உ.வே.சா. பஞ்சகம்
(இன்னிசை வெண்பா)
தமிழ்த்தாய் உளங்கொள் தலைமகன்; தேனார்
அமிழ்தமாய்ப் பன்னூல் அளித்த அறிஞர்;
உரைநூல் வழங்கிய உத்தமர்; ஓங்கி
வரையென நின்றார் வளர்ந்து. 1
ஓலைச் சுவடியை ஓயாமல் தேடிஅதி
காலைப் பொழுதில் கருத்துடன் நோக்கி
அசைசீர்கள் நாடி அரும்பொருள் நாடி
நசையுற ஈந்தார் நயந்து. 2
இரவு முழுவதும் இம்மியும் தூங்கா(து)
இரந்து தொகுத்த இணையில் சுவடியை
ஆய்ந்து தெளிந்தார்; அதைஓர் தவமெனத்
தோய்ந்து படிப்பாரே துய்த்து. 3
உ.வே.சா என்னும் உயர்ந்த மனிதரே
ஆவேசம் கொண்டே அலைந்து திரிந்தனர்
ஓலைச் சுவடிகள் ஓராயிரம் சேர்த்தவோர்
வேலையைச் செய்தார் விழைந்து. 4
அஞ்சுகமே கேளாய் அவர்புகழ் கூறுவாய்
அஞ்சுவ தேனோ அருநூலைக் காண்பவர்
நெஞ்சார வாசித்தல் நித்தம் அவருக்கோர்
அஞ்சலி யாகும் அறி. 5
-கருவூர் இனியன்.