Re: [MinTamil] ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

137 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 5, 2019, 10:30:48 AM9/5/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Wed, Sep 4, 2019 at 11:55 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
மின்தமிழ் குழுமத்தின் முன்னாள் ஆசிரியர்கள் 
                                              இந்நாள் ஆசிரியர்கள் 
அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 
🌸🌸🌸🌸🌸
சக 

--

On Thu, Jun 6, 2019 at 11:47 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
பரிபாடல் (கீரந்தையார்)
http://www.tamilvu.org/ta/library-l1250-html-l1250205-124637

ஆசான்/ஆச்சான் < ஆசார்/ஆச்சார் < ஆசார்ய/ஆச்சார்ய   (ஒப்பீடு: நக்கன் < நக்கர் < நகர்).
ஆசான்/ஆச்சான் - வடசொல் மூலம் கொண்டது.

மாணவன் ஆசானுக்குப் பணிதலை நல்ல உவமை ஆக்குகிறார் கொங்குவேளிர், தாம் இயற்றிய பெருங்கதையில்.

"அன்பினால் அடக்குதல்

முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள்பால் இருந்த மரியாதை மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பிழைகளை மறந்தும் புரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.

உதயணன் என்னும் அரசன் யாழ் வாசித்து ஒரு மத யானையை அடக்கினான். அவன் அதன் மேல் ஏறிக்கொண்டு அங்குச முதலியவற்றை அந்த யானையே எடுத்துத் தரும்படி ஏவி நடத்தினான். அந்த யானை அவனுக்கு அடங்கியதைச் சொல்லும்போது பெருங்கதை யென்னும் பழைய நூலின் ஆசிரியர்,

"ஆனை யாசாற் கடியுறை செய்யும் மாணி போல மதக்களிறு படிய"

என்று வர்ணிக்கின்றனர். அங்குசம் முதலிய பல வலிய ஆயுதங்களுக்கும் அடங்காமல் திரிந்த அந்த மத யானை இனிய யாழோசைக்குப் பணிந் ததை வேறு யாரிடத்திலும் பணியாதொழுகும் மாணாக்கன் ஆசிரியனுடைய அன்புரைக்குப் பணிந்து நடக்கும் வழக்கத்தோடு ஒப்பிடுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது!

ஆசானோடு பழகும் மாணாக்கனை நெருப்பை மிக அணுகாமலும் மிக விலகாமலும் குளிர்காயும் ஒருவனோடு பெரியோர் ஒப்புக் கூறுகின்றனர்." (பண்டைக்காலத்துப் பள்ளிக்கூடங்கள், உவேசா).

"பெருங்கதையில், உதயணன் நளகிரி யென்ற மதம் பிடித்த யானையை வீணை வாசித்து அடக்கி அதன்மேல் ஏறி ஆயுதங்களை எடுத்துத்தர அதனையே ஏவி ஊர்ந்தானென்று ஒருசெய்தி காணப்படுகிறது. இசையினால் வணக்கப்பட்ட அந்த யானை உதயணனுக்கு அடங்கி நின்றதை ஆசிரியர் கூறுகையில்,

'குருவினிட‌த்துப் மிகுந்த ப‌க்தியுள்ள‌ ஒரு சிஷ்ய‌னைப் போல‌ யானை ப‌டிந்த‌து'என்னும் பொருள் ப‌ட‌,

"வீணை யெழீஇ வீதீயின் நட‌ப்ப‌
ஆனை ஆசாற்கு அடியுறை செய்யும்
மாணி போல‌ ம‌த‌க்க‌ளிறு ப‌டிய‌"

என்று பாடியுள்ளார்." (பண்டைத் தமிழரின் இசையும் இசைக் க‌ருவிக‌ளும், உவேசா)  

நா. கணேசன்
 

செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
65     
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.

----
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsi%3DwFrmxB78TmB7_dNpcAWKus8E1SeKL4-XQoD%2B7y%2B2g%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Sep 9, 2019, 5:23:24 PM9/9/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
உவேசா எழுதிய கட்டுரை. நல்லுரைக்கோவை நூல்களில் இருமுறை
“ஆணை யாசாற் கடியுறை செய்யும் மாணி போல மதக்களிறு படிய”
என்னும் கொங்குவேளிர் செய்த பெருங்கதை வரி வருகிறது.
ஆணையை ஆனை என்று எழுத்துப்பிழையாக இரண்டு முறை
‘ப்ராஜக்ட் மதுரை’ காட்டுகிறது.  

நா. கணேசன்

உவேசா, நல்லுரைக்கோவை. 

    5. பண்டைக்காலத்துப் பள்ளிக்கூடங்கள்*


    குருகுலங்கள்

    இக்காலத்தில் பள்ளிக்கூடங்களைப் பற்றியும், பாடஞ் சொல்லும் முறைகளைப் பற்றியும் நூற்றுக் கணக்கான புஸ்தகங்கள் ஆங்கிலம் முதலிய பாஷைகளில் இருக்கின்றன. காலநிலை மாறுபாடு அடைய அடைய ஜனங்களுடைய பழக்கங்களும் மாறுதலடைகின்றன. இக்காலத்துப் பள்ளிக்கூடங் களில் இக்கால வாழ்க்கைக்கேற்ற முறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. பழைய காலத்துப் பாட சாலைகளில் வழங்கி வந்த முறைகளோ வேறு வகை. அக்காலத்தலிருந்த பள்ளிக்கூடங்களின் அமைப் பும் ஆசிரியர்களின் நிலைமையும் மாணாக்கர்களின் இயல்பும் வேறு. எனக்குத் தெரிந்த வரையில் அவற்றைப்பற்றிச் சொல்லுகிறேன்.

    நம்முடைய நாட்டில் மிகவும் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந் தது. அதைக் குருகுலம் என்பார்கள். குரு எழுந் தருளியுள்ள கோயிலென்பது அதன் பொருள். இப்படியே தெய்வம் எழுந்தருளிய கோயிலுக்கு, 'தேவகுலம்' என்னும் பெயர் வழங்குகின்றது;

    "ஊரானோர் தேவகுலம்"

    என்பது ஒரு பழைய வாக்கியம். ஊருக்கு ஒரு கோயிலேனும் இருந்தது.

    "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

    என்றும்,
    --------------------------------------------------
    *புரசபாக்கம் ஸர். எம். ஸி. டி. முத்தைய செட்டியார் ஹைஸ்கூல் ஆசிரியர் சங்கத்தின் முதற் பிரசங்கமாக 20-7-36-ல் செய்யப்பட்டது.

    "திருக்கோயி லில்லாத திருவில் ஊரும்"

    என்றும் பெரியோர்கள் கூறியுள்ளார்கள்.எங் ஙனம் தேவகுலம் இல்லாத ஊர் வாழ்வதற்கு ஏற்றதன்றென்று கருதப்பட்டதோ, அங்ஙனமே குருகுல மில்லாத ஊரும் நன்மையில்லாத்தென்று கருதப்பட்டது.

      "கணிக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கும்
      மூத்தோரை யில்லா வகைக்களனும் பாத்துண்ணும்
      தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
      நன்மை பயத்தல் இல"

    என்று திரிகடுகம் கூறுகின்றது. இதில் கணக் காயர் இல்லாத ஊர் நன்மை பயவாதென்பது காணப்படும்.

    கணக்காயர்

    கணக்காயரென்பது உபாத்தியாயருக்கு ஒரு பெயர். கணக்கு என்பது நூலின் பெயர். கணக் காயரென்றால் பல நூற்றொகுதியை யுடையவ ரென்பது பொருள். அவர்கள் பல நூல்களைத் தொகுத்துப் பெட்டிகளிற் சேமித்து வைப்பவர்கள் அல்லர்; பல நூல்களையும் கற்று ஆய்ந்து தம்மனத் துள்ளே தொகுத்து வைப்பவர்கள். அவர்களிடம் பாடங் கேட்பவர்கள் புதிய செய்திகளை அறிந் தறிந்து, " இவர்களுக்குத் தெரிந்த விஷயங் களுக்கு ஒரு வரம்பில்லை போலும்!" என்று வியப்பார்கள். அதனாலேதன் உத்தம ஆசிரியர் களுக்கு மலையை உவமை கூறி அம்மலை இன்ன தன்மையினால் ஆசிரியர்களுக்கு உவமையாவ தென்பதை விரித்துக் கூறும்பொழுது, "அளக்க லாகா அளவும் பொருளும்" உடையதென்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். யார் யாருக்கு எந்த எந்த விஷயம் தெரிய வேண்டுமோ, அவ்வவர்களுக்கு அவ்வவ் விஷயங்களைச் செவ்வி பெறக் கற்பிக்கும் திறமை அவர்களுக்கு இருந்தது.

