அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) அரஃபாவுக்குப் புறப்பட்டார்கள். (அங்கு) நமிரா அருகில் அவர்களுக்காக ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். அங்கு இறங்கி, சூரியன் நடுவானிலிருந்து மேற்கு நோக்கிச் சாயும்வரை தங்கினார்கள். (பின்னர்) கஸ்வா எனும் (தம்) ஒட்டகத்தை ஆயத்த நிலையில் வைக்குமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி, அவர்களுக்கு வாகனம் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டது.
அங்கிருந்து புறப்பட்டு, 'பத்னுல்வாதி' எனும் பள்ளத்தாக்கு வந்தபோது (அங்கு இறங்கி) மக்களுக்கு உரையாற்றினார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் (லுஹ்ருத் தொழுகை நேரத்தில்) தொழுகை அழைப்பு விடுத்து, இகாமத் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரைத் தொழவைத்தார்கள். அதன் பின்னர் பிலால் (ரலி) இகாமத் சொல்ல நபி (ஸல்) அவர்கள் அஸரைத் தொழவைத்தார்கள் அவ்விரண்டு தொழுகைக்கிடையே வேறு எந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை. அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (முஸ்லிம் அறிவிப்பில் இடம்பெற்ற நீண்ட ஹதீஸின் சுருக்கம். நூல்கள்: முஸ்லிம் 2334, நஸயீ 649).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவை அடைவதற்காகப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரு பாங்கும் இரு இகாமத்துகளும் கூறி மக்ரிப், இஷாவையும் (சேர்த்துத்) தொழவைத்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை. அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (ஹதீஸின் ஒருபகுதி. நூல்கள்: முஸ்லிம் 2334, நஸயீ 650).
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருவேளைத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுததற்கான நபிவழிச் செய்திகள் அநேகம் உள்ளன. விரிவஞ்சி அவை இங்குக் குறிப்பிடப்படவில்லை.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹ்ரு, அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 543, 562).
(இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக இதை அறிவிக்கும்) ஜாபிர் இப்னு ஸைதிடம், "இது மழை நாளின்போது நடந்திருக்கலாமோ?" என்று அய்யூப் கேட்டபோது, "இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்ச நிலையோ பயணத்திலோ (அவர்கள்) இருக்கவில்லை. அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: முஸ்லிம் 1146; 1147, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக். இவற்றில் சில அறிவிப்புகளில், அப்போது ''அச்சமோ, மழையோ இருக்கவில்லை'' என்று அறிவிக்கப்பட்டுள்ளன).
மழை போன்ற காரணத்தினால் உள்ளூர்வாசிகள் ஊரிலிருக்கும்போது ஜம்உச் செய்துகொள்ளலாம் என்று விளங்க முடிகிறது. மற்றபடி இது பொதுவான சலுகையாகக் கருதி தொடர்ந்து ஜம்உச் செய்தல் கூடாது.
"அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு, பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நூல்கள்: புகாரி 350, 1090, 3935, முஸ்லிம் 1105; 1106, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ).
நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ரு (ரலி) உமர் (ரலி) உதுமான் (ரலி) ஆகியோருடனும் பிரயாணம் செய்திருக்கிறேன். அவர்கள் லுஹ்ரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதனையும் தொழமாட்டார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) (நூல்: திர்மிதீ 499).
பிரயாணத்தில் நான்கு ரக்அத்கள் தொழுகையை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுதுகொள்ள மேற்கண்ட அறிவிப்புகளில் சான்றுகள் உள்ளன!
