அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நல்ல மனைவியே மேலான செல்வம்
”இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச்
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911
இந்த நபிமொழியை நல்ல கணவருக்கும் அடிப்படையாக நாம் எடுத்துக் கொண்டால்
முதலில் குடும்பத்தில் சிக்கல் வராது!
பொதுவாக நம் அனைவருக்கும் நல்ல கணவன் மற்றும் மனைவியைத் தேர்ந்தெடுப்பது
திருமண வாழ்கையை நிர்ணயிக்கும்போது உருவெடுக்கும் ஒரு புதிராகத்தான்
இருக்கும் காரணம் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் நம் வாழ்நாள் முழுவதும
நமக்கு சிறந்த ஆடையாக இருக்க வேண்டும் என்ற அழகிய எண்ணமே! ஆனால் இந்த
நல்ல எண்ணம் சில நேரம் தோல்வியுறும் காரணம் நாம் நல்ல உலககல்வி பயின்ற,
உத்யோகத்தில் கை நிறைய சம்பளம் வாங்கக்கூடிய, வசதியான குடும்பத்தை
சேர்ந்த அல்லது மார்க்கம் இல்லை என்றாலும் மிகவும் அழகாக இருக்கக் கூடிய
ஆணையோ! பெண்ணையோ தான் தேர்ந்தெடுத்து விடுவோம். அப்படி
தேர்ந்தெடுக்கக்கூடிய அந்த ஆனோ? பெண்ணோ தக்வா என்ற பயபக்தி கொண்டவரா
என்பது சிந்திப்பதிருக்க மாட்டோம். இது முதலில் மாற வேண்டும் நபிகள்
நாயகம் (ஸல்) போன்று நம் குடும்ப வாழ்க்கையை நாம் நல்ல முறையில்
தேர்ந்தெடுக்க வேண்டும்! நல்ல ஆண் மற்றும் பெண் எவ்வாறு இருக்கவேண்டும்
என்பது பற்றி எண் சொந்த கருத்துக்கள் இதோ தங்கள் பார்வைக்கு!
உலகப் பெண்களில் சிறந்தோர் நால்வர்.1. ஃபிர்அவனின் மனைவி ஆசியா, 2.மர்யம்
இப்னத் இம்ரான் 3. கதீஜா பின்த் குவைலித் 4 பாத்திமா பின்த் முஹம்மது ‘என
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் - ஆதாரம் : புகாரி,
திர்மிதி
1. அன்னை ஆசியா
2. அன்னை மர்யம்
3. அன்னை கதீஜா
4. அன்னை பாத்திமா (ரலி)
இந்த சிறந்த பெண்களைப் பற்றி அலசிப் பார்போம்
”அன்னை ஆசியா”
அன்னை ஆசியா என்பவர் யார் என்றே நம்மில் சிலர் சிலர் அறிந்திருக்க
வாய்ப்பில்லை காரணம் நாம் திருமறையை நம் தாய்மொழியில் அறிந்து
படிக்காததே! அறிந்துக்கொள்ளுங்கள் அன்னை ஆசியா என்பவர் உலகத்திலேயே
மிகப் பெரிய கொடுங்கோல் அரசர்களின் தலைவனாகிய பிர்அவ்னுடைய
மனைவியாவார்.
இந்த அம்மையார் தன்னுடைய கணவனும் கொடுங் கோலனுமாகிய பிர்அவன்
ஆண்குழந்தைகளை யாரும் வளர்க்கக்கூடாது, பிறந்தாலும் அதை
கொன்றுவிடவேண்டும் என்று ஆணையிட்டிருந்தான் காரணம் ஆண்களால் தன்
உயிருக்கு ஆபத்து என்பதே. இதை அறிந்த பிறகும் தன் கணவனின் கட்டளையை
ஏற்கவில்லை மாறாக ஒரு நீரோடையில் பேலையின் மூலம் தத்தளித்துக்கொண்டு
அநாதையாக விடப்பட்ட கை குழந்தை (நபி மூஸா (அலை) அவர்களை கண்டு மனம் உருகி
கொடுங்கோலன் பிர்அவுன் (கணவன்)னிடமே முன் அனுமதி பெற்று குழந்தையை
வளர்த்தார். இதுமட்டுமா? தன் கணவன் உலகத்திற்கெல்லாம் கடவுள் என்று தன்னை
பிரகடனப்படுத்திய பின்னரும் தன் கணவனை கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக
அல்லாஹ்விடம் தனக்காக சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டித்தருமாறு துவா
செய்துக்கொண்டார்.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு பிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக
கூறுகிறான். அவர் ”இறைவா! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் ஓர் வீட்டைக்
கட்டித்தருவாயாக இன்னும் பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும்
என்னைக் காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும்
என்னைக் காப்பாற்றுவாயாக என்று (பிரார்த்தித்துக்) கூறினார் (66-11)
இன்றைய சில முஸ்லிம் பெண்கள் நிலை
ஆனால் இன்றைய முஸ்லிம்கள் பெண்மணிகளில் பெரும் பாலானோர் நிலை
கீழ்கண்டவாறு உள்ளது
நெ.1 – சிர்க்
அல்லாஹ்வை விடுத்து அவ்லியாக்களின் தர்காஹ்வே கதி என்று ஷிர்க்-ல்
மூழ்கியுள்ளனர்.
