Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

தொலைக் காட்சியில் தொலைந்து விட்ட சமுதாயம் தொடர் 2

34 views
Skip to first unread message

abdul hakkeem

unread,
Feb 18, 2013, 8:58:20 AM2/18/13
to
 
விபச்சாரத்திற்குரிய இரண்டாவது காரணம் பார்வை
 

நமது பார்க்கும் பார்வை நல்ல பார்வையாக நல்லவற்றைப் பார்ப்பதற்கு ஆர்வமுடையவர்களாக இருக்க வேண்டும். நல்லதைப் பார்ப்பதுதான் நமது உள்ளத்தில் என்றைக்கும் இடம் பிடிக்கும். அதை பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப் படுவோம். ஆனால் இன்றைய தொலைக் காட்சிகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் எல்லாம் முழு சமுதாயத்தையும் சீரழிக்கின்ற அளவிற்கு ஆபாசங்கள் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மனிதர்களின் கண்களுக்கு விருந்தாக மாலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொரு மணி வரையும் காட்டப்படுகிற தொலைக் காட்சி சீரியல்களில் திரும்பத்திரும்ப எதைக் காட்டப்படுகிறது என்று பார்த்தால் அடுத்தவள் கணவனை எப்படிக் கூட்டிச் செல்வது, அடுத்தவன் மனைவியோடு எப்படி தவறாக நடக்க முடியும்? எப்படி சொத்துக்களை ஏமாற்றிப் பறிப்பது?

எப்படி அடுத்தவர்களுடன் கும்மாளமடிப்பது? என்பதைத்தான் திரும்பத் திரும்ப காட்டப்படுகிறது. யாரோடு யாரல்லாம் உறவு கொள்ளக் கூடாதோ அப்படிப்பட்ட உறவு முறைகள் தொலைக்காட்சிகளில் வழியாக தினம் தோறும் காட்டப்படுகிறது. நாமும் அதைத்தான் பொழுது போக்கிற்காக மணிக்கணக்கில் இன்பத்திற்காக அப்படிப்பட்ட காட்சிகளை ரசிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேம். ஆண்கள் பெண்களை அரை குறை ஆடைகளுடன் பார்க்கின்ற போது அவர்களுக்கு இச்சைகள் தூண்டப்படுகின்றன. அல்லாஹ் ஆண்களின் பார்வைகளில் இச்சையை ஏற்படுத்தும் உணர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறான். இப்படியான காட்சிகளைப் பார்த்தால் தவறான சிந்தனை வந்து விடுகிறது. இதனால் தவறு செய்ய வேண்டும் என்ற  எண்ணமும் ஏற்பட்டு விடுகிறது. இன்பத்தை  அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வுகளோடு இருக்கும் ஆண்களுக்கு இந்தப் பார்வை விபச்சாரத்திற்குக் கொண்டு சேர்க்கும் கருவியாக மாறிவிடுகிறது.

அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்

                                             (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

அல்குர்ஆன் 24:30-31

                                          ஆண்களும் பெண்களும் தங்களுடைய பார்வைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகின்றது. ஆனால் என்ன நினைக்கிறோம் என்றால் நாங்கள் பார்க்கத்தானே செய்கிறோம் இதில் தவறேதும் நாங்கள் செய்ய நினைக்கவில்லையே என்று நினைக்கலாம். ஆனால் நாம் பார்க்கிற பார்வையை இஸ்லாம் மிகவும் அபாயகரமானதாக சித்தரித்துக் காட்டுகிறது.

                                    பார்வைதான் விபச்சாரத்தின் முதல் படி என்பதை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி நமக்கு உணர்த்துகிறது

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

                      நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதேச்சையாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது  எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

ஆதாரம்  : முஸ்லிம் 4363

                           பார்வை எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் நடந்த ஒரு நிகழ்ச்சி சான்றாக உள்ளது.