கஸ்ருத் தொழுகை தொடர்பாக அடுத்தக் கேள்வியையும் பார்ப்போம்.
oOo
நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாள்கள் மக்காவில் தங்கினார்கள். மக்காவில் தங்கிய பத்தொன்பது நாள்களும் நான்கு ரக்அத்கள் தொழுகைகளைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத் தொழுதுள்ளார்கள் என்று மேற்கண்ட அறிவிப்பு சந்தேகத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகிறது. இந்த நபிவழிச் செய்தியிலிருந்து, நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய நாள்கள் முழுவதும் தொழுகையைச் சுருக்கித் தொழுதுள்ளார்கள் என்று விளங்க முடிகிறதே தவிர, வெளியூரில் தங்குவோர் பத்தொன்பது நாள்களுக்கு மேல் கஸ்ருச் செய்யக்கூடாது என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை!
நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது நாள்களுக்கும் அதிகமாக மக்காவில் தங்கியிருந்து, அவற்றில் பத்தொன்பது நாள்கள் மட்டும் கஸ்ருச் செய்து மற்ற நாள்களில் தொழுகைகளின் ரக்அத்களை முழுமையாகத் தொழுதார்கள் என்றிருந்தால் வெளியூரில் தங்குவோருக்கு கஸ்ருத் தொழுகையின் கால அளவு பத்தொன்பது நாள்கள் என முடிவுக்கு வந்துவிடலாம். அவ்வாறின்றி, மக்காவில் தங்கிய நாள்களில் நபி (ஸல்) அவர்கள் கஸ்ருச் செய்திருப்பதாலும் கால அளவைக் குறிப்பிட்டு உறுதியாகச் சொல்ல வேறு நபிமொழி அறிவிப்புகள் இல்லாததாலும் வெளியூரில் தங்கும் நாள்களில் கஸ்ருச் செய்வதில் கால அளவை நிர்ணயிக்காமல் வெளியூரில் தங்கும் நாள்கள் அனைத்திலும் கஸ்ருச் செய்துகொள்ளலாம் என்கிற முடிவே பொருத்தமாக உள்ளது.
"(மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் வழியில் வலப்புறம் அமைந்த 'ருவைஸா' எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள பெரிய மரத்தடியில் நபி (ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அவ்வூரின் எல்லையிலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் அம்மரம் இருந்தது. அம்மரத்தின் கிளைகள் முறிந்து போய் அடிமரம் மட்டும் உள்ளது. அதன் நடுவில் பொந்து ஏற்பட்டிருந்தது. அதனருகே மணல் திட்டுக்கள் அனேகம் இருக்கின்றன. அந்த இடத்திலுள்ள மிருதுவான, விசாலமான திடலில் தான் நபி (ஸல்) அவர்கள் பயணத்தின் போது இளைப்பாறுவார்கள்" என்று இப்னு உமர் (ரலி) என்னிடம் கூறினார்கள். அறிவிப்பளார்: நாஃபிவு (ரஹ்) (நூல்: புகாரி 487).
பிரயாணிகள் தொழுகையைக் கஸ்ருச் செய்வதற்கான தொலைவு குறித்தும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் நபிமொழிகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ருத் தொழுதார்கள்; (மக்காவுக்குச் சென்ற பயணத்தில்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸ்ருத் தொழுதார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 1089, 1551, முஸ்லிம் 1114;1115, திர்மிதீ 501, நஸயீ, அபூதாவூத், அஹ்மத்).
