> http://www.mailofislam.com/islam_in_hindu_scriptures-tamil.html
>
> இந்து மதத்தில் இஸ்லாம்
> இந்து மதத்தில் இஸ்லாம்
>
> எழுதியது - மெயில் ஒப் இஸ்லாம் ஆசிரியர் குழு
>
> இந்து மதம் பற்றிய அறிமுகம்
>
> இந்து மதம் ஒரு ஆரிய மதமாகும். இந்துக்கள் இதனை ஒரு பழைமையான மதமாகவே கருதுகின்றனர். இன்று உலகில் உள்ள அதிக எண்ணிக்கையானோர் பின்பற்றும் மதங்களில் இந்து மதமும் ஒன்றாகும்.
>
> பொதுவாக இந்து மதம் பலதெய்வ நம்பிக்கையுடைய மதமாகவே கருதப்படுகிறது. பெரும்பாலான இன்றைய இந்துக்கள் பல தெய்வ நம்பிக்கையையே கொண்டுள்ளனர். இது பொதுவாக அனைவரும் அறிந்த ஒரு விடயமே. ஆனாலும் இந்துக்களின் வேத நூல்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அங்கு இஸ்லாமிய ஓரிறை கடவுள் கோட்பாடுகள் நிறையவே சொல்லப்பட்டுள்ளது.
>
> எனவே இப்பகுதி ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு ஹிந்துவும் இந்து – இஸ்லாம் பற்றி கற்று கொள்ளவும் அவற்றுக்கிடையே உள்ள தொடர்புகளை விளங்கி கொள்ளவும் உதவும் என நாம் நம்புகிறோம்.
>
>
> இஸ்லாமிய அடிப்படை கொள்கை
>
> இறைவன் ஒருவனை அன்றி வேறு யாரையும் வணங்க கூடாது. இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்களை விசுவாசித்து, அவர்களை பின்பற்றி, அவர்கள் கொண்டு வந்த சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் வாழவேண்டும். இதுவே இஸ்லாம் போதிக்கும் அடிப்படை போதனையாகும்.
>
> இறைவனை அண்ட சராசரங்களையும் படைத்தான். வானவர்கள் போன்று பல்வேறு படைப்புகளை படைத்தான். பின்னர் மனிதனை படைத்தான். இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதாம் ஆவார்கள் (அன்னாரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்). அவர்களின் விலா எலும்பிலிருந்து அவர்களின் துணையான ஏவாள் அவர்களும் படைக்கப்பட்டனர். அன்றிலிருந்து மனித இனம் வளர ஆரம்பித்தது. அவர்களின் வம்சாவளி உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்கி பெருகியது.
>
> இவ்வாறு தோன்றிய மனித இனத்திற்கு நேர் வழி காட்ட இறைவன் காலத்திற்கு காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். இறைவன் இறை சட்டங்களை அவர்களுக்கு வழங்கி அதனை மக்களுக்கு போதிக்குமாறும் அதன் அடிப்படையில் மக்களை வழி நடத்துமாறும் கட்டளையிட்டான். இவ்வாறு காலத்திற்கு காலம் பல ஆயிரம் இறைதூதர்கள் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் மனிதர்களாகவே இருந்தனர். ஆனாலும் மனித புனிதர்களாகவும் இறைகட்டளையை பேணி நடக்கிற பரிசுத்தமானவர்களாகவும் இருந்தனர்.
> இவர்களை மனிதர்களில் நல்லவர்கள் விசுவாசித்து இவர்களின் சொல் கேட்டு சன்மார்க்க வழியில் நடந்தனர். கெட்டவர்கள் இவர்களை நிராகரித்தனர். அத்தகைய கெட்டவர்கள் “இறை நிராகரிப்பாளர்கள்” என அழைக்கப்பட்டனர்.
