கலாம், ரெடியா?

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 23, 2025, 9:35:14 PMApr 23
to
உலகப் புஸ்தக தினம், இன்று.
https://x.com/naa_ganesan/status/1915078666796806385

இருவரும் புஸ்தகப் பிரியர்கள். சேர்ந்து புத்தகம் எழுதுவதாக இருந்தது.

------------------

ரெடியா கலாம் ? –சுஜாதா

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் (சென் ஜோசப்) பி.எஸ்ஸி. படிப்பில் என் வகுப்புத் தோழர். அந்தக் கல்லூரியில் மதிய இடைவேளைகளில் லாலி ஹால் என்னும் பெரிய அரங்கத்தில் பெல் அடிக்கும் வரை அரட்டையடித்துக் கொண்டிருப்போம். அப்போதிலிருந்தே அப்துல் கலாமை எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதிகம் பேச மாட்டார். ஏதாவது கலாட்டா செய்தால் சிரித்து மழுப்பிவிடுவார். எங்களுடன் சினிமாவுக்கெல்லாம் வரமாட்டார்.

பி.எஸ்ஸி. படிப்புக்குப் பிறகு நான் எம்.ஐ.டி-யில் எலெக்ட்ரானிக்ஸ் சேர்ந்தபோது அதே வருடம் அவர் ஏரோநாட்டிக்ஸில் சேர்ந்தார். இருவருக்கும் பொதுவாக இருந்த தமிழ் ஆர்வத்தால் அடிக்கடி சந்தித்துப்  பேசியது நினைவிருக்கிறது. பாரதி பாடல்களிலும் திருக்குறளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அப்போதே அவருக்கு விமான இயல், ராக்கெட்ரி போன்ற துறைகளில் எதையாவது நடைமுறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததை அறிய முடிந்தது. எம்.ஐ.டி-யின் ஜெர்மானிய ப்ரொபசர் ரெபந்தின், பேராசிரியர் பண்டாலே போன்றவர்கள் வழிகாட்ட (நாட்டிலேயே முதன் முதலாக என்று எண்ணுகிறேன்), ஒரு கிளைடர் என்னும் எஞ்சின் இல்லாத விமானத்தை செய்து முடித்தார்கள். அதை மீனம்பாக்கத்துக்கு பார்ட் பார்ட்டாக கழற்றி எடுத்துச் சென்று மறுபடி பூட்டி ‘விஞ்ச்’சின் மூலம் இழுத்து காத்தாடி போல உயர்த்த, அது தர்மலை (உஷ்ணக் காற்றைப்) பிடித்துக் கொண்டு பறந்தபோது கல்லூரியில் நாங்கள் அனைவரும் பெருமிதத்தில் பறந்தோம். கலாம் அதில் பங்கு வகித்தார்.

எம்.ஐ.டி-யில் இயற்பியல் பேராசிரியர் ராகவாச்சாரி, தமிழில் ஈடுபாடு உள்ளவர். அவர், தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு போட்டி வைத்தார். நானும் கலாமும் அதில் கலந்து கொண்டோம். கலாம் எழுதிய கட்டுரை ‘ஆகாய விமானம் கட்டுவோம்‘ என்பது. நான் எழுதியது ‘அனந்தம்‘ என்னும் Infinity Mathematics பற்றிய கட்டுரை. கலாமுக்குப் பரிசு கிடைத்தது. எழுதுவதுடன் நிறுத்தி விடவில்லை. பிற்காலத்தில் விமானம் என்ன, ராக்கெட்டே கட்டி முடித்தார்.

எம்.ஐ.டி-க்குப் பின் சில வருடங்கள் அவருடன் தொடர்பு இல்லை. இடைவருடங்களில் விக்ரம் சாராபாய் போன்றவர்களின் கண்காணிப்பில் அவர் வளர்ந்திருக்கிறார். நாசாவில் பயிற்சி பெற்றிருக்கிறார். கலாமை நான் பாரத் எலெக்ட்ரானிக்ஸில் சேர்ந்ததும் மீண்டும் வேலை தொடர்பாக சந்திக்க வாய்ப்புக்கள் கிடைத்தன. அவர் ஐ.எஸ்.ஆர்.ஓ-வின் ‘எஸ்.எல்.வி’ போன்ற ராக்கெட்டுகளின் வடிவமைப்பில் பங்கு கொண்டிருந்தார். அப்போதே கடினமான உழைப்பின் அடையாளங்கள் தெரிந்தன. கலாம், அரசாங்க ஏணியில் விரைவாக உயர்வார் என்பதை சுற்றுப்பட்டவர்கள் அப்போதே சொன்னார்கள். பின்னர் அவர் ஸ்பேஸ் டிபார்ட்மெண்டிலிருந்த ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று இந்திய அரசின் ‘ப்ருத்வி’, ‘அக்னி’ ‘ஆகாஷ்’, ‘நாக்’ போன்ற ஏவுகணைகளின் வடிவமைப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அதன்பின் டெல்லியில் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அரசின் மிகமிக தாமதமாகிவிட்ட எல்.சி.ஏ. விமானத்தை ஹாங்கரைவிட்டு வெளியே இழுத்து வந்து பறக்கவைத்ததில் கலாமின் பங்கு கணிசமானது.

