ஆசிரியை - முதற் பயன்பாடு எப்போது?
தொழில்நுட்ப உலகின் சாதனையான மின்மடல்களைப் பற்றிய சர்ச்சை ஒன்று சில்லாண்டு முன் நிகழ்ந்தது. சிவா அய்யாதுரையின் தந்தை திரு. அய்யாதுரையை டல்லாஸில் சந்தித்தேன். சிவா அய்யாதுரையின் பங்கு பற்றிப் பலரும் பேசினர். அப்போது சில குறிப்புகள் கொடுத்திருந்தேன்.
E-mail என்ற வார்த்தை 1979-ல் பயன்பட்டது ஆக்ஸ்போர்ட் (எருதந்துறை) அகராதியினர் கண்டுள்ளனர்.
It seems probable that a computer whiz somewhere may have used email first. Perhaps earlier evidence lies in an internal company memo, a software manual, or even in an item of ‘electronic mail’? We’d like your help in finding such an example.
தற்காலத் தமிழிலும் எருதந்துறை அகராதி போல, வெகுசனப் பயன்பாட்டில் உள்ள சொற்கள் புகுந்த ஆண்டு நிச்சயிக்கப்படல் வேண்டும். உதாரணமாக, “ஆசிரியை” என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இது 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சொல் என நினைக்கிறேன். அப்போதோ, அதற்குமுன்னரோ உண்டா? தெரிந்தால் அறியத் தாருங்கள்.
உபாத்யாயன் - உபாத்யாயனி வடமொழியில் உண்டு. ஆச்சார்ய - ஆச்சார்யனி உண்டா?
உபாத்திச்சி, உபாத்தியாயனி, உபாத்தினி, உபாத்தியாயி, a school mistress. (MTL) - படிப்பிப்பவள்.
அ. கி. பரந்தாமனார், நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
”வாத்தியார் - உபாத்தியாயர் ; வாத்திச்சி - உபாத்தியாயனி”
(கவிதாயனி என்பதும் இப்படி உருவானதோ? கவிதாய- என்று கவிஞருக்கு ஏதாவது வடமொழியில் சொல்லுண்டா?)
தனுமை - வண்ணதாசன் சிறுகதை
”இதில் வாத்திச்சி என்ற சொல் ஏராளமான இடங்களில்.தனுமை கதையை மீண்டும் மனசில் ஓடவிட்டேன். ’டெய்ஸி வாத்திச்சியை’ மையமாக வைத்து இன்னொரு கதையை யாரேனும் எழுதலாம்.
இப்போது எனக்கு இன்னொரு சந்தேகம். ஆசிரியை என்பதை வாத்திச்சி என்று விளிப்பது தென்மாவட்டங்களில் மரியாதையான ஒன்றா? வட தமிழ்நாட்டில் வாத்தி வாத்திச்சி என்பவை கேவலமான சொற்கள். அங்கு அப்படி இல்லையா?” (ரவிக்குமார்)
மரபுக்கவிஞர் சிவசிவா (திரு. வி. சுப்பிரமணியன்) “ஆசிரியை” என்ற தமிழ்ச்சொல் பற்றி வினவியிருந்தார். ஆசிரியை என்ற சொல் பெண் டீச்சர் என்பதற்கு ஈடாக மேலைநாட்டு முறையில் பள்ளிக்கூடங்கள் ஏற்பட்ட 19-ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். பாரதியார் ’ஆசிரியை’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளாரா? எந்தப் பத்திரிகையில் அல்லது நூலில் “ஆசிரியை” முதலில் பயன்படுத்தப்பெற்றுள்ளது? அல்லது, நமக்குத் தெரிந்தவரையில் ஆசிரியை எந்த ஆண்டில் பயன்பாடு? பார்க்கவேண்டிய கேள்விகள்.
உபாத்யாயன் என்ற சொல்லுக்குப் பெண்பால் உபாத்யாயனி. அதுபோல, ஆச்சார்யன் என்ற சொல்லுக்கு ஆச்சார்யனி என வடமொழியில் உண்டா? இதனையும் கேட்கணும். விளாங்காய்ச் சீர் வெண்பாவில் வராது என எழுதிய இலக்கணக்கடல் இராம. சுப்பிரமணியனின் ’கணக்கு வழக்கு’ (1998, 16 கட்டுரைகள்) நூலை வாசித்துக்கொண்டுள்ளேன். அதில் நண்பன் என்ற ஆண்பாற்பெயருக்கு நண்பி என்ற பெண்பால் பெயர் வருவதில்லை என்பதன் காரணமும், இகுளை என்ற பெண்பாற்சொல்லுக்கு ஆண்பால் இல்லை என்பது ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
ஆசிரியை - எந்தெந்த நூல்களில் முதலில் தமிழில் ஆளப்பெற்றுள்ளது? சொல்லுங்கள். நன்றி.
நா. கணேசன்
>சமீபத்தில் கண்ட ஒரு வாக்கியம்:
> தமிழ்ப் பேராசிரியை உல்ரிக் நிக்லாஸ் வந்துள்ளார்.