    ஆதலின் அவர்கள் ஊரில் இல்லையெனின் ஊருக்கு மங்கலமே இல்லையென்பது நம் முன்னோர்க ளுடைய கொள்கை. "மங்கலாமகியின்றியமை யாது, யாவரும் மகிழ்ந்து மேற்கொள" விளங்கும் மலரை அத்தகைய ஆசிரியர்களுக்கு உவமை கூறி யிருக்கிறார்கள். அவர்களை மாணாக்கர்கள் தெய்வ மாகவே எண்ணி வழிபட்டார்கள்.

    "எழுத்தறி வித்தவன் இறைவனாகும்"

    என்று வெற்றிவேற்கை கூறுகின்றது. அருச் சுனன் தன் ஆசிரியராகிய துரோணரை,

      "யாதுமொன் றறியா என்னை இவனலா திலையென் றிந்த‌
      மேதினி மதிக்கு மாறு விண்முதற் படைகள் யாவும்
      தீதறத் தந்த உண்மைத் தெய்வம் நீ"

    என்று வாயார வாழ்த்துகின்றான்.

    தமிழ்ச் சுவடிகளை எழுதும் பிள்ளைகள் "நன்றாக, குரு வாழ்க, குருவே துணை" என்று எழுதுவது பழைய வழக்கம். இதனால் ஆசிரியர்க ளிடத்து அக்காலத்தினருக்கு இருந்த மதிப்பு விளங்கும்.

    தமிழ் நாட்டில் இருந்த பழைய ஆசிரியர்கள் தமிழ் இலக்கிய இலக்கணப் ப‌யிற்சி மிக உடை யவர்கள். வடமொழி, தெலுங்கு முதலிய வேறு பாஷைகளிலும் அவர்களுக்கு ஓரளவு பயிற்சி இருந்தது. கணக்கு,சோதிடம்,வைத்தியம், சங்கீதம் முதலியவற்றிலும் பழக்கம் இருக்கும். இவ்வளவு துறைகளிலும் பரந்த அறிவு வாய்ந்த அவர்களிடம் படிக்கும் பிள்ளைகளும் அப்படியே பல வழியிலும் நல்ல ஞானத்தை அடைவார்களென் பதில் என்ன தடை! பல இடங்களில் உபாத்தி யாயரே வைத்தியராகவும் சோதிடராகவும் இருப்ப துண்டு.

    தம்முடைய வாழ்வு முழுவதும் பிறர் நன்மைக்கு உழைக்கும் இயல்புடையவர்களாக‌ அவ்வாசிரியர்கள் இருந்தார்கள். சங்க காலத்துப் புலவர்களில் பலர் உபாத்தியாயர்களாக இருந்து ஜீவனம் செய்தனர். மிக்க புகழ் பெற்ற புலவராகிய நக்கீர்ருடைய தந்தையார் ஒரு கணக்காயரே. அவருடைய பெயரைக்கூட ஏனையோர் கூறுவ தில்லை. அவ்வளவு மதிப்பு அவருக்கு இருந்தது. இப்பொழுதும் அவர் பெயர் 'மதுரைக் கணக் காயர்' என்று நமக்குத் தெரிய வருகிறதேயல்லாமல் அவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. கணக்காயன் தத்தன் என்ற சங்கப் புலவர் ஒருவர் இருந்தார். அவரும் பள்ளிக்கூட உபாத்தியாயரே.

    திண்ணைப் பள்ளிக்கூடங்கள்

    கிராமந்தோறும் இருந்த பள்ளிக்கூடங்களைத் திண்ணைப் பள்ளிக்கூடங்களென்று நாம் சொல்லு கிறோம்; தெற்றிப் பாதசாலைகளென்றும் சொல்வ துண்டு. ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப் பட்டிருக்கும். அதனை மன்றமென்றும் அம்பல மென்றும் கூறுவர். ஊருக்குப் பொதுவான விஷயங்கள் அந்த இடங்களில் கூடி யோசிக்கப் படும். சங்கீத வித்துவான்கள் முதலியவர்கள் வந்தால் அங்கே தங்கியிருப்பார்கள். அங்கே வெயிலுக்கும் மழைக்கும் தங்குதற்கேற்ற இடங் களும் இருக்கும். அவ்வம்பலத்திலுள்ள தெற்றி களிலே மரநிழலில் முற்காலத்துப் பள்ளிக்கூடங் கள் நடைபெற்றிருக்கலாமென்று எண்ணுகிறேன்.

    மன்றங்கள்

    குறுந்தொகையென்னும் பழைய சங்க நூலில்.

      "அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
      தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ?"

    என்பது காணப்படுகின்றது. ஒரு பாணணைப் பார்த்து ஒரு பெண் சொல்வது இது. பாணனென்பவன் சங்கீதத்தால் ஜீவனம் செய்பவன். அலனை நோக்கி அம்மங்கை, "இவன் ஓர் இளைய மாணாக்கன். தன் ஊரிலுள்ள மன்றத்தில் எப்படி இருப்பானோ?" என்று கூறுகின்றாள். இதனால் மாணாக்கனாகிய அவன் மன்றில் பயில்வது ஒருவாறு பெறப்படும். மன்றென்பது மரத்தடியில் உள்ள திண்ணையே; அதுவே பிறகு திண்ணைப் பள்ளிக் கூடமாக மாறியதென்று தோற்றுகிறது.

    இயற்கையாக உள்ள மரத்தடியிலும், வனங் களிலும் சென்று பழைய காலத்து மாணாக்கர்கள் கல்வி கற்றனர். இப்பொழுது பள்ளிக்கூடம் இருக்குமிடத்தில் செடி கொடிகளை வருவித்து வனம் உண்டாக்குகிறோம். நாடகத்தில் வனங் களைத் திரையில் எழுதித் தொங்கவிடுவது போலப் பள்ளிக்கூடங்களில் சட்டியிலும் வாயில்களிலும் செடி கொடிகளை வளர்க்கிறோம்.

    பள்ளிகள்

    மரத்தடியில் இருந்த பள்ளிக்கூடங்கள் நாளடைவில் சிறு குடிசைகளாக மாறின. பல இடங்களிலே மடங்களிற் பாடசாலைகள் உண் டாயின. பள்ளியென்னும் சொல் ஜைன மடங் களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்.

    "அந்தணர் பள்ளியும் அறவோர் சாலையும்"

    என்று பொதுவாகத் தவம் புரிவோர் இடங் களுக்குப் பள்ளி யென்னும் பெயர் வழங்கியதும் உண்டு. அங்கே நூல்களைப் படிப்பதும், படிப் பிப்பதுமாகிய செயல்கள் மிகுதியாக நடந்தன. பாடசாலைகளும் மடங்களும் வேறுபாடின்றி ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளி யென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோன்றுகின்றது. பழைய சிலாசாசனங்களைப் பார்க்கும்போது மடங்களில் இன்ன இன்ன நூல் களைப் படிக்கும் பொருட்டு மாணாக்கர் இருந்தார்களென்ற செய்தி தெரிய வருகின்றது. இரண்டாம் இராசராச சோழன் காலத்தில் ரூபாவதார மென்ற வியாகரணத்தைத் திருவாவடுதுறையி லிருந்த பழைய மடமொன்றில் மாணாக்கர்கள் படித்து வந்தார்களென்றும், அதற்காகத் தனி நிலங்கள் விடப்பட்டிருந்தன வென்றும் ஒரு சாசனத்தினால் தெரிகிறது. இப்படியே வேதபாட சாலைகளும் ஆகமபாடசாலைகளும் பல மடங்களில் இருந்தன. தொண்டை நாட்டில் திருமுக்கூட லென்னும் இடத்தில் வைத்திய நூல்களைக் கற்பிக்கும் பள்ளிக்கூடம் ஒன்று இருந்ததென பதும், அங்கே பல மாணாக்கர்கள் இருந்து படித்து வந்தார்களென்பதும் சிலாசாசன வாயிலாக வெளியாகின்றன.

    தமிழ்ப் பள்ளிக்கூடங்கள்

    தமிழ்ப் பள்ளிக்கூடங்களைபெ பற்றி அதிக மாகச் சாசனங்கள் கூறாவிட்டாலும் பரம்பரையாக வந்த வழக்கத்தைக் கொண்டு ஆராய்ந்தால் ஊர்தோறும் அவை இருந்தன வென்பது தெரிய வரும். ஒருவரிடத்தில் பல மாணாக்கர்கள் சேர்ந்து பாடங் கேட்கும் வழக்கம் தொன்றுதொட்டே இந்நாட்டில் இருந்து வந்தது. அகத்தியருடைய மாணாக்கர்கள் பன்னிருவரென்று நாம் அறிகிறோம். அவர்கள் பன்னிருவரும் ஒரு சாலை மாணாக்கர்கள். சாலையென்பது பள்ளிக்கூடம். அவர்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் ஓர் உபாத்தியாயரிடத்தில் படித் தவர்கள். அகத்தியரிடத்தில் இந்த பன்னிருவரே படித்தார்கள் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. நூற்றுக் கணக்கானவர்கள் படித் திருப்பார்கள்; அவர்களுள் பெரும் புகழ் பெற்றவர் கள் பன்னிருவரென்று தான் கொள்ள வேண்டும். தூரோணரிடம் நூற்றைவர் கற்றுக் கொள்ள வில்லையா?

