பொங்கலோ பொங்கல்! - வாய்மணக்க வாழ்க என வாழ்த்துகின்றோம்!
உங்கள் அனைவர்க்கும் பொங்கல்நல் வாழ்த்துகள்!
பொங்கல் தினத்தில் உவகையுடன் - எங்கெங்கும்
பானையில் பாலுடன் பச்சரிசி பொங்கட்டும்!
தேனாய் இனிக்கட்டும் தை !
கவிஞர் சு. பசுபதி அவர்கள் தொகுப்பினின்றும் கொத்தமங்கலம் சுப்பு பாடிய
அரிய பொங்கல் வாழ்த்துக் கவிதையைத்
தட்டெழுதினேன். 10 ஆண்டு முன்பு. 1940களில் காந்தி வாழ்ந்தபோது இயற்றின பாட்டு!
https://s-pasupathy.blogspot.com/2017/01/18.html
நா. கணேசன்
வாய் மணக்க வாழவென்று
பொங்கல் வைக்கிறோம்
கொத்தமங்கலம் சுப்பு
பொங்குபாலே பொங்குபாலே - இந்தப்
பூமி செழிக்க வென்று பொங்குபாலே
சங்குபோலே வெள்ளை சங்குபோலே - எங்கும்
தாமரை பூக்கவென்று பொங்குபாலே (1)
தர்மம் தழைக்கவென்று பொங்குபாலே - நாமும்
தானம் கொடுக்கவென்று பொங்குபாலே
வர்மம் துலையுமென்று பொங்குபாலே - எங்கள்
வாக்கு நல்ல வாக்காகப் பொங்குபாலே (2)
வேகநடை
வண்டிகட்டியே விரட்டிக் கூத்துப்பார்த்து - நாங்க
வாயாரச் சிரிக்கவென்று பொங்குபாலே
கண்டிகதிர் காமத்துக்கு ஓடவொட்டாமல் - உள்ள
கழனி விளையுமென்று பொங்குபாலே (3)
நீலமயில் வாகனத்திலேறும் பெருமாள் - நல்ல
நெத்திமட்டவேல் பிடித்த கோலமுருகன்
பாலகுருநாதனுக்கு வெள்ளி செவ்வாயும் - பசும்
பாலபிஷேகம் புரியப் பொங்குபாலே (4)
கைக்குழந்தைக் கண்ணப்பனை யெக்கியிடுக்கி - கருங்
காகங் குருவிகளைக் காட்டி ஊட்டி
காரெருமை வெண்ணெயைப் பந்தாக உருட்டி - அவன்
கைக்கொடுத்து முத்தமிடப் பொங்குபாலே (5)
பங்குனி உத்திரம் பாக்கப்போகும் சனத்தை - தண்ணிப்
பந்தலிட்டு நிளல்போட்டுக் குந்தவும்வச்சு
திங்கஒரு மாவடுவும் சுண்டக்கடலை - நல்ல
செவ்விள நீருங் கொடுக்கப் பொங்குபாலே (6)
சித்திரைத் திருவிளாவில் உச்சிப்பொளுதில் நின்று
தேரிழுக்கும் ஊருச்சனம் தன்னையழைச்சே
சத்துமாவும் நீருமோரும் தானளிக்கவே - நாங்க
சத்தியுள்ள குடியாகப் பொங்குபாலே (7)
நாட்டுக்குள்ளே நல்லப்பசுக் கூட்டங்கூட்டமாய்
நஞ்சைப்புஞ்சைப் பலனெங்கும்தான் எதேட்டமாய்
பாட்டு கூத்துக்கெந்த நாளும் பஞ்சமின்றியே இந்த
பாரதம் செழிக்கவென்று பொங்குபாலே (8)
பிராத்தனை
கொத்தடிமையாகிப் போன எங்களைத் தூக்கி - புள்ளை
குட்டியெல்லாம் தன்னரசா வாழ வைச்சவன்
சத்தியம் கொல்லாமை யெனுந் தத்துவத்தாலே - இந்த
சகத்தைப் புரட்டிவிட்ட மந்திரக்காரன் (9)
காந்தி மகாராசன் வாழப் பொங்கல் வைக்கிறோம் - நல்ல
காங்கிரசுக் கூட்டம் வாழ பொங்கல் வைக்கிறோம்
சாந்தி மகாராஜ னுயிர்தானும் பிழைச்சு - நல்ல
சமரசமாகவென்று பொங்கல் வைக்கிறோம் (10)
நாடு செழிச்சுதென்று பொங்கல் வைக்கிறோம் - பட்ட
பாடு பலிச்சுதென்று பொங்கல் வைக்கிறோம்
கேடு விலகிச்சென்று பொங்கல் வைக்கிறோம் - மண்டை
கெருவம் சிறிதுமின்றிப் பொங்கல் வைக்கிறோம் (11)
சாமிகளை வேண்டிக்கிட்டுப் பொங்கல் வைக்கிறோம் - எந்த
சனத்தையும் பகைக்காமல் பொங்கல் வைக்கிறோம்
பூமியில் வாழவென்று பொங்கல் வைக்கிறோம் - எங்கள்
புள்ளைகுட்டி வாழவென்று பொங்கல் வைக்கிறோம் (12)
கஞ்சிகொண்டு வாரவளின் தங்கக் கையிலே - வெள்ளி
காப்படிச்சுப் போடவென்று பொங்கல் வைக்கிறோம்
மஞ்சிகொண்டு வார எங்க மருமகனுக்கே - உரு
மாலைவாங்கிப் போடவென்று பொங்கல் வைக்கிறோம் (13)
குப்பைகொட்டிக் குழைமிதிச்ச குட்டி காலுக்கே - தண்டை
கொலுசுபண்ணிப் போடவென்று பொங்கல் வைக்கிறோம்
எப்பொழுதுங் சுளவடிக்கும் வெட்டியானுக்கே - கூட
ரெண்டுகையி அள்ளிப்போடப் பொங்கல் வைக்கிறோம் (14)
சட்டிப்பானை ஆப்பைக்கூடு தட்டுமம்மட்டி - செஞ்சு
தந்த மகாராசனுக்கும் நெல்லையளந்தே
வட்டிக்கடன் தந்த அந்தச் செட்டியாருக்கும் - ஒரு
வாயவல் கொடுக்கவென்று பொங்கல் வைக்கிறோம் (15)
ஊருக்கெல்லாம் பஞ்சமின்றிச் சோறுபோட்டுட்டு - நாமும்
உண்டு பசியாறவெண்ணிப் பொங்கல் வைக்கிறோம்
தேரிழுக்கும் கைகளுக்குத் தெம்புகுடுக்க - அந்தத்
தெய்வம்துணை செய்யுமென்று பொங்கல் வைக்கிறோம் (16)
சும்மாடு கட்டிச்சுமை தூக்கும் தலையில் - கொஞ்சம்
இம்மாத்துண் டெண்ணெயிட்டுச் சீவிமுடிஞ்சு
அம்மாடி என்றுஅவன் தூங்கும் நேரத்தில் - கொஞ்சம்
ஆனந்தம் கிடைக்கவென்று பொங்கல் வைக்கிறோம் (17)
நஞ்சைபுஞ்சை யெங்கும்பயிர் நல்லாவிளைஞ்சு - இந்த
நாட்டாரு யாவருக்கும் பசியும் தணிஞ்சு
மஞ்சளிஞ்சி வெத்திலையும் வெள்ளாமைசெஞ்சு - நாங்க
வாய்மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம்! (18)
பொங்கலோ பொங்கல் பொலிக பொலிக!