மதீனாவில் லுஹ்ருத் தொழுகையை முடித்துவிட்டுப் பயணம் புறப்பட்ட நபி (ஸல்) அவர்கள், அஸ்ரு நேரத்தில் துல்ஹுலைஃபாவை அடைந்து அங்கு நான்கு ரக்அத்கள் கொண்ட அஸ்ருத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதுள்ளார்கள். மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில் சுமார் ஆறு மைல் தொலைவில் துல்ஹுலைஃபா எனும் இடம் அமைந்துள்ளது. மதீனாவிலிருந்து ஆறு மைல் தொலைவுக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்கள் அஸ்ருத் தொழுகையை இரண்டு ரக்அத்களாகக் கஸ்ருச் செய்திருப்பதால், உள்ளூரிலிருந்து ஆறு மைல்களைக் கடந்ததும் பயணிகள் கஸ்ருத் தொழுகையை மேற்கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட நபிவழிச் செய்தியை ஆதாரமாகக் கொள்ளலாம் என்றாலும், நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவை அடைந்தபோது அஸ்ரு நேரம் வந்ததால் அங்குக் கஸ்ருச் செய்தார்கள்; ஆறு மைல்களுக்கு முன்போ ஆறு மைல்களைக் கடந்த பின்னரும் அஸ்ரு நேரம் வந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் அங்கும் கஸ்ருச் செய்திருப்பார்கள் என்று விளங்கவும் இடமளிப்பதால், ஆறு மைல் என்பது அஸ்ரு நேரத்தில் அடைந்த தூரம் என்று கொள்ளலாமே தவிர, கஸ்ருத் தொழுகையை நிறைவேற்றுவதற்கான தொலைவு ஆறு மைல் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.
குறிப்பு:- "மூன்று மைல் அல்லது மூன்று ஃபர்ஸக்" என்று ஃபர்ஸக்கைப் பற்றிய ஐயத்துடன் அறிவிப்பவர் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஃபா (ரஹ்) ஆவார்.
ஒரு ஃபர்ஸக் தொலைவு என்பது மூன்று மைல்களாகும். அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் இதையொத்த வேறொரு ஹதீஸில், "ஒரு ஃபர்ஸக்" எனத் திட்டவட்டமான சொற்றொடர் இடம்பெறுவதால் இந்த ஹதீஸில் இடம்பெறும் சொற்றொடரை, "மூன்று மைல் அல்லது ஒரு ஃபர்ஸக்" என்று திருத்திப் பொருள் கொள்ள வேண்டும்.
முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்புகளில் மூன்று மைல்களா; அல்லது மூன்று ஃபர்ஸக்களா? என்பதில் சந்தேகம் ஏற்படும். ஆனால், ஒரு ஃபர்ஸக் என்பது மூன்று மைல் தொலைவு என்பதை, ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''ஒரு ஃபர்ஸக்'' பயணம் மேற்கொண்டால் கஸ்ரு தொழுவார்கள்'' என்று அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவித்து, இப்னு அபீஷைஃபாவில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் தெளிவாக்கி விடுகின்றது.
ஆகவே, "ஒரு ஃபர்ஸக் - மூன்று மைல்கள் பயணம் சென்றுவிட்டால் நான்கு ரக்அத்கள் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதுகொள்ளலாம்" என்பதற்கு நபித்தோழர் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் அறிவிப்பு ஏற்கத்தக்கச் சான்றாக உள்ளது.
ஒரு ஃபர்ஸக் மூன்று மைல்களாகும். ஒரு மைல் 1748 மீட்டராகும். மூன்று மைல்கள் 5244 மீட்டராகும். அதாவது உள்ளூரிலிருந்து ஐந்தே கால் கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம் வந்து விட்டால் கஸ்ருச் செய்துகொள்ளலாம் என்றே நபிவழி அறிவிப்புகளிலிருந்து விளங்கமுடிகிறது.
இன்றைய பயணத்தில் கையோடு கொண்டு செல்லவேண்டியவை ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. உணவு, குடிநீர் இயந்திர வாகனத்தில் கிடைத்துவிடும். கழிப்பிடம், குளியலறை, படுக்கையறை வரை எல்லாமே இயந்திர வாகனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். வழியில் தங்குவது என்றாலும் தகுதிக்கேற்ப விடுதிகளைத் தேர்வுசெய்து வசதியாகத் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ளலாம். இரவும் பகல் போல் மின்னொளியில் ஜொலிக்கும் இன்றைய பயணத்தை அன்றைய பயணத்துடன் ஒப்பிட்டு சிரமங்கள் உள்ளன என்று கூறுவதற்கில்லை!
''பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் பானத்தையும் அது தடுத்து விடுகிறது. ஆகவே உங்களில் ஒருவர் தாம் நாடிச் சென்ற பயண நோக்கத்தை முடித்துவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்து செல்லட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 1804, 3001, 5429, முஸ்லிம் 3892, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ).
காலத்தைப் பொருத்துப் பயணத்தின் வேதனை மாறுபடுமே தவிர, குடும்பம் உறவினர் மற்றும் நண்பர்களைப் பிரியும் பயண வேதனை எல்லாக் காலத்தவருக்கும் பொதுவாக எல்லாப் பிராயாணிகளுக்கும் ஏற்படும் என்பதை, "பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும்" எனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று தெளிவாக்குகிறது.
பயணத்தின் களைப்பை உணர்ந்தவர்கள் - உணர்பவர்கள் காலவரையின்றி வெளியூரில் தங்கும்வரை ஜம்உ, கஸ்ரு செய்துகொள்ளலாம்.
இஸ்லாம் பயணிகளுக்குத் தொழுகையில் ஜம்உ, கஸ்ரு வழங்கியிருப்பது சலுகைதானே தவிர கட்டாயமல்ல. ஜம்உ, கஸ்ரைத் தவிர்த்துக்கொண்டு பிரயாணத்தில் அந்தந்த வேளைத் தொழுகையை அதற்கான நேரத்தில் கஸ்ருச் செய்யாமல் முழுமையாக நிறைவேற்றினாலும் அதற்கான கூடுதல் நன்மைகளையும் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்ளலாம். இவை, அவரவரின் உற்சாகம் / களைப்பு / வசதி / விருப்பம் ஆகியனவற்றைப் பொருத்து நிறைவேற்றிக் கொள்ளலாம்!
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
--
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
மனித யூகம் மார்க்கமாகாது! மனித யூகத்தை மார்க்கமாக்கும் முயற்சியை அல்லாஹ் தோல்வியடையச் செய்வானாக!
மழையும் உள்ள நாளில் உள்ளூரில் ஜம்வுச் செய்யலாம் என்பது ஹதீஸிலிருந்து விளங்கியது, யூகத்தில் எழுதியதல்ல!
உள்ளூரில் ஜம்வுச் செய்தல் என்கிற சிறு தலைப்பின் கீழ்வரும் இரண்டாவது ஹதீஸின் அடிக் குறிப்பில், இவற்றில் சில அறிவிப்புகளில், ''அப்போது அச்சமோ, மழையோ இருக்கவில்லை'' என்று அறிவிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தோம். பார்வைக்கு அந்த ஹதீஸ்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை. அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1272, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்)
உள்ளூரில் ஜம்வுச் செய்தல் தொடர்பான எல்லா நூல்களின் அறிவிப்புகளிலிருந்தும் நாம் விளங்குவது, பயணம் இல்லை, அச்ச நிலையும் இல்லை, மழையும் இல்லை. மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் இவை எதுவும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்கள் உள்ளூரில் ஜம்வுச் செய்திருக்கிறார்கள் என்றால் மழை உள்ள நாள்களில் மக்களுக்கு சிரமம் எற்படாமல் இருக்க உள்ளூரில் ஜம்வு செய்துகொள்ளலாம். இதை அந்தந்தப் பள்ளி இமாம்கள் தீர்மானித்து மழை நாளில் ஜம்வுத் தொழுகையை நிறைவேற்றலாம். நபிவழிப்படி இன்றும் மழை நாளில் உள்ளூர் பள்ளிகளில் ஜம்வுத் தொழுகை நிறைவேற்றப்படுகின்றன!
மேலும் கூடுதல் விபரத்திற்காக, மழையின் சிரமத்தினால் இருந்த இடத்திலேயே தொழுதுகொள்ளுங்கள் என்கிற அறிவிப்புகள்.
மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் 'ஹய்ய அலஸ்ஸலாஹ்' என்று சொல்ல ஆரம்பித்தபோது 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தனர். 'இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்!' என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார். (நூல்கள் - புகாரி 616, முஸ்லிம் 1244)
இன்ஷா அல்லாஹ் மற்றவை நாளை.
//மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் 'ஹய்ய அலஸ்ஸலாஹ்' என்று சொல்ல ஆரம்பித்தபோது 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தனர். 'இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்!' என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார். (நூல்கள் - புகாரி 616, முஸ்லிம் 1244)
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
1) பயணத்திலும் இல்லை 2) அச்ச நிலையும் இல்லை 3) மழையும் இல்லை. பயணம், அச்சம், மழை இவை எதுவும் இல்லாதபோது நபி (ஸல்) அவர்கள் உள்ளூரில் ஜம்வுச் செய்தார்கள் என ஹதீஸ்கள் அறிவிக்கின்றன!
இவற்றை விளங்குவதில் எவ்வித சிரமும் இருப்பதாகத் தோன்றவில்லை!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
அன்புச் சகோதரர் Mohaideen Ahmed அவர்களுக்கு,
ஜம்வுக் கஸ்ருத் தொழும்போது லுஹ்ருத் தொழுகையையும் அஸ்ருத் தொழுகையையும் சேர்த்தும், சுருக்கியும் தொழலாம். மஃக்ரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழலாம். இந்த நான்கு வேளைத் தொழுகைகளில் லுஹரும், அஸரும் சூரியன் இருக்கும் நேரத்தில் தொழவேண்டிய தொழுகைகள். அதுபோல் மஃக்ரிபும் இஷாவும் சூரியன் மறைந்த பின் தொழவேண்டிய தொழுகைகள்.
ஆகவே, லுஹ்ர், அஸ்ர் தொழுகைகளை ஜம்வுச் செய்யும்போது இவற்றுடன் மஃக்ரிபுத் தொழுகையையும் சேர்த்துத் தொழக்கூடாது. ஏனெனில், மஃக்ரிபுத் தொழுகைக்கான நேரம் வரவில்லை! ஒவ்வொருத் தொழுகையின் நேரங்களை மிகத் துல்லியமாக அறிவிக்கும் இரு அறிவிப்புகளைக் காண்க!
ஐவேளைத் தொழுகைகளின் நேரங்களை அறிவிக்கும் நபிமொழிகள்.
(ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் மற்றும் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். முதல் தடவை இமாமத் செய்யும்போது செருப்பின் வார் அளவு நிழல் (உச்சியிலிருந்து) சாய்ந்த போது லுஹரைத் தொழுவித்தார்கள். ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு நீண்டபோது அஸரைத் தொழுவித்தார்கள். சூரியன் மறைந்து, நோன்பு வைத்திருப்பவர் நோன்பு துறக்கும்போது மஃரிபைத் தொழுவித்தார்கள். அடிவானத்தில் செம்மை மறையும்போது இஷாவைத் தொழுவித்தார்கள். அடிவானத்தில் வெண்மை தோன்றி நோன்பாளிக்கு உணவு ஹராமாகும்போது ஃபஜ்ரை தொழுவித்தார்கள்.
இரண்டாம் முறை தொழுவிக்கும் போது ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வரும் நேரத்தில் அதாவது முதல் நாள் அஸ்ர் தொழுத நேரத்தில் லுஹரைத் தொழுவித்தார்கள். ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளைப் போல் இருமடங்காக ஆகும் நேரத்தில் அஸரைத் தொழுவித்தார்கள். மஃக்ரிபை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். இரவில் மூன்றிலொரு பங்கு கழிந்த போது இஷாவைத் தொழுவித்தார்கள். நிலம் வெளிச்சத்தை அடையும்போது ஸுப்ஹுத் தொழுவித்தார்கள்.