    ஆசிரியர்களின் தொகுதி

    உபாத்தியாயர்கள், பிள்ளைகளின் வாழ்க் கைக்கு அடிப்படையான விஷயங்களை நன்கு போதிக்கும் கடமையை மேற்கொண்டிருந்தார்கள். வெறும் படிப்போடுமட்டும் அவர்கள் நின்றுவிட வில்லை; மாணாக்கர்களுடைய ஒழுக்கத்தையும் அவர்கள் வரம்பு செய்து திருத்தி வந்தார்கள். அதற்கேற்ற தகுதியும் அவர்களுக்கு இருந்தது. எல்லோருமே உபாத்தியாயராக இருந்துவிட முடியாது. பழம் பிறப்பிலே செய்த புண்ணிய வசத்தால் பேரறிவும் நல்லொழுக்கமும் தெய்விக அருளும் வாய்ந்தவர்களே ஆசிரியர்களாக இருக்கத் தகுதியுடையவர்கள். அவர்களே உலகத் தைத் திருத்த முடியும். அரசர்களெல்லாம் அவர் களுக்கு அஞ்சி ஒழுகினார்கள்.

    செல்வத்துக்கு உலகத்தில் பெருமதிப்பு உண் டென்பது உண்மை; ஆயினும் கல்விச் செல் வத்தை உலகுக்கு வழங்கி வரும் ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் செல்வத்துக்கு மதிப்பே யில்லை. ஆசிரியனுக்கு முன்பு பணியாதது ஒன்றும் இல்லை. அவர்கள் செல்வத்தைப் பணியச் செய்வார்கள்; வீரத்தையும் தாழச் செய்வார்கள்.

    சீவகன்

    சீவகன் கல்வி கற்றதைக் கூறவந்த திருத்தக்க தேவர், " பூமகள் புலம்பி வைக" அவன் கற்றான் என்கின்றார். அங்கே நச்சினார்க்கினியர், ' செல்வச் செருக்கின்றிக் கற்றான்' என்று உரை எழுது கின்றார். கல்வி கற்கும்போது செல்வம் பணிந்து நிற்கின்றது.

    தன்னுடைய உண்மை நிலையை உணர்ந்த காலத்தில் அதே கணத்தில் பகைவனைக் கொன்று வெற்றி பெறவேண்டுமென்று சீவகன் வீர உணர்ச்சி கொள்ளுகின்றான். அவனுடைய ஆசிரியர், " இன்னும் ஒரு வருஷம் பொறு" என்று கூறுகின்றார். அவ்வளவு வீரமும் ஆசிரியருக்கு முன் அடங்கி ஏவல் கேட்கின்றது.

    அருச்சுனன்

    மகாவீரனாகிய அருச்சுனன் விராட நகரத்தில் பசுக்களை மீட்கப் போர்முனையில் நிற்கிறான். எதிரே துரோணர் வந்து நிற்கிறார். தன்னுடைய பகைவரோடு பகைவராக வந்து நின்ற அவரை நோக்கவே அருச்சுனனுடைய கைகள் வில்லையும் அம்பையும் நழுவவிட்டுக் குவிகின்றன.

    "அந்தணர் அரசரே! உம்முடைய அருளால் நாங்கள் வனவாசம் செய்து முடித்து வந்தோம்; சௌகரியமாக இருக்கிறோம்; நீர் அருள் கூர்ந்து கற்பித்தமையால் நான் பெரிய வில்வீரனானேன். நீரே எனக்குக் கண் கண்ட தெய்வம். உம்மை எதிர்ப்பது மகா பாதகம்" என்று அவன் பணிந்து கூறுகின்றான். அவனுடைய வீரம் ஆசிரியன் கண் முன்பு அடங்கி ஒடுங்கிப் பணிகிறது. "இல்லை அப்பா! நிவாத கவச காலகேயர்களை நீ கொன்று வென்றதாக நான் கேள்வியுற்றேன். உன்னுடைய வீரத்தை நான் நேரிலே கண்டு களிக்க வேண்டும். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கும் பொருட்டே இங்கு நிற்கின்றேன். நீ அஞ்சாமற் போர் புரிவா யாக" என்று ஆசிரியர் கட்டளையிட்ட பிறகே அவன் வில்லை எடுக்கின்றான்.

    இவ்வாறு உலகத்தில் எல்லா விதமான ஆற்றல் களும் அடங்கி வழிபாடு புரியும் உயர்வு ஆசிரியர் களுக்கு இருந்ததென்றால், அவர்களுடைய தகுதி எவ்வளவு சிறப்பாக இருக்கவேண்டும்!

    ஒருசாலை மாணாக்கர்கள்

    குருகுலத்தில் பிள்ளைகள் தங்கள் உயர் நிலையை மறந்து பழகி வந்தார்கள். சக்கரவர்த்தியும் பிக்ஷுகனும் சமமாக இருந்தனர். அவர் களுக்குள் வேறுபாடு உண்டாகவில்லை. பெரிய அரச குமாரனாகிய துருபதனும் ஏழைப் பிராமண ராகிய துரோணரும் பாடசாலையில் ஒருவரோடு ஒருவர் கலந்து பழகினார்கள் என்பது பாரதத்திற் கண்ட கதை. அங்ஙனம் பழகிய பழக்கம் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்க வேண்டும்; துருபதன் அங்ஙனம் இராமையால் அதற்கேற்ற துன்பத்தை அனுபவித்தான்.

    பெரிய அரசனாகிய கண்ணபிரானும் வறிய அந்தணராகிய குசேலரும் ஒரு சாலை மாணாக் கர்கள். பாடசாலைப் பழக்கம் பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர்களிடம் இருந்ததைக் குசேலோ பாக்கியானம் அறிவிக்கின்றது.

    என்னுடைய தமிழாசிரியரும் மகா வித்து வானுமாகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இளம் பிராயத்தில் படித்துவருகையில் அவர் களோடு ஒருவர் படித்துவந்தார். அவர் பிள்ளை யவர்கள் படித்துவந்த ஒவ்வொரு நூலையும் தவறா மல் வாங்கிச் சென்று படிப்பார். ஆனால் மறு கணமே அவற்றை மறந்து விடுவார். நெடுங்காலத் துக்குப் பிறகு பிள்ளையவர்கள் திருவாவடுதுறை யாதீன தலைவரென்று பெயர் பெற்று விளங்கிய காலத்தில், ஒரு நாள் மாணாக்கர்களுடன் ஒரு சாலை யில் நடந்து சென்றார்கள். அக்கூட்டத்தில் நானும் இருந்தேன். அப்பொழுது முற்கூறிய மனிதர் எதிரில் அந்த வழியே வந்தார். அவருடைய தோற்றம் சர்வசாதாரணமாக இருந்தது. அவர் பிள்ளையவர்களைக் கண்டவுடன், "மீனாக்ஷி சுந்தரம்! சௌக்கியமா யிருக்கிறாயா? என்றார். பிள்ளையவர்கள் அவ்வாறு ஒருமையில் ஒருவர் அழைத்ததை அதுவரையில் நாங்கள் கேட்டறி யாமையால் திடுக்கிட்டோம். அவ்விருவரும் ஒருவரையொருவர் மிக்க அன்போடு க்ஷேம சமாசாரங் களை விசாரித்துப் பேசி விட்டுப் பிரிந்தார்கள். பிரிந்த பின் எங்களுடைய பார்வையினால் நாங்கள் அவரைப்பற்றி அறியும் விருப்பமுடையோமென் பதை அறிந்த பிள்ளையவர்கள் எங்களிடம் அவர் தம்முடன் இளமையில் படித்தவரென்று கூறி னார்கள். அவ்விருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமையிருந்தும் ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்த பழக்க மிகுதியே மாறா அன்பை உண்டாக்கியதென்பதை உணர்ந்தோம்.