                       யாருடைய வீடுகளுக்குள் நாம் செல்ல நாடினாலும் முதலில் அந்த வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி கேட்டு ஸலாம் கூறி நுழைய வேண்டும். இதுதான் இஸ்லாம் கூறும் அழகான வழிகாட்டுதல். ஆனால் வீட்டு வாசல் திறந்திருந்தால் நமக்குப் போதும். திறந்த வீட்டில் நாய் நுழைவதைப் போன்று நாம் நுழைந்து விடுகிறோம். இப்படி நடந்து கொள்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நாம் ஏன் வீட்டில் உள்ளவர்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும்? என்று நினைத்து வீட்டில் உள்ள ஜன்னல் வழியாக வீட்டில் யாராவது இருக்கிறார்களா? என்று இன்று நாம் நடந்து கொள்வது போல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் ஒரு நபித் தோழரும் நபி (ஸல்) அவர்களுக்கு தொந்தரவு தரக் கூடாது என்று நினைத்து வீட்டுக்குள் எட்டிப் பார்த்தார். இதனுடைய பாரதூரத்தை விளக்கி நபி (ஸல்) அவர்கள் கூறும் செய்தியில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

சஹ்ல் பின் சஅத் (ர-லி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்)

                         அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப் பார்த்தார். நபி (ஸல்)அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக்கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது” என்று சொன்னார்கள்.

ஆதாரம்: புகாரி 6241

                          அனஸ் பின் மா-லிக் (ர-லி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் “கூர்முனையுடன்’ அல்லது “கூர்முனைகளுடன்’ அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்தப் போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.

ஆதாரம் புகாரி 6242

                 நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ர-லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

ஆதாரம்: புகாரி 6243

           வீட்டுக்குள் வரும் போது அனுமதி இல்லாமல் நுழைந்து விட்டால் வீட்டில் உள்ள கணவன், மனைவி அல்லது பெண்களோ உபரியான ஆடைகளைக் களைந்து பல்வேறு விதமான நிலையில் இருக்கும் போது ஏடாகூடமாக எதையேனும் பார்த்து விடுவான். அவன் தன்னுடைய உள்ளத்தில் எந்த ஒன்றையும் நினைக்க வில்லையென்றாலும் அவனோடு இருக்கும் ஷைத்தான் ஒன்றை இரண்டாகவும் இரண்டை நான்காவும் ஊதிப் பெரிதாக்கி விடுவான். தவறு செய்யும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி மிகப் பெரிய கொடிய விபச்சாரத்திற்கு துணை போவதற்கு காரணமாக ஷைத்தான் அமைத்து விடுவான். எனவே பார்க்கக் கூடாததைப் பார்ப்பததை விட்டு தவிர்ந்து எதைப் பார்க்குமாறு இஸ்லாம் கட்டளையிடுகின்றதோ அதைப் பார்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் நாளை மறுமையில் மக்கள் மன்றத்தில் இந்தப் பார்வைக்கே ஒரு பெரிய விசாரணை மன்றம் இருப்பதாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.

                   அல்லாஹ்விற்கும் மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் மத்தியில் பல்வேறு முறையில் நடக்கும் உரையாடல்களை காட்சிகளாக அல்லாஹ் தொகுத்து நமக்குக் கூறுகிறான்

               உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

அல்குர்ஆன் 17:36

                   கேட்கக் கூடாத பாடல்களைக் கேட்பதையும், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுவதையும் அடுத்தவர்களைப் பற்றி ஒட்டுக் கேட்பதையும் அவதூறு பேசுவதையும், புறம் பேசுவதையும் கேட்டாயா? என்ற கேள்வியும், ஏன் கேட்டாய் எதற்குக் கேட்டாய் என்றும் அல்லாஹ் கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே போவான்.

            தீயதற்கு தீமையும் நல்லது நன்மையும் கொடுக்கும் அந்நாளில் ஏன் பார்த்தாய்? எதைப் பார்த்தாய்? எவ்வளவு நேரம் பார்த்தாய்? அதனால் உனக்கு என்ன நன்மை கிடைத்தது? நான் சொன்னதற்கு கட்டுப்பட்டாயா? கட்டுப் படவில்லையா? உனக்கு நான் தந்த  பார்வையை என்னுடைய அமானிதம் என்று பேணிப் பாதுகாத்தாயா? இல்லையா? சின்னச் சின்ன காரியங்கள் முதல் பெரிய செயல்கள் வரையும் நாளை மறுமை நாளில் அல்லாஹ்வின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்கு சான்றாக நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்சியைப் பாருங்கள்.

             அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஒரு பகல்’ அல்லது “ஓர் இரவு’ (தமது இல்லத்திலி-ருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலி-ருந்து புறப் பட்டு வர என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

          அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது” என்று கூறி விட்டு, “எழுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துக்கள்! வருக” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.

        அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்” என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள்.

             அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

 ஆதாரம் முஸ்-லிம் 4143

             பசியாக இருக்கும் நேரத்தில் பசி போக்குவதற்கு உண்ட பேரீத்தம் பழத்திற்குக் கேள்வி உண்டு என்று சொன்னால் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடை நமது பார்வைப் புலன் இன்று உலகில் எத்தனையோ இன்பங்களை நாம் இதன் மூலம் ரசிக்கின்றோம். அல்லாஹ்வின் இயற்கைப் படைப்புக்களையும் பச்சைப் பசேல் போன்று தெரிகின்ற புல் வெளிகளையும் இறைவனின் உயர்ந்த படைப்பான மலையையும் இன்னும் ஏராளமான படைப்புக்களையும் இந்தப் பார்வை மூலம் நாம் ரசிக்கிறோம். பச்சையையும் நீலத்தையும் சிவப்பையும் இது போன்று எண்ணற்ற நிறங்களையும் மனிதர்களின் நிறங்களையும் இந்தப் பார்வை மூலம் நாம் வித்தியாசப்படுத்தி நமது முளைக்குள் நாம் பதிய வைக்கிறோம் இது அல்லாஹ் நமக்குத் தந்த மிகப் பெரிய அருட்கொடையாகும்.

 அல்லாஹ் கூறுகிறான்: அவனுக்கு இரண்டு கண்களை நாம் அமைக்கவில்லையா?                                                       அல்குர்ஆன் 90:8

                          அல்லாஹ் தன்னை உணர்வதற்கும் தனக்கு நன்றி செலுத்துவதற்கும் உரிய ஓர் அற்புதமாக இதை நமக்கு சொல்லித் தருகிறான். இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பார்வைப் புலனைப் பற்றி கண்டிப்பாக நாளை மறுமையில் நம்மிடம் அல்லாஹ்வின் முன்னிலையில் கேள்வி எழுப்பப்படும். அல்லாஹ்விற்கும் அவனுடைய அடியானுக்கும் மத்தியில் நாளை மறுமையில் இந்தப் பார்வை பற்றி ஒரு வழக்கு நடைபெறும் அதுபற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

           இந்தப் பார்வைப் புலனைப்பற்றியும் அது வழங்கப்பட்ட மனிதர்களைப் பற்றியும் அது எதற்கு வழங்கப்பட்டதோ அந்த அல்லாஹ்வின் வேதம் திருமறைக் குர்ஆனைப் பார்க்காமலும் நபி (ஸல்) அவர்களின் பொண்மொழிகளைப் பார்க்காமல் கண்டதையும் கழியதையும் திரைக் காவியங்களையும் ஆடல்களையும் பாடல்களையும் கூத்துக் கும்மாளங்களையும் இது போன்ற வீணான போழுது போக்குகளையும் பார்த்து தமது பொன்னான நேரத்தையும் காலத்தையும் வீணடித்த இது போன்ற மனிதர்களை நாளை மறுமையில் அல்லாஹ் எவ்வாறான ஒரு நிலையில் கொண்டு போய் வைப்பான் என்பதை பின்வரும் திருமறையின் உரையாடல் நமக்கு சான்று பகர்கிறது.

           எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.”என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். ‘அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.

 அல்குர்ஆன் 20:124-126

          தொலைக்காட்சியில் காணக் கூடாததை கண்ட மக்கள் எல்லாம் குருடர்களாக நாளை மறுமையில் எழுப்பாட்டப்படுவார்கள். நாளை மறுமையில் குருடர்களாக எழுப்பாட்டப்படுவது சாதாரணமான ஒரு நிகழ்வா? என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

source : sltjweb.com

 

by

Abdul hakkeem .R

Blog  : The Message Of ISLAM  

IF YOU WANT TO FOLLOW THIS BLOG : Click Here

 

Google group : Tamil ISLAM

IF YOU WANT TO SUBSCRIBE THIS GROUP : Click Here

 

Reply all
Reply to author
Forward
0 new messages