>
> உலகெங்கும் அனுப்பப்பட்ட இந்த இறைதூதர்கள் உலக மக்களுக்கு போதித்த அடிப்படை விடயங்களாவன: பரிசுத்தமான ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். படைப்புகளையோ விக்கிரகங்களையோ வணங்க கூடாது. அந்த குறிப்பிட்ட காலத்திற்கும் இடத்திற்கும் என அனுப்பப்பட்ட அந்த இறைதூதரை பின்பற்றி அவர் சொல் கேட்டு ஒழுகி நடக்க வேண்டும். இவ்வாறு சுமார் 124,000 இறைதூதர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டனர். இப்படி ஆதாம் தொடங்கி ஆபிரகாம், மோசெஸ், இயேசு நாதர் என கடைசியாக முழு உலகிற்கும் இறைதூதராகவும் உலக முடிவு நாள் வரைக்குமான கடைசி இறைதூதராகவும் அனுப்பப்பட்டவர்களே முஹம்மத் நபி ஆவார்கள். (இறைவனின் சாந்தியும் சமாதானமும் அன்னவர்கள் மீது உண்டாகட்டும்)
>
> இப்படி இறைதூதர்கள் ஓரிறை கொள்கையை போதித்தாலும், மக்களில் சிலர் அதனை ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர் நிராகரித்தனர். சில சமயம் குறிப்பிட்ட இறைத்தூதரின் மறைவுக்கு பின்னர் மக்களில் சிலர் மீண்டும் விக்கிரக வழிப்பாட்டுக்கு மாறினர். அல்லது அந்த இறை தூதரின் மீது இருந்த ஆழிய அன்பினால் அந்த இறைதூதரையே இறைவன் என்று கூறி வணங்க தொடங்கினர்.
>
>
>
> இறைவன் மனித அவதாரம் எடுத்து வருவானா?
>
> இல்லை. இஸ்லாம் இதனை முழுமையாக நிராகரிக்கிறது. இறைவன் பரிசுத்தமானவன். அவன் ஒருபோதும் மனித வடிவிலோ வேறு எந்த வடிவிலோ வரமாட்டான். அவன் உடலோ உருவமோ அற்றவன். பரிசுத்தமான அவன் ஒருபோதும் கீழ்த்தரமான நிலையில் வரமாட்டான் என்பது இஸ்லாம் போதிக்கும் பாடம். ஆனால் சிலர் இறைத்தூதர்களை இறைவன் என்று சொல்ல தொடங்கி அதனை சரி காண்பதற்காக இறைவன் மனித ரூபத்தில் வந்தான் என்ற கருத்தை கூறுகின்றனர். உதாரணமாக, கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை இறைவனின் மகன் என்று கூறுகின்றனர். இதை இறைவன் அல்குர்ஆனில் வன்மையாக கண்டிக்கிறான். அதேபோன்று இந்து மதத்திலும் மக்கள் அக்காலத்தில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை இறைவனின் அவதாரம் என கூறி இருக்கலாம்.
>
>
>
> ராமர், கிருஷ்ணர் போன்றோர் இறைதூதர்களா?
>
> உலகெல்லாம் அனுப்பப்பட்ட இறைதூதர்கள் இந்தியாவிற்கும் வருகை தந்திருக்கலாம். ஏக இறை கொள்கையை போதித்து இருக்கலாம். ஆனாலும், இந்தியாவிற்கு இறைதூதர்கள் அனுப்பப்பட்டதாகவோ அல்லது அவர்களின் பெயர்களையோ அல்குர்ஆனில் இறைவன் குறிப்பிடவில்லை. 124,000 இறைதூதர்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் அல்குர்ஆனில் அவர்களில் 25 பேரின் பெயர்களும் சம்பவங்களும் மட்டுமே இறைவனால் குறிப்பிடப்பட்டுள்ளது.
