மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனித்துவமான ஒரு மார்க்கமே இஸ்லாம் என்பதை நாம் அனைவரும் ஏற்றிருக்கின்றோம். இம்மார்க்கத்தில் ஏமாற்று வித்தைகளுக்கு அறவே இடம் இல்லை என்பதையும் நாம் அனைவரும் நம்புகின்றோம்.
அப்பழுக்கற்ற முறையில் அழ்ழாஹ்வால் அமைத்துத் தரப்பட்ட இம்மார்க்கத்தை இன்று எமது சமூகம் எங்கோ தொலைத்து விட்டு தங்களது மனோ இச்சைக்கு ஏற்ப கொள்கைகளையும் தவறாக வழிகாட்டும் தலைவர்களையும் பின்பற்றி மீண்டுமொரு (ஜாஹிலிய்யத்) அறியாமைக்கால கலாசாரத்தை நோக்கி நகர்ந்து வருவதை தூரநோக்கும் தெளிவான கொள்கையுமுள்ள ஒவ்வெருவராலும் நன்றாக அறிந்து கொள்ள முடியும்.
மார்க்க விடயங்களில் போதிய விளக்கமின்மையால் இச்சமூகத்தில் மிக ஆழமாக பல்வேறு மூட நம்பிக்கைகள் வேரூண்றியுள்ளன. அவ்வாறு மிகப்பரவலாக வேரூண்றிய மௌட்டீகங்களில் ஒன்றுதான் நோய், நொடிக்காக தாயத்து அணிவதும், நல்வாழ்வு தேடி சகுணம் பார்ப்பதும், வியாபாரத்தில் அதிக இலாபம் ஈட்ட இஸ்ம், அஸ்மாக்கள் எழுதிய போத்தல்களைத் தொங்கவிடுவதுமாகும்.
குழந்தைகளுக்கு திருஷ்டி கழிக்கின்றோம், புது வீட்டிற்கு குடி போகின்றோம் அல்லது வியாபாரஸ்தலத்திற்கு அருள் வேண்டுகின்றோம், பேய், பிசாசுகளிடமிருந்து பாதுகாவல் தேடுகின்றோம் எனும் பெயரில் தாயத்து எழுதி அவற்றை தங்களது கழுத்துகளிலும், கட்டட மூலைகளிலும் தொங்கவிடும் நடைமுறையை இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகச் சாதாரணமாகக் காணமுடிகின்றது.
இக்கலாசாரம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது நாம் நெருங்கிப் பழகும் அந்நிய சமூகமான இந்துக்களிடமிருந்து எமது முன்னோர்கள் இரவல் வாங்கியதா? என்பதை ஆய்வு செய்கின்ற போது, நிச்சயமாக இந்நடைமுறை இஸ்லாம் அனுமதிக்காத மாற்றுமதக் கலாசாரம் என்பதைப் புரிய முடிகின்றது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் நோயினால் மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நோயைக் குணப்படுத்த அவர்கள் தனது கழுத்தில் தாயத்து அணிந்ததாகவோ மையினால் இஸ்ம் எழுதிக் கரைத்துக் குடித்ததாகவோ மந்திரம் சொல்லி வேப்ப இலையினால் மந்திரித்ததாகவோ எந்தத் தகவலும் கிடையாது.
வறுமையின் கோரப்பிடியினால் அன்று துன்பப்பட்ட நபித்தோழர்களுக்கும் ‘பரக்கத் பொங்க உங்கள் கடைகளில் அல்லது வீடுகளில் இஸ்ம் போத்தல்களைத் தொங்கவிடுங்கள்’ என நபிகளார் தமது தோழர்களைப் பணித்ததாக எந்தத்தகவலும் இல்லை.
எத்தகைய துன்பம் அவர்களைச் சந்தித்தாலும் அழ்ழாஹ்வின் மீதே முழுக்க முழுக்க ‘தவக்குல்’ (நம்பிக்கை) வைத்தார்கள். நோய் நிவாரணத்தை அளிப்பவனும் வாழ்வில் அருளைத் தருபவனும் படைப்பினங்களைப் பாதுகாப்பவனும் அந்த ரப்புல் ஆலமீன் மாத்திரம் தான் என உறுதியாக நம்பினார்கள்.