நெ.2 – ஏழைக்கு உணவளிப்பதில்லை
ஏழைக்கு ஒரு கவலம் உணவு அளிப்பதில்லை,
நெ.3 – அநாதைகளுக்கு பரிவு காட்டவதில்லை
அநாதை குழந்தைகளை வளர்ப்பது கடினம்தான் என்றாலும் அவர்களுக்கு
மறைமுகமாவது பொருளுதவியோ உடையோ கொடுத்து உதவுவதில்லையே.
நெ.4 – குடும்பத்தில் உள்ள நோயாளிகளை கவனிப்பதில்லை
அநாதைகளை விடுங்கள் போனால் போகட்டும் தன் குடும்ப உறுப்பினர்களில் உள்ள
வயதானவர்களையாவது சரியான முறையில் கவனிக்க முடிகிறதா? என்றால் அதுவும்
முடிவதில்லை! ஏன் இந்த அவலநிலை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
“அன்னை மர்யம் (அலை)“
அன்னை மரியம் (அலை) அவர்களும் தொழுகையும்
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்னையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்.
அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை
ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த
மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு
இருப்பதைக் கண்டார், “மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?”
என்று அவர் கேட்டார். ” இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக
அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்
பதில் கூறினாள் திருக்குர்ஆன் 3:37
உலகில் பிறந்த ஏன் பிறக்க இருக்கும் எந்த பெண்ணுக்கும் கிடைக்காத ஒரு
சங்கடமான நிலையை இந்த பெண்மணி அடைந்தார்கள்.
தான் ஆண் துணையில்லாமல் கர்ப்பம் தரிக்கவிருப்பதை அறிந்தவுடன் தன்னுடைய
இறைவனிடம் இவர் முறையிட்ட விதம் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்
அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை
பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக
முடியும்?" என்று கூறினார் (19-20)
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார் பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள
ஓரிடத்தை சென்றடைந்தார். (19:22)
அன்னை மர்யம் (அலை) சமூகத்தை கண்டு பயப்படவில்லை
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம்
வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான
பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" [19:27]
"ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும்
நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்). [19:28]
அன்னை மர்யம் (அலை) சமூகத்தாரிடம் தான் கற்புநெறியுள்ளவள் என்பதை
நிறுபித்துக்காட்டினார் அவரது குழந்தை ஈஸா (அலை) பேசினார்
(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்;
"நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று
கூறினார்கள். [19:29]
"நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு
வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக
ஆக்கியிருக்கின்றான். [19:30]
அன்னை மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான்
அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு நாம் நம்மிடமிருந்து
ரூஹை அவருள் ஊதினோம். மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும்
அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும் அவர் கீழ்ப்படிந்து
வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார். (66 11-12)
ஆனால் இன்றைய சில பெண்களின் நிலை
வெட்கத்தலங்களை பேணிக்காக்க ஹிஜாப் (தக்வா என்ற இறையச்சம் கொண்ட புர்கா
ஆடை) அணியச் சொன்னால் அணிகின்றனர் ஆனால் அவைகளில் சம்கி, நக்கி, ஜிக்னா
போன்ற அலங்கார வேலைப்பாடுகளையும், மிகவும் மெல்லிய ஆடைகளையும், மிகவும்
இருக்கமான ஆடைகளையும் அணிந்து ஆண்களை கவருகின்றனர்.
இன்றைய நவநாகரீக உலகில் மாற்றுமத பெண்களை விட முஸ்லிம் பெண்கள் அதிகம்
அன்னிய ஆண்களால் கவரப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைவதே இந்த நவநாகரீக
உலகில் தேர்ந்தெடுக்கும் வேலைப்பாடு கொண்ட லேட்டஷ்ட் மாடல் புர்கா தான்.