வணக்கம், சிவசிவா.
நீங்கள் கண்டது “இலக்கிய மாலை” சிகாகோ நிகழ்ச்சி என நினைக்கிறேன்:
> 1) ஆசிரியை என்பது தமிழ்ச்சொல்லா? ஒருவேளை 'ஆசிரியா' என்று வடமொழியில் பெண்பாலில் பெயர்ச்சொல் ஏதேனும் உண்டா?
ஆச்சார்ய என்னும் வடமொழிச்சொல் ஆசிரியன் என்று தமிழில் ஆகி சில ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆயிரிய- என்ற சொல்லும் < ஆசிரிய ப்ராகிருதங்களில் உண்டு,
ஆச்சார்யா என பெண்டீச்சருக்குப் பெயர் வடமொழியில் உண்டா? இருக்காது என நினைக்கிறேன். கேட்கணும்.
ஆசிரியை : 18,19-ஆம் நூற்றாண்டுகளில் ஆசிரியனில் இருந்து ஏற்பட்டிருக்கவேண்டும். பத்திரிகைகள், பள்ளிக்கூடங்களில்.
கிவாஜ, ரா.அ.பத்மநாபன் போன்றோர் நூல்களில் பரக்கக் காணலாகும்.
> 2) அப்படி ஒரு சொல் தமிழில் இருக்கின்றது என்று உலகம் கூறினால்,
> "பேராசிரியை வந்துள்ளாள்" என்று சொல்லாமல் "பேராசிரியை வந்துள்ளார்" என்று சொன்னது பிழைபோல் தோன்றுகின்றதே.
பேராசிரியை வந்துள்ளாள் பொருந்தாது. கல்லூரிகளில் பேராசிரியை வந்துள்ளார் என்பதே பயன்பாடு,
மரியாதைப்பன்மை.
அன்புடன்,
நா. கணேசன்
பாவாணர் விரிவாகச் சொல்லியுள்ளார்:
ஆண்பால் - பெண்பால்
ஒருவன் - ஓருத்தி
நல்லவன் - நல்லவள்
தலைவன் - தலைவி
தோழன் - தோழி
கள்வன் - கள்வி
பாங்கன் - பாங்கி
சங்கரன் - சங்கரி
பேரன் - பேர்த்தி
பாணன் - பாடினி
குறவன் - குறத்தி
மறவன் - மறத்தி
பார்ப்பனன் - பார்ப்பனி
பண்டிதன் - பண்டிதை
நடிகன் - நடிகை
தேவன் - தேவி
இல்லாளன்* - இல்லாள்
திருடன் - திருடி
தமயன் - தமக்கை
பெருமான் - பெருமாட்டி
நம்பி - நங்கை
மாணாக்கன் - மாணாக்கி
மாணவன் - மாணவ
சிறுவன் - சிறுமி
சிறுக்கன் - சிறுக்கி
ஆசிரியன் - ஆசிரியை
செல்வன் - செல்வி
திருவாளன் - திருவாட்டி
உபாத்தியாயன் - உபாத்தியாயினி
திருநிறைசெல்வன்- திருநிறைசெல்வி
இருபாற் பெயர்கள் - Masculine and Feminine nouns
உயர்திணை - மக்கட்பெயர்
ஆண்பால் பெண்பால்
அந்தணன் அந்தணி
அரசன் அரசி, தேவி
ஆசிரியன் ஆசிரியை
ஆடவன் பெண்டு
ஆடூஉ மகடூஉ
உபாத்தியாயன் உபாத்தியாயினி உபாத்திச்சி
ஐயன் ஐயை
கணவன் மனைவி
கிழவன் (தலைவன்) கிழத்தி
கிழவன் (முதியோன்) கிழவி
குணவான் குணவதி
குணாளன் குணாட்டி
கூத்தன் கூத்தி,விறலி
சிறுவன் சிறுமி
சீமான் சீமாட்டி
தனவந்தன் தனவந்தி
தூர்த்தன் தூர்த்தை
தேவராளன் தேவராட்டி
நம்பி நங்கை
பத்தன் பத்தினி
பண்டிதன் பண்டிதை
பாணன் பாடினி
பார்ப்பான் பார்ப்பாத்தி
பார்ப்பனன் பார்ப்பனி
பிரான் பிராட்டி
புண்ணியவான் புண்ணியவதி
பெருமான் பெருமாட்டி
மாணவன் மாணவி
மாணாக்கன் மாணாக்கி
வணிகன் வணிகச்சி
வாலன் வாலிபன் வாலியோன் வாலை
வீரன் வீரி
வெள்ளாளன் வெள்ளாட்டி
வேளாளன் வேளாட்டி
குருவிக்காரிச்சி, கொல்லைக்காரிச்சி, வெள்ளாட்டிச்சி முதலிய பெண்பாற் பெயர்கள் ஒருபயனுமின்றி இருபெண்பால் விகுதியேற்ற மையின் வழுவாகும்.