>
> எனவே, ராமர், கிருஷ்ணர் போன்றோர் ஒரு வேளை இறைதூதர்களாக இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். எது எப்படி இருப்பினும், ஒருவேளை அவர்கள் இறைதூதராக இருந்திருப்பின் விக்கிரக ஆராதனையையோ அல்லது படைப்புகளை வணங்குவதையோ அவர்கள் ஒருபோதும் அனுமதித்து இருக்க மாட்டார்கள். அல்லது அவர்கள் ஏகத்துவ கடவுள் கொள்கையை மக்களுக்கு போதித்தாலும் பிற்கால மக்களால் அவர்கள் போதிக்கப்பட்ட விடயங்கள் திரிபுபடுத்தி சொல்லப்பட்டோ எழுதப்பட்டோ இருக்கலாம். இதற்கு சிறந்த உதாரணம். ஏகத்துவ இறைகொள்கையை உலகிற்கு பரப்ப வந்தவர்கள் இறைதூதர் இயேசுநாதர் அவர்கள் (அன்னாரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) ஆனால், அவர்களின் காலத்திற்கு பின்னர் அவர்களின் மக்கள் அவர்களின் மீது இருந்த ஆழிய அன்பினால் அவர்களையே இறைவன் என்றும் இறைவனின் குமாரர் என்றும் கூறத்தொடங்கினார்கள்.
>
>
>
> இந்து மதத்தில் இறைவனை பற்றி (கடவுட்கொள்கை)
>
> பொதுவாக இந்துக்கள் விக்கிரக ஆராதனையையும் பல தெய்வ வணக்கமுறையை பின்பற்றினாலும், இந்து மதத்தின் புனித நூல்கள் என குறிப்பிடப்படும் வேத நூல்களில் ஓரிறை கொள்கை பற்றியும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு ஏதுவான கோட்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
>
> அவற்றில் சில கீழே :
>
> 1. பகவத் கீதை (இந்து மத புனித கிரந்தம்)
>
> ♣ “அந்தந்த ஆசைகளால் அறிவிழந்தவர்கள் அந்தந்த நியமத்தைக் கைக்கொண்டு தம்முடைய இயல்புகளுக்கு கட்டுண்டு கவரப்பட்டவர்களாய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர்.”
> பகவத் கீதை 7:20
>
> விளக்கம் - இந்த வசனம் இஸ்லாமிய ஓரிறை கொள்கையை வலியுறுத்துகிறது. படைத்த இறைவனை விட்டுவிட்டு வேறு தெய்வங்களை வணங்குவதை இஸ்லாம் தடை செய்கிறது. அது பற்றி கடுமையாக எச்சரிக்கிறது. இதே கருத்து மேலே உள்ள பகவத் கீதை வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
>
>
> 2. உப நிஷத்துக்கள் (இந்து மத புனித கிரந்தம்)
>
> ♣ ஏகம் ஏவம் அத்விதயம் - அவன் ஒருவனே வேறு எவரும் இல்லை (சந்தக்யோ உப நிஷத் 6:21)
> ♣ நா கஸ்ய கஸ்சிச் ஜனித நா கதிபத் - அவனுக்கு பெற்றோர்களும் இல்லை. பாதுகாவலரும் இல்லை. (ஸ்வதேஸ்வதரா உபநிஷத் 6:9)
> ♣ நா தஸ்தி பிரதம அஸ்தி - அவனுக்கு நிகராக எதுவுமில்லை. (ஸ்வதேஸ்வதரா உபநிஷத் 4:19)
> ♣ நா சம்தரஸ் திஸ்தத்தி ரூபம் அஸ்ய, நா கக்கஸா பஸ்யதி கஸ் கனினம் ஹ்ரத ஹ்ரதிஸ்தம் மனஸ யா ஈனம், ஏவம் விதுர் அம்ர்தஸ் தி பவன்தி - அவன் வடிவத்தை காண முடியாது. எவரது கண்ணுக்கும் புலப்படாதவன், எவர்கள் மனதாலும் இதயத்தாலும் அவனை அறிந்திருக்கின்றார்களோ, அவர்களின் இதயத்தில் நிலையாக இருப்பவன். (ஸ்வதேஸ் வதரா உபநிஷத் 4:20) 4
>
> விளக்கம் - மேலே உள்ள உப நிஷத்துக்கள் வசனங்கள் யாவும் முஸ்லிம்கள் இறைவனை பற்றி கொண்டுள்ள இறைநம்பிக்கையை ஒத்தனவையாகவே இருக்கின்றன. முஸ்லிம்களின் இறைவேதமான அல் குர்ஆனில் இதே கருத்தை இறைவன் குறிப்பிடுகிறான்.