    பள்ளிப் பயிற்சி

    குருகுலவாசம் செய்தவர்கள் பிக்ஷையெடுத்து அதைத் தம் ஆசிரியர்பாற் கொடுத்து எஞ்சியதைத் தாம் உண்டு வந்தார்கள். அந்த வழக்கம் அவர்க ளிடத்திலே பொறுமையையும் பணிவையும் உண் டாக்கியது. ஊரிலுள்ளாரும் அவர்களிடம் மதிப்பு வைத்து, ஒழுகி வந்தனர். தாய் தந்தையர் மக்களைப் பெற்ற கடமையோடு அமைகின்றனர். மக்களை மக்களாக்கும் அறிவைப் புகட்டி அவர்க ளுடைய வாழ்க்கையை இன்பமயமாக்குவதற்குரிய அடிப்படையான பயிற்சியைச் செய்விப்பவன் ஆசிரியனே ஆவான். இராமர் முதலிய நால்வரும் வளர்ந்த நெறியைச் சொல்லவந்த விசுவாமித்திரர், "இவர்களைத் தசரதன் பெற்றானென்னும் பெயரே யன்றி, உண்மையில் இவர்களை உலகுக்குப் பயன் படும்படி செய்தவர் வசிஷ்டரே" என்ற கருத்துப் பட,

    "திறையோடு மரசிறைஞ்சுஞ் செறிகழற்காற் றசரதனாம் பொறையோடுந் தொடர்மனத்தான் புதல்வரெனும் பெயரேகாண் உறையோடு நெடுவேலோ யுபநயன விதிமுடித்து மறையோது வித்திவரை வளர்த்தானும் வசிட்டன்காண்"

    என்று கூறுகின்றார். நிறைந்த செல்வம் முதலிய வற்றை ஒரு தந்தை தன் தனயனுக்கு வைத்திருந்தும் பயனில்லை. அச்செல்வமாதியவற்றை நல்ல வழியில் பயன்படுத்தி வாழும் நிலையை உண்டாக்கு வது கல்வியே. ஆதலின் மகன் கல்வி கற்கும்படி செய்தலே தந்தையின் முதற்கடமை. அரண்மனை யிற் பிறந்த அரசகுமாரனும் பள்ளிக்கூடத்திற் சாணையிடப்பட்டால்தான் பிற்காலத்தில் பிரகாச மடைவான். நிறைந்த செல்வமிருந்தும் பள்ளிக் கூடப் பயற்சி யில்லாமல் தாழ்ந்த நிலையை அடைந்த ஒருவன் பின்பு தன் தந்தையை நொந்து கொள்வதாக ஒரு புலவர் ஒரு செய்யுளை இயற்றி யிருக்கிறார். அச்செய்யுள்,

      "அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும் ஆடையும் ஆதரவாக்
      கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்த தல்லால்
      துள்ளித் திரிகின்ற காலத்தி லென்றன் துடுக்கடக்கிப்
      பள்ளிக்கு வைத்தில னேதந்தை யாகிய பாதகனே"

    என்பது. செம்பொன்னும் ஆடையும் இருந்தும் பள்ளிக்கூடத்துப் பயிற்சியின்மையால் அவன் கெட்டுப்போனதை இப்பாடல் விளக்குகின்றது.

    சென்ற நூற்றாண்டு வரையில் நம் நாட்டில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்துவந்தன. நான் இளமையில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவனே. பிள்ளையவர்களிடம் தமிழ் படித்த காலத்தைக் குருகுல வாசமென்றே சொல்ல வேண்டும். என்னைப் போன்ற பலர் எல்லாவற்றை யும் விட்டு விட்டுக் கல்வியொன்றையே முக்கியமாக எண்ணி அவர்களிடம் படித்துச் சென்றார்கள்.

    கிராமப் பள்ளிக்கூடங்களிலிருந்த உபாத்தி யாயர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. தாய் தந்தையருக்கு அடங்காத பிள்ளைகளை உபாத்தியாயர் அடக்கி விடுவார். பிள்ளைகள் அறிவு வந்த காலத்திலேயே ஆசிரியர்களிடம் ஒப்பிக்கப்பட்டார்கள். அதுமுதல் யௌவனமடையும் வரையில் அவர்கள் உலகியலை மறந்து கல்வியையே கருத்தாகப் பயின்றார்கள்.

    வித்தியாரம்பம்

    முதன் முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தி யாப்பியாசம் செய்யும்பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாக ஒப்பித்து வந்தார்கள்.

    பிள்ளைகள் தமிழெழுத்தை ஆரம்பிக்கும்போது 'ஓம் நமச்சிவாய' என்றாவது, 'ஓம் நமோநாராய ணாய' என்றாவது எழுத ஆரம்பிப்பது வழக்கம். ஜைனர்கள் 'ஓம் ஜிநாயநம' என்று தொடங்கு வார்கள். விஜயதசமி யன்று பள்ளிக்கூடத்தில் வைப்பது மரபு. அன்று தொடங்குவதனால் கலைமகள் திருவருள் உண்டாகுமென்பர்.

    பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் வைக்கும் காலம் ஒரு பெரிய விசேட நாளாகக் கொண்டாடப் பெறும். அன்று உபாத்தியாயருக்குப் பலவகை யான ஊதியம் கிடைக்கும். ஏட்டின்மீது மஞ்சளைப் பூசிப் பூசித்துப் பையனிடம் கொடுத்து வாசிக்கச் செய்வார்கள். உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க, மாணாக்கன் அதனைப் பின் பற்றிச் சொல்லுவான். இப்படி உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை முறை வைப்பதென்று கூறு வார்கள். உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் சட்டாம்பிள்ளை முறை வைப்ப துண்டு. அக்ஷராப்பியாசத்திற்குப் பிறகு ஒவ் வொரு சுவடியையும் படிக்கத் தொடங்கும் காலமும் ஒரு சிறு திருவிழாவாகச் செல்வர்களாற் கொண் டாடப்படும். சுவடி துவக்கலென்று அதனைச் சொல்வார்கள்.

    மையாடல்

    சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச் சாறு அல்லது ஊமத்தையிலைச் சாறு, மாவிலைக்கரி தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவ தோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். இங் ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங் குவதனால் அக்ஷராப்பியாசத்தை 'மையாடல் விழா' என்று சொல்லுவார்கள்.

    "ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்"

    என்பது சிந்தாமணி.

    தமிழைக் குழந்தையாக உருவகம் செய்த ஒரு புலவர் தமிழ்விடுதூதென்னும் பிரபந்தத்தில் சுவடிக்கு மஞ்சட் பூசுதல், மையிடுதல் முதலிய வற்றை,

      "மஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
      மிஞ்சப் புகட்ட மிகவளர்த்தாய்"

    என்று புலப்படுத்துகின்றார்.

    உபாத்தியாயர் சொல்வதைப் பிள்ளைகள் தொடர்ந்து கூறும்பொழுது பலவகை வேறுபா டுடைய ஒலிகளும் ஒன்றுகூடிக் கேட்கும். அவ் வோசையைய் பல தவளைகள் சேர்ந்து சத்தமிடு தலுக்கு உவமையாகக் கம்பர்,

      "கல்வியிற் றிகழ்கணக் காயர் கம்பலைப்
      பல்விதச் சிறாரெனப் பகர்வ பல்லரி"

    என்று கூறுகின்றார். தமிழெழுத்துகளின் வரிசை யாகிய நெடுங்கணக்கை வாயாற் சொல்லிப் பழகும் சிறுவர்களைப் பற்றிய செய்தியொன்று சேதுபுரா ணத்தில் வருகிறது. கந்தமாதனமென்னும் மலையி னருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகள் தமிழெழுத்துக்களை வாய்விட்டுச் சொல்லிக்கொண் டிருப்பார்கள். 'வா' என்று அவர்கள் சொல்லும் பொழுது 'வா' என்ற எதிரொலி எழும். அதனைக் கேட்டவர்கள் 'நம்மை யாரோ வாவென்கிறார்கள்' என்று தேடுவார்கள். அப்பிள்ளைகள், 'போ' என்ற பொழுது எதிரொலியைக் கேட்டு 'யார் நம்மைப் போகச் சொல்கிறார்கள்?' என்று யோசிப்பர். கூவென்றால் யாரோ கூக்குரலிடுகிறார்களே யென்று திகைப்பர். இந்தக் காட்சிகளை வெளியிடும் பாடல்,

      "ஓவரு நெடுங்கணக் கோதி டுஞ்சிறார்
      வாவென்று வரையயல் வருவர் தேடுவர்
      போவென யாரெமைப் போகென் றாரெனக்
      கூவென வெங்ஙனோ கூப்பி டென்பரால்"
      (கந்தமாதனப்படலம், 75)
    என்பது.

    மணலில் எழுதுதல்

    பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகு வார்கள். அதனால் அவர்களுடைய எழுத்துக்கள் வரிசையாகவும் நன்றாகவும் அமையும். உபாத்தி யாயர் முதலில் தரையில் எழுத அதன்மேல் பிள்ளைகள் விளம்புவார்கள். பிறகு தாமே எழுதி எழுதிப் பழகுவார்கள். இங்ஙனம் தரையில் எழு தும் பழக்கத்தைக் கந்தபுராண ஆசிரியர் அவை யடக்கத்தில்,

      "இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன்
      முறைவரை வேனென முயல்வ தொக்குமால்
      அறுமுகம் உடையவோர் அமலன் மாக்கதை
      சிறியதோர் அறிவினேன் செப்ப நின்றதே"

    என்று அழைக்கின்றார். "நான், முருகக்கடவு ளுடைய கதையைச் சொல்லப் புகுந்தது சிறிதளவு தரையில் எழுத்துக்களை எழுதுவதற்குப் முன் ஒரு பாலகன் நூலொன்றை எழுத முயல்வதை ஒக்கும்" என்பது இதன் பொருள். கல்வியில் முதற்பருவம் தரையில் எழுதத் தொடங்குவது; முற்றிய பருவம் நூலாசிரியத்தன்மை. இவ்விரண்டையும் இணைத்து இந்தச் செய்யுளிற் கூறியிருக்கிறார்.

