கவி நா. முத்துக்குமார் இன்று இருந்திருந்தால் அவருக்கு 50 வயது.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்!
- தமிழில் உள்ள மகள் மீது உள்ள சிறந்த கவிதை!
தூர்
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய் நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க.
- நா முத்துக்குமார்
நா.முத்துக்குமார்.
__________________________
எல்லாக் கவிதைகளுக்கும்
ஒரு மொழி பெயர்ப்பின் பெயரே
ந முத்துக்குமார்.
இந்தக் கவிஞன் எனும்
அக்கினி ஆறு
காலக்கரையான்களைக் கண்டு
அஞ்சியதில்லை.
இவன் எழுத்துக்கள்
ஊற்றுக்கண் திறந்ததில்
முற்றுப்புள்ளிகள் முடக்க
முனைந்ததில்லை.
புல்லும் புழுவும்
பச்சைப்புல்லில் கவிதை உருப்பெற
இவன் வீட்டு வாசற்சுவடுகளில்
படரும்..ஊரும்.
தொட்டாற் சிணுங்கிக்
கவிதையை
தொட்டு தொட்டு எழுப்பியவன்.
கிராமத்துச் சுவர்களில்
வட்ட வட்டமாய்
சாணி தட்டிக்கொண்டு
வந்த புதுக்கவிதை
இவனிடம் அவை
அசோசகக்கரங்கள் என்று
வம்புக்கு இழுத்தன.
மனிதன் மணம் எங்கும்
மின்காந்தம் பாய்ச்சும்.
இவனிடம் மின்னல் வெள்ளத்தை
அது
கோப்பை கோப்பையாய்
கொட்டியது.
இவன் பேனாவில்
நிரந்தரக்கூடு செய்தான்.
குயில்களின் இச் இச்சுகளில்
கவிதைகள் பின்னித்தந்தான்.
கோடம்பாக்கத்து
ராட்ச்சசக்காமிராக்கள்
இவன் எழுத்துக்களையே
தின்று தின்று
வண்ண உலகங்களை
கிலு கிலுப்பைகளாய் குலுக்கிக்காட்டின.
சொற்பெருக்குகளில் சொட்டி சொட்டி
உயிரின் வண்ண வண்ணக்குமிழிகளை
ஊதி ஊதி விளையாடத்தந்தவன்
அந்த மஞ்சள் நிறத்தை மட்டும்
அலட்சியம் செய்தது ஏன்?
மஞ்சக்காமாலை என்று
கொச்சைத்தனமாய்
கொத்தித்தின்றதே அவனை அது?
நமக்கு
மாபெரும் இழப்பு
எனும் கவிதை
பேனா இல்லாமல் காகிதம் இல்லாமல்
அவனை வைத்து
அவன் தந்த போது
இந்த விருதுகள் தான்
வரட்டிகளாய் ஏந்தி தீபம் தந்தன.
கவிதைத் தேன் பிழம்பே!
உணர்ச்சிக்கவிதையை எழுதிக்காட்ட
உனக்கு உன் மரணமா கைக்கு கிடைத்தது.
கைக்கு எது கிடைத்தாலும்
உனக்கு
அது உலகத்தின் ஓரப்பார்வைகள்
கண்ணடித்து தருவது தான்.
படு பாவி
அதில் எப்படி அந்த
எமன் உன்னை விழுங்கித் தீர்த்தான்.
________________________________________________
சொற்கீரன்