறவோடு அன்பைப் பகிருவதும் நாமாச்சு
நண்பரோடு சேர்ந்து மகிழ்வதும் நாமாச்சு
(இன்றைக்கு)
(மழை)
ஏழையோ, எஜமானனோ,
உயிர்வாழ உணவு வேண்டும்!
உணவைப் பெருக்கும் உன்னதம் செய்வோன்... உழவனாம்!
உழவன், நிலந்தனை வளமாக்க ஏர்பூட்டி உழுவான்!
நிலம் நலமாகும்!!
நலந்தரும் நல்லுணவு நாம்பெற,
உரங்கொண்ட நல்விதையை மண்ணுள் விதைப்பான்! – பின்
நெல்தரும் புல்லது வளரும்!
வளரும் புல்லுக்கு வளமூட்டும் நிலத்துமண்!
புல்லது சுவாசிக்கத் தவழ்ந்தாடும் குளிர்காற்று!!
நெல்லெனுஞ் சிறுமணி பெருக்கவும்,
குறும்பயிரும் நெடுமரமும் தளிர்க்கவும்,
தினகரன், கதிரெனுங் கரம்நீட்டி வரமருள்வான்!!
வானது, மேகம் பிறந்துபின் தவழ்ந்தாட வழிசெய்யும்!
குளிர்காற்றின்,
மோதலில் தவழுங் கார்மேகம் கசிந்துருக,
பாலெனப் பொழியும் நன்மழை!
இவ்விதமாய், இப்பூதங்களைந்தும் பூசலின்றி,
புசிக்கும் நல்லுணவை நயமுடன் வழங்கலால்
பூதங்களைந்தும் பூசிக்கத்தக்கதாம்!
மண்ணெனும் பூதத்தாலுருவான புதுப்பானைமேலே நன்வண்ணந்தீட்டி,
மண்ணை இசைவாய் பிசைந்ததிலான அடுப்பின்மேல் இட்டு,
இரண்டான் பூதமாம் இனிக்கும் நன்னீரைப் பானையிலிட்டு,
நிலந்தந்த புத்தரிசிக் காய்கனிகளிட்டு,
மூன்றாம் பூதமாம் முகிழ்த்தெழுந் தீப்பொறியால் அடுப்பெரிக்க,
நான்காம் பூதமாம் வான்பூதம் கூரையென மேலே விளங்க,
அதன்கீழே, ஐந்தாம் பூதமெனுங் காற்றின் கரிசனத்தால் செந்தழல் பெருக,
வெந்திடுங் காயுங்கனியும்! -அதனோடு
கலனிலிட்ட காரரிசிச் சோறும்!!
கொதிக்குஞ் சோறுங்காயுஞ் சேர்ந்து நுரைக்கும் நீரது பொங்க,
மனந்தனில் ஆனந்தம் பொங்க,
வளமும் நலமுமாங்கே பொங்க,
இன்பத்தோடாங்கே இயற்கைக்கு நன்றி சொல்லும்
நல்லறமும் பொங்க,
நெஞ்சம் பொங்க,
கால்நடைக்கும் நன்றி சொல்லி
கதிரவனைக் கைக்கூப்பும் நெஞ்சத்தினுள்ளிருந்து
சொல்லுங் குதித்தெழுந்து பொங்கும்,
பொங்கலோ பொங்கலென்றே...
பொங்கலோ பொங்கலென்றே...
பொங்கலோ பொங்கலென்றே...
பொங்கலோ பொங்கலென்றே......
*******************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்
*******************

பொங்கல் திருநாளாம் அது
எங்கள் திருநாளாம்
தங்கத்தமிழன் அவன்
தன்னிகரற்ற ஒருநாளாம்
அறமும் மறமும் மட்டுமல்ல
நன்றி சொல்வதும் நல்லிதய தமிழன் பண்பாடென
பாருக்கு பறைசாற்றிடும் திருநாளாம்
உயிர்வாழ உணவுதரும் உழவனுக்கும்
உறுதுணை புரியும் கதிரவனுக்கும்
உழது உழைக்கும் மாட்டிற்கும்
நன்றி காட்டி கொண்டாடிடும் திருநாளாம்
விட்டுப்போன உறவுகளும் கூடியே களிப்புற
விருந்து சமைத்து விரும்பிப் பறிமாறிடும்
எங்கள் தமிழனவன் விருந்தோம்பல் குணமதை
தரணிக்கே கற்றுத்தரும் திருநாளாம்
பசுமாட்டைக் குளிப்பாட்டி
கொஞ்சும் சலங்கையிட்டு
கொம்பினில் வண்ணம் தீட்டி
உவகையுடன் உணவு ஊட்டும் திருநாளாம்
உழவும் தொழிலும் செழிப்புற
உறவுகள் வலுப்பெற வையகம்
போற்றிட கொண்டாடிவோம்
பொங்கல் திருநாளை
வாழ்த்துக்களுடன்
உங்கள் கனகீஸ்