பின்னர், என்னை நோக்கித் திரும்பி ''யா முஹம்மத்! இவ்விரண்டு நேரங்களுக்கும் இடையில் உள்ள நேரங்களே தொழுகையின் நேரங்களாகும். இது உமக்கு முன் சென்ற நபிமார்களின் நேரமுமாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள் - திர்மிதீ 138, அபூதாவூத், அஹ்மத்)
********************
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தொழுகையின் நேரம் குறித்துக் கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நம்முடன் இவ்விரு நாள்கள் தொழுங்கள்!'' என்று கூறினார்கள். (அன்றைய தினம்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு(ம் பிறகு இகாமத்தும்) சொல்லுமாறு உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்திரவிட, பிலால் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். அப்போது சூரியன் ஒளி மிக்கதாகவும் தெளிவாகவும் (வானில்) தெரிந்தது. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃக்ரிப் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்திரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் மறையும்போது மஃக்ரிப் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.
பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் செம்மேகம் மறையும்போது இஷாத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு (ஃபஜ்ர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்திரவிட, பிலால் (ரலி) அவர்கள் வைகறை புலரும்போது ஃபஜ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.
இரண்டாம் நாள் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் வெப்பம் தணிந்த பின் லுஹ்ர் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் வெப்பம் தணிந்த பின், நன்கு வெப்பம் குறைந்திருந்த வேளையில் இகாமத் சொன்னார்கள். பின்னர் சூரியன் உயர்ந்திருக்கவே அஸ்ர் தொழுதார்கள். முந்திய நாளைவிடச் சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுதார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி சென்ற பின் இஷாத் தொழுதார்கள். நன்கு வெளிச்சம் வந்த பின் (சூரிய உதயத்துக்கு முன்) ஃபஜ்ர் தொழுதார்கள். பிறகு ''தொழுகை நேரம் குறித்து என்னிடம் கேட்டவர் கேட்டவர் எங்கே?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் ''நான் (இதோ இருக்கிறேன்) அல்லாஹ்வின் தூதரே!'' என்றார் நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் (இரு தினங்கள்) கண்ட நேரங்களுக்கு இடைப்பட்ட நேரம்தான் உங்கள் (ஐவேளைத்) தொழுகையின் நேரமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் புரைதா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1078, 1079, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)
ஒவ்வொருத் தொழுகையின் ஆரம்ப நேரத்தையும் இறுதி நேரத்தையும் மேல்கண்ட அறிவிப்புகளிலிந்து விளங்கிக் கொள்ளலாம்! இரு அறிவிப்புகளிலும் முதல் நாள் தொழுகைகளின் நேரங்களும் இரண்டாம் நாள் தொழுகைகளின் நேரங்களும் வித்தியாசப்படுகின்றன. முதல் நாள் சூரியன் மறைந்த பின் மஃக்ரிப் தொழவைத்ததாகவும், இரண்டாம் நாளில் செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழவைத்ததாகவும் நபிவழிகள் கூறுகின்றன.
இதில் கவனிக்க வேண்டியது, முதல் நாளில் செம்மேகம் மறையும்போது இஷாவும், இரண்டாம் நாளில் அதே நேரத்தில் மஃக்ரிபும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழவைத்திருக்கிறார்கள். அதாவது முதல் நாளைவிட இரண்டாம் நாளில் தொழுகைகளின் நேரங்கள் தாமதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒவ்வொருத் தொழுகைகளின் ஆரம்ப நேரமும் இறுதி நேரமும் ஆகும்!
"சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார். சூரியன் மறைவதற்கு முன் அஸருடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் அஸர் தொழுகையை அடைந்து கொள்கிறார்." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) (நூல் - புகாரி 579)
சூரியன் மறைவதற்கு முன் அஸருடைய ஒரு ரக்அத்தை அடைந்திட வேண்டும் என்பதிலிருந்து, சூரியன் மறைந்த பின் மஃக்ரிபின் நேரம் தொடங்குகிறது! எனவே, சூரியன் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுகையைத் தொழக்கூடாது! சூரியன் மறைந்தவுடன் மஃக்ரிபைத் தொழுதுகொள்ளலாம்!