இளம் பெண்களை குறிவைக்கும் சுமங்கலி!

15 views
Skip to first unread message

Snabak Vinod (SV)

unread,
Aug 13, 2012, 9:52:41 AM8/13/12
to நட்புடன், இளவேனில், Save_Tamils, தமிழ் சிறகுகள்

சுமங்கலித் திட்டம்... தாலி வாங்கக்கூட வழி இல்லாத இளம் பெண்களைக் குறிவைத்து தென் மாவட்டங்களில் பரவிவரும் ஒரு மாயவலைத் திட்டம். இதை சுமங்கலித் திட்டம் அல்லது திருமணத் திட்டம் என்கிறார்கள். பெயர்கள் இரண்டாக இருந்தாலும் திட்டத்தின் நோக்கம் மக்களின் ரத்தம் உறிஞ்சுவது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான, திருமணம் ஆகாத கிராமப்புறப் பெண்கள் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு போன்ற பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளுக்கும் நூற்பாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். வறட்சி, மழையின்மை, வேளாண் தொழில்கள் பாதிப்பு, வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத காரணங்களால் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிராமப்புறப் பெண்கள் இதுபோன்ற ஆலைத் தொழிலுக்குச் செல்கிறார்கள். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்தால்  40,000 முதல் 60,000 வரை கொடுப்பதாகவும் வேலையின்போது தங்கிக் கொள்வதற்கு வசதிசெய்து கொடுப்பதாகவும் ஆலை நிர்வாகத்தின் சார்பில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு, பெண்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதுதான் சுமங்கலித் திட்டத்தின் சாராம்சம். கேட்க நன்றாக இருந்தாலும் இதுபோன்ற வாக்குறுதிகளை நம்பி வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் ஆலையில் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். இவர்கள் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்களைப் போல நடத்தப்படுவதோடு, பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகின்றார்கள். இதனால் மனநிலை மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டு, எண்ணற்ற இளம் பெண்கள் தங்கள் வாழ்வை இழந்துள்ளனர்.

 

சுமங்கலித் திட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மாநாட்டை சமீபத்தில் நெல்லையில் நடத்தினார்கள் 'வான்முகில்’  என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த மாநாட்டுக்கு 400-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றோர்களோடு வந்து இருந்தார்கள். இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் து. அரிபரந்தாமன் தொடக்க உரை ஆற்றினார். ''நூற்பாலைகள் வைத்து இருப்பவர்கள் தொழிலாளர்களைக் கவர, பயன்படுத்தும் ஆசை வார்த்தைதான் 'சுமங்கலி திட்டம்’. இதில் சிறு விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தினைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து வேலைக்குச் சேர்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு முழு ஊதியம் கிடைப்பதில்லை. ஆனால், இவர்களுக்கு மாதச்சம்பளம் கிடைக்கச் சட்டத்தில் அங்கீகாரம் உள்ளது'' என்று நம்பிக்கை வார்த்தைகளில் பேசினார்.

இந்தச் சுமங்கலித் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டப் பெண்கள் பெரும்பாலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் என்பது மனதினை பதைபதைக்க வைத்தது. அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு சிலர் பேசினார்கள். ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுப் பெண், '' என் அப்பா எப்போதுமே குடிச்சிட்டுதான் இருப்பாரு. இந்த ஊர் முழுக்க பீடி சுத்துற தொழில்தான். வீட்டுக் கஷ்டத்தால அஞ்சாப்பு வரைக்கும்தான் படிக்க முடிஞ்சுது. அப்பத்தான் இந்த மில் வேலைக்குக் கூப்பிட்டாங்க. மூணு வருஷம் வேலை பார்த்தா, 50,000 தர்றதாச் சொல்லிக் கூட்டிட்டுப் போனாங்க. வேலை பாக்கும்போதே, தையல், கம்ப்யூட்டர், கைத்தொழில் கத்துத் தர்றதாச் சொன்னாங்க. ஆனா, இதுவரைக்கும் எதுவுமே சொல்லித்தரலை. முதல் ஆறு மாசம் எந்தப் பிரச்னையும் இல்லை. அப்புறம், எட்டு மணி நேர வேலையைக் கொஞ்சம் கொஞ்சமாக் கூட்டி 16 மணி நேரம் வேலை பார்க்கச்சொன்னாங்க.  அப்படிப் பாக்கும்போது அலுப்புத் தெரியாம இருக்க பீர் கொடுத்துக் குடிக்கச் சொன்னாங்க. ஒரு நாள்கூட லீவு கொடுக்க மாட்டாங்க. உடம்புக்கு என்ன பிரச்னையா இருந்தாலும் கண்டிப்பா வேலைக்குப் போய் ஆகணும். தங்குறதுக்கு இடவசதி செஞ்சுக் கொடுக்கலை. நாங்க 56 பேர் இருந்தோம். மொத்தமே நாலு ரூம்தான். 15 பேருக்கு ஒரே பாத்ரூம். காலையில மூணு மணிக்கு எழுந்திரிச்சுக் குளிச்சாதான்  சீக்கிரம் வேலைக்குப் போக முடியும்.

