இத்துடன் தமிழ் ஓங்கார முத்திரை வடிவை இணைத்துள்ளேன். பார்த்தருள்க. இந்த
எழுதுருவை யாத்தவர் பேரா. பெரியணன் குப்புசாமி, நாமக்கல் ஆவார். 'கல்வி'
குப்பு 1990களின் ஆரம்பத்தில் அழகான எழுதுருக்களைத் தமிழுக்கு
உரித்தாக்கியவர். தற்போது இதயவியல்துறைப் பேராசிரியராய் ஒஹாயோ ஸ்டேட்
பல்கலையில் திகழுமவர் முன்பு ஜான்ஸ் ஹாப்கின்ஸில்
ஆரய்ந்தபோது (உடுமலைப்பேட்டை) டாக்டர் குருசாமி வாஷிங்டன் டி.சி.யில்
தமிழ்க்கடவுள் முருகனுக்குத் திருக்கோவில் எழுப்ப வெகுமுயற்சி
எடுத்தபோழ்து தமிழ்க்கோவில் மலர்களை அச்சடித்தவர் 'கல்வி' குப்பு:
http://www.kalvi.com
தற்காலத்தில் தமிழ்நாட்டு நகர்ப்புறக் கோயில்கள் சிலவற்றில்
திருவுண்ணாழியின் முகப்பில் இந்தி ஓம் காண்கிறோம்.
தமிழ் ஓங்காரத்தையும் கணினியில் அதிகாரப்பூர்வமாக
வைக்கவேண்டும் என்ற ஆவல் தமிழன்பரிடையே
சில ஆண்டுகளாக இருந்துவந்தது. எனவே, அம்முயற்சி
மேற்கொள்ளலாம் என்றுழைத்தேன். தற்போது
யானெழுதிய தமிழ் ஓம் முன்னிகையாவணத்தை (புரபோசல்)
'முரசு அஞ்சல்' முத்தெழிலன் நெடுமாறன் தலைமையில்
இண்பிட் குழுமம் யுனிகோட் கன்சார்த்தியத்திற்கு
அனுப்பியுள்ளது. அந்த ஓம் ஆவணத்தை
யுனிகோட் தொழில்நுட்ப வல்லுநர்கள் (யுனிகோட் டெக்னிகல்
கமிட்டி) ஏற்புடையதா எனச் சோதித்து தங்கள்
முடிவை அறிவிப்பர். அம்முடிவு எப்படிப் போகிறது
என்று சுமார் 10 நாளில் அறிவோம்.
தமிழக முதல்வர் கலைஞரின் ஸன் தொலைக்காட்சியில் சிதம்பரரகசியம் என்னும்
தொடரில் முதலில் கட்டைவிரல் ரேகைக்குள் வருவதாக தமிழ் ஓம் உள்ளதைக்
கண்ணுறும் வாய்ப்புக் கிட்டியது. பாரதியாரின் 'ஓம் சக்தி ஓம்' பாட்டைப்
பயன்படுத்தினேன்.
நம்தெய்வம் முருகபிரானின் ஓம் யுனித்தமிழில் அரங்கேற எல்லாம் வல்ல
இறையின் தாளிணையத் தொழுது ஆசிநல்க வேண்டுகிறேன். நடந்தால், பிறகு
கூகுளிலே ஓமைத் துழாவி எடுக்கமுடியுமே! நன்றி.
இவண்,
நா. கணேசன்