    கையெழுத்து

      "கொம்புசுழி கோணாமற் கொண்டபந்தி சாயாமல்
      அம்புபோற் கால்கள் அசையாமல்-தம்பி
      எழுதினால் நன்மையுண்டு"

    என்று வரும் பழைய வெண்பா ஒன்று உண்டு.

    எழுத்துக்கள் ஒன்றோடொன்று படாமல் வரி கோணாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள். பழைய ஏட்டுச் சுவடிகளைப் பார்த்தால் இது விளங் கும். அங்ஙனம் அமைந்த எழுத்துக்களைப் பார்த் தும் எழுதியும் வழ்த கச்ச்யப்ப முனிவர் தணிகைப் புராணத்தில் எழுத்துக்களின் ஒழுங்கான வரி சையை ஒரு பெரிய நகரத்தின் தெருவிலுள்ள மாட வரிசைக்கு உவமை கூறியிருக்கின்றார்.

      "பொறித்த சீரெழுத் தொழுக்கெனப் பொற்றமா டங்கள்
      செறித்த வார்நிரை வீதியிற் சிலவளம் மொழிந்தாம்."

    ஒவ்வோரெழுத்தும் தத்தமக்குரிய தனியமைப் போடு வரிசை வரிசையாக அமைந்திருத்தலைப் போல மாடங்களும் தத்தமக்குரிய தனியலங்காரங் களோடு வரிசையாக விளங்கின. பல எழுத்துக்கள் சேர்ந்து வரிகளும், பல வரிகள் சேர்ந்து பக்கமும், பல பக்கங்கள் சேர்ந்து நூலும் ஆவதுபோலப் பல வீடுகள் வீதிகளாகவும், பல வீதிகள் நகரப் பிரிவுக ளாகவும், பல பிரிவுகள் ஒரு பெரிய நகரமாகவும் அமைந்தனவென்ற விரிவும் அந்த உபமானத்தாற் கொள்ளக் கிடக்கின்றது.

    எழுத்துக்ளின் வடிவம்

    எழுத்துக்களின் உருவங்கள் பல காலமாக மாறாமல் இருந்துவந்தன. புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரிவடிவத்தின் உறுப்புக்கள். பெரியோர்கள் பழக்கிவந்த பழக்கத்தால் பல நூறு வருஷங்களாகியும் எழுதும் வழக்கத்தில் பெரிய மாறுபாடுகள் ஏற்படவில்லை. தொல்காப்பியமென்னும் இலக்கண நூலிற் சொல்லப்பட்ட எழுத்துக் களின் வடிவத்திற்கும் பல நூறு வருஷங்களுக்குப் பின்பு உண்டான நன்னூலிற் சொல்லப்படும் எழுத் துக்களின் வடிவத்திற்கும் சிறிதளவே வேறுபாடு இருக்கின்றது. நன்னூலார் "தொல்லை வடிவின எல்லா எழுத்தும்" என்று வற்புறுத்திக் கூறுகின்றார். நாளுக்கொரு கோலமாக வஸ்துக்கள் மாறிவரும் இந்த உலகத் தில் இவ்வாறு பல நூறு வருஷங்களாகியும் தமிழ் எழுத்துக்கள் விசேஷ மாறுபாடுகளை அடையா மைக்குக் காரணம் பள்ளிக்கூடத்திற் செய்து வைத்த பழக்கமேயாகும்.

    மகாவித்துவானாகிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் மாயூரப் புராணத்தில் நைமிச வனத்தை நெடுங்கணக்குக்கு ஒப்பிடுகின்றார்.

    கோடு, கால், புள்ளி, விலங்கு என்னும் எழுத் தின் உறுப்புக்களின் பெயர்களால் மரங்களின் உறுப்புக்களும் குறிக்கப்படும். மரங்களும் கோடு டையன; கோடென்பது கொம்பிற்குப் பெயர். மரங் களிலும் கால்கள் இருக்கின்றன; அடிமரத்தைக் காலென்று சொல்வது வழக்கம். புள்ளியுடைய மரங்கள் இருக்கின்றன. மேலே விலங்கும் தன்மை யின; கீழே விலங்கும் தோற்றத்தையுடையன. விலங்குதல் - கோணுதல், வளைதல். இவற்றால் அவ் வனம் நெடுங்கணக் கென்று கூறத்தகு மென்கிறார். இக்கருத்துடைய செய்யுள்,

      "கோடு கொண்டன பல்லகால் கொண்டன பல்ல
      கூடு புள்ளிகள் கொண்டன பல்லமேல் விலங்கும்
      பாடு கொண்டன பல்லகீழ் விலங்குவ பல்ல
      நீடு மின்னதால் நெடுங்கணக் கெனற்கைய மின்றே"

    என்பது.

    மனனப் பயிற்சி

    அக்காலத்துப் பாட முறைக்கும் இக்காலத்து முறைக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அடிப்படை யான நூல்களெல்லாம் பிள்ளைகளுக்கு மனனமாக இருக்கும். தமிழில் நிகண்டு,நன்னூல்,காரிகை, தண்டியங்காரம்,நீதி நூல்கள் முதலியன பாட மாக இருக்கும். கணிதத்தில் கீழ்வாயிலக்கம்,மேல் வாயிலக்கம்,குழிமாற்று முதலிய பலவகை வாய் பாடுகள் பாடமாக வேண்டும். வட மொழியில் அம ரம் முதலியன மனனமாக‌ வேண்டும். ஞாபக சக் தியை விருத்தி பண்ணுவதை மிகவும் முக்கியமான தென்று பழையகாலத்திற் கருதினர். அதற்காகப் பலவகையான முறைகள் இருந்தன. வேதத்தி லுள்ள‌ கனம்,ஜடை முதலிய முறைகளைப் பார்க் கையில் அவையும் மனனத்தின் சிறப்பைக் காட்டு வனவென்பதை அறியலாம். 'தலை கீழ்ப்பாடம்' என்று சொல்வதை அம்முறைகளில் காணலாம்.

    இள‌ங் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை விருத்தி பண்ணுவதற்கு உபாத்தியாயர்கள் சில முறைகளை மேற்கொண்டனர். பள்ளிக்க்கூடம் விட் டுப் பிள்ளைகள் வீட்டுக்குப் போகும்போது அவர்க ளிடம் ஒரு ம‌லரையோ,காயையோ,பழத்தையோ, விலங்கையோ,பற‌வையையோ சொல்லி மறுநாள் வரும்போது அதைச் சொல்ல வேண்டும் என்று உபாத்தியாயர் நியமிப்பார். பிள்ளைகள் தம் வீடு சென்றவுடன் உபாத்தியாயர் சொன்னவற்றைத் தம் தாய்மார்களிடம் சொல்லிவிடுவார்கள். தாங்க ளும் மனத்தில் வைத்துப் படுத்துக் கொள்வார்கள். விடியற்காலையில் எழுந்தவுடன் அவற்றை ஞாபகப் படுத்திக் கொள்வார்கள். தம் தாய்மார்களிடம் அவற்றைச் சொல்லி அவை சரியா என்பதை அறிந்துகொண்டு உபாத்தியாயரிட‌ம் வந்து சொல் வார்கள். இதனால் அவர்களுடைய ஞாபக சக்தி விருத்தியாயிற்று.

    சிறுவர்கள் படிக்கும் ஆத்திசூடி கொன்றை வேந்தனென்பவை அகராதி வரிசையில் அமைந் தமை அவர்களுடைய ஞாபகத்தில் அவை பதிவ தன் பொருட்டே யாகும்.இப்படியே அந்தாதி முறையைக் கொண்டும்,எதுகை மோனைகளைக் கொண்டும் செய்யுளை ஞாபகப் படுத்திக் கொள் வர்கள்.அந்தாதி நூல்களை இளம்பருவத்தே கற் பிப்பதற்குப் பய‌ன் ஞாபக சக்தியையடைவதே. நிகண்டு நூல் எதுகை வகையில் அமைந்ததுவும் ஞாபகத்தில் எளிதில் பதிவதன் பொருட்டேயாகும். நூல்களிலுள்ள செய்யுள்களின் முதல் நினைப்பை எழுதி அதைப் பாடம் பண்ணிக்கொன்டு ஞாபகம் வைப்பது பழைய வழக்கம்.இதற்காக யாப்பருங் கலக் காரிகையில் முதல் நினைப்புச் செய்யுட்கள் இருக்கின்றன;வடமொழியிலும் ரூபாவதராம் முத லிய நூலகளுக்கு இத்தகைய செய்யுட்கள் உண்டு. அவற்றை நீதக சுலோகங்கள் என்று கூறுவார்கள். திவ்யப் பிரபந்தத்திலுள்ள அடிவரவும் இத்தகைய கருவியேயாகும்.