>
> அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......
>
> 1. (நபியே!) நீர் கூறுவீராக: அவன் – அல்லாஹ் ஒருவனே!
>
> 2. அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்.
>
> 3. அவன் (எவரையும் பெறவுமில்லை. அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை –
>
> 4. இன்னும் அவனுக்கு ஒப்பாக எவரும் இலர்
>
> (அல் குர்ஆன் - 112 ஆம் அத்தியாயம்)
>
> இறைவன் ஒருவன் என்றும், அவன் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என எவ்வித உறவும் அற்றவன் என்றும், அவனுக்கு நிகராக எதுவும் இல்லை என்றும், அவன் உருவம் அற்றவன் என்றும், எனவே அவனை சிலை விடிவிலோ வேறு வடிவிலோ கற்பனை செய்து வணங்கக்கூடாது என்றும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இந்த உப நிஷத்துக்கள் வசனங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>
>
> வேதங்கள்
> இந்து மதத்தில் நான்கு வேதங்கள் உள்ளன. அவை ரிக் வேதம். யசூர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்பனவாகும். அவை உயர் அந்தஸ்துடையவையாக கருதப்படுகின்றன.
>
> 3. யசூர் வேதம்
>
> ♣ நா தஸ்ய பிரதிம அஸ்தி - அவன் உருவமற்றவன் (யசூர் வேதம் 32:3)
> ♣ அவன் உடல் அற்றவனும் பரிசுத்தமானவனும் ஆவான் (யசூர் வேதம் 40:8)
> ♣ அந்தாமத ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே - எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகின்றார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கின்றார்கள். இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகின்றார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகின்றார்கள். (யசூர் வேதம் 40:9)
>
> விளக்கம் – இந்த யசூர் வேத வசனங்கள் இறைவனுக்கு உடலும் உருவமும் இல்லையென்ற இஸ்லாமிய போதனைகளை ஒத்தவையாகவே இருக்கின்றன. இறைவன் உடலோ உருவமோ இல்லாதவன் எனவும் அவனை அன்றி வேறு எந்த பொருட்களையும் வணங்க கூடாது எனவும் தெளிவாக கட்டளை பிறப்பிக்கிறது.
>
>
> 4. அதர்வன வேதம்
>
> ♣ தேவ் மஹா ஓசி - நிச்சயமாக இறைவன் மிகப்பெரியவன் ஆவான். (அதர்வண வேதம் 3:58:20)
>
> விளக்கம் – இது முஸ்லிம்கள் இறைவனை புகழும் வாக்கியங்களில் ஒன்றான அல்லாஹு அக்பர் (இறைவன் பெரியவன்) என்பதை ஒத்துள்ளது.
>
>
> 5. ரிக் வேதம்
>
> ♣ இப்பூவுலகை உருவாக்கியவனுக்குத்தான் புகழனைத்தும். ((ரிக்வேதம் 1:81:5)
>
> விளக்கம் – இது முஸ்லிம்கள் இறைவனை புகழும் முறையான அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே) என்பதை ஒத்து உள்ளதை பார்க்கலாம்.
>
> ♣ ஏகம் சத் விப்ர பஹுதா வதன்தி - ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். (ரிக்வேதம் 11:64:46)
>
> விளக்கம் - இஸ்லாத்திலும் இறைவனுக்கு பல பெயர்கள் கூறப்பட்டுள்ளது. அவை இறைவனின் பண்புகளை எடுத்து சொல்கிறது. உதாரணமாக, அர்-ரஹ்மான் என இறைவன் அழைக்கப்படுகிறான். அதன் அர்த்தமாகிறது, அருளாளன் என்பதாகும். உலகிலுள்ள மக்களுக்கு இறைவன் தன் அருட்கொடைகளை அருளுவதால் இப்பெயரால் அவன் அழைக்கப்படுகிறான்.