எங்களுடன் அந்த பாட்ச்சில் எம்.ஐ.டி-யில் படித்த மற்றவர்களுடன் ஒப்பிட்டால் கலாமின் வளர்ச்சி பன்மடங்கானது. நாங்கள் யாரும் ‘பாரத ரத்னா’ ரேஞ்சுக்கு உயரவில்லை. கலாமின் வெற்றிக்கு முக்கியக் காரணம், செய்யும் தொழில் மேல் பக்தியும் அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும்தான்.

கலாம், டி.ஆர்.டி.ஓ-வில் இருந்தபோது  அவர் நடத்திய   ரெவ்யூ மீட்டிங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன். மிகச் சுருக்கமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காரியம் நடந்ததா என்று அந்தந்த ப்ராஜெக்ட் லீடரைக் கேட்பார். தாமதமானால் கோபித்துக்கொள்ளவே மாட்டார். சத்தம் போட மாட்டார். எப்படியோ அவரிடம் கொடுத்த வாக்குத் தவறுவதில் சங்கடத்தை உண்டு பண்ணுவார். அவரே அவ்வளவு கடுமையாக 24/7/365 என்று வேலை செய்யும்போது மற்றவர்கள் அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது கட்டாயமாகியது. Leading by example.

அவருடைய சொந்தத் தேவைகள் எளிமையானவை. பிரம்மச்சாரி. சைவ உணவு. எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. இதனுடன் ஆதாரமான முஸ்லீமின் நல்லொழுக்க குணங்களும் சேர்ந்து அவரை அத்தனை பெரிய பதவியின் சபலங்களிலிருந்து வெகு தூரம் தள்ளிவைத்தன. தெஹல்கா டேப்களில் கலாம் பெரிய இடத்து லஞ்சங்களுக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

ஒரு சம்பவம் எனக்குத் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஐதராபாத்தில் அவருடன் ஒரு மீட்டிங் சென்றிருந்தபோது சில ரஷ்ய தொழில்நுட்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பஞ்சாரா ஓட்டலில் ஒரு டின்னர் இருந்தது. என்னையும் அழைத்திருந்தார். ரஷ்யர்கள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். கலாம் கையில் ஒரு வோட்காவைத் திணித்து வற்புறுத்தினார்கள். கலாம் எந்தவித லாகிரிப் பழக்கமும் இல்லாதவர். சங்கடத்துடன் அவசரமாக என்னை அணுகி ‘கையில என்ன?’ என்றார். ‘வாட்டர்.. ஜஸ்ட் வாட்டர் கலாம்’ என்றேன். ‘கொண்டா’ என்றார். நான் வைத்துக் கொண்டிருந்த கிளாசை மின்னல் வேகத்தில் பிடுங்கிக் கொண்டு வோட்கா கிளாசை என் கையில் திணித்தார்.

‘சாப்பிட மாட்டேன்னு சொன்னா அவங்களுக்குப் புரிய மாட்டேங்குதுய்யா…’ சற்று நேரத்தில் ‘சியர்ஸ்’ என்று வோட்கா கிளாஸ்களுடன் கலாமின் தண்ணீர் கிளாஸும் சேர்ந்து க்ளிங்கியது.

கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருக்கிறோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்புசுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி…நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்…அடுத்த மாதம் துவக்கிடலாம்யா’ என்பார்.

இப்போது அவர் ஓய்வெடுத்த பின் அந்தப் புத்தகத்தை எழுதிவிடுவார் என்று எண்ணுகிறேன். இந்திய அரசும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரிமா ரோட்டரி சங்கங்களும் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் அவரை விட்டு வைத்தால்!


Reply all
Reply to author
Forward
0 new messages