குழந்தை
மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!
குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விளக்கி வௌிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!
வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ?
பாரீர்! அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது. பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!
- பாரதிதாசன்
தெய்வம், ஆதீனகருத்தர், ... சைவத்தில் அஃறிணையில் சொல்லுதல் நீண்டமரபு.
ஆதீனம் எழுந்தருளியது, சாமி சொல்லிச்சு, வந்தது, .... என்பது போல.
குடிமை, ஆண்மை, இளமை, மூப்பே,
அடிமை, வன்மை, விருந்தே, குழுவே,
பெண்மை, அரசே, மகவே, குழவி,
தன்மை திரி பெயர், உறுப்பின் கிளவி,
காதல், சிறப்பே, செறற்சொல், விறற்சொல்-என்று
ஆவறு-மூன்றும் உளப்படத் தொகைஇ,
அன்ன பிறவும், அவற்றொடு சிவணி,
முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையினஆயினும்,
அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும். தொல்காப்பியம்
நா. கணேசன்