    பள்ளிக்கூடப் பிள்ளைகள் தமக்குத் தெரிந்த பாடங்களை அடிக்கடி சிந்தித்து வருவார்கள்.பலர் ஒருங்குகூடிக் கேள்விகள் கேட்டும் விடை கூறியும் கற்று வருவார்கள்.இதனால் அவர்களுடைய கல்வி எந்த வேளையிலும் தடையின்றிப் பயன்பட்டது. புத்தகத்தின் துணையின்றியும் குறிப்புக்களின் துணையின்றியும் ஒரு விஷயத்தைப்பற்றிப் பேசுவ தும்,ஒரு செய்யுளுக்குப் பொருள் கூறுவதும்,ஒரு செய்தியுள்ள இடங்களைச் சொல்லுவதும் அவர்க ளுக்குச் சுலபமாக இருந்தன.ஒருவர் ஒரு செய் யுள் சொல்லுவதும் அச்செய்யுள்ளின் ஈற்றிலுள்ள பதத்தை முதலாக உடைய வேறொரு நூற் செய் யுளை மற்றொருவர் சொல்வதும் இப்படியே இந்தத் தொடர் அறாமல் மாலை போலச் சொல்லிக் கொண்டு வருவதுமாகிய ஒரு ப‌ழக்கம் முற்காலத்தில் இருந்தது. வழி நடக்கையிலும், உபாத்தியாயரின் பூஜைக்காகப் புஷ்பங்கள் பறிக்கையிலும்,தொடுக் கையிலும் இலை தைக்கும்போதும் இப்படியே சொல்லிப் பழகினார்கள்.

    தனியே இருந்தாலும் இந்தப் பழக்கத்தைச் செய்து வந்தார்கள். பாடம் தவறி விட்டால் உடனே ஏட்டையெடுத்து அந்த இடத்தை மீண்டும் நினைவுறுத்திக் கொள்வார்கள். அதற்காக எப் பொழுதும் ஏட்டை உடன் வைத்திருப்பார்கள்.

    "பாட மேறினும் ஏட‌து கைவிடேல்"

    என்பது இந்த வழக்கத்தை ஒட்டி எழுந்ததாகும்.

    விடியற்காலையில் எழுதுதல்

    மாணாக்கர்கள் விடியற்காலையில் எழுந்து படித்து வந்தார்கள். இந்தப் பழக்கத்தை உபாத்தி யாய‌ர் உண்டாக்கி வைப்பார். முத‌ற்கோழி கூவும் போது சில‌ பிள்ளைக‌ள் ப‌ள்ளிக் கூட‌த்துக்கு வ‌ந்துவிடுவார்க‌ள். நேர‌ங் க‌ழித்துச் சென்றால் உபாத்தியாய‌ர் பிர‌ம்பால் அடிப்பாராகையால்,எல் லோருக்கும் முன்பே போய்விட‌ வேண்டுமென்று க‌ருதித் தூங்கிக் கொண்டிருக்கும் தாய் த‌ந்தைய‌ ரைத் தாமே எழுப்பி விட்டுப் ப‌ள்ளிக்கூட‌ம் செல்ப‌ வ‌ர்க‌ளும் உண்டு. உபாத்தியாய‌ர் பாட‌ம் தொடங் கும்போது பிள்ளைக‌ளை அவ‌ர்க‌ள் வ‌ந்த‌ நேர‌த்தை அனுச‌ரித்து வ‌ரிசையாக‌ நிறுத்தி வைப்பார். முத‌ லில் வ‌ந்த‌வ‌னுக்கு வேத்தானென்று பெய‌ர்; ஏத்தா னென்றும் சொல்வ‌துண்டு. அவ‌ன் கையில் உபாத் தியாய‌ர் பிர‌ம்பால் மெல்ல‌த் தொடுவார். அடுத்த‌ வ‌ன் கையில் நீவுவார். வ‌ரவர அடி பலமாகும். இறுதியிலுள்ள பையனுக்கு மிகப் பலமான அடி கிடைக்கும். இந்தத் தண்டனைக்கு அஞ் சிப் பிள்ளைகள் விடியற் காலையிலேயே எழுந்து வந்து விடுவார்கள். முதல் நாள் இறுதியில் வந்த பையன் மறுநாள் எல்லோருக்கும் முந்தியே வ‌ந்துவிடுவான். அவனுக்குப் பிறகு வந்தவன் தானே முந்தி வந்தவனாக எண்ணிக் கொள்ளாமல் இருப்ப தன் பொருட்டு முன் வந்தவன் கனைப்பான். பொய் பேசுதல் வழக்கமில்லையாகையால் பின் வந்தவன் முன்னே வந்ததாகச் சொல்லமாட்டான்.

    சுவடிகள்

    பிள்ளைகள் தங்கள் சுவடிகளை மிகவும் நன்றாக வைத்திருப்பார்கள். இளம்பிள்ளைகளுக்கு உபாத் தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளை யிட்டுக் கயிறு கோத்துத் தருவார். ஒரு துளையிடு வதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்றப் பிள்ளைகள் தாங்களே செய்து கொள்ளுவார்கள். பனையேடு. சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுது வது வழக்கம்.அந்தக் காலத்துச் சுவடிகள் பல நூறு வருஷங்களாகியும் அழியாமலிருந்தன. சுவடி களின் மேலேடுகளில் பலவகையான சித்திரங்களை எழுதுவார்கள். மேலே சட்டமாகப் பனைமட்டை யின் காம்பை நறுக்கிக் கோப்பார்கள்; மரச் சட்டங்களையும் அமைப்பார்கள்; செப்புத் தகட் டாலும் சட்டஞ் செய்து கோப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பலவகை யான சித்திரங்கள் எழுகுவதுண்டு. இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார் கள். அதற்கு நாராசம் என்று பெயர். சுவடி களிற் சில விசித்திரமான உருவங்கள் உண்டு. உருண்டைக் கழிகள் போலச் சில சுவடிகள் இருக் கும். சிவலிங்கத்தைப் போன்ற சில சுவடிகளையும் நான் பார்த்திருக்கிறேன்.

    சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒருதலைப்பில் தடையாகப் பனையோலையை ஈர்க்கோடு கிளி மூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்பது பெயர். சுவடிகளைக் கயிற்றால் கட்டுவதற்கே ஒரு முறை யுண்டு. சரியாகக் கட்டுகிறார்களாவென்று பரீக்ஷிப் பதற்காக ஆசிரியர் மாணாக்கர்களிடம் சுவடிகளைப் பிரித்துக் கொடுத்து மறுபடி கட்டச் சொல்வ துண்டு.

    இப்போது அச்சுப் புத்தகங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனை யோலைச் சுவடிகளிலும் உண்டு.

    சுவடிகளைப் பாதுகாத்தல்

    பழக்கத்திலுள்ள சுவடிகளை அடிக்கடி கவனிப் பதோடு,தாங்கள் படித்த எல்லாச் சுவடிகளையும் முற்காலத்தோர் சரஸ்வதி பூஜையன்று எடுத்து நன்றாகக் கட்டி ஒழுங்கு படுத்துவர். பலவகையான தொழில்களில் ஈடுபட்டவர்களும் வருஷத்திற்கு ஒரு நாளேனும் தம்முடைய வீட்டிலுள்ள புஸ்தகங் களை எடுத்து ஒழுங்காகக் கட்டிப் பாதுகாத்து வந்தார்கள். நாம் நம்முடைய புத்தகங்களை அடிக் கடி பைண்டு செய்கிறோமல்லவா? அதைப்போல அவர்கள் ஏடுகளுக்குப் புதுச் சட்டம் கயிறு முதலியன போடுவார்கள். ஏடு மிகப் பழையதாகி விட்டால் புதிதாகப் *பிரதி பண்ணி வைப்பார்கள்; புதிதாக மையிடுவார்கள். இதனால் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள புத்தகங்கள் பழுது படாமல் நல்ல நிலையிலேயே இருந்து வந்தன. அப்படிப் பிரதி பண்ணிய பின்பு பழைய ஏடுகள் சிதிலமாக இருந் தால்,அதை நெய்யிலே தோய்த்து விதிப்படி ஹோமம் செய்து விடுவார்கள்; பதினெட்டாம் பெருக்கில்(ஆடி மாதம் 18-ஆம் தேதியில்)ஆற்றில் விட்டு விடுவார்கள். பிரதி பண்ணி வைத்துக் கொண்ட பிறகே பழைய ஏடுகளைப் பரிகரித்து விடும் இந்த வழக்கம் மாறி நம்முடைய துர‌திருஷ்ட வசத்தால் எல்லாச் சுவடிகளையும் பரி கரித்துவிடும் நிலை வந்துவிட்டது.
    ---------------
    *சில பழைய நூல்களில் பாடபேதங்கள் இருப்பதற்கு இதுவே முக்கியமான காரணம்.

