வ்யால என்னும் வடசொல்லில் தோன்றும் யாளி/ஆளி பற்றிச் சில குறிப்புகள்:
---------------------------------------------------
யாளி/ஆளி - ஒரு mythical monster என்று அறிஞர்களால் குறிப்பிடப்பெறும்.
ஒரு வகைப் பேய் (= அணங்கு). இரவில் யானைகளை அடித்துக் கொன்று உண்ணும்
வலிமை கொண்டது. இதனைத் தான் “அணங்கு உடை நல் மான்” என சங்கப்
புலவர்கள் இந்தக் கற்பனைவிலங்கைப் பாடினர்.
சிங்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக - சங்க காலத்திற்குப் பல காலம் முன்னரே -
தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களில் அழிந்துவிட்டது. எனவே, குப்தர் காலத்தில்
இந்த கல்பனாம்ருகம் பற்றிய செய்திகள் தமிழ்நாட்டுக்கு வட இந்தியாவில் இருந்து
வந்தன. முதன்முதலாக ஏற்படும் வட இந்திய யாளி சிற்பங்களுக்குச் சில நூற்றாண்டுகள்
கழிந்துதான், பல்லவர், சோழர் யாளி சிற்பங்கள் அமைக்கின்றனர். கற்பனை அணங்குப்பேய்
என்று காட்ட ஆட்டின் கொம்புகள் இரண்டு அல்லது மூன்று காட்டியிருப்பர், வாயில்
இருந்து தொங்கும் பெரிய பாம்பு வ்யாலம். இதனால் வடமொழிப் பெயர் இப்பேய்க்கு (=அணங்குக்கு)
உண்டானது. யாளியின் வாயில் தொங்கும் நாக்கைப் பிடித்து வீரன் ஒருவன் அடக்குவது
போல வட இந்தியாவில் உள்ள ஆதி யாளி சிற்பங்கள் பல. இதுவே கஜவ்யால (யானையாளி)
வடிவ வளர்ச்சிக்கு வித்து. தாராசுரத்து தூண்களில் கஜவியாலம் காணலாம்.
யாளி (> ஆளி) = அணங்கு உடை நல் மான் என்பதன் பொருள்.
அணங்கு = பேய்கள் போல ‘afflicting power' கொண்டவை
இந்த யாளி mythical monsters. யாளிகள் பெரும் யானைகள் போன்றவற்றை
இரவிலே தான் வேட்டையாடி உண்ணும் என்பது இந்திய மரபு. அதனைத்
தான் சங்கப் புலவோர் ‘நல் மான்’ = nocturnal wild-animal என்றனர்.
நல்- = இரவு, இருள், கருமை. நள்-/நாள்- இப்பொருள்கள் உண்டு,
நல்லமலை தொடர்களில் இருந்து நல்லபெண்ணை நதி உற்பத்தி ஆகி ஓடுகிறது.
நல்லபெண்ணா = கரும்பெண்ணை. இப்போதைய கிருஷ்ணா நதி (ஆந்திரதேசம்).
நல்லன் = கிருஷ்ணன் (தெலுங்கில்). ...
நல்லான் = எருமை, அதன் போத்து (சங்க இலக்கியம்).
நல்லேறு = திமிலை உடைய காளை. திமிர்/திமில் = கருமை,
இது தமிழினின்றும் வடமொழிக்குச் சென்ற வேளாண் சொல். தைமிர- < திமிர-
நல்- = இங்கே, கருமை நிறம் குறிக்கிறது (நல்லான் ‘buffalo', நல்லேறு - கருந்திமில் காளை).
நல்லபாம்பு ‘கிருஷ்ண சர்ப்பம்’, நல்லான் = கண்ணன், நல்லெண்ணெய் = எள்ளின் எண்ணெய்
(cf. வெளிச்செண்ணெய் = வெள்ளையான தேங்காய்ப் பருப்பின் எண்ணெய்).
”நல் மான்” என்று யாளி அணங்கைக் குறிக்கும்போது, nocturnal animal
என்ற பொருளில் சங்கப் புலவர் கையாண்டுள்ளனர். இங்கே, நல் = இரவு, இருட்டு.
யாளி இரவில் வேட்டையாடும் போது வரும் தலைவனுக்குக் கவலைப்படும் தலைவியை
சங்கப் பாடல்கள் வர்ணிக்கின்றன. பின்னர் மாணிக்கவாசகர் பல இடங்களில்
“நல் மான்” என்பதற்கு விளக்கமாகப் பாடல்கள் பாடினார்.
குயவர் வளவுக்குச் சென்று ‘அக்கி எழுதுதல்’ என்னும் மருத்துவமுறை இன்னும் வழக்கில்
உள்ளது. வெக்கையினால் கொப்புளம், குரு ஏற்படும்போது இரவில் வேளாரிடம் சென்று
வேப்பிலையால் செங்காவி மண்ணில் யாளி வடிவத்தை எழுதினால் நோய்தீரும்
என்பது நாட்டார் நம்பிக்கை. கோழிமுட்டையிலும் யாளி அணங்கின் - வெம்மையான
கொடிய விலங்கு- வடிவை எழுதி, அம் முட்டையை அப் பூசகர் உண்பார். இதனால்,
நோயாளி மேல் படிந்த அக்கி தீரும்.
நல்- (1) black (2) night இரு பொருளிலும் சங்க இலக்கியத்தில் உள்ளமை
பார்த்தோம். திராவிட வேர்ச்சொல் அகராதி (DED) அல் = இரவு என்பதற்கு நல்-
என்ற சொல்லை வேராகக் காட்டுகிறது.
(1) கருமையான Ibis பறவை = அன்றில். இன்றும் கிராமங்களில் அன்றில்
என்கிறார்கள். அன்றில் < *நன்றில் நல்- = கருமை. இப்பறவை கிரவுஞ்சம் என
வடமொழியில் பெயர். இராமாயண முதல் சுலோகம் அன்றில் பறவையால்.
(2) இரவிலே பறந்து வரும் அன்னப் பறவை
அன்னம் < *நல்நம்/நன்னம் = இமயத்தைத் தாண்டி ஆண்டுக்கொடு முறை தமிழகம்,
இலங்கை வரும் superbird bar-headed geese.
நா. கணேசன்