சில சமயம் சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அப்படியே சாப்பிட்டாலும் குமட்டும். மில்லுல மிஞ்சுற கழிவு அரிசியிலதான் சாப்பாடு சமைச்சித் தருவாங்க. தொடர்ந்து பஞ்சு மில்லுல வேலை பார்த்துக்கிட்டு இருந்தா, சின்னச்சின்ன பஞ்சுத் துகள்ங்க வாய், மூக்கு வழியா உள்ளே போயிடும்.  இங்க வேலை பார்த்தவங்கள்ல பத்து பேர் மூக்குல ஆபரேஷனே பண்ணிக்கிற அளவுக்கு நெலமை மோசமானுச்சு. இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவுல வேலை பார்த்தாலும், மூணு வருஷ கான்ட்ராக்ட் போttட்டுttu 50,000 சம்பளம் பேசிட்டுவந்த நான் நாலரை வருஷம் வேலை செஞ்சேன். அப்படியும் 38,000 ஆயிரம்தான் தந்தாங்க'' என்றார் குரல் கம்ம.

அவருக்குப் பக்கத்தில் இருந்த பெண், ''அண்ணே... எனக்குக் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்துச்சு. பிள்ளையை வெளியே எடுக்கும்போதுகூட, அதோட உடம்புல அங்கங்கே பஞ்சு ஒட்டி இருந்தது'' என்று பதைபதைக்க வைத்தார். ''நாங்க தங்கி இருந்தது ரூமே இல்லைங்க.. குடோன் மாதிரி இருக்கும். தினமும் ரூமை க்ளீன் பண்றதோட, தோட்ட வேலையையும் பார்க்கணும். அதுக்குத் தண்ணியை தூரத்துல உள்ள கிணத்துல இருந்து எடுத்துட்டுவரணும். மூணு ஷிஃப்ட் ரெகுலர் வேலை முடிச்சிட்டு எப்போடா உட்காருவோம்னு அலுப்பா இருக்கும்போது இந்த வேலையை செய்யச் சொல்லுவாங்க. இதையெல்லாம் செஞ்சுட்டுப் படுத்தாலும் மூணு மணி நேரத்துல எழுப்பி விட்ருவாங்க.

எங்ககூட ஒரு பொண்ணு பகல் ஷிஃப்ட்ல வேலை பார்த்தா. அவளோட அப்பா மோசமான குடிகாரர். அவளும் அவ தங்கச்சியும் சேர்ந்தே மில் வேலைக்கு வந்தாங்க. பக்கத்துலேயே இருந்தா குடும்பக் கதைதான் பேசுவாங்கன்னு வேற வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. அக்கா வேலை பார்த்த இடத்துல எல்லாருமே பசங்கதான். கூட வேலை பார்த்த முருகன்கிறவன் நாலு பேரைச் சேர்த்துக்கிட்டு கிண்டல் அடிச்சி இருக்கான். போகும்போதும் வரும்போதும் தெரியாத மாதிரி உரசி இருக்கான். அவ வீட்டுல சொல்லி அழுதப்ப, அவ அப்பா ஒண்ணும் கண்டுக்கலை. ஒருநாள் வெஷத்தைக் குடிச்சிட்டா. ஆஸ்பத்திரியில சேர்த்து பொழைக்க வெச்சோம். அப்போ அவளைப் பார்க்கவந்த கம்பெனிக்காரங்க, ''ஆஸ்பத்திரி செலவே அத்துகிட்டுப் போயிடுச்சு. உம் பொண்ணு இதுநாள்வரைக்கும்  வேலை பார்த்ததுக்கும் நாங்க செலவழிச்சதுக்கும் சரியாப் போச்சு''னு சொல்லிப் பணம் கொடுக்காம ஏமாத்திட்டாங்க. யாராவது எதிர்த்துக் கேட்டா, உடம்பு முடியாத நேரத்துல மாத்திரையை மாத்திக் கொடுத்திடுவாங்க. இல்லைன்னா தண்ணி குடிக்கிற ஜக்ல பாத்ரூம் க்ளீன் பண்ற ஆசிட்டை ஊத்தி வெச்சிருவாங்க. அப்புறம் யார் பேசுவா?'' என்றும் அதிரவைத்தார்.