    எழுத்தாணிகள்

    ஓலையில் எழுதுவதற்குரிய எழுத்தாணியில் பல பேதங்கள் உள்ளன. எழுத்தாணியை ஊசி யென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள். ஒரு பக்கம் வாரு வதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத் தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி யென்ற பெயர் வந்ததென்று தோற்றுகின்றது. ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணி களும் இருந்தன.

    ஏடெழுதும் வழக்கம்

    ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துக் களாக இருபது முப்பது வரி வரையில் எழுதுவதற் குரிய மெல்லிய எழுத்தாணிகள் இருந்தன. எழுது பவர்கள் எழுத்தாணியை வலக்கையிற் பிடித்துக் கொண்டு இடக்கையால் ஏட்டைப் பிடித்திருப்பார் கள். எழுதும்பொழுது இடக்கை பெருவிரல் நகத்தில் சிறிதளவு பள்ளஞ்செய்து அந்த இடத்தில் எழுத்தாணியைச் சார்த்திக் கொண்டு எழுதுவார் கள். நாம் இக்காலத்தில் காகிதத்தில் எழுது வதைப் போன்ற வேகத்தோடே ஏட்டில் எழுதுவ துண்டு. ஏட்டில் எழுதும் வழக்கத்தை இக்காலத் தில் பள்ளிக்கூடங்களில் காணமுடியாது. ஆனால் அது சில ஆலயங்களிலும், சில தனவணிகர்கள் கடைகளிலும் இன்னும் இருந்து வருகிறது. பழைய காலத்தில் கிரயம், தானம், பாகப்பிரிவு, ஒற்றி, உடன்படிக்கை முதலிய பலவகையான பத் திரங்களும் பலவகைக் கணக்குகளும் பனையேடு களிலேயே எழுதப்பெற்று வந்தன.


    மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக உண்டாகவேண்டுமென்று ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதி வரச் சொல்வார் கள்.இதற்குச் சட்டம் என்று பெயர்.

    தூக்குப் பலகை

    சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற் கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு என்று பெயர்.தூக்குத்தூக்கி என்னும் நாடகத்தில் வரும் அரசகுமாரன் சுவடித் தூக்குகளைத் தூக்கியதால் அப்பெயர் பெற்றனன்.அதனை அசை யென்றும் சொல்வதுண்டு;தமிழ்விடுதூதின் ஆசிரியர் அத் தூக்குப் பலகையைத் தமிழ்க் குழந்தையின் தொட்டிலென்று வருணிக்கிறார்.

      "பள்ளிகூ டத்தசையாம் பற்பலதொட் டிற்கிடத்தித்
      தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி"

    என்பதைக் காண்க.

    ஆசிரிய வழிபாடு

    அதிகாலையில் மாணாக்கர்கள் எழுந்து பல்லுக் கொம்புகளுடன் ஆற்றுக்குச் சென்று பல் துல‌க்கி விட்டு மணலை எடுத்துக் கொண்டு துதி சொல்லிய வண்ணம் பள்ளிக்கூடத்துக்கு வந்து ஆசிரியரை வழிபட்டுப் பாடம் பயிலும் பழைய முறைகள் இக் காலத்தில் யாவருக்கும் விசித்திரமாகத் தோற்றும். ஐம்பெருங்குரவர்களுள் ஒருவராக உபாத்தியாயர் கருதப்பெற்று வந்தார்.அவருக்கு வேண்டிய காரி யங்களை மாணாக்கர்கள் செய்து வந்தனர்.

    காணிக்கை

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பையனும் உபாத்தியாருக்குத் தன்னுடைய குடும்பத்தின் நிலைக்கு ஏற்றபடி ஏதேனும் ஒரு பொருளைக் கொணர்ந்து தருவான்;சிலர் காய்கறி கொடுப்பார்கள்; சிலர் பால் கொடுப்பார்கள்; ஒன்றும் இய‌லா தவர்கள் ஒரு விறகு கட்டையையேனும் கொணர்ந்து அளிப்பார்கள்.அவர்கள் அளிக்கும் பொருள்கள் தம்முள் வேறுபட்ட மதிப்புடையன வாக இருப்பினும் ஆசிரியருக்கு எல்லோரிடத்தி லும் ஒரே மாதிரி அன்பே இருக்கும்.கால் ரூபாயைப் போன்றதொரு தொகைதான் அவர்கள் மாணாக்கர்களிடமிருந்து பெறும் பேரூதியம். ஆயினும் அவர்களுடைய‌ வாழ்விற் குறைவொன் றும் இராது. விசேடநாட்களிற் பலவகையான பொருள்கள் அவர்களுக்குக் கிடைக்கும்.

    ஊரிலுள்ளவர்கள் உபாத்தியாயர் கூலியைத் தாமதமின்றிக் கொடுத்துவிடுவார்கள்; "வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்" என்பது உலக நீதி.

    ஓதிவைத்தவர் கூலி கொடாதவர்.... எழு நர குழல்வாரே" என்று திருப்புகழ் கூறுகின்றது. இவற்றால் ஆசிரியர்கள் தம்முடைய ஜீவனாதாரத்தைப் பற்றித் தாமே கவலையுற்றுத் தேடிஅலையும்படி ஊரினர் வைக்கவில்லை யென்பதையும், அவர்களுடைய குடும்ப க்ஷேமத்தைக் கவனிப்பதை முதற்கடமை யாகக் கொண்டனரென்பதையும் உணர‌லாம்.

    விடுமுறை நாட்கள்

    பிள்ளைகளுக்குப் பௌர்ணமி,அமாவாசை, அஷ்டமி,பிரதமையாகிய திதிகளிலும்,விசேஷ மான பண்டிகைகளிலும்,ஊரில் நடைபெறும் முக்கியமான உத்ஸவதினங்களிலும் விடுமுறை உண்டு.அக்காலங்களில் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து சந்தோஷமாகப் பொழுது போக்குவார் கள்.விடுமுறைத் தின‌ங்க‌ளை வாவு நாட்க‌ளென்ப‌ர். உவாவென்ப‌த‌ன் திரிபே அது.பௌர்ண‌மியும் அமாவாசையும் உவாவென‌ப்ப‌டும்.அவ்விர‌ண்டு நாட்க‌ளும் விடுமுறையாத‌லின் ம‌ற்ற‌ விடுமுறை
    நாட்களுக்கும் அப்பெயரே வழங்கப்பட்டது. நவராத்திரிப் பண்டிகையில் தினந்தோறும் கோலாட்டம் முதலியன நடைபெறும். அக்காலத் தில் உபாத்தியாயர்களுக்கு ஊரினர் பொருள் உதவி செய்வார்கள். இக்காலத்திலும் சில கிராமங் களிலுள்ள பள்ளிக்கூட உபாத்தியாயர்களுக்கு நவராத்திரியில் தக்க வருவாய் கிடைக்கும்.

    தண்டனைகள்.

    பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் அடையும் தண் டனைகள் பல. பிற்காலத்தில் குறைந்த அறிவுடைய வர்கள் உபாத்தியாயராக வந்த பொழுது கோதண்ட மிடுதல், அண்ணாந்தாள் பூட்டுதல், விலங்கிடுதல், கட்டைகள் மாட்டுதல் முதலிய கொடுந்தண்டனை கள் உண்டாயின; பிரம்பால் அடிக்கும் வழக்கமும் ஏற்பட்டது. அத்தகைய உபாத்தியாயர்கள் 'கோலாடக் குரங்காடும்' என்ற பழமொழியைத் தங்களுக்குச் சாதகமாகச் சொல்வது வழக்கம். மிகவும் சிறந்த மதிப்புடைய ஆசிரியத் தொழிலைக் குரங்காட்டும் தொழிலுக்கு ஒப்பாகக் கூறிப் பெருமையடையும் அவர்களுக்கும் பழைய ஆசிரி யர்களுக்கும் மிக்க வேறுபாடு உண்டு.

