எல்லோருக்கும் அறிமுகமான திருமூலரின் ஒரு பாடலை பார்ப்போம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே
இதில் குருவின் என்று சொல்லி விட்டு அவர் சம்பந்தப்பட்ட அனைத்துக்குமே "திரு" (மேனி, நாமம், வார்த்தை, உரு) போடுகிறார். முதலில் திருமேனி என்றவர் இறுதியில் திருஉரு என்கிறார். இரண்டுக்கும் வித்யாசம் இருப்பதாக காண்பிக்கிறார். முன்னதே ஞானத்தை அடைவிக்கும் என்றாலும் பின்னதும் தரும் என்கிறார். அல்லது ஒன்றை விட ஒன்று அப்யாசத்திற்கு கஷ்டம் என வைத்தால் நான்காவது மிக கஷ்டம்.
இப்படியும் கொள்ளலாம். ஒருக்கால் அவரை தரிசிக்க பாக்கியம் அமையலாம். அவர்( உடையதும் உபதேசித்ததும் ஒன்றே) நாமத்தை சொல்ல அருள் கிடைக்கலாம். சமயத்தில் அவர் ஒரு மொழி பேசலாம். அம்மொழி வயப்பட்டு நடக்க அமையலாம். இதெல்லாம் கிடைத்தால் அவரை பற்றி சிந்திக்க பாக்கியம் அமையலாம்.
கண், வாய், காது என்று புலன்கள் வழியாக குருவின் சம்பந்தமாக செய்யப்படும் செயல்கள் என்று வருவதால், உபதேசத்தின்படி ஒழுகுவது என்பது என்னது என்பதற்கான பதில் அடுத்த அடியில் கிடைக்கிறது. அது என்னவெனில் நான்காவதே (திருஉரு சிந்தித்தல்) உபதேசத்தின்படி ஒழுகுதல் ஆகிறது.
(மேலும் இதன்படி சீடனுக்கான சாதனை செய்வது குருவே என்றும் ஆகிறது. Because முதல் மூன்றும் குருவின்/ஈஸ்வரனின் பிரத்யேக சங்கல்பத்தினால்தான் நடக்க முடியும். நான்காவதோ இம்மூன்றினால் தானே நிகழ்வது ஆகிறது).
மேலும் கண், வாய், காதில் ஆரம்பித்து மனதை தாண்டி செல்வதால், மேற்கண்ட புலன் வாயிலாக கிடைக்கும் குருநாதர் சம்பந்த அனுபவம் புலன்களை தாண்டிய நான்காவதற்கு இட்டு செல்கிறது என்றும் சொல்கிறது. (நான்காவது அமைந்தால் முதல் மூன்றும் மனதிற்குள் நுழைய குருநாதர் வைத்த கன்னக்கோல்கள் என்றாயிற்று)
இதையே என் குருநாதர், குருவை ஆறடி உயர மனிதராக மட்டும் நினைப்பது தவறு என்பார்கள். மேலும் குருவின் அருள் என்பது இதுதான் என்றில்லை. அவர் நடை, உடை, பாவனை, சொல் எல்லாமே அருள்தான் என்பார்.
தான் யாருக்கும் குரு இல்லை என்று சொல்லிய ரமண மகரிஷிகளும் கூட "குருவுருவாய் ஒளிர்" என்று சொல்கிறார். (சிஷ்யனின் பிரார்த்தனையாகவே அது அழகாய் அமைகிறது. எனது குற்றம் முழுவதையும் அழித்து, என்னை உனக்கு பிடித்த குணமுடையவனாக செய்து, குருவாய் வந்து அருள் என்பது பாடற்கருத்து).
புலன்களுக்கு அப்பாற்பட்ட அருணாசலனை "குருவுருவாய் ஒளிர்" என்றதால் புலன்களுக்கு அப்பாற்பட்டதே குருவுருவாய் வந்து அமைகிறது என்றாகிறது. அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்டவராயும் அதே சமயத்தில் புலன்களுக்கு அனுபவம் ஆகுபவராயும் இருப்பவர் குரு.
----
கண்ணால உலகத்தை பார்த்து பயந்து, குருநாதா காப்பாத்துன்னு வாயால அலறினா, அதை அவர் தன் காதால கேட்டு, தன்னுடன் சேர்த்து கொண்டு மனதை அழித்தாரென்றால் எஞ்சி இருப்பது அவரது திருஉரு என்று நீங்கள் சொன்னால் நான் மறுக்க மாட்டேன்.
----
பெரியவர்களின் பாடலுக்கு அர்த்தம் சொல்ல முடியாது. ஏற்கனவே பெரியவர்கள் அதற்கு அர்த்தம் செய்திருந்தால் அதை கொள்ளலாம். மற்ற நேரத்தில் இப்படி பொழுதை போக்கலாம்.
பால்கி