நபிகளாரின் மறைவுக்குப் பின்னால் தோன்றிய போலி மார்க்க அறிஞர்கள் சாதாரண மக்களின் மார்க்க அறியாமையைப் பயன்படுத்தி வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட நடைமுறையே தாயத்து, தகடு, தட்டுக்களைத் தொங்கவிடும் நடைமுறை என்பதுவே வரலாற்று உண்மையாகும்.
முஸ்னது அஹ்மத் எனும் ஹதீத் கிரந்தத்தில் பதிவாகியுள்ள ஸஹீஹான ஹதீஸில் தாயத்து அணிவது அன்றைய அறியாமைக் கால மக்களின் நடைமுறையாக இருந்து வந்தது என்பது தெளிவாகின்றது. உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் பத்துப் போர் கொண்ட ஒரு குழுவினர் (பைஅத்) உறுதிப் பிரமாணம் எடுக்க வந்தார்கள். அவர்களில் ஒன்பது நபர்களுக்கு பைஅத் செய்த நபிகளார் ஒருவரை மாத்திரம் விட்டு விட்டார்கள். உடனே அக்குழுவினர் அழ்ழாஹ்வின் தூதரே! அவருக்கு மாத்திரம் தாங்கள் ஏன் உறுதிப்பிரமாணம் (பைஅத்) கொடுக்கவில்லை? என வினவினார்கள்.
அதற்கு நபிகளார் அவரிடத்தில் தாயத்து உள்ளது (அதனால் நான் பைஅத் கொடுக்கவில்லை) என்றார்கள். அப்போது அம்மனிதர் தனது தாயத்தைக் கழட்டி வீசினார். பின்னர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு உறுதிப்பிரமாணம் (பைஅத்) வழங்கினார்கள். மேலும், (உங்களில்) எவர் தாயத்து அணிகின்றாரோ அவர் அழ்ழாஹ்வுக்கு இணை கற்பித்துவிட்டார் எனக் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்:16969)
மேற்குறித்த ஹதீஸிலிருந்து தாயத்து அணிவது அறியாமைக்கால நடைமுறை என்பதோடு அழ்ழாஹ்வும் அவனது தூதரும் கடுமையாக வெறுக்கும் ஷிர்க் என்ற மிகக் கொடிய குற்றமும் என்பது தெளிவாகின்றது. மேலும், அறியாமைக்கால மக்களிடமிருந்துதான் தாயத்துக் கட்டும் நடைமுறை பரவியுள்ளது என்பதை உக்பா (ரழி) அவர்களின் ஹதீஸ் எமக்கு விளக்குகின்றது.
காணாமல் போன பொருட்களுக்கு குறி, சாஸ்திரம் சொல்லும் முஸ்லிம்? ஜோதிடர்களால் எமது மக்கள் தினமும் ஏமாற்றப்பட்டு வருவதானது முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பெரும் இழிவு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எந்தப் பகுதியில் மார்க்க விவகாரத்தில் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் இப்போலி ஆலிம்கள் ‘குர்ஆனைக் கொண்டு மந்திரித்து ஜெபம் செய்கின்றோம், எம்மிடம் ஜின் இருக்கின்றது, குறைந்த செலவில் ஜின் ஒப்ரேஷன் செய்கின்றோம்’ என விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி மக்களின் உழைப்பில் வாழ்ந்து வரும் சமூகக் கொடுமையை என்னவென்று அழைப்பது?.
குர்ஆன் வசனங்களையே தாயத்தில் எழுதினாலும் அவற்றை அணியும் எத்தனையோ மனிதர்கள் மலசல கூடத்திற்கு அவற்றை சுமந்து செல்கின்றார்களே? அது பாவமான காரியமல்லவா? எனும் இந்த சாதாரண அடிப்படை கூடத் தெரியாத இப்போலிகள் சமூகத்தில் அவசியம் அடையாளம் காணப்படல் வேண்டும்.