கயத்தாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுப் பெண்ணின் கதை உடம்பை நடுங்கவைக்கிறது.'' பஞ்சு வாய் வழியா உள்ளேப் போய் தொண்டையில கட்டி வந்திருச்சு. தினமும் ரத்தமா வாந்தி எடுக்க ஆரம்பிச்சேன். ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்கன்னு அழுவேன். ஆனா, தினம் எங்க வார்டன் ஐயோடெக்ஸ் தடவி விட்டுட்டுக் கிளம்பிடுவார். கவனிக்காமலேயே விட்டதால, கட்டி பெருசாகி பேசக்கூட முடியலை. ஆபரேஷன் பண்ண ஆயிரக்கணக்குல செல்வாகும்ன்னு சொல்றாங்க. அதுக்குக் காசு இல்லாததால மருந்து, மாத்திரைதான் சாப்பிட்டுட்டு இருக்கேன்.

என்னதான் உடம்பு சரி இல்லாமப் போனாலும் வேலைக்கு போயே ஆகணும். அவங்களே கையில வெச்சிருக்கிற மாத்திரையைக் கொடுப்பாங்க. எதைக் கொடுத்தாலும் சாப்பிட்டே ஆகணும். ரொம்ப முடியாம, மயக்கம் போட்டு விழுந்தாதான் ஆஸ்பத்திரிக்கே கூட்டிட்டுப் போவாங்க.

சில சமயம் மாதவிடாய் நேரத்துலகூட மூணு ஷிஃப்ட் நின்னுகிட்டே வேலை பார்த்து இருக்கேன். கம்பெனிக்காரங்களை அடிக்கிறதுக்கு முன்னாடி இந்த புரோக்கர்களை வெளுக்கணும்ங்க. தேன் தடவுன மாதிரிப் பேசியே எங்களை நம்பவெச்சு  வேலைக்கு அனுப்பி வெச்சிடுறாங்க. அதுக்கப்புறம் எங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க.

நாங்க ஏதாவது எதிர்த்துக் கேள்வி கேட்டா, ''உங்க பொண்ணு நடத்தை சரியில்லை. கண்ட பசங்களோட ஊர் சுத்துது'' ன்னு வீட்டுல ஏடாகூடாம சொல்லிடுவாங்க. அவங்க அட்வான்ஸா கொடுத்த பணத்தை உடனே திருப்பிக் கொடுத்தாகணும். அதனால் பல்லைக் கடிச்சிட்டு இருப்போம்'' என்றார் கண்கலங்க.

இந்தக் கருத்தரங்கை நடத்திய 'வான்முகில்’ அமைப்பைச் சேர்ந்த அரவிந்தன், ''இந்தப் பெண்கள் மிகப் பெரிய கொடுமையை அனுபவித்து இருக்கிறார்கள். இதில் சரிவர விபரம் தெரியாத 80 சதவிகிதப் பெண்களுக்கு ஒப்பந்தத்தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. இந்தப் பெண்கள் வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவதற்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு இருக்கிறது. வேலைக்குத் தாமதமாகவரும் பெண்களைக் கேவலமாகத் திட்டி இருக்கிறார்கள். அடித்திருக்கிறார்கள். அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, தொட்டுப் பேசுவது என பாலியல் தொந்தரவு செய்து இருக்கிறார்கள். ஒத்துழைக்க மறுத்தவர்களுக்கு உணவு கொடுக்காமல் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கவைத்து இருக்கிறார்கள். தண்ணீர்ப் பற்றாக்குறையால் இந்தப் பெண்கள் மூன்று நாட்களுக்கு ஓரு முறைதான் குளித்திருக்கிறார்கள். ஏறக்குறைய அவர்களைக் கொத்தடிமைகள் போல நடத்தி இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு உடனே தடை செய்து, பஞ்சாலைகளைக் கடுமையான கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இது போன்ற மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியும். குறைந்த பட்ச ஊதிய சட்டம், போனஸ் வழங்கும் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டம் முதலிய பல சட்ட உரிமை மீறல்கள் மிக மோசமாக அத்துமீறப்பட்டு உள்ளன. எனவே, சுமங்கலித் திட்டத்தில் இணைந்திருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிதியும் நீதியும் கிடைக்க தேசிய மனித உரிமை ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முடித்தார் ஆவேசமாக!

பி.எஸ்.முத்து

Reply all
Reply to author
Forward
0 new messages