இந்த நவீன பலபலக்கும் புர்கா விளம்பரங்களை சில ஜமாஅத் நிகழ்சிகள்
தொலைக்காட்சிகளில் காட்டுவது வேதனையளிக்கிறது.
நபிகளார் காலத்து பெண்களின் புர்கா
மூமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்)
அவர்களுடன் பஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை
முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின்
காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது. புகாரி-578: ஆயிஷா
(ரலி)
நவீன காலத்து பெண்கள் நிலை
இருட்டில் வெளியே சென்றாலும் எளிதில் முஸ்லிம் பெண்மணி என்று
அறிந்துக்கொள்ளும் வகையில் அமைந்த சம்கி, நக்கி, ஜிக்னா போன்ற அலங்கார
வேலைப்பாடுகள் கொண்ட பலபலக்கும் நவீன ஹிஜாப் ஆடைகள் சிறந்ததா? அல்லது
தக்வா என்ற முறைப்படி ஹிஜாப் ஆடை சிறந்ததா? (சிந்தியுங்கள்!!!)
குர்ஆன்-சுன்னாவின்படி கட்டுப்பட்டு தக்வா ஹிஜாப் பெண்களின் கற்புக்கு
ஏற்றதா? அல்லது மனம்போன போக்கில் அலங்கரிக்கப்பட்ட ஹிஜாப் பெண்களின்
கற்புக்கு ஏற்றதா? இங்கு இறையச்சம் பேணக்கூடிய ஆண்களும், பெண்களும்
சிந்தியுங்கள் தங்கள் குடும்ப பெண்களுக்கு எது சிறந்ததோ அதை
வலியுறுத்துங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னை கதீஜா (ரலி)
பெண்களுக்கு அன்னை கதிஜா (ரலி) அவர்களிடம் நிறைய படிப்பினை இருக்கின்றது.
ஒரு பெண் எவ்வாறு தன் கணவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த
அம்மையாரை மிஞ்சக்கூடியவர்கய் யார் இருக்கின்றனர். செல்வச் செழிப்பில்
தழைத்து விளங்கிய இந்த அம்மையார் தன்னிடம் வேலை பார்த்து வந்த முஹம்மது
என்ற அந்த அழகிய நற்குணம் கொண்ட மனிதரை திருமணம் முடித்துக்கொண்டார்.
தான் கைம்பெண்ணாக இருந்த நிலையிலும் அழகான குணம் கொண்டவர்தான் தனக்கு
கணவனாக வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இந்த நற்குணம் கொண்ட
அம்மையாரின் அழகிய எண்ணத்திற்கு தகுந்தவாறு முஹம்மது என்ற நல்ல மனிதர்
முஹம்மது நபி என்ற அழகிய பட்டத்தை பெற்றாரே இது ஒருவகையில் அல்லாஹ்வின்
அருள் என்பது புரிகிறதல்லவா!
மேலும் ஒரு கணவன் இக்கட்டான நிலையில் இருக்கும் போது எவ்வாறு அவனுக்கு
ஆறுதல் அளிப்பது என்பதை இந்த அம்மையாரிடம் ஒவ்வொரு பெண்ணும் பாடம் கற்க
வேண்டும்.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
(96:1)
மனிதனை (அட்டை பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்த
கட்டியிலிருந்து) அவன் படைத்தான். (96:2)
நீர் ஓதுவீராக: உம் இறைவன் மிக்க சங்கையானவன். (96:3)
என்ற இறைவசனத்தை வஹீ வரப் பெற்ற நபிகளார(ஸல்) பயந்து வியர்த்தவராக
விறைந்தவராக வீட்டுக்கு வந்து கதிஜா(ரலி)யிடம் என்னைப் போர்த்துங்கள்
என்னைப் போர்த்துங்கள் எனக்கூற கதிஜா(ரலி) அவர்கள் அல்லாஹ் உங்களை ஒரு
போதும் கைவிடமாட்டான். ஏனெனில் நீங்கள் உறவினர்களை ஆதரிக்கிறீர்கள்,
வறியோர்க்கும் தேவையுடையோர்க்கும் உதவுகிறீர்கள், விருந்தினரை
உபசரிக்கிறீர்கள் நலிந்தோரின் சுமைகளை சுமக்கிறீர்கள் என ஆறுதலும்
தேறுதலும் கூறி தம் உறவினரான வரகா பின் நவ்ஃபல் என்ற கிறிஸ்தவ அறிஞரிடம்
அழைத்துச் சென்று நபிகளுக்கு நேர்ந்ததை கூற அவர் நபிகளை நோக்கி ‘அல்லாஹ்
மூஸா(அலை)அவர்களிடம் அனுப்பிய அதே ஜிப்ரீல் (அலை) அவர்களைத்தான்
உம்மிடமும் அனுப்பியிருக்கிறான்’. நீர் அல்லாஹ்வின் தூதரே! என
உறுதிப்படுத்தினார். (புகாரி)
அன்னை கதிஜா (ரலி) அவர்களுக்கு சலாம் என்ற வாழ்த்து
ஒருமுறை நபிகள் (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல்(அலை)அவர்கள்
வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில்
குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து
கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின்
தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு
சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை
ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி)
இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார்.
(தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். புஹாரி: 3432 அலீ (ரலி).
ஆனால் இன்றைய சில பெண்கள் நிலை
இன்றைய சில பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறிவிட்டது. தங்கள்
கணவரின் முன் அனுமதி பெறாமல் கடைத்தெருக்களில் சுற்றித்திறிவது, தங்கள்
கணவன்மார்களை கேவலமாக திட்டுவது, வம்புச் சண்டைக்கு இழுப்பது, கேலி
கிண்டல் செய்வது, கணவனைவிட சற்று அதிகமாக படித்துவிட்டால் நாகரீகம் என்று
எண்ணிக்கொண்டு அசட்டை செய்வது தம் தோழியர்களிடம் விமர்சிப்பது, அதிகமாக
வாய்விட்டுச் சிறிப்பது, திருமறைக் குர்ஆனை ஓரம் தள்ளிவிட்டு எப்போதும்
தொலைக்காட்சியின் முன் அமர்ந்து சீரியல், பாட்டு, கூத்துக் கும்மாளங்களை
கண்டு ரசிப்பது. ஏன் நரகம் தான் மறுமையில் தங்கள் பெற்றுக்கொள்ள
வேண்டுமா? தேவையா இது!
சகோதரிகளே! ஒரு நிமிடம் சற்று யோசியுங்கள் சாதாரண பெண்ணாகிய உங்களை
உங்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் தீன்குல குடும்பப் பெண்ணாக அல்லாஹ்
தேர்வு செய்துள்ளான் எனவே நீங்கள் செய்யும் ஒவ்வொரு அநாச்சாரமும் உங்கள்
குடும்பத்தை பாதிக்கும்! உங்களின் தவறான செயல்களால் உங்கள் குழந்தைகள்
உங்களால் வழிகெடுக்கப்படுகிறார்கள். இதற்கு மாறாக உங்கள் உறவினர்களில்
உள்ள பெண்களிடம் எளிமையான முறையில் உங்கள் வீடுகளிலோ அல்லது உங்கள்
உறவினர்களின் வீடுகளிலோ நேரம் கிடைத்தால் பேச்சு வழக்கில் தாவா
(மார்க்கப் பிரச்சாரம்) செய்தால் அவர்களும் மார்க்கத்தை
அறிந்துக்கொள்வார்களே! எண்ணிப்பாருங்கள் நீங்கள் மார்க்கத்தை
எத்திவைத்தால் ஓரளவாவது குடும்பங்களில் ஷிர்க் (இணைவைப்பு) நீங்குமே!
சிந்திக்கமாட்டீர்களா!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னை ஆயிஷா (ரலி)க்கு உரிய சிறப்பு
ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில்
ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர
வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு
எல்லா வகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப்
போன்றதாகும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி:3411 அபூ மூஸா
(ரலி).
நல்ல தந்தைக்கு உதாரணம் நபிகளார் (ஸல்)
.......................என் மகள் பாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவரை
வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை
மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப் படுத்துவதாகும் என்று
சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரழி) நூல்: ஸஹீஹ்
முஸ்லிம் (4839)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------
விசுவாசம் கொண்ட ஆண்களுக்கு அறிவுரை
அண்டை வீட்டுக்காரரின் மனைவி
அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான்
கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும்.
அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான்
கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில்
பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்’
என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள்
‘நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்’
என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி) ஆதாரம்: புகாரி,
முஸ்லிம், திர்மிதீ, நஸயீ
(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள்
பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும்.
நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ்
குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)
”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக)
வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும்
மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும்
அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு
உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத்
பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56
”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே
நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி
கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல்: புகாரி
5204
-------------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ணியமிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கு
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள்
யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும்
படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும்
(வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து
கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய
உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய
உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது
கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (04:01)
உங்கள் வருமானம் யார் யாருக்கு உரியது?
மேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ்
மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை
கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு;
(அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு;
எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப்
பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (04:32)
குடும்ப சொத்துக்கள் யார் யாருக்கு உரியது?
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு
பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)
தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக
இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்)
விதிக்கப்பட்ட பாகமாகும். (04:07)
கணவன் மற்றும் மனைவியின் உரிமைகள்
மனைவியர் மீது கணவர்களுக்கு உள்ள உரிமைகளைப் போலவே முறைப்படி கணவர்கள்
மீது மனைவியருக்கும் உரிமையுண்டு. (2:228)
ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள் தீமையை
தடுப்பார்கள்.'(அல்-குரான்)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்களுக்கு நபிகளாரின் எச்சரிக்கைகள்
உங்களில் ஒரு பெண் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்” என நபி
அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம்
பெண்கள் மீது நபிகளாரின் கண்ணியம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன்
நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான்
கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த
குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச்
சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்:புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச்
சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல்
பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி
நபிகளார் (ஸல்) ஒரு சிறந்த கணவருக்கு இலக்கணம்
கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின்
வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் நபி(ஸல்) அவர்களிடம்)
அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு
கூர்ந்து புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை
அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின்
தோழிகளிடையே பங்கி அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி(ஸல்)
அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல்
நடந்து கொள்கிறீர்களே'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர்
புத்திசாலியாக இருந்தார்; சிறந்த குணமுடையவரா இருந்தார் இப்படி,
இப்படியெல்லாம் இருந்தார். மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச்
செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள். புஹாரி : 3818 ஆயிஷா (ரலி)
வீட்டு வேலைக்காரர்களிடம் நாம் காட்ட வேண்டிய பரிவு
நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள்.
மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு
ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி(ஸல்) அவர்களின்
(மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து
விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை
அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள்.
அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப்
பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த
பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக்
கொடுத்து விட்டார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) நூல்: புகாரீ 2481
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “”நான் நபி(ஸல்) அவர்களுக்கு பத்து
ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் “சீ’ என்று
கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான்
செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ
கூறியதில்லை.” (ஸஹீஹுல் புகாரி)
நபி(ஸல்) அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள்: “உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில்
நற்குணத்தால் அழகானவரே.” (ஸஹீஹுல் புகாரி)
குடும்ப உறுப்பினர்களே நீங்களே உங்களுக்கு பொருப்பாளி
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை
பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன்
குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்)
தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள்
பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும்
அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை
குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப்
பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து
விசாரிக்கப்படுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200
யார் இறை நம்பிக்கையாளர்?
''நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும் பெண்களும், இறைநம்பிக்கை கொண்ட
ஆண்களும், பெண்களும் இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும் உண்மையே பேசும்
ஆண்களும், பெண்களும் பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்விடம்
உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும்
பெண்களும் நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் வெட்கத்தலங்களை
காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் தியானம்
செய்யும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும்
மகத்தான நற்கூலியையும் தயார் படுத்தி யிருக்கிறான்.'' (அல்குர்ஆன் 33:35)
முடிவுரை
சகோதர சகோதரரிகளே! மார்க்கப் பற்றுள்ள ஆண் மற்றும் பெண்களை தங்கள் உற்ற
துணையாக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் குடும்பம்
ஏகத்துத்தி்ல் நிலைகொள்ளலாம் மாறாக மார்க்க ஒழுக்கமில்லாத ஆண் மற்றும்
பெண்களையோ மணந்துக்கொண்டால் உங்கள் சுவனப்பாதை கேள்விக்கூறிதான்! திருமண
வாழ்வைத் துவங்கும் போது எச்சரிக்கையாக இருங்கள் உங்கள் வாழ்க்கை
அங்குதான் அடி எடுத்து வைக்கப்படுகிறது.
குறிப்பு
இங்கு அறிவுறுத்தப்பட்ட செய்திகள் நல்ல ஆண்களையோ! பெண்களையோ குறித்து
அல்ல மாறாக மார்க்க நெறிமுறை தவறி நடக்கும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கையே!
அல்லாஹ் நன்கறிவான்!
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்