நோய் ஏற்பட்டால் உரிய முறையில் நிவாரணம் செய்து கொள்ளுமாறும் அழ்ழாஹ்விடம் பரிகாரம் வேண்டுமாறுமே இஸ்லாம் எமக்குச் சொல்கின்றது.
அழ்ழாஹ் தனது அருள்மறையில் 2:156,2:214,57:22,16:54,27:62,11:10,7:94,10:107 ஆகிய வசனங்களில் நோய் நொடிகளையும் இன்ன பிற துன்பங்களையும் ஏற்படுத்துபவனும் நிவாரணமளிப்பவனும் அந்த வல்ல நாயன் மாத்திரமே என்பதைத் தெளிவுபடுத்துகின்றான். உறுதியான வேதமும் தூய்மையான நபிவழியும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கூறுகின்ற போது அவற்றை விட்டு விட்டு மாற்றுமத அனுஷ்டானங்களை நம்பி வாழும் எமது சகோதரர்கள் தமது தெளிவற்ற போக்கை ஒரு முறை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
வியாபார ஸ்தலங்களுக்கு முன்னால் மஞ்சள் நீர் தெளிப்பதும் கடைகளில் செம்புத்தகடுகளால் தாயத்துக்களைக் குவிப்பதும் இலாபம் அதிகமாகுவதற்கு இஸ்லாம் காட்டிய வழிமுறையல்ல. மாற்றுமதங்களில் காணப்படும் புராணங்களையும் பழைய பஞ்சாங்கங்களையும் மூலதனமாகக் கொண்டு தோற்றம் பெற்ற இந்த இஸ்ம், அஸ்மாக்களையும் தாயத்து, தகடு, தட்டுக்களையும் விட்டொழித்து, அல்குர்ஆன் ஆதாரப்பூவ்வமான நபிமொழிகளையும் பின்பற்றுவதன் மூலம் அபிவிருத்தியையும், நோய், நிவாரணத்தையும் எதிர்பார்க்காமல் மந்திர தந்திர வார்த்தைகளால் அவற்றை எதிர்பார்ப்பது எமது சமூகத்தின் ஈமானில் பலவீனத்தையே காட்டுகின்றது.
அறிவியல் தொழில் நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற இச்சூழலில் பகுத்தறிவை அடகுவைக்கும் இப்பஞ்சமா பாதங்களை இனியாவது நம்மவர்கள் கைவிடுவார்களா? எல்லாம் வல்ல அழ்ழாஹ் தாயத்து, தகடு, தட்டு, துஆக் கட்டுதல் போன்ற ஷிர்க்கான காரியங்களிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தையும் காத்தருள்வானாக!
இந்தக் கட்டுரை "அல் அதர்" ஏப்ரல் 2009 இதழில் பிரசுரமானது. கட் அன்ட்
பேஸ்ட் (Cut and Paste) செய்யும் சகோதரர்கள் தயவு செய்து மூலத்தைக்
குறிப்பிட்டு அப்படிச் செய்வதுதான் நல்லது.
கருத்துக்களை முன்வைத்தவர்தான் விமர்சனங்கள் வரும்போது குறிப்பிட்ட
கருத்துக்கு அவர் வந்த காரணத்தை விளக்க முடியும். புரிந்து கொளவீர்கள்
என்று நினைக்கிறேன்.
குழுமத்தின் தனித்தன்மையும் அதன் நேர்மையும் குழும அங்கத்தவர்களிடமே
உண்டு.
வஸ்ஸலாம்
அபூ பெளஸீமா
On May 4, 10:05 am, shafan ahamed seyyed ahamed <shafa...@gmail.com>
wrote:
> *தாயத்து அணிவது ஈமானுக்கு ஆபத்தானதா?*
> **
> *‘நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம், (குறி, சாஸ்திரம், மந்திரம்
> சொல்லும்) சோதிடனின் கூலி ஆகியவற்றுக்கு அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
> தடைவிதித்தார்கள்’ (ஸஹீஹுல் புஹாரி: 5761)*