>
> ரிக்வேதம் குறிப்பிடும் இறைவனின் திருப்பெயர்களில் மிக அழகிய திருப்பெயர் “பிரம்மா” என்பதாகும். இதன் அர்த்தம் “படைப்பாளன்” என்பதாகும். இதே அர்த்தத்தில் அரபியில் காலிக்’ என்று இறைவன் அழைக்கப்படுகிறான். இறைவனை ‘காலிக்’ என்றோ ‘படைப்பாளன்’ என்றோ ‘பிரம்மா’ என்றோ அழைப்பதில் தவறில்லை. ஆனால் “பிரம்மாவிற்கு நான்கு தலை உண்டு” (அல்லாஹ் மன்னிப்பானாக!) என்று கூறுவது பெரும் பாவமாகும். இதனை இஸ்லாம் மட்டுமல்ல இந்து மத வேதமான யசூர் வேதமே நிராகரிக்கிறது.
>
> நா தஸ்ய பிரதிம அஸ்தி - அவன் உருவமற்றவன் (யசூர் வேதம் 32:3)
> இன்னும் மற்றொரு அழகிய திருநாமத்தையும் ரிக்வேதம் கூறுகிறது. அது ‘விஷ்ணு’ என்பதாகும். விஷ்ணு என்பதன் பொருள் ‘பரிபாலிப்பவன்’ இதை அரபியில் மொழிபெயர்த்தால் ‘ரப்’ என்றாகிறது. இறைவனை ‘ரப்’ என்றோ, ‘பரிபாலிப்பவன்’ என்றோ, விஷ்ணு என்றோ கூறுவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் ‘விஷ்ணுவுக்கு நான்கு கைகள் உண்டு. கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்’ என்பது போன்ற தவறான கருத்துகள் ஒரு காலமும் ஏற்று கொள்ளமுடியாதவையாகும்.
> இந்த உருவங்களுக்கு அப்பாற்பட்டவனாக இறைவன் இருப்பதினால் முஸ்லிம்கள் அப்பெயரை ஏற்றுக்கொள்வதில்லை. இறைவனுக்கு நிகராக எதுவுமில்லை என்று தான் ஸ்வதேஷ்வதரா உபநிஷத் கூறுகிறது.
>
> ♣ மா சிதன்யதிவி சன்சதா - “நண்பர்களே! தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்.” (ரிக்வேதம் 8:11)
>
> விளக்கம் – இங்கும் ஏக இறை வணக்கமே எடுத்து சொல்லப்படுகிறது.
>
> ♣ உண்மையிலேயே தெய்வீக படைப்பாளனின் புகழே பெரியது. (ரிக்வேதம் 5:5:8)
>
> விளக்கம் – எல்லா புகழும் இறைவனுக்கே என முஸ்லிம்கள் கூறும் அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை இங்கு கவனத்திற்குரியது.
>
> ♣ அவன் மகத்துவமிக்க வானங்கள் பூமியின் அதிபதியாகும். (ரிக்வேதம் 2:117:10)
>
>
> 6. இந்து மதத்தின் பிரம்ம சூத்திரம்
>
> இந்து மதத்தின் பிரம்ம சூத்திரம் கூறுகிறது.
> “ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே
> நஹ்னே நாஸ்தே கின்ஜன்”
> பொருள்: “இறைவன் ஒருவனே. வேறு இல்லை. இல்லவே இல்லை.”
>
>
>
> இந்து மதத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பற்றி.....
>
> இந்து மத வேதங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை பற்றி முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மஹாமத் என்ற பெயரில் பாலைவன பகுதியில் ஒருவர் வருவார் என்றும் அவர்களின் தந்தை பெயர், தாயின் பெயர், குண நலன்கள் என எல்லாமே குறிப்பிடப்பட்டுள்ளது.
>
> ♣ "அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் தோழர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்)." பவிஷ்ய புராணம் - பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)
>
> இது பற்றி பிரபல இந்து மத அறிஞர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் தெளிவுப்படுத்தும் வீடியோ கீழே உள்ளது.