    சுமக்கும் தண்டனை

    சரியாகப் பாடங்களை ஒப்பித்த ஒருவனை ஒப்பிக்கத் தவறியவன் சுமப்பது ஒருவகைத் தண்டனை. இது பழைய காலத்தில் இருந்து வந்த தென்று தோன்றுகிறது. மதுரையில் சோம சுந்தரப் பெருமான் இயற்றருளிய திருவிளை யாடல்களுள் இசைவாதுவென்ற திருவிளையாடல் என்பது ஒன்று. அதில் வீணை வாசிக்கும் பெண் கள் இருவர் ஒருவரோடொருவர் வாதம் புரிந்தன ரென்றும், சிவபக்தையாகிய ஒருத்தி வென்றாளென் றும் அங்ஙனம் வென்றவளைத் தோற்றவள் சுமந்தா ளென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

      "மற்பொலி திண்டோட் டென்னன்
            வன்பிழை பொறுத்தி வென்ற
      கற்புவீ றுடையாய் தோற்றாள்
            கழுத்திடை வளைத்தே றென்ன
      விற்பொலி நுதலாள் கேட்டு
            மெய்த்தவ ளருளை வாழ்த்திப்
      பொற்புறு கழுத்தி லேறி
            இருந்தனள் பொலிவுண்டாக"

    என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறும். இதனால் கல்வியில் வென்றார் தோற்றாரால் சுமக்கப்படும் தண்டனை பழைய கால முதல் இருந்துவந்ததை அறியலாம்.


    அன்பினால் அடக்குதல்

    முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழிப் படுத்தி வந்தார்கள். அவர்கள்பால் இருந்த மரி யாதை மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக் கியது. பிழைகளை மறந்தும் புரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.

    உதயணன் என்னும் அரசன் யாழ் வாசித்து ஒரு மத யானையை அடக்கினான். அவன் அதன் மேல் ஏறிக்கொண்டு அங்குச முதலியவற்றை அந்த யானையே எடுத்துத் தரும்படி ஏவி நடத்தி னான். அந்த யானை அவனுக்கு அடங்கியதைச் சொல்லும்போது பெருங்கதை யென்னும் பழைய நூலின் ஆசிரியர்,

    "ஆணை யாசாற் கடியுறை செய்யும் மாணி போல மதக்களிறு படிய"


    என்று வர்ணிக்கின்றனர். அங்குசம் முதலிய பல வலிய ஆயுதங்களுக்கும் அடங்காமல் திரிந்த அந்த மத யானை இனிய யாழோசைக்குப் பணிந் ததை வேறு யாரிடத்திலும் பணியாதொழுகும் மாணாக்கன் ஆசிரியனுடைய அன்புரைக்குப் பணிந்து நடக்கும் வழக்கத்தோடு ஒப்பிடுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது!

    ஆசானோடு பழகும் மாணாக்கனை நெருப்பை மிக அணுகாமலும் மிக விலகாமலும் குளிர்காயும் ஒருவனோடு பெரியோர் ஒப்புக் கூறுகின்றனர்.

    வாதம் புரிதல்

    கல்வியில் வாதம் செய்தல் நம் நாட்டுப் பள்ளிக் கூடங்களில் இருந்தது.வடமொழியாளர் இதனை வாக்கியார்த்த மென்பர்.மிகவும் சிறந்த நூற் பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாது புரிந்து தம் கல்வித் திறமையை நிலை நாட்டுவர்.அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டி யிருப்பரென்று மதுரைக் காஞ்சி முதலிய தமிழ்நூல்களால் அறி கிறோம்.இந்த வாதம் புரியும் பழக்கம் பாடசாலை களிலிருந்தே வளர்ச்சியுற்று வந்தது.பள்ளிக் கூடத்தில் மாணாக்கன் நூல் பயிலும் இயல்பை விளக்க வ‌ந்த பழைய சூத்திரமொன்று பலவற் றைச் சொல்லிவிட்டு, "வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும்" என்று முடிக்கின்றது.ஆட்சேப சமாதானங்கள் சொல்லிப் பழகிய பழக்கங்களே முதிர்ந்த நிலையில் வாதங்களாக வளர்ச்சியுறுகின்றன.

    சாந்துணையும் கற்றல் பல நூல்களையும் பள்ளிக்கூடத்தில் பயின்ற தோடு நில்லாமல் வாழ்நாள் முழுதும் நம் நாட்டார் படித்து வந்தார்கள். "என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு" என்ற குறளினால்,திருவள்ளுவர் ஒருவன் இறக்கு மளவும் படிக்கவேண்டும் மென்பதை விதிக்கின்றார். பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட அடிப்படையான பழக் கங்களே நாள‌டைவில் விருத்தியாகி வாழ்க்கை யைப் பயனுடையதாக்கின.

    பள்ளிக்கூடத்திலிருந்து கற்கும் காலங் கடந்த பின்பு பழைய காலத்தவர்கள் அப்பால் எங்கெங்கே கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தார் களோ, அங்கங்கே சென்று அவர்களிடம் தாம் முன்பு கல்லாதவற்றைக் கற்று வந்தார்கள்.என்னு டைய தமிழாசிரியராகிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அங்ஙனம் கற்றுத் தேர்ந்தவர் களே.தென்றல் பல மலர்களிலுள்ள வாசனை களைத் தோய்ந்து வந்ததற்கு அங்கங்கே கலைகள் தேடும் வித்தியார்த்தியைப் பரஞ்சோதி முனிவர் உவமை கூறுகின்றார். "பொங்கரில் நுழைந்து வாவி புகுந்துபங் கயந்து ழாவிப் பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக் கொங்கலர் மணங்கூட்டுண்டு குளிர்ந்து மெல்லென்றுதென்*றல் அங்கங்கே கலைகள்தேரும் அறிவன்போல் இயங்குமன்றே" என்பது அச் செய்யுள்.

    ஓதற் பிரிவு இல்லறம் நடத்துங் காலத்தில் கூட வேற்று நாட்டுக்குச் சென்று அங்கங்கே உள்ளாருக்குத் தம்முடைய கல்வியைக் கற்பித்தும்,வாதம் புரிந்து வென்றும்,தாம் முன்பு அறியாதவற்றைக் கற்றும் வந்தார்கள்.தொல்காப்பிய மென்னும் பழைய இலக்கண‌ நூலிலும் பிறவற்றிலும் இங்ங‌னம் பிரியுங்காலம் ஓதற் பிரிவென்று சொல்லப்பட்டிருக் கின்றது. இதற்கு மூன்று வருஷம் கால எல்லை யென்று அந்நூல்கள் விதிக்கின்றன.

    இவ்வாறே தமிழ்நாட்டிற்கும் நவத்வீபம் முதலிய இடங்களிலிருந்த வந்து படித்துச்சென்ற பண்டிதர்கள் பலர்.தஞ்சாவூரில் இருந்த ஆகம‌ சாஸ்திர‌ ப‌ண்டித‌ராகிய‌ ச‌ர்வ‌சிவ‌ ப‌ண்டித‌ரென்ப‌வ‌ ரிட‌த்தில் ப‌ல அன்னிய‌ தேச‌த்து மாணாக்கர்கள் வந்து கற்றுச் சென்றார்களென்னும் செய்தி யொன்று முதல் இராஜராஜ சோழன் காலத்தே தஞ்சையிற் பொறிக்கப்பட்ட சாஸனம் ஒன்றால் தெரிகின்றது. அவருடைய வீடு அக்காலத்திலும் ஆகம காலேஜாக விளங்கியதென்று சொல்வது மிகையாகதல்லவா? திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம் முதலியன பல வருஷ காலம் தமிழ்க் கல்லூரியாகவும் விளங்கி வந்தன.

    இப்ப‌டியே பால‌ர்க‌ளுக்குரிய‌ ப‌ள்ளிக்கூட‌ங் க‌ள் முதல் பழுத்த கிழவர்கள் இருந்து கற்கும் பள்ளிக் கூடங்கள் வரையிற் பல பாடசாலைகள் தமிழ்நாட்டில் இருந்து வந்தன. தமிழ்ச் சங்க மென்று சொல்லப்படுவனவும் ஒரு வகை ஆராய்ச் சிப் பள்ளிக்கூடங்களே அல்லவா?

    பின்னுரை

    கால‌த்தின் வேக‌ம் அந்த‌ப் ப‌ழைய‌ கால‌த்துப் ப‌ள்ளிக்கூட‌ங்க‌ளை மாற்றி ய‌மைத்துவிட்டாலும் அவ‌ற்றால் உண்டான‌ ந‌ற்ப‌ய‌ன்க‌ளையும்,அவ‌ற்றிற் ப‌டித்த‌ பேரறிஞ‌‌ர்கள் நமக்கு ஈட்டி வைத்துள்ள‌ நூற்செல்வத்தையும் நினைக்கும்போது,நம்மை யறியாமல் நமக்கு ஒரு பெருமிதம் உண்டா கின்றது;அத்தகைய காலம் மீண்டும் வரக்கூடாதா என்ற ஏக்கம் தோன்றுகின்றது. அக்காலத்து முறைகளே மீளாவிடினும்,அப்பள்ளிக்கூடங் களின் அடிப்படையான உண்மைகளையேனும் நாம் அறிந்து கொண்டு வாழ முயலுவோமாக!
    ---------------------


Reply all
Reply to author
Forward
0 new messages