வீடெங்கும் மாக்கோலம்
வாசலில் செம்மண் பூசி
அழகு வண்ணக் கோலம்
புது சுண்ணாம்புப் பூச்சும்
புதிய சாயக் கதவுகளும்
காண்பவர்க்கு பளிச்சிடும்
மாவிலைத் தோரணங்கள்
சந்தனமும் குங்குமமும்
தொட்டு வைத்த மங்களம்
துவங்கிடும் திரு நாளில்
மஞ்சள் கொத்து சேர்த்து
கட்டிய செப்புப் பானையில்
பச்சரிசியும் பாலும் இட்டு
பாங்காக வெல்லம் சேர்த்து
கொதித்துப் பொங்கி வரும்
இதற்கெனக் காத்திருந்து
சந்தோசக் குலவியிட்டு
பொங்கலோப் பொங்கல்
சந்தோசக் கூக்குரலிட்டு
முந்திரியும் திராட்சையும்
தூவிக் கிளறியப் பொங்கல்
பசு நெய் உருகி வர சாமிக்கு
படைத்துத் தலை வாழை
இலையிட்டு அன்போடு
பரிமாற சொந்த பந்தங்கள்
சேர்ந்தமர்ந்து அள்ளி உண்ண
பாகாய் ருசி நாக்கில் ஊருமே
அறிந்தவரை தெரிந்தப பல
காய்களெல்லாம் சேர்த்து
பக்குவமாய்ப் புளிக்குழம்பு
நினைத்து விட்டால் போதும்
நாக்கில் எச்சில் ஊருதே
மொழிக் கரும்பாய் எடுத்து
அடிக் கரும்பில் துண்டித்து
பற்களால் இழுத்து உறிஞ்சிய
சாற்றில் அமிர்தம் இனிக்கும்
திரு நாளாம் இந்நாள் போல்
எந்நாளும் சிறக்கட்டும்
தித்திக்கும் பொங்கலாய்
உழவுக்கு உயிர் கொடுத்து
உயிர்களுக்கு எல்லாம்
உணவு கொடுக்கும் உழவன்
திருநாளாம் தை திருநாளை
உழவனுக்காய் சமர்ப்பித்து
உழவோடு உழவனும் ஓங்கி
வளம் பெற எல்லாம் வல்ல
இறைவனை வணங்குவோம்
உழவை முன்னேற்றுவோம்

தங்க தை மகளே வருக! வருக!
தங்க தை மகளே வருக! வருக!
என்றும் தங்கி,எங்களுக்கு நல்வாழ்வுதனை தருக
பழைய காலம் முதல் தொடர்கின்றன பழமொழி ,
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற
நம்பிக்கை வார்த்தையுடன் தொடங்குகிறது.
உன்னை வரவேற்கும் இன்றைய தினம்,
ஆயிரம் சோகங்கள் மனதிலும் வாழ்விலும் இருந்தாலும்
எப்பொழுதும் வரவேற்க தவறியது இல்லை உன்னை
அதி காலையின் ஓய்வற்ற சூரிய கதிர்கள் படர
மின்னும் அழகிய வானவில் போல் வண்ண வண்ண கோலம்
கொஞ்சம் மஞ்சள் கொத்தோடும் அதன் மீது படர்ந்து
கெஞ்சும் சிறு இலைகள் காற்றில் ஆட அதன் நறுமணம்
அந்தி சாயும் வரை அங்கும் இங்கும் ஆடி கொண்டும்
எறும்பு அரிக்கப்பட்ட மாமரத்து இலையோடும்
எங்கள் மனம் போல் இறுகிப்போன கரும்போடும் அதன் அருகே
தாத்தா விட்டு போன உழைபைபும் துருப்பு ஏறி களைத்து போன கலப்பையும்
மஹா என்ற பெயரிட்ட மாடும் சேர்ந்து கொள்ள புதியதாக வாங்கிய பானையில்
அதி வேக நெருப்பிட்டு பதுங்கி பதுங்கி பாயும் பளிச்சிடும்
வெள்ளை நூரை கூடி, நின்று குழந்தையுடன் ....
அதை பார்த்து பொங்கலோ பொங்கலோ என்ற குலவை சத்தம்....
எங்கள் கண்ணீரின் பயணத்தில் வருடத்தின் முதல் நாள் பூ
இசையுடன் சந்தோசமும் சிரிப்பும் ஆரம்பிக்க ஆனந்தம் கொள்ள செய்கிறது
நீ வந்து போகும் நாள் .....
வருக தை மகளே வருக!!!!!