>
> ♣ ”அவர்கள் ‘கத்னா (லிங்கசேதி) செய்வார்கள், குடுமி வைக்கமாட்டார்கள், தாடி வைத்திருப்பார்கள், மாமிசம் உண்பார்கள், சப்தம் போட்டு (பாங்கு) அழைப்பார்கள், முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்” (பவிஷ்ய புராணம், 3:3:25)
>
> ♣‘அனைத்து கல்வியறிவின் ஊற்றுக் கண்ணான ‘அஹ்மத்’ ஒரு மகத்தான மனிதராகும். இவர் ஒரு சூரியப் பிரகாசத்தை போல இருளை விரட்டக் கூடியவர். அந்த பிரகாசமிக்க பேரொளியை அறிந்து கொண்ட பின்னரே மரணத்தை வெல்ல வேறு வழி கிடையாது.’ யஜூர் வேதம் 18-31.
>
> ♣ உண்மையாளரும் அறிவாளியும் பலசாளியுமான மாமஹே (அதாவது முஹம்மத்) எனக்கு அருள் புரிவார். அவர் முழுமையானவர். முழு உலகிற்கும் அருட்கொடையானவர்.” (ஆதாரம் ரிக் வேதம் மந்திரம் 5 , சூக்தம் 28 )
>
> நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை பற்றி மேலே எவ்வளவு தெளிவாக வேதங்கள் கூறி உள்ளன என பாருங்கள். சர்வ உலகிற்கும் அருளாகவும் நேர்வழி காட்டுபவராகவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வந்துள்ளதையும் விக்கிரக ஆராதனை, மூட நம்பிக்கைகள், தீய பழக்கவழக்கங்கள் போன்ற இருளை விரட்டி நேர்வழி என்னும் சூரிய பிரகாசத்தை பரப்ப வந்தவர்கள் என்பதை இந்த வசனம் எடுத்து காட்டுகிறது.
>
> அடுத்து இந்து வேதங்களில் புகழ் பெற்ற பகவத் கீதையில் கல்கி அவதாரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கலியுகத்தில் (இறுதி காலத்தில்) ஒரு கல்கி அவதரிப்பார் என்றும் அவரின் குண நலன்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையே குறிக்கும் என்பதை சரியாக முழுமையாக ஆய்வு செய்து பார்த்தால் புரியும்..
>
> ♣ பகவத் புராணம் காண்டம் 12, அத்தியாயம் 02, ஸ்லோகம் 18-20.படி
> ஷம்பாலா நகரின் தலைவர் விஷ்னுயாஷ் என்பவர் வீட்டில் அவர் பிறப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அவருடை பெயர் கல்கி என்பதாகும். அவருக்கு எட்டு (08) தெய்வீக அம்சங்கள் இருக்கும் என்கிறது. அவர் குதிரையின் மீது வலது கையில் வாலை ஏந்தியவராக வருவார் என்றும் கொடியவர்களை அழிப்பார் என்றும் காணப்படுகிறது.
>
> நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வாளை ஏந்தி யுத்தம் செய்து கொடியவர்களை அழித்தமை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
>
> ♣ மேலும் பகவத் புராணம் காண்டம் 01, அத்தியாயம் 03, ஸ்லோகம் 25 படி
> கலியுகத்தில் மன்னர்களெல்லாம் கொள்ளையர்களாக மாறுகின்ற தருணத்தில் விஷ்னுயாஷின் வீட்டில் கல்கி பிறப்பார் என்று சொல்கிறது.
>
> ♣ கல்கி புராணம் அத்தியாயம் 02, வசனம் 04ல்
> அவரின் தந்தையின் பெயர் விஷ்னுயாஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
> விஷ்னுயாஷ் என்றால் இறைவனை வணங்குபவர், இறைவனின் அடிமை என பொருள்படும். இதன் அரபி மொழிபெயர்ப்பு அப்துல்லாஹ். இதுவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தந்தையாரின் பெயராகும்.
>
> ♣ கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 05ல்
> கல்கிக்கு நான்கு தோழர்கள் உதவியாக இருப்பார்கள் என குறிப்படுகிறது.
> நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கும் நான்கு தோழர்கள், அதாவது அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகிய நான்கு தோழர்கள் உதவியாளர்களாக இருந்தனர். அவர்கள் கலிபா என்று அழைக்கப்பட்டனர். அதாவது பிரதிநிதி எனப்பொருள்படும்.
>
> ♣ கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 07ல்
> அவருக்கு யுத்த களத்தில் வானவர்கள் உதவி செய்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
> இஸ்லாமிய வரலாற்றின் முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் முஸ்லிம்கள் வெறும் 313 பேர் மட்டுமே இருந்தனர். இறை நிராகரிப்பாளர்கள் 1000 பேர் சகலவிதமான யுத்த தளபாடங்கள், ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். அப்போது இறைவன் வானவர்களை அனுப்பி முஸ்லிம்களுக்கு உதவி செய்தான்.
>
> ♣ கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 11ல்
> அவர் விஷ்னுயாஷின் வீட்டில் சுமதியின் வயிற்றிலிருந்து பிறப்பார்.
> சுமதி என்றால் அமைதி என்று பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தாயின் பெயர் ஆமினா. இதுவும் அதே அர்த்தத்தையே கொடுக்கிறது.
>
> ♣ கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 15ல்
> அவர் மாதோ மாதத்தில் 12ம் நாள் பிறப்பார்.
> நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் ரபியுல் அவ்வல் மாதம் (இது அரபி மாதமாகும். வசந்தத்தின் ஆரம்பம் என பொருள்படும்) 12ம் நாள் பிறந்தார்கள்.
> இப்படி நிறையவே சொல்லி கொண்டு போகலாம். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவ்வளவு ஆதாரங்களே போதுமானது.
>
>
>
> உண்மையான இந்து யார்?
>
> மேலே பார்த்த இந்து மத வேத வசனங்கள், ஓரிறை கொள்கையையும் இறைவனை அன்றி வேறு யாரையும் வணங்க கூடாது என்பதையும் இறைவன் உருவமோ உடலோ அற்றவன் என்பதையும் அந்த இறைவனை சிலையாக கற்பித்து வணங்கக்கூடாது என்பதையும் மிக தெளிவாக சொல்லி காட்டியுள்ளது. அதேபோல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் வருகை (கல்கி அவதாரம்) பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
>
> தூய உள்ளத்தோடும் தெளிவான சிந்தனையோடும் ஒரு இந்து சகோதரர் உண்மையை விளங்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமர்ந்து இந்த வேத வசனங்களை சரி வர படித்தாலே போதுமானது. நிச்சயமாக அவரினால் இஸ்லாமிய ஓரிறை கொள்கை கோட்பாடுகளை விளங்கி கொள்ள முடியும். அவர் தன் இந்து மத வேதங்கள் தடுத்தபடி சிலைகளை வணங்குதல், படைப்புகளை வணங்குதல் போன்றவற்றை கைவிட வேண்டும். சர்வ வல்லமையும் மிக்க ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும், முஸ்லிம்களை போல.
>
> எனவே, இன்னும் காலம் கடந்து விடவில்லை. இந்து சகோதரர்கள் ஒவ்வொருவரும் இந்த சத்தியங்களை எல்லாம் நன்று விளங்கி, உண்மையான சத்தியத்தை நோக்கிய இஸ்லாம் என்னும் இந்த நேர் வழி மார்க்கத்திற்கு வர வேண்டும்.
>
> இல்லையேல், இந்து வேதங்கள் முன்னறிவிப்பு செய்த அந்த சத்திய தூதரையும் (கல்கி) சத்திய மார்க்கத்தையும் தவற விட்டு கைச்சேதப்பட வேண்டி வரும்.
>
> மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள, எம்மை தொடர்பு கொள்க - ad...@mailofislam.com
>
> ♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பற்றி இந்து மத வேத நூல்களில் செய்யப்பட்டுள்ள அறிவிப்பை விளக்குகிறார் பிரபல இந்து மத அறிஞர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள். கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
>
> ♦ "நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன்?" இஸ்லாத்தை தழுவிய ஒரு இந்து அறிஞரின் உரையை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்
>
